அகிலன் லெட்சுமணன் கவிதைகள்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

அகிலன் லெட்சுமணன், மலேசியா



எனக்கான முகம்
—-

எல்லோரும்
நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்
சிதைந்த என் முகத்தை
அவரவர் பாத்திரங்களில்

எனக்கான முகத்தை
தற்காலிகமாக தருகிறார்கள்
அவரவர் தாகம் தணியும் வரை

உதட்டில் கொஞ்சம்
மேஜையில் கொஞ்சம்
பாத்திரத்தின் விளிம்புகளில் கொஞ்சம்
தெரித்து விழும் எச்சிலில் கொஞ்சம்
தரையில் கொஞ்சமென
சிந்திய பகுதிகளிலிருந்து
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
எனக்கான முகத்தை

அகிலன் லெட்சுமணன், மலேசியா


ஊழித் தீ
—-

தூணை பிளந்து வெளிப்பட்ட
நரசிம்மனைப் போல
என்னை பிளந்து
நானே பிறக்கின்றேன்
பிரபஞ்சம் விழுங்கும்
பேரொளியுடன்

கட்டுக்களை அறுத்து
மனித உடல் கடந்து
‘அவனை ‘யும் மிஞ்சும்
பலத்துடன் இங்கே
என்னில் விழும் அத்தனையும்
எரித்திடும் பசியோடு
ஊழித் தீயென எரிகின்றேன்
காலங்கள் கடந்து சிரிக்கின்றேன்

அகிலன் லெட்சுமணன், மலேசியா


நம்பிக்கை
—-

எங்காவது
நட்டு வைப்பார்கள் என்று
காத்துக் கொண்டிருக்கிறோம்
வேர்களை தொலைத்துவிட்டு

அகிலன் லெட்சுமணன், மலேசியா

***
agi_lan@hotmail.com

Series Navigation

அகிலன் லெட்சுமணன், மலேசியா

அகிலன் லெட்சுமணன், மலேசியா