என் தாத்தாவுக்குத் தாத்தாகூட யானை வளர்த்தார்…..

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

மணவழகன். ஆ


கதை சொல்லப் போறேன் நானும்
கதை சொல்லப் போறேன்…

வீரபாண்டிய கட்டப்பொம்மன்
விவேகமுள்ள ஊமைத்துரை
புலி அஞ்சும் புலித்தேவன்
புவி ஆண்ட தேசமிது – இப்போ
நரி ஆளும் தேசமாச்சே….
நாலும் கெட்டு நின்னாச்சே (கதை..)

பாரதி பரம்பரை என்போம்..
பாரதிதாசன் உறம்பரை என்போம்..
மடியிலே கிடக்கும் பிள்ளை
‘மம்மீ ‘ ன்னு சொன்னாத்தான் – நாங்க
மரியாதைன்னு எண்ணிடுவோம்…!

கடவுள் இல்லை! கடவுள் இல்லை!
மேடை போட்டு பேசிடுவோம் – நாங்க
பெரியாரு சிலைக்குந்தான்
கற்பூரத்தைக் காட்டிடுவோம்….!

பச்சபுள்ள பாலுக்கழும்,
பாவி காதில் விழாது!
பத்தினி வயிறு பசித்திருக்கும்
பக்கம் இருந்தும் புரியாது!
‘தலைவன் கூட்டம் ‘ போகலைன்னா – எங்க
தவம் மட்டும் கலையாது!

அய்யனாரு! அண்ணன்மாரு!
கருப்பசாமி! பெரியசாமி!
நாங்க பார்த்து வச்சது!
தமிழும் அதுக்குத் தெரியாதுன்னு – சிலது
தம்பட்டம் அடிக்குது, சட்டம் கூட இயற்றுது – இதை
தட்டிக்கேட்க துணிவின்றி எங்க வாழ்க்கை கழியுது!

‘தமிழன் என்று சொன்னதும்,
தலை நிமிர்ந்து நின்னதும்
பரணியிலே கிடக்குது – அதை
பரிதவித்து சொல்லி விட்டால்
‘பொடா ‘ சட்டம் பாயுது!

கட்டி முடிச்ச பாலந்தான் – நல்ல
கான்கரீட் சாலைதான்
கலப்படம் நடந்ததுன்னு
கண்முன்னே இடிச்சாலும்,
எங்க மனது நோகாது – அதை
எதிர்த்துக் கேள்வி கேட்காது!

போக்குவரத்து கழகத்தையும்,
புறம்போக்கு நிலத்தையும்,
மின்சார வாரியத்தையும், மிஞ்சியிருக்கும் எல்லாத்தையும்!
தனியாருக்கு வித்தாலும் , தாரைவார்த்து கொடுத்தாலும்
தட்டிக்கேட்க மாட்டோமே – நாங்க
தடுத்து நிறுத்த மாட்டோமே!

அடுப்பிலே பூனை தூங்கும் – கொண்டவள்
உடுப்பெல்லாம் கந்தல் தாங்கும்!
அடுத்த வேளை சோற்றுக்கு- குடும்பம்
ஆளாய் பறந்திருக்கும்!
தவிப்பைப் போக்க நேரமில்லை – அவங்க
தகிப்பைப் தணிக்க மனமில்லை! – இருந்தும்
தலைவனுக்கு மொட்டையடிப்போம் – சமயம் வந்தால்
நாக்கும் அறுப்போம்!

காக்கிசட்டை மாட்டி விட்டு
காவலுக்கு வைத்த நாய்கள்
காசுக்காக குரைத்தாலும் – நல்லவர்
காலையது கடித்தாலும்,
கண்டுகொள்ள மாட்டோமே – நாங்க
கலங்கி நிற்க மாட்டோமே!

இன்னும்மொரு புரட்சி எல்லாம்
இப்போதைக்கு வேணாங்க!
முழுதாக நானும் சொல்ல – இங்கு
முழுஆண்டு போதாதுங்க!
‘முகம் ‘ அது இருந்தும் கூட – நாங்க
முகவரியை இழந்தோங்க!

கதை சொல்லப் போறேன் – நானும்
கதை சொல்லப் போறேன்…..
********

a_manavazhahan@hotmail.com

Series Navigation

மணவழகன். ஆ

மணவழகன். ஆ