மரம் மறப்பதில்லை

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

பா.சதீஸ் முத்து கோபால்



“இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள மரத்த முழுசா வெட்டிப்புடுங்க. நாளைக்கு வெள்ளன நான் ஊருக்கு கெளம்பனும்” என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தான் முத்து செல்வன். இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் சென்னையிலிருந்து தன் ஊருக்கு வந்திருந்தான். தன் பெற்றோரை இழந்த பிறகு அந்த வீட்டில் தற்போது யாரும் இல்லை. தன் உறவினர்களும் அருகில் இல்லாததால் அந்த வீடே பராமரிப்பின்றி பாழ்பட்டுக்கிடந்தது. இனி தனக்கும் இந்த ஊரில் வேலை இல்லை என்று முடிவான பிறகு, வீட்டை விற்று விடலாம் என்ற முடிவில், அந்த ஊரிலேயே ஒருவருக்கு பேசி முடித்துவிட்டான். உண்மையில் முத்து செல்வனுக்கு வீட்டின் முன்பு இருந்த மரத்தை வெட்டும் எண்ணம் இல்லை. இவனின் வருகையை தெரிந்து கொண்ட உள்ளூர் மரத் தச்சன் ஒருவன், மரத்தை விளை பேசவே, கிடைத்த வரைக்கும் லாபம் என்று வெட்டிக் கொள்ள ஒப்புக் கொடுத்தான்.

வீட்டில் இருந்த தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்த போது “மகனே!” என்று குரல் கேட்டது. வீட்டின் வெளியில் இருந்து யாரோ அழைப்பதை உணர்ந்து வெளியே வந்தான். யாரையும் காணவில்லை. மீண்டும் “மகனே!” என்ற அழைப்பு. தனக்கு மிகவும் பரிட்சயமான குரல் போல தோன்றியது. கிட்டத்தட்ட தன் தந்தையின் குரல். எதுவும் புரியாமல் அங்கும் இங்கும் தேடினான்.

“மகனே! நான் தான் மரம் பேசுகிறேன்”.

ஆச்சர்யத்தில் உறைந்து போனவன் சற்றே தலை நிமிர்ந்து பார்த்தன். சலனமற்று நிற்கிறது மரம்.

“மகனே ! என்னை பற்றிய நினைவுகள் உனக்கு இல்லாது இருக்கலாம். ஆனால் உன்னை பற்றிய நினைவுகள் எனக்கு இன்னும் பசுமையாக இருக்கிறது.”

மரத்திடம் எப்படி பேசுவது என்றோ, எங்கே பார்த்து பேசுவது என்றோ தெரியாது குழம்பிப் போயிருந்தான். உண்மையில் அவனுக்கு என்ன பேசுவதென்றே புரியாமல் தானிருந்தது.

“மகனே! இன்று என் வாழ்வின் கடைசி நாள் என்பதை தீர்மானித்திருக்கிறாய். என் மரணத்திற்கு முன்பாக உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமென நினைக்கிறேன்.”

மரத்தில் இருந்த குயில் கூவி முடித்த பின் மீண்டும் தொடங்குகிறது மரம். “உன்னுடைய தந்தை தன்னுடைய பதின் வயதில் என்னை இங்கே கொண்டுவந்து நட்டு வைத்தார். என்னை ஒருநாளும் கவனிக்க மறந்ததே இல்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு நீருற்றி வளர்த்தார். எங்கள் இருவருக்கும் பிரிக்க முடியாதபடி அன்பும் நட்பும் வேரூன்றி, நான் வளர்த்தேன்.”

“உன் தந்தை பெயரில் மட்டும் மீனாட்சி சுந்தரமாக இருக்கவில்லை. உண்மையில் குணத்திலும் அவர் சுந்தர்னாகவே இருந்தார். கோடை காலங்களில் ஒட்டுமொத்த கிராமமே தண்ணீருக்காக போராடிக் கொண்டிருந்தது. பத்து மைல் சைக்கிளில் சென்று தான் தண்ணீர் கொண்டு வருவார்கள். என்னுடைய தேவைக்காக உன் தந்தை எத்தனை நாள் அப்படி நீர் சுமந்தார் என்பது உனக்கு தெரியுமா? உன் தந்தைக்க்காகவே ஒரு துளி நீரையும் வீணாக்காமல் எல்லாவற்றையும் உறிஞ்சி நன்றாக வளர்ந்தேன். என் வளர்ச்சியை பார்த்து உன் தந்தை மகிழ்ச்சி அடைவதே என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது.”

“ஒரு முறை உன் அம்மாவும் அப்பாவும் சண்டை வந்து நாள் முழுதும் பேசிக் கொள்ளவே இல்லை. அன்றைய தினம் உன் அப்பா கோபத்தில் யாரிடமும் பேசிக் கொள்ளாமல் இருந்தார். மாலையில் வீட்டை விட்டு வெளியே வந்த போது தான், அவருக்கு என்னுடைய ஞாபகம் வந்தது. அன்று எனக்கு நீர் ஊற்றாமல் போனதை எண்ணி, என்னைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினர். அன்று தான் உன் அம்மா, உன் அப்பாவை நன்கு புரிந்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் சண்டையே வந்ததில்லை.”

“நீ பிறந்து வளரத் தொடங்கினாய். நீ இரவு உறங்கப் போவதற்கு முன்னால் எப்போதுமே என் மீதுதான் ஒன்றுக்குப் போவாய். எனக்கு அது ஒரு போதும் கவலை அளித்தது இல்லை. மாறாக எனக்கு அது மகிழ்ச்சியாகவே இருந்தது.”

“நீ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் என் மீது ஏறத் தொடங்கினை. அப்போது நான் நன்கு வளர்ந்து இருந்தேன். நீ என் கிளைகளில் ஏறி அங்கிருந்து கீழே விழுந்தாய். அப்போது உன் எலும்பு விலகிப் போனது. என் அன்பு மகனே! நான் அப்போது எவ்வளவு துயர் அடைந்தேன் என்பது உனக்கு தெரியாது. தொடர்ந்து ஒரு வார காலம் மண்ணிலிருந்து நீர் உறிஞ்சுவதை நிறுத்திக் கொண்டேன். என்னை நானே மாய்த்துக்கொல்லும் முடிவுக்கே வந்து விட்டேன். உன் தந்தையால் நான் வாடிக்கொண்டிருப்பதை தாங்கமுடியவில்லை. நான் என்னை நானே வருத்திக்கொண்டது அவருக்கு நிச்சயமாக தெரிந்து விட்டது. பிறகு நீ குணமடையத் தொடங்கிய போது நானும் உயிர்ப்பிக்கத் தொடங்கினேன்.”

“உன்னுடைய வெளியூர் பயணம், உன் தந்தையின் மரணம் என தொடர்ந்து எனக்கு துயரமான சம்பவங்களே நடந்த போதிலும் என்னை நம்பி வந்த உயிர்களுக்காக நானும் தொடர்ந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் எத்தனையோ பறவைகளுக்கு வாழ்விடமாக மாறிப் போயிருக்கிறேன். எப்போதும் என் மீது அணில்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. எனவே, என்னுடைய வேண்டுகோள் ஒன்றை நிறைவேற்றி வைப்பாயா மகனே?” என மௌனம் காத்தது மரம்.

“என்ன?” என்பதை தவிர்த்து வேறு எதுவும் பேசுவதற்கு முத்து செல்வனுக்கு வார்த்தை வரவில்லை.

“என் கிளைகளில் ஒன்றில் சிட்டுக் குருவிகள் கூடு கட்டி இருக்கிறது. அவை தற்போதுதான் முட்டையிட்டிருக்கிறது. இன்று மாலை கூடு திரும்பும் குருவிகள் தன் கூட்டை காணாது போனால் அவை எப்படி துடிதுடிக்கும் என்பதை நான் நான்கு அறிவேன். என்னை நம்பி வந்த பறவைகளுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. எனவே அந்த கூட்டை அப்படியே எடுத்து உன் வீட்டிற்கு வெளியே இருக்கும் கூரை இடுக்கில் வைத்து விடு. அவை எப்படியும் கூட்டை கண்டுபிடித்து விடும். எனக்காக இதை செய்வாயா?”

“செய்கிறேன்” என்று சொல்லி ஆமோதித்துவிட்டு தொடர்ந்து மரம் பேசுவதை கேட்க மனமின்றி அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்.

சற்று தூரம் நடந்த போது “மகனே!” என மீண்டும் அழைத்தது. திரும்பி பார்த்த போது தன் இலைகள் ஒவ்வொன்றையும் தானாகவே உதிர்க்கத் தொடங்கியது மரம். இலைகள் உதிர்வதை பார்க்கும் போது குற்ற உணர்ச்சி மேலிடத் தொடங்கியது. சிறிது நேரத்தில் எல்லா இலைகளும் உதிர்ந்து நிர்வாணமாய் நின்று கொண்டிருந்தது மரம். கண் கொண்டு பார்க்க முடியாமல் தலையை தாழ்த்திக்கொண்டான்.

“என் அன்பு மகனே! எனக்கு இருக்கும் கடைசி ஆசை ஒன்றையும் நிறைவேற்றி வைப்பாயா?”

பதிலுக்கு காத்திருக்கவில்லை மரம். தொடர்ந்து பேசியது.

“நான் கடந்த ஐந்து ஆண்டு காலமாக கிளைகளின் வழியாகவே உன் வீட்டில் மாட்டியிருக்கும் உன் தந்தையின் படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீ உன் தந்தையின் படத்திற்கு தகரத்தில் சட்டம் செய்து மாட்டி வைத்திருக்கிறாய். என்னை வெட்டிய பிறகு என்னை வைத்தே ஒரு சட்டம் செய்து, உன் அப்பாவின் புகைப்படத்திற்கு மாட்டிவிடு. நான் தொடர்ந்து உன் தந்தையோடு இருக்க விரும்புகிறேன். என் மரணத்திற்கு பிறகும்!”

மரத்தின் அருகே வந்த முத்து செல்வன் மரத்தின் முன் மண்டியிட்டு தலை தாழ்த்திக் குமுறிக்குமுறி அழத் தொடங்கினான். நீண்ட நேரம் ஆகியும் அவன் தலை நிமிரவே இல்லை.

——-

Series Navigation

பா.சதீஸ் முத்து கோபால்

பா.சதீஸ் முத்து கோபால்