புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 4

This entry is part of 48 in the series 20060519_Issue

புதுவை ஞானம்


………..செப்டம்பர் பதினொன்று …….சிந்தனைகள்.
…………………………………………………………….

வர்னிக்க வார்த்தைகளே இல்லை
வார்த்தை ஒன்று கூட வடிக்கவில்லை நான்
தெற்குக் கால்வாய்ச் சாம்பல் குவியலில்
கவிதை ஏதும் காணப்படவில்லை
சிதிலங்களையும் மரபணுக்களையும்
சுமந்து செல்லும் குளிர் ஊர்திகளில்
வசனம் ஏதும் வார்க்கப்படவில்லை.

இன்று என்பது ஒரு வாரம்
ஏழு என்பது சொர்க்கத்துக்கு உரியது
கடவுளுக்கும் அறிவியலுக்கும்–எனது
சமயலறைச் சாளரத்தின் வழியே
தென்படுவது கலைந்து போன யதார்த்தம்.

விண் முட்டும் கோபுரம் இருந்த இடத்தில்
விண் மட்டுமே நிலைத்து இருக்கிறது
இரத்தமும் சதையும் உயிர்த்த இடத்தில்
சாம்பல் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.

தீயின் நாற்றம் நகரின் காற்றைத்
திணற அடிக்கையில் எண்ணிக் கலங்கினேன்
தங்கையின் உயிரை – முன்னர்
என்றைக்கும் இருந்திராதவாறு.
இப்போதோ…..மீதி இருக்கும்
நம் அனைவரின் உயிர் குறித்தும்

முதலில்…………….
அருள் நிறைந்த கடவுளே ………….இது மட்டும்
தவறாக இருந்து விடக் கூடாதா……………………?
விமானியின் இதயம் நின்று போனதாகவோ
இயந்திரம் பழுது பட்டதாகவோ …………………
இருந்து விடக்கூடாதா……………………………………?

பின்னர்……………..
கடவுளே இது ஒரு கெட்ட கனாவாக……………….
இருந்து விடக்கூடாதா……………………………………..
நான் கண் விழிக்கக் கூடாதா ………………………..?

இரண்டாவது விமானத்துக்குப் பிறகு…………………
அருள் நிறைந்த கடவுளே……………………………….
எங்கள் அண்ணன் தம்பி போல்………………………
தோற்றம் அளிப்பவர்களாக……………………………..
இருந்து போகட்டும் யாரேனும்.

சாகடிப்பதற்காக செத்துப் போக வேண்டுமா…..?
எனக்குப் புரியவில்லை.
பசி வேண்டுமென்று நான் எப்போதும்
பசித்து இருந்தது இல்லை.
துவக்கை இயக்கவோ எழுது கோலை
எடுத்து எழுதவோ எப்போதுமே நான்
சினந்ததே இல்லை.

பெண்ணாக நான் இருந்த போதிலும்-அதுவும்
பாலஸ்தீனப் பெண்ணாக-இப்படிச் சிதைந்து போன
மனிதப் பிறப்பு என்று ஆன நிலையில் கூட
சிதைந்து போனதில்லை இந்த அளவுக்கு.

எப்போதையும் விட எந்த மாற்றமும் இருப்பதாக
நம்பவில்லை நான்-.
உரிமைகள் மிக உள்ள தேசம் தான்
எனினும்…….
பெரும்பாலான அமெரிக்கர்கள்
அறிய மாட்டார்கள்
இந்தியர்கள்,ஆப்கானியர்கள்,
இஸ்லாமியர் ,இந்துக்கள்,சீக்கியர்கள்
இவர்களுக்கு இடையே
எத்தகைய வேறுபாடும் இருப்பதாக.

(மொழி பெயர்ப்பு தான் இது.மூலம் யாருடையது
என்பதை நாட்குறிப்பில் எழுத மறந்து விட்டேன்
மன்னித்து அருள்க.) புதுவை ஞானம்.

*************************************************************************

இன்று நாம் பேசத்தவறினால்
இடுகாட்டு அமைதி கவிந்து விடும்.
ஒவ்வொரு குடும்பமும் கருகிப் போகும்
ஒவ்வொரு வீடும் சாம்பல் குவியலாகும்.
அமைதிக்கு அப்பாலிருந்து
அவலக் குரல் மீண்டும் வரும்……….
யாருமில்லை இங்கு……
யாருமில்லை….யாருமே இல்லை

***************************************************************************

இரத்தம் யாருடையதாகவேனும் இருந்து போகட்டும்
நம்முடையதாயினும் அவர்களுடையதாயினும்
குருதி வடிப்பது மாணுடம் அல்லவா?
கிழக்கிலோ மேற்கிலோ -எங்கு
யுத்தம் நடந்த போதிலும்
அமைதி காக்கும் பூமி
குருதி வடிக்கிறது.
குண்டு மழை எங்கு பொழிந்த போதிலும்
வீடுகளின் மீதேயாயினும்
எல்லைக் கோடுகள் மீதேயாயினும்
கட்டமைக்கும் ஆன்மா காயப்படுகிறது.
வயல் வெளிகள் கருக்கப் பட்டால்
நம்முடைய வயலாயினும் சரி
அயலவர் வயலாயினும் சரி
பஞ்சத்தால் வாழ்வு பாதிக்கப் படுகிறது .

டாங்கிகள் முன்னேறினால் என்ன
பின் வாங்கினால் என்ன
பூமித்தாயின் கருப்பை மலடாக்கப் படுகிறது.
வெற்றிப் பூரிப்பானால் என்ன
தொல்வியின் சோக கீதமானால் என்ன
உயிரோடு இருப்பவர்கள் தான்
சுமக்க வேண்டும் சவங்களை.
எனவே தான்…..ஓய்….நாகரீக மாந்தரே
யுத்தங்கள் ஒத்திப் போடப் படுவதே நல்லது.
தீபங்கள் எரியட்டும் தொடர்ந்து
உங்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும்.

*******************************************************

உன் வீட்டின் ஒரு அறையில்
தீப்பற்றி எரியும் போது
உறங்க முடியுமா ?
மற்றொரு அறையில்.

உன் வீட்டின் ஒரு அறையில்
பிணம் ஒன்று கிடக்கையில்
இசை பாட இயலுமா ?
இன்னொரு அறையில்.

உன் வீட்டின் ஒரு அறையில்
சவங்கள் அழுகி நாற்றமெடுக்கையில்
தொழுகை நடத்த முடியுமா ?
அடுத்த அறையில்.

அப்படித்தான் என்றால்
உன்னிடம் பேச
ஒன்றுமே இல்லை !

*********************************************************************

கூறு போடப் பட்டு இருக்கிறார் கடவுள்
கோவில்களால்
மசூதிகளால்
தேவாலயங்களால்
கூறு போடப் பட்டு இருக்கிறது மண்
கூறு போடப் பட்டு இருக்கின்றன மாக்கடல்கள்
கூறு போடாதீர் மானுடத்தை
கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்
மிஞ்சி இருக்கும் உங்களை.

***************************************************************************

என் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன
எல்லாக் கண்களின் நீருடன் கலந்து
எல்லா நெஞ்சங்களின் வேதனையும்
என்னுடையது தான்.

*****************************************************************************

நான் ………..
பிளவு படுத்தும்
மதிற் சுவர் அல்ல.
சுவற்றில் ஏற்பட்டுள்ள
சிறிய விரிசல்.

*******************************************************************************

ஒற்றை வீட்டைக் கட்டுவதற்கு
மக்கள் செலவிடுகின்றனர்
ஆண்டுகளையும் வியர்வையையும்.
இருந்த போதிலும்………
எரியூட்டுகிறீர்கள் நீங்கள்
மொத்த நகரத்தையும்.

********************************************************************************

மூலம் : SAHIR LUDHIYANVI
SARVESHWAR DAYAL SAXENA
VINAY MAHAJAN
FIRAQ GORAKPURI
KAMLA BHASIN
BASEER BADAR

SOURCE :
VOICES OF SANITY
REACHING OUT FOR PEOPLE

தமிழாக்கம் : புதுவை ஞானம்.

***********************************************************************************

Series Navigation