புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்

This entry is part of 39 in the series 20060512_Issue

புதுவை ஞானம்


மின்னியல் வித்தைகள்
_____________________
வண்ணங்களையும் வடிவங்களையும்
மழையாய்ப் பொழிகிறது
கணிணிகளால் இயக்கப்படும்
படக்கருவி.

ஜொலிக்குமொரு அமீபா
கூரையில் உருவாகிக் கீழே
இறங்கிச் சூழ்கிறது உங்களைச்
சிகரெட் புகையாய்……
மறைந்து போகிறது பின்னர் .

மானுட வெள்ளிப் படிவமாய்
உயிர் கொண்ட திரையாய்
மின்னியல் கலீடாஸ்கோப்பில்
தொழில் நுட்பமெனும் முப்பட்டை ஆடியில்
வானவில்லின் துண்டுகளாய் நீங்கள்.

மிதமிஞ்சிக் கதறுகிறது முனகுகின்றது குரல்
கூக்குரல் இடுகிறது கொம்மாளக் கும்பல்
உருப்பெருக்கெடுத்த பேய்க் கூச்சல்
கேட்கப்படுவதில்லை_உணரப்படுகிறது.

உராய்ந்து கொண்டு செல்கிறது மானிடத் திரள்
உடையிலும் உடலிலும்
வெப்பமும் வியர்வை நாற்றமுமாய்
ஒரே நெருக்கடி.

மொத்த விளைவோ ஆச்சரியப் படுமளவு
மகிழ்ச்சியோடும், கிளர்ச்சியோடும் , நிறைவோடும்
வீடு திரும்பக் கூடும் நீங்கள்.
போதை மருந்தின் சுகமே போல
இப்படிப் பட்டதோர் கும்பல்.

உணர்வுகள் கிளர்ந்தெழுந்தாலும் கூட
சலிப்பூட்டும் மின்னியல் வித்தைகள்.
மீண்டும் கிளர்ச்சியடையவோ
தூண்டுதல் வேண்டும் மீண்டும்.

மூலம் :HOWARD R LEWIS and
HAROLD S STREITFELD
________________________


சலித்துப் போனீர்களா ?
________________________

தொலைக் காட்சிப் பெட்டகத்தைத் திறந்தால்
உலகமே ஊடுறுவுகிறது உங்கள் வீட்டிற்குள்.
முந்தைய தலைமுறையினர்
கனவிலும் காணாத காட்சிகளைக்
காண்கிறோம் நாமும் குழந்தைகளும்.
நிலவின் வெண் படலத்தில்…………….
விண்கலத்தில்………………………………..
மிதக்கின்றனர் இப்புவியின் மாந்தர் !
நிமிடங்கள் கழியக் கழிய
வருகிறது கொட்டாவி விழுகிறோம் படுக்கையில்
தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்து விட்டு.

அரை மணி¢த் தியாலத்துக்குள்ளேயே –
படைப்பிலிருந்து இது வரை
மனிதன் நிகழ்த்திய மகத்தான சாதனைகள்
மகிழ்விப்பது இல்லை நம்மை.

குண்டு வீச்சுகளும் விமானக் கடத்தல்களும்
சகிக்க முடியாத கொடுமைகள் பலவும்
வண்ண உயிர்ப்புகளாய் ஜொலிக்கிறது
கண் முன்னே……எதிர் வினை புரிகிறோம்
இன்னும் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்து
இன்றேல் அருந்துகிறோம் பீர்- ஒரு குவளை.

ஒவ்வொரு காட்சியிலும் எப்படி சகிக்க முடியும் ?
அட்டூழியங்களையும் அநியாயங்களையும்.
எப்படி இருக்க முடியும் ?
சலிப்பில் மூழ்காமல் .


ஊர்தி பாதி _ ஓட்டுனர் பாதி
_______________________

இயங்கூர்திகள்……
மனிதனின் நீட்சி என்ற
மெக்லுகானின் கருத்தை எண்ணி
வியக்கத் தொடங்குகையிலேயே
தம்முடைய நீட்சியாக
மாற்றி விட்டனவே
மனிதனை
இயங்கூர்திகள்.

கார்கள் எனப் பரவலாக
நாம் அழைக்கும் கனத்த ஓடுகள்
நமது கால்களின் – ஆத்மாவின்
நீட்சியாகி விட்டன .
வாழுகின்றன நம்முடன் அவை
வாழ்கிறோம் நாமும் கூடவே
சக உயிரிகளாக.

ஊர்திகளுக்கும் ஓட்டுனர்களுக்கும்
இடையிலான உறவு – இரு
இனங்களின் இசைவு என்பது
யதார்த்தம் ஆகி விட்டது .

பாதி மனிதன் பாதி இயந்திரம்
ஹ்யக்கிரீவனாக
குதிரை முகமும் மனித உடலுமாய்
ஊர்தி ஓட்டுனர் .

JEFFREY SCHRANK
AUTO MAN –CYBORG


ஆனால்….எங்கோ
shannon Dickson,15 year old Texan Boy.
____________________

இயந்திரமாகப் பயன் படுத்தப் படுகிறது
எனது தலைமுறை.
எப்படி மாற்ற முடியும் ?

கணிணிகள் கைப்பற்றுகின்றன
மூளையின் பாத்திரத்தை
மேலும் மேலும் குழப்புகிறது
மின்னணுவியல்.
விடை எங்கோ வெளியில் தான் !

MARGARET MEAD


என்னைப் பார் !
______________

என்னைப் பார் ! என்னைப் பார் !
உயிருடன் இருக்கும் போதே
என்னைப் பார் !
கதறுகிறது மனம் -உள்ளீடற்ற
வெற்றுச் சுவர்களின் பின்னேயிருந்து.
பிரதிபலிப்பைக் கடக்க விடாத படி
எண்ணிக்கை இடப்பட்டு விட்டேனா ?
சூனியமாக…….அப்படியாயின்
கடவுளின் பேரால் கேட்கிறேன்
விலகி நில்லுங்கள்…………!
எனது நிழல் என்னைத் தொடரும் அளவும்
நிச்சயிக்கப்பட்ட வெற்று வெளியைச்
சென்றடையும் அளவும் !.


உலகே.!….நான் இளைஞன்.
_______________________

உலகே ! நான் இளைஞன்
தங்காத ஓர் தேடலில்
பீட பூமிகளிலும் சம வெளிகளிலும்
தகித்து வெளுத்த பாலை வெளியிலும்
திரிந்து அலைகிறேன்.

கதறி அழுகிறேன் கொட்டும் மழையில்
ஏறுகிறேன் சிகரங்களில் ஆர்வமுடன்
பசியோடும் இலட்சிய வெறியோடும்.
விழுந்து இடருகிறது எனது ஆன்மா
கிழிக்கும் முள்வேலிகளிலும்
தவறான பாதைகளிலும்.
மாலையின் நீண்ட நிழல்களில்
அச்சுறுத்துகின்றன சாவும் வாழ்வும்
வாய்விட்டுச் சிரிப்பேன்
நாளை எனது நம்பிக்கை வளருகையில்.
உலகே…நான் இளைஞன்
உனது நம்பிக்கை எனும் பகல் பொழுது.
உண்மையான ஞானத்தைத் தேடுகிறேன்
உன் வழியில்….ஒரு கை கொடுப்பாயா ?


குழப்பம்
_______

இப்போது இவ்வளவு
விரைவாக எதையும்
அவதானிக்க இயலாது
உலகம் தோன்றுவதற்கு
முன்னரும் அப்பாலும்
எங்கிருக்க முடியும் நான்.


எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் ?
_______________________________________

தந்தையர் காத்துக் கொண்டிருக்கின்றனர்
மற்ற கடமைகள் ஓயும் வரை……………..
பிள்ளைகளுடன் அறிமுகம் செய்து கொள்வதற்காய்.
மகள்களின் மேல் உண்மையிலேயே
மேலும் மேலும் கவனம் செலுத்த
காத்துக் கொண்டிருக்கின்றனர் தாய்மார்கள்.
கணவன் மனைவியர் காத்துக் கொண்டிருக்கின்றனர்
ஒருவரை ஒருவர் நெருக்கமாய் அறிந்து கொள்ள.
ஆனால் காலம், அன்னியோன்னியம் ஆவதற்கு
அனுமதிப்பதில்லை மக்களை.
எப்போது வாழத் தொடங்கப் போகிறோம்
இது தான் வாழ்க்கை என்பதாக ?
இது தான் நமது காலம்
இது தான் நமது நாட்கள்
கடந்து கொண்டே போகின்றன அவை.
இன்னும் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் ?.


எண்ணிக்கையா ?……….தரமா ?
____________________________
கல்லூரி மாணவன் சொன்னான் _
வேறு படிப்புக்கு மாறப்போகிறேன்.

பரபரத்துப் போகிறேன் தேர்வுக்குப் படிப்பதில்
ஒரு புத்தகத்தையும் புரிந்து கொள்ள நேரமில்லை
மறந்தே போனேன் புத்தகத்தை ரசித்து மகிழ்வதற்கு .

நமக்கும் இதுதான் நிலையா ?
நிலவும் பரபரப்பு வாழ விட வில்லையா ?
அமைதியாக அமர்ந்து அசை போட முடியவில்லையா ?

அளவில் மூழ்கி தரம் மறந்து போனால்
வாழ்வதில் என்ன லாபம் ?
மனிதனுக்கு .


வாழ்வா ? சாவா ?
_________________

பிறப்பில் சுறுசுறுப்பாக இல்லாதவன்
இறப்பில் அவசரம் காட்டுகிறான்.


தானியங்கி மயமாதலுக்கு எதிராக…..
__________________________________

ஒரு வேளை……..நாம்
தானியங்கி மயமாதலுக்கு எதிரான
நிலை எடுக்க வேண்டியதாக மாறக்கூடும்.
ஏதோவொரு வகையில் வறையறுக்கப்பட்ட
கணிணி£யாய் மாறி வருகிறோமோ ?
மாறிவருகிறோம் பழக்க தோஷத்தில்
இயந்திரத்தனமாய் எண்ணவும்
எதிர் வினை புரியவும்.

சக மனிதர்களையும் வாழ்வையும்
பொறுத்தவரை ஒத்திப்போடுவது நல்லது
இயந்திரத்தனமாக எண்ணுவதையும்
எதிர் வினை புரிவதையும்.

அப்படிச் செய்வது உதவும் நமக்கு
இயந்திரமாக்கப்பட்ட உட்பகையை
வெருட்டி ஒட்டும் மந்திர வாதியாக.
தயார்ப்படுத்துமது நம்மை
முற்றிலும் புதிய கோணத்தில்
எல்லாவற்றையும் பார்க்க .
விடுவிக்குமது நம்மை
வறையறுக்கப்பட்ட இயந்திர மயமான
இயக்கத்தில் இருந்து.
இட்டுச்செல்லுமது நம்மை
புதிய மனத்தோடும் புதிய நோக்கோடும்
யதார்த்தத்தை தரிசிக்க.

BOB DYLON


Series Navigation