கொள்ளை..

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

T V ராதாகிருஷ்ணன்


காலை எழுந்ததும்..கையில் காஃபியுடன்..அன்றைய தினசரியை எனக்கு படித்து விட
வேண்டும்..அப்போதுதானே..நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம்மால் அறிய
முடியும்.

கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களில் நான் வசிக்கும் அசோக்நகர்
பகுதியில் ..ஏதேனும் ஒரு இடத்தில் பட்டப் பகலில் கொலை..கொள்ளை
என்றிருக்கிறது.நாடே கெட்டுப் போச்சு..

நான் நினைத்தது சரி….’அசோக் நகரில் நேற்றும் பகல் கொள்ளை’ என்றது
தலைப்புச் செய்தி.அதைப் பார்த்ததும்..உடன் மனைவையைக்
கூப்பிட்டேன்..’பார்த்தியா..நேற்றுக் கூட நம்ம ஏரியாவிலே திருட்டுப்
போயிருக்கு..’ என்றவாறு ..அவள் கழுத்தில் அணிந்திருந்த கிட்டத்தட்ட
பத்து பவுன் சங்கிலியைப் பார்த்தேன்.

‘மேல படியுங்க’ என்றாள்.

‘அசோக் நகர்..18 ஆம் தெருவில் உள்ள சுபிக்க்ஷா அடுக்குமாடி
குடியிருப்பில்..இரண்டாம் தளத்தில் உள்ளது 8 ஆம் எண் உள்ள..ஃப்ளாட்.அங்கு
வசிக்கும் கந்தசாமி என்பவரும்..அவரது மனைவி லட்சுமியும் வேலைக்குச்
செல்லும் தம்பதிகள்.அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தினமும் வேலைக்குச்
செல்வது வழக்கம்.நேற்றும்..அப்படிச் சென்று விட்டு மாலை வீடு
திரும்பியவர்கள்..வீடு திறந்திருப்பதைப் பார்த்து..உள்ளே சென்று பார்த்த
போது..பீரோவை உடைத்து 35 சவரன் நகைகள்..ஒரு லட்சம் ரொக்கம்
கொள்ளையடிக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.போலீஸார் தீவிர
விசாரணை செய்து வருகிறார்கள்’

படித்து முடித்து..’பார்த்தியா நாம ஜாக்கிரதையா இருக்கணும்’ என்றேன்.

திடீரென ..’என்னங்க..நம்ம ஃப்ளாட்டும் 18ஆவது தெருதானே..’ என்றாள் சகதர்மணி .

‘சுபிக்க்ஷா’ நம்ம ஃப்ளாட் தானே.’

‘நம்ம வீட்டு நம்பர் 7..அப்போ 8..அடடே..நம்ம பக்கத்து வீடுங்க..’
என்றாள் படபடப்பாக

T V Radhakrishnan

Series Navigation