பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

அரவிந்தன் நீலகண்டன்


ஆலன் வாட்ஸ் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ இறையியலாளர். கிறிஸ்தவ இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆயின் அவர் பெற்றிருக்கும் பிரபலம் ‘கிழக்கத்திய ‘ ஞான மரபுகளை (வேதாந்தம், ஸென் மற்றும் தாவோ) குறித்த அவர் எழுத்துகளுக்காகவும் விரிவுரைகளுக்காகவும் ஆகும். மேற்கின் மனம் கடந்த நூற்றாண்டில் குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்கு பின் பெரும் கடைதலுக்கு உள்ளாக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் தன் ஆன்மிக ஊன்றுகோலாக பல ‘கிழக்கத்திய ‘ மதிப்பீடுகளை உள்வாங்கியது. நிறுவன திருச்சபைகளுக்கு அப்பாலான ஒரு ஆன்மிக வாழ்விற்கான மதிப்பீடுகளை மேற்கத்திய அறிவுலகச் சட்டகம் வழியே வாங்க அது முயன்றது. அம்முயற்சியின் ஒரு முன்னோடியாக ஆலன் வாட்ஸ் அறியப்படுகிறார். இயற்கை, இறை, மானுடம் ஆகியவற்றிற்கிடையேயான உறவுகளில் கிறிஸ்தவ இறையியல் ‘கிழக்கத்திய ‘ தர்மங்களிடமிருந்து சில ஆன்ம பார்வைகளை பெற்றுதான் ஆழமடைய முடியும் என்பது ஆலன் வாட்ஸின் துணிவு. கிறிஸ்தவ இறையியல் பல நூற்றாண்டுகளாக ‘கிழக்கத்திய ‘ தர்ம மரபுகளை அறிந்திருந்தாலும் அவற்றுடனான உரையாடலை திருச்சபைகள் ஒரு மேல்படியிலிருந்து தான் நிகழ்த்தியுள்ளன. (இன்றும் அந்நிலையே தொடர்கிறது.) மாறாக வாட்ஸ் ஆசிய தர்ம மரபுகளிலேயே கிறிஸ்தவ இறையியலின் பரிணாம வருங்காலம் இருப்பதை காட்டுகிறார். ‘இறையியலுக்கு அப்பால் ‘ எனும் அவரது சிறிய நூல் முக்கியமான ஒன்று.

கிறிஸ்தவ இறையியலின் முக்கிய, மைய அங்கங்களான கடவுளும் சைத்தானும் ஒரு நாடக மேடையின் இரு நடிகர்களென தன்னுரையில் கூறுகிறார் வாட்ஸ். வாட்ஸ் ? அந்நாடகத்தில் வரும் நகைச்சுவையாளன். மனிதனின் தனித்தன்மைக்கு கிறிஸ்தவ இறையியல் முக்கியத்துவம் அளித்துள்ளது. உன்னுள் உறையும் உன்தனித் தன்மை படைப்பாளன் உனக்கு அருளியது. அதை நீ எத்தனை நன்றாக பயன்படுத்தினாய் உன் வாழ்வில் என்பது கிறிஸ்தவ இறையியலில் முக்கிய கேள்வி. யூத இறையியலாளரான மார்ட்டின் பூபர் ஒருமுறை கூறினார், ‘இறுதி தீர்ப்பின் போது இறைவன் என்னிடம் நீ ஏன் எலிசா போல நடக்கவில்லை என்றோ அல்லது ஏன் மோசே போல நடக்கவில்லை என்றோ கேட்கப் போவது இல்லை. மாறாக நீ ஏன் மார்ட்டின் பூபர் போல நடக்கவில்லை என்றுதான் கேட்பான். ‘ ‘ஏதுமற்ற மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட நீ உன் படைப்பாளன் கண் முன் எவ்வளவு உன்னதமானவன் என நேசிக்கப்படுகிறாய் தெரியுமா ? இந்த நேசத்திற்கு நீ உன்னை தகுதியுடையவன் ஆக்கிக் கொள்ள வேண்டாமா ? ‘ எனும் கேள்வியே மேற்கின் இறையியலில் மிகப்பெரும் இயங்கு சக்தியாக விளங்குகிறது. சுற்றுச்சூழலுடன் இணைந்த தனித்தன்மைகளுக்கு அப்பால் பின்னி பிணைந்த மானுடத்தை கிறிஸ்தவ இறையியல் உணர இதுவே தடைகல்லாக விளங்குகிறது என்கிறார் வாட்ஸ். ஹிந்து மற்றும் புத்த மரபுகளில் இவ்வுண்மை இயல்பாகவே காணக்கிடைக்கும் ஒன்று. இந்நிலையில் கிறிஸ்தவ இறையியல் ஐரோப்பிய, யூத மற்றும் இஸ்லாமிய பின்புலத்தில் எவ்விதம் பொருந்துகிறதோ அவ்விதமல்ல பாரத சீன ஞான மரபுகளின் பின்புலத்தில் பொருந்துவது. எனில் எவ்வாறு ? ராபர்ட் த நொபிலி பாரத சூழலில் வேத உபநிடதங்கள் ‘பழைய ஏற்பாட்டிற்கு ‘ பதிலியாக்கப்பட வேண்டும் என்றார். அதாவது ஹிந்து மதத்தின் ஆன்மிக தேவையின் வெளிப்பாடாக வேத உபநிடதங்கள், அதன் பூர்த்தியாக கிறிஸ்தவ நற்செய்தி. பல இந்திய கிறிஸ்தவ இறையியலாளர்கள் இந்த முறையை பின்பற்றுவதை காணலாம். வாட்ஸ் இம்முறையிலான இணைப்பை மறுக்கிறார். (பக். 16) ஏன் ? கிறிஸ்தவம் காணும் பிரபஞ்சமல்ல ஹிந்துமதம் காணும் பிரபஞ்சம். இறை இயற்கையே இரண்டிற்கும் மாறுபடுகிறது. ‘வாக்களிக்கப்பட்ட மெசையாவின் ‘ பூர்த்தியாக கிறிஸ்தவ மத நம்பிக்கையை முன்னிறுத்த முடிவது போல, ‘தத்வமஸி ‘யின் பூர்த்தியாக கிறிஸ்தவ மத நம்பிக்கையை முன்னிறுத்த முடியாதென்பதே இதன் காரணமாகும். கிறிஸ்தவ இறையியலின் பெரும் குறையாக வாட்ஸ் காண்பது அதன் நேரடிபொருள் கொள்ளும் தன்மையையே. ‘கிறிஸ்தவ இறைநூலுக்கு விளக்கமளித்தவர்கள் கவிஞர்களல்ல வழக்கறிஞர்கள். எனவேதான் இந்த நேரடிபொருள் கொள்ளும் தன்மை இறையியல் சித்தாந்தமாயிற்று. ஆனால் ஹிந்து ஞான மரபின் பின்புலத்தில் கிறிஸ்தவ இறையியலின் பெரும் சுவர்க்கமும் மீளா நரகமும், அதன் அனைத்து அழகுடனும் கோரத்துடனும் ஒரு பெரும் நாடகத்தன்மையுடன் விளங்க முடியும். ‘(பக் 21-22) சில முக்கிய வேறுபாடுகளை வாட்ஸ் இவ்விட்த்தில் காட்டுகிறார். ஹிந்து பிரபஞ்ச உற்பத்தி ஒரு நடன அசைவு; கிறிஸ்தவ இறைவனோ பெரும் குயவன். மேற்கில் ஒருவன் தன்னை கடவுள் என்றால் உடனே கேட்கப்படும் இறையியல் எதிர்வினை ‘அட எப்படி ஐயா உலகை தாங்கள் 7 நாட்களில் படைத்தீர்கள் ? ‘ என்பதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் ஒருவன் தன்னை கடவுள் என்றால், ‘ஆகா இறுதியில் உணர்ந்துவிட்டார்கள் வணக்கங்கள் ‘ என்பதாக இருக்கும். வாட்ஸ் ‘உயரிறையியல் ‘ (meta-theology) எனும் பதத்தை புகுத்துகிறார்.

கிறிஸ்தவத்தின் புராண கதையாடலிலும் சரி, இறையியல் மரபுகளிலும் சரி அவை அனைத்தும் மாயை மற்றும் லீலை ஆகிய கண்ணோட்டத்தில் காணப்படுகையில் அவை ஆன்ம சாதனைக்கான பாதையாக மாறுவதை வாட்ஸ் தொடர்ந்து காட்டுகிறார். வேடிக்கை கலந்த நடை. ஏனெனில் அவரைப் பொறுத்தவரை உண்மையில் இறைவன் அல்லது பிரபஞ்ச நாடகம் உண்மையில் வேடிக்கையான ஒன்றுதான். பிரபஞ்ச நகைச்சுவை உணர்வின் வெளிப்பாடாக கிறிஸ்தவ இறையியலை அவர் காண்கிறார். ஏசுகிறிஸ்து சிலுவையில் நம் பாவங்களுக்காக மரித்தார் என்பது உண்மையில் தனியான ஆளுமைகளுடன் தனித்தன்மையுடன் நினைத்துப்பார்க்கையில் இயலாத ஒரு காரியமாகிறது. அது (நிறுவன திருச்சபையின் மைய இறையியலில் விளங்குவது போல) வரலாற்று ரீதியிலான உண்மை என கருதப்படும் போது இன்னமும் இயலாத முரணாகிவிடுகிறது. ஆனால் இந்த முரணே மிக அதிகமான அழுத்தத்தை கிறிஸ்தவ தர்க்கத்திற்கு அளித்து ஒரு தருணத்தில் அது முறிகிறது. தனித்துவ ஆளுமை வரலாற்று உண்மை எல்லாம் மறைய சாதனையாளன் உண்மையை அடைகிறான். ‘தத்வமஸி ‘ நோக்கிய பயணமற்ற பயணத்திற்கான ‘கோன் ‘ (Koan) ஆக கிறிஸ்தவ இறையியலின் தன்மை மாறிவிடுகிறது. பின்னர் ‘ஸதோரி ‘. உதாரணமாக மத்தேயு 24:23-27 இல் இரண்டாம் வருகை குறித்த ஏசுவின் வார்த்தைகளில் இதுவரை கிறிஸ்தவ திருச்சபைகளின் இறையியலாளர்கள் கண்டிராத புதிய பொருளினை நாம் காண முடிகிறது. இங்கு மெசையாவின் இரண்டாம் வருகை புறமும் அகமும் இல்லாததோர் வெளியில் ‘மின்னலை ஒப்ப ‘ வருவதாக கூறப்படுவது ஸென் பயிற்சிகளின் இறுதியில் அல்லது இடையே திடாரென நிகழும் பிரக்ஞயின் திறப்பாக இருக்க கூடும்! (பக் 159-160)

ஒரு சமயத்தின் சடங்குகள் அதன் பிரபஞ்சநோக்கினை காட்டுவதாக அமைவன. பைசாண்டியத்திலும் ரோமையிலும் வளர்ந்த கிறிஸ்தவத்தின் சடங்குகள் ஒரு தீவிர ஒழுங்கின் மிகக்கட்டுப்பாடான தராதரங்கள் நிறைந்த அமைப்பினை வெளிக்காட்டுவதாக அமைகிறது. நகரங்களின் அரசமைப்பிலிருந்து பெறப்பட்டது கிறிஸ்தவ பிரபஞ்ச நோக்கும் சடங்குகளும் என்கிறார் வாட்ஸ் (அவரது மற்றொரு புகழ்பெற்ற நூலான ‘Nature, Man and Woman ‘ இல் இப்பிரச்சனையின் ஆழ வேருக்கு போகிறார்.) ஆனால் ஏசுவோ உயிரியக்க உறவுகளை (Organic) தன் மெய்யியலில் வலியுறுத்தியதாக கூறுகிறார். ‘பாசிலிக்காவின் தேவ ஆராதனையில் ஆராதனை பீடமே சிம்மாசனம். ஏசு அப்பெரு மாளிகையின் இறுதியில் சுவரில் முதுகு சாய்த்து, பின்னாலிருந்து எதிரிகள் வராதபடிக்கு, நிற்க அவரது கவனமிகு காவலாளிகளாக மற்றோர் நிற்க அரசவையில் அந்த ஆராதனையில் பங்கேற்பார். ‘ (பக் 161-162) அடுத்ததாக பாலியல் உறவுகளுக்கு கிறிஸ்தவ இறையியலில் கிடைக்கும் இடத்தை கிறிஸ்தவத்தின் இறை-பிரபஞ்ச-மானுட உறவு குறித்த பார்வைகளின் நீட்சியாக காண்கிறார் வாட்ஸ். உடலுறவு விளைவும் பிரம்மச்சரியமும் எதிர் எதிரானவை எனும் மாயையின் முழுமையான வெளிப்பாடு கிறிஸ்தவ இறையியல் எனும் வாட்ஸ் இது பல தேவையற்ற சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும், குற்ற உணர்வையும் கிறிஸ்தவ ஆன்மிகவியலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்கிறார். ‘வார்த்தை உடலானது குறித்து கிறிஸ்தவம் பூரணமாக உணர வேண்டுமெனில் உடலுறவின், உடலுறவு விழைவின் ஆத்மிக இயற்கை ஏற்கப்பட வேண்டும் ‘ என்கிறார் வாட்ஸ் (பக். 189) .

யூத கிறிஸ்தவ இஸ்லாமிய மரபுகளில் வந்த ஞானிகள் தம் அகத்தேடலை ஒரு பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் விதத்தில் உருவாக்க முடியவில்லை என்கிறார் வாட்ஸ். இதில் இஸ்லாமிய மற்றும் யூத ஞான மரபுகள் குறித்து வாட்ஸ் கூறியதை ஏற்க முடியவில்லை. ஏனெனில் யூதர்கள் தங்களுக்கென சுதந்திரமாக ஒரு சமுதாயத்தில் தம் ஆன்மிக வாழ்வின் விகசிப்பை காண முடியவில்லை. என்ற போதிலும் கபாலா எனும் ஞான மரபு மிக நன்றாகவே அச்சமூகத்தில் வளர்த்தெடுக்கப் பட்டுள்ளது. இஸ்லாமிலும் போப் போன்ற முழுமையான ஆன்ம அதிகாரம் பெற்ற பேரரசராக கலீபா விளங்கியதில்லை. பலவித ஸுஃபி ஞான மரபுகள் வளர்ந்துள்ளன. அவை மத நிறுவனத்தன்மை கொண்ட மெளல்விகளால் ஒடுக்கப்பட்டாலும் வாட்ஸ் கூறும் அகப்பயணத்தின் வரைபடத்தையும், பரிசோதனைகளையும் (பாரத சீன ஞான மரபுகளுக்கு கிடைத்த சுதந்திரத்துடன் இல்லையெனினும், எனவே அவற்றின் சாதனைகள் இன்னமும் மதிப்புடன் உணரப்பட வேண்டியவை) பதிவு செய்து வைத்துள்ளன. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ நிறுவன சமயங்கள் கடும் யூத வெறுப்பினை தம் இறையியலில் கொண்டிருந்த போதிலும் ஸூஃபி-கபாலா உறவு செழுமையாக இருந்தது.

ஆலன் வாட்ஸ் வெளிப்படையாகவே கூறுவது போல இந்நூல் முழுவதுமே ஹிந்து பார்வையில் கிறிஸ்தவ இறையியல் அடையவேண்டிய மாற்றங்களை கூறுகிறது. ராபர்ட் த நோபிலி முதல் இன்றைய கிறிஸ்தவ திருச்சபையின் மைய இறையியலாளர்கள் ஹிந்து மதத்தையும் பிற ஆசிய ஞான மரபுகளையும் காணும் பார்வையை தலைகீழாக மாற்றிப்போடுகிறது இந்நூல். விளைவு அபாரமானதாக உள்ளது. திருச்சபையை இந்திய மயமாக்குகிறோம் என்று ‘இந்திய மயமாக்கப்பட்ட ‘ கோக் விளம்பரங்களின் இறையியல் சமான முயற்சிகளை காட்டி வரும் கிறிஸ்தவ திருச்சபைகள் உண்மையில் தம்மில் அடைய வேண்டிய மாற்றங்களை இந்நூல் கூறுகிறது. ஹிந்து தேசியவாதியும் வரலாற்றறிஞருமான திரு.சீதாராம் கோயல் அவர்களும் ஹிந்து சிந்தனையாளரான ராம் ஸ்வரூப்பும் கிறிஸ்தவம் என்னதான் வெளிப்புற சின்னங்களை போட்டுக்கொண்டாலும் சில உள்ளார்ந்த மதிப்பீடுகளை தம் இறையியலில் கொண்டிருக்கும் வரை ஹிந்து ஞான மரபின் முழுமையை கிறிஸ்தவத்துடன் இணைக்க முடியாதென கூறினர். கிறிஸ்தவத்தின் இப்பண்பு ‘பிடிவாதம் கொண்ட ஆன்மிக தனித்துவம் ‘ என்றும் இது நாஸிகளின் சித்தாந்தத்திற்கு ஒப்ப உள்ளது என்றும் ஆலன் வாட்ஸ் கூறுகிறார். (பக். 151) இப்பண்பே கிறிஸ்தவத்தின் மதமாற்ற போக்குக்கு மூலவிதை. கிறிஸ்தவம் தான் ஆழப்பட அதனை இழந்தாக வேண்டியது அவசியம். கார்டினல் ராட்ஸிங்கர் போன்றவர்களின் மதவெறி வத்திகானின் மிக உயர்ந்த பீடங்களில் செல்லுபடியாகும் இந்நாளில், கத்தோலிக்க திருச்சபை தன் மத்தியகால இறுகிய இறையியலில் மூழ்கி திளைக்கும் இந்நாளில் ஆலன் வாட்ஸின் இந்நூலில் கூறப்படும் கருத்துகள் ஏற்கப்படுவது கடினம்தான். ஆனால் ஒரு சிறிய கிறிஸ்தவ வேதாந்திகள் இல்லாமலில்லை. ஜோஸப் புலகென்னல், மறைந்த அந்தோணி தி மெல்லா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எனினும், இன்று வேதாந்த கிறிஸ்து உயிர்த்தெழ, ரோம சாம்ராஜ்யாதிபதிகளால் சிலுவையிலறையப்படுகிறது உண்மைக் கிறிஸ்துவின் தேகம்.

நூலிலிருந்து:

‘மேற்கத்திய உளவியல் தன் ‘சொந்த ‘ மனதின் நனவிலித்தன்மைகளை கண்டுபிடிப்பதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பாரதிய மற்றும் சீன ஞானிகள் பிரக்ஞையை நனவின் தளத்தின் எல்லைகளுக்கு அப்பாலுமான இயக்கங்களை உட்கொள்ளும் விதத்தில் விரிவடையவும் ஆழப்படுத்தவுமான பரிசோதனைகளை வடிவமைத்துவிட்டனர். யூத, இஸ்லாமிய கிறிஸ்தவ மரபுகளிலும் ஞானிகள் ஆன்மிக பயிற்சிகள் மூலம் பிரக்ஞையை விரிவடைய செய்து உயர் அனுபவங்களில் திளைத்துள்ளனர் எனினும், அம்மரபுகளில் அகப்பயணத்தின் ‘புவியியலை ‘ ஹிந்து மற்றும் பெளத்த மரபுகளைப் போல கவனமாகவும் விரிவாகவும் பயிலவில்லை. மாறாக மேற்கத்திய மரபுகளில் மனிதனின் ஆன்மா, உயிர் ஆகியவை குறித்த அறிதல் குழப்பமாகவே உள்ளது.

இத்தகைய பரிசோதனைகளிலிருந்துதான் பாரதிய ஞானிகளும் சீன ஞானிகளும் மானுடத்தின் ஆழத்திற்கும் (ஆன்மா) பிரபஞ்சத்தின் ஆழத்திற்கும் (பிரம்மம்) இருக்கும் ஒருமையையும் தொடர்ச்சியையும் உணர்ந்தனர். மாறாக யூத-கிறிஸ்தவ-இஸ்லாமிய பாரம்பரியங்களில் இத்தகைய பரிசோதனை போக்கு இல்லை என்பது மாத்திரமல்ல, அத்தகைய பரிசோதனை போக்கின் எழுச்சி வன்முறைக்கொடுமையால் அடக்கி ஒடுக்கப்பட்டது. எனவேதான் மேற்கத்திய இறையியலின் பிரபஞ்ச நோக்கு வெளிப்படுத்தப்பட்ட புனித நூல்களைச் சார்ந்திருக்கின்றதே ஒழிய பரிசோதனைகளைச் சார்ந்ததாக இல்லை. இன்றைக்கும் மிகவும் பரந்த மனம் படைத்தவர்களாக கருதப்படும் புரோட்டஸ்டண்ட் இறையியலாளர்கள் கூட ‘விவிலியம் கூறுவது படி ‘ என்பதை ஏதோ விவிலியத்தை எழுதியவர்களுக்கு சத்தியத்தை மற்ற காலங்களிலும் மற்ற கலாச்சாரத்தினராலும் அறிய முடிந்ததை விட, நம்மால் அறிய முடிந்ததைக் காட்டிலும் கூடுதலாக அறிய முடிந்தது எனும் பொருளுடன் பயன்படுத்துவதை காணலாம். விவிலியத்தின் பிரபஞ்ச பார்வையோ ஒரு சர்வாதிகார ஏக அரசனின் ஆட்சியாக உலகை காண்கிறது. பரிசோதனை மூலம் அறியப்பட முடிந்த பிரபஞ்ச தரிசனமே இன்று ஏற்கதக்கதாக உள்ளது. ‘ (பக். 204-206)

Alan Watts, ‘Beyond Theology-The Art of Godmanship ‘ Vintage Books NY,1973. இந்திய விலை (1998) Rs 145/-

***

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்