இந்த வாரம் இப்படி – மார்ச் 16 2003. (திருமாவளவன் -சர்ச், இளையபெருமாள், ஓசை சூழல் மாசு)

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

மஞ்சுளா நவநீதன்


திருமாவளவனும் சர்ச்சும் : ஒரு மோசடியும் சில கேள்விகளும்

தலித் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குரலில் பேசி ஜோசப் என்கிற ரவி சில மோசடிகளைச் செய்துவருவதாய் செய்தி வந்துள்ளது. இது ஒரு விசித்திரமான கேஸ். இதில் பல கேள்விகள் எழுகின்றன. திருமாவளவன் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு உதவ மூன்று சக்கர வண்டி வழங்குவதற்காக பணம் கேட்டு போன் செய்ததாக ரவி ஒரு சர்ச்சின் பொறுப்பாளர் பாதிரியாருக்கு போன் செய்ய அவர் ரூ 10,000-க்கு காசோலையை வழங்கத் தயாராய் இருக்கிறார். இது பற்றி அவர் எந்த தயக்கமும் காட்டவில்லை. இரண்டாவது சர்ச்சிலும் இவர் போன் செய்து இதே முறையைக் கையாண்டிருக்கிறார். இங்கும் இவர்கள் அவர் சொல்லைத் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவனுக்கு பாதிரியார் போன் செய்ததால் இந்த வேண்டுகோள் அவருடையதல்ல என்று தெரிந்து குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார்.

விசித்திரம். பொதுவாக அரசியல் வாதிகள் பெயரைச் சொல்லி வியாபாரிகளை அணுகி பண வசூல் செய்வது வழக்கம். வியாபாரிகளும் அரசியல்வாதிகளுக்கும், வரி வசூல் காரர்களுக்கும் இது போன்ற மாமூல்களை வழங்குவதும் தெரிந்த செய்தியே. ஆனால் அரசியல்வாதி சர்ச்சை அணுகி உதவி கேட்பது என்பது பாதிரியார்களால் எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. வழக்கமாய் நடக்கும் ஒரு செயலின் தொடர்ச்சியாய் இது பாதிரியார்களால் இனங்காணப் பட்டிருக்கிறதே தவிர எதுவும் வித்தியாசமாக அவர்கள் உணரவில்லை. என்றால் என்ன பொருள் ? திருமாவளவனுக்கு இந்த சர்ச்சுகள் முன்னாலும் உதவி செய்துள்ளனவா ? பொதுவாக அரசியல்வாதிகளுடன் சர்ச்சுகள் இணைந்து செயல் புரிந்தாலும், சர்ச்சுகளிடம் உதவி பெறும் அளவிற்கு அரசியல் வாதிகள் செல்வதில்லை. அவர்கள் தான் சர்ச்சிற்கு உதவி செய்து கைம்மாறாக வாக்குகளை எதிர்பார்க்கலாம். ஆனால் சர்ச் முன்வந்து உதவி செய்தது என்றால் என்ன கைம்மாறு எதிர்பார்க்கப் பட்டது ?

திருமாவளவன் போன் செய்து உதவி கேட்பது வழக்கமான ஒரு விஷயமா ? அவர் சர்ச்சுகளிடம் மட்டும் தான் உதவி கேட்கிறாரா அல்லது மடாதிபதிகளிடமும் கேட்பதுண்டா ? சர்ச்சுகளிடம் உதவி இதுவரை என்ன வடிவங்களில் எப்படி அடைந்திருக்கிறார் ? அந்த உதவிகள் எப்படிப் பயன்படுத்தப் பட்டுள்ளன ?

சர்ச்சுகள் திருமாவளவனுக்கு மட்டும் தான் உதவி செய்து வந்துள்ளனவா அல்லது மற்ற கட்சிகளுக்கும் செய்து வந்துள்ளனவா ? வெறும் சாதிக்கட்சிகளுக்குத்தான் இந்த உதவிகள் சென்றடையுமா ? ராம்தாஸ், கிருஷ்ணசாமி போன்றோரையும் இந்த உதவிகள் சென்று அடைந்ததுண்டா ? ஆம் என்றால் ஏன் ? இல்லையென்றால் திருமாவளவனுக்கு மட்டும் உதவி செய்ததாகக் கொள்ளலாமா ? இந்த உதவிகளின் காரணம் வெறும் மனிதாபிமானம் தான் எனில் மற்ற அரசியல் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப் படவில்லையா ?

***

காங்கிரசில் இளையபெருமாள்

தாழ்த்தப் பட்ட மக்களின் தலைவர் இளைய பெருமாள் காங்கிரசில் இணைந்திருப்பது வரவேற்கத் தக்க விஷயம். பெரும் கட்சியின் ஓர் அங்கமாய் இருப்பது பல விதங்களில் பலத்தைக் கொடுக்கும். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரும் ஆளுமைகளால் மொத்தமாய்க் குத்தகைக்கு எடுக்கப் பட்ட தி மு க , அதி மு க கட்சிகளைக் காட்டிலும் காங்கிரஸ் பல வகைகளில், பலதரப் பட்ட தலைமையை உருவாக்கும் வலிமை கொண்டது. தி மு க அதி மு க வட்டாரங்களில் இரண்டாம் நிலைத் தலைமை வளர வாய்பே இல்லை. ஆனால் தமிழ் நாட்டுக் காங்கிரசில் எல்லாருமே இரண்டாம் நிலைத் தலைமை தான் என்பதால் தாழ்த்தப் பட்ட மக்களும் நியாயம் பெற வழி உள்ளது.

நிச்சயம் இந்த உத்தியை திருமாவளவன், ப கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களும் கைக்கொள்ள வேண்டும்.

***

ஓசையினால் ஏற்படும் சூழல் மாசு

ஒரு வீட்டில் ஒலிபெருக்கி வைத்து மதப் பிரசாரம் மற்றும் பிரார்த்தனை செய்வது சட்டப் படி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தெரு மூலைத் தேநீர்க்கடை தொடங்கி தெய்வீக சுகமளிக்கும் கூட்டங்கள் வரை, திடலில் நடக்கும் ‘பொதுக் ‘கூட்டம் தொடங்கி பஜனை மடங்களின் கூக்குரல் வரையில் மற்றவர்கள் சுதந்திரத்தை மதிக்காமல் காதுக்குள் நுழையும் ஒலிகள் ஏராளம். இவை எல்லாமும் தடை செய்யப் படவேண்டும். அரசியல், மதக் கூட்டங்கள் எல்லாமே மூடிய ஒலி வெளியேறாத மண்டபங்களில் தான் நடத்தப் அப்டவேண்டும். மாநாடுகள் போன்றவையும், மாநாட்டுப் பந்தலைத் தாண்டி குரல் செல்லாவண்ணம் தான் அமைக்கப் படவேண்டும்.

இத்துடன் தொடர்புள்ள இன்னொரு விஷயம் ஊர்வலங்கள் பற்றியது. சாலைப் போக்குவரத்துக்கு ஊறு விளைவிக்கும் கூட்டங்களும், ஊர்வலங்களும் தடை செய்யப் படவேண்டும். சாலைகளை உபயோகிக்கும் பொது மக்களின் உரிமை மதிக்கப் படவேண்டும்.

***

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்