வலை (2000) – 2

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

ஆபிதீன்


***

இப்போது எழுதுகிறவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்றான் ரஃபீக். ஏன் தன்னை அப்போது குனிந்து பார்த்துக் கொண்டான் ?

‘உங்களைப் போல..’ என்று ஐஸ் வைத்தேன் மாமாவுக்கு.

அவர் மயங்கவில்லையாம். ‘அப்படீண்டா நாம முதல்லெ எழுத வேண்டியது லாயர் மாமா பற்றித்தான். பெரிய Hypnotic Force உள்ள ஆள்..’ என்று நேராக ரஃபீக்கிற்கு பதில் சொன்னார்.

லாயர் மாமாவா ?! அவர் எழுத்தாளரா ? எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதை விட ஆச்சரியமான செய்தியை மெய்தீன் மாமா சொன்னார். என் சொந்தக்காரர் ஒருவருக்கு அந்தக் காலத்தில் லாயர் மாமா உதவியது..

‘அப்ப நான் சிங்கப்பூர்லெ இருந்த சமயம்…உங்க பொஞ்சாதியோட பாட்டனா ‘சீனாமூனா’ அங்கே பெரிய கப்பல் வியாபாரி. பெரிய காசு பணம், வரவு செலவு.. ஒரு சமயத்துலே.. ஒரு சீனாக்காரன்ட்டெ பெரிய பணத்தைக் கொடுத்து வச்சிருக்காஹா..அந்த ஆளு திடீர்ண்டு மெளத்தாயிட்டான். பணம் எங்கே வச்சான், யார் கிட்டே கொடுத்தாண்டு ஒண்ணும் புரியலே..இஹலுக்கு அப்ப ‘வெள்ளி’க்கு திடீர் அவசியம்..என்னா செய்யிறது? ஏன், நம்ம லாயர்ட்டெ சொல்லிப் பாருங்களேன்’ண்டு ஒரு மலாயாக்காரன் சொல்ல..’

– மாமா நிறுத்திவிட்டு பேசாமல் இருந்தார் கொஞ்ச நேரம். நாம் அடுத்து என்ன என்று கேட்க வேண்டுமாம்.

‘அஹ என்ன பண்ண முடியும் மாமா ?’ என்று நான் அலறினேன்.

மாமாவுக்கு சந்தோஷம். ‘ஆங்… அப்படிக் கேளுங்க..! அதைத்தான் சீனாமூனாவும் யோசனை பண்ணுனாஹா..கடைசீலெ நம்ம ஊர்க்காரர்தானேண்டு கேட்டுப் பார்த்தா..,- அத எப்படி சொல்றது! – ‘ அப்படியா, அதை நான் வந்து எடுத்துத் தர்றேன்’ட்டு இஹ சொல்லியிருக்காஹா ரொம்ப சாதாரணமா..!’

‘அட’ என்று மாமாவே சொல்லிக் கொண்டார்கள்.

ஆச்சரியம் அளவுக்கு மீறிப் போகும்போது அப்படித்தான் நிகழ்ந்து விடுகிறது.. அட : ‘இஹ இடத்துக்கு வந்து விஷயத்தைக் கேட்டுப்புட்டு , அங்கே இருந்த எல்லோரையும் போவச் சொல்லிப்புட்டு . ரெண்டு பேருமே ஒரு தனியறையிலே உட்கார்ந்துட்டாஹா..லாயர் மாமா என்னா செஞ்சாஹாண்டு தெரியலே, மெளத்தாப் போன சீனாக்காரன் சீனாமூனா எதிர்லே நிக்கிறான் தம்பி!’

பணம் வைத்த இடத்தை சீனாமூனா கேட்டறிந்த பிறகு உருவம் மறைந்து விட்டதாம்..!

முன்னால், மெய்தீன் மாமா இருக்கிறாரா என்று பார்த்தேன். இருந்தார். பார்வை எங்கோ நிலை குத்தி இருந்தது..பணம் வைத்த இடத்தை பார்க்கிறாரோ?

அதுதான் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டதே மாமா..இல்லை, மாமா, சீனாக்காரனைப் பார்க்கிறார். அப்போது சீனா மூனாவுடன் அறையில் இல்லாத அவருக்கு விஷயம் எப்படி தெரிந்தது ? ஒரு முக்கியமான நபர் சொன்னதாக பதில் வரும். அற்புதங்கள் எல்லாம் இப்படித்தான் பரவுகின்றன. சமயத்தில் , கேள்விப்பட்டதை விட பெரிய அற்புதங்களும் – இரண்டு ஊர் ஆட்கள், பூட்டப்பட்ட அறைக்குள்ளே இருக்கும்போது – நடந்திருக்க வாய்ப்புண்டுதான்..!

லாயர் மாமா ஒரு எழுத்தாளரும் கூட என்றே தெரியாமல் இத்தனை நாள் ஊரில் இருந்திருக்கிற நாங்கள், அவரைப் பற்றி எப்படி மாற்றமான கருத்துக்கு வருவது ?

நேரிலேயே அவர்களைப்போய் பார்த்து விட்டு வரலாம் என்றதும் உடனே கிளம்பினார் மெய்தீன் மாமா. நூல்கடைத்தெரு மூலைக்குப் போகும்வரை ஊரில் பெருமைகள்..16-ஆம் நூற்றாண்டில் ஃப்ரெஞ்ச் தளபதி லாலி, நாகூர் தர்ஹாவை கொள்ளையிட்டு, நாகூர் துறைமுகத்திலிருந்த, முஸ்லீம் வணிகர்களுக்குச் சொந்தமான , இரண்டே கால் லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக் கவர்ந்து சென்றான் என்பது ஊரின் பெருமையாகத் தெரியவில்லை.

எது பெருமையோ, ‘மோன இருள் அகற்றிய ஞான வள்ளலின் அருட்பொழிவான பார்வைக்கு இலக்காகிட, துடித்தவர்களும் பாடினார்கள். திருப் பொருத்தத்திற்குள்ளாகி இனிமையில் திளைத்தவர்களும் பாடினார்கள்’ என்று எழுதும் மெய்தின் மாமா, பேசும்போது ‘அஹ’, ‘இஹ’ லை மறக்காமலிருப்பது பெருமை, உண்மை !

மாமா ஒரு தகவல் கடல். ஷாஹுல் ஹமீது பாதுஷா வந்தபிறகுதான் ஊர் வந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் வருவதற்கு முன்பே அரேபிய நாட்டிலிருந்து செய்யிது முபாரக் வலியுல்லா அவர்களும் முகமது சித்திக் இப்னு மசூத் அவர்களும் வந்து தங்கி மார்க்கப் பணியில் ஈடுபட்டிருந்தார்களாமே!

நான் பிறந்த தெருவின் பெயரே, சொல்ல என்னவோ போல் இருக்கிறது என்று நான் கூச்சப் படும்போது அது கேரள கடற்படைத் தளபதிகளாக விளங்கிய குடும்பத்தின் பெயரென்றும் அந்த வீரக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் பெரிய எஜமானுடன் சேர்ந்து வசிக்க வந்து , அவர் வசித்தால் அந்த பெயர் ஏற்பட்டது என்றும் குஞ்சாலி மரைக்காயர் தெருவின் சரித்திரம் சொன்னார்… ‘சபர்’ (பயணம்) போகும் தைரியம் ஏன் எனக்கு வந்தது என்று அப்போதுதான் விளங்கிற்று. வீரப் பரம்பரை..!

போகிற வழியிலேயே Internet பற்றி சந்தேகங்களும் கேட்டுக் கொண்டு வந்தார் மாமா. காட்டுப் பள்ளி பக்கத்திலுள்ள அவர் பேரன், கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்து நூலகத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் நுழையலாம்; பரீட்சையும் எழுதலாம் என்றேன்

‘அதாவது மாமா.. வூட்டுலே இருந்து கிட்டே பரோட்டாவையும் பாயாவையும் தஸ்தகீர் பாய் கடைக்கு ஆர்டர் கொடுக்கலாம்’ என்றான் ரஃபீக்.

‘பாயா வருமா , பதில் வருமா ?’ என்று கேட்டது சொல்லரசு !

பதில் சொல்ல முடியவில்லை. அதற்குள் லாயர் மாமாவின் வீடு வந்து விட்டது. மிகப் பக்கத்தில்தான் இருக்கிறார். ஆனால் நேரில் பார்த்ததில்லை. அந்தப் பக்கமாக பலமுறை போனதுண்டுதான். ஆனால் அந்தப் பெரிய வீட்டின் இரும்புக் கம்பிகளும் சலவைக் கற்களும் பார்க்கவே பயமுறுத்தி இருக்கிறது. ‘ரொம்ப கோவக்காரஹண்டு சொல்வாஹலே..’ என்று எண்ணம் ஓடும்..

வீடு இப்போது பழுதடைந்து கிடந்தது. அவரும் இப்போது அப்படித்தான் இருப்பாரோ?

‘மாமா எங்கே?’ என்று கேட்டார் மெய்தீன் மாமா அங்குள்ள வேலைக்காரனை.

பதில் சொல்லவில்லை அவன். பக்கத்திலிருந்த ’ஆண்டவர் மில்’லைக் கைக்காட்டினான்.

லாயர் மாமாவின் Hypnotic Force க்கு உட்பட்டவனாக இருப்பானோ?

‘ஆண்டவர் மில்’-ல் நுழைந்ததும் ‘இங்கு நூதனமான முறையில் அரிசி, மசாலா அரைத்துக் கொடுக்கப்படும்’ என்று முதலில் ஒரு சிரிப்பிற்கிடமான போர்டு இருந்த ஞாபகம் வந்தது. ‘முள்ளை போட்டா ஆடா வரும்?’ என்று பல பேரை கேட்க வைத்த போர்டு.

இப்போது அந்த போர்டு இல்லை. லாயர் மாமா இருந்தார்.

அழுக்கு பனியனும் கைலியும் உடுத்திய ஒரு கிழக்கழுகு உட்கார்ந்திருந்த மாதிரி இருந்தது. நீண்டு விரிந்த நெல் காயப் போடும் முற்றத்தின் நடுவில் ஒரு உடைந்த நாற்காலியில் அமர்ந்திருந்தது கழுகு..

தன் வழுக்கைத் தலையை உயர்த்தி எங்களைப் பார்த்தது.

புருவங்களுக்கு அடியில் நெருப்புப் புதர்கள்… புருவத்தின் மத்தியிலிருந்து பற்றிய நெருப்போ? என்ன பார்வை துளைக்கிற மாதிரி , இந்த 96 வயதில் !

மெய்தீன் மாமா அதன் காலடியில் உட்கார்ந்து கொண்டு , வந்த நோக்கத்தைச் சொன்னார்.

கம்பீரமாக, கொஞ்சம் நடுக்கம் இல்லாத குரலில் கழுகு பாடியது..மெளலானா ரூமியின் மஸ்னவியை ஃபார்ஸி மொழியில் பாடியது. அந்த மொழியே ஒரு இசைதான்.

முழுவதும் பாட இயலும் கழுகுக்கு. ஆங்கிலம், மலாய் போலவே ஃபார்ஸியும் சரளம் அதற்கு.

‘ஒவ்வொரு வலியும் நூஹ்(அலை) உடைய கப்பல் என்று அறி. இவர்களை நேசித்தால் ‘ஹலாக்’ என்னும் வெள்ளத்தில் நின்றும் தப்பித்துக் கொள்வாய்’ என்று அர்த்தம் வரும் என்றான் ரஃபீக் , தெரிந்த மாதிரி. இதைச் சொன்னது இமாம் சாஅதி(ரஹ்) என்று ஞாபகம். சரிதானோ? வெள்ளம் தலைக்கு மேல் போகும்போது சந்தேகம் எதற்கு?

ஒரு கோட்டோவியம் வரைந்து கவர்ந்த பிறகு சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி பற்றிக் கேட்டேன். உண்மைதானா?

உண்மைதான் ! கழுகு, பதில் சொல்லாமல் மெளனமாக சிரித்ததே சாட்சி.

Value of Food Chemistry, Five Simple Yogas : To keep Fit (Illustrated), Cure and Miracle Techniques of Swami Satya Saibaba, Meditation Technique to reach a state of Hypnosis, Power of Eyes, Long life without old Age & Disease என்று தான் எழுதிய 6 புத்தகங்களைத் தன் மருமகனைக் கூப்பிட்டுக் கொடுத்தது . இது பதிலாக இருக்கலாம். புத்தகங்கள் ஆன்மீகப் பயிற்சிகள் பற்றியவை.

‘மாமா முன்னாலேயிலாம் ரொம்ப சூடு. இப்ப தண்ணி மாதிரி பொய்ட்டாஹா’ என்று சொன்னார் மருமகன் இளித்தபடி. எழுபது வருடங்களுக்கு முன்னால் நாகை அந்தாதியைப் பதிப்பித்தவரின் மருமகன்.

தண்ணீரா , கரியா ?

லாயர் மாமா, மலேசியாவின் அரச குடும்பத்திற்கு சட்ட ஆலோசகராக இருக்குமளவு படித்தவர். ஆனால் விரும்பியது Psycho Metaphysic Philosophy படிப்புதான். Mystic International Brotherhood of Suthari யின் மூத்த உறுப்பினராக இருந்தவரிடம் மறைவான சக்தி பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசையாக இருந்தது. தெரிந்து கொண்டால் ‘அர்வாஹ்’ஆன ஊர் எழுத்தாளர்களுடன் பேட்டி எடுக்கலாமே..!

லாயர் மாமா, பாம்பைப்போல் சுற்றிக் கொண்டு சுவாதிட்டானத்திற்கும் (குய்யம்), மணிபூரகத்திற்கும் (உந்தி) இடையில் உறங்கிக் கிடக்கும் குண்டலி சக்தி பற்றிச் சொன்னார் கொஞ்சம். எனக்கு எழுத்தாளர் சுஜாதாவின் பதில் ஞாபகம் வந்தது. இதைப் பிராணாயாமத்தால் எழுப்புகிற பயிற்சிகள் பயங்கரமானவையாதலால் அப்படியே உறங்கட்டும் என்று அவர் விட்டு விட்டதாக..!

லாயர் மாமா, யாரிடம் கற்றுக் கொண்டார் சித்து விளையாட்டுகளை ? அவர் மாநிலக் கல்லூரியில் அந்த காலத்தில் படித்த போது வில்லியம்ஸ் என்ற ஆங்கிலேயன்தான் இலேசாக சொல்லி கொடுத்தானாம்.

My dear Students..இதோ இந்த வகுப்பறையில் சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறிகளை ஒரு நிமிடம் நிறுத்துகிறேன்..’ என்று சொல்லிவிட்டு கைகளை அசைப்பானாம். மின்விசிறிகள் நின்று விடும்!

எனக்கு புழுங்கியது..

அவன், ஒருமுறை ஓடுகிற ரயிலையே நிறுத்தியதாகவும் சொன்னார்.

‘so and so மந்திரி, ஒரு பெரிய ரயில் விபத்திற்காக நம்ம ஊர்லெ ராஜினாமா செய்தாரே – அந்த ரயிலா ? என்று லாயர் மாமாவின் மருமகன் என்னிடம் கேட்டார். ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வெளியில் வரும்போது மேலும் சொன்னார் : ‘ மாமா சிங்கப்பூர்லேர்ந்து முடிச்சிக்கிட்டு வர்றதுக்கு முன்னாடி இங்கேயுள்ள சொத்தையிலாம் வித்து அஹலுக்கு அனுப்பச் சொன்னாஹா – அங்கே ஏதோ கடன் செட்டில் பண்ணனும்ட்டு. நான் இங்கே ஒண்ணுமேயில்லேண்டுட்டேன். அஹலுக்கு லாயர் மூளை அப்படீண்டா எனக்கு கிரிமினல் நாகூர் மூளையில்லே?!’ என்று.

வில்லியம்ஸாவது வெங்காயமாவது , Force இவருக்கல்லவா அதிகம் ?

அடுத்து நாகூர் வலைப் பக்கத்தில் மிக முக்கியமாக சேர்க்கப் பட வேண்டிய எழுத்தாளர் என்று புகழ்பெற்ற , சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதியான ஜஸ்டிஸ் மாமாவைக் குறிப்பிட்டார் மெய்தீன் மாமா. கம்பராமாயணத்தில் திளைத்தாலும் ‘அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்’ போன்ற புத்தகங்களும் எழுதிய நீதியரசர். காஞ்சிப்பெரியவரின் நட்பையும் பெற்றவர். சென்னைக்கு செல்லும்போது அவரைச் சந்தித்து கண்டிப்பாக பேட்டி காண வேண்டும். சென்னைக் குற்றாலத்தில் குளிக்க வேண்டுமென்று , வீட்டில் குளிக்காமல் அடம் பிடித்துக் கொண்டிருந்த என் பிள்ளைகள் அதற்கு விடுவார்களா என்று தெரியவில்லை. நான் இலக்கிய மழையில் நனைந்தால் அவர்களுக்கு சளி பிடிக்கும்!

‘நீம்பரு அங்கே போவும்போது காம்பூருக்கு எனக்கு ஃபோன் பண்ணும். நானும் வந்துடுறேன் . அப்படியே சயதினா ‘ஹஸன்’ஐயும் பாப்போம். அஹ நாகப்பட்டினம். நம்ம ஊரு பத்தி ரொம்ப விஷயம் சொல்வாஹா’ என்றான் ரஃபீக். அவனது உதவி மகிழ்ச்சியளித்தது. இரண்டு TDK குரோமியம் கேஸ்ஸட்டுகள் – முடிந்தால் குலாம் அலியின் கஜல்களோடு- கொடுத்தால் போதும் அவனுக்கு.

‘எப்படி தம்பி ரஃபீக்கை வேலை வாங்குனீங்க..! பெரிய சோம்பேறியாச்சே..’ என்றார் அலிமாமா – கொட்டாவி விட்டுக்கொண்டே.. அவரும் அந்தக் கால எழுத்தாளர்தான். ‘இன்னும் என்ன செய்யப் போறீங்க?’ என்ற, எல்லா காலத்திற்கும் பொருந்தும் புகழ்பெற்ற இஸ்லாமியப் பாடல் அவர் எழுதியதுதான். இப்போது அவர் எதுவும் செய்வதில்லை. அவரது அண்ணன் மர்ஹூம் நெய்னா மாமா கூட எழுத்தாளர்தான். அண்ணன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியும் அச்சில் வெளி வந்தது ஒன்றோ இரண்டோதான். உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ஐ நேரடியாக ஃபார்ஸியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் அவர். (script இப்போது ‘சொல்லரசு’ வசம்). இருவருமே என் வாப்பாவின் நண்பர்கள். என் கடிதம் வந்தால் வாப்பா ஓடிப்போய் காட்டுவது இவர்களிடம்தான். அலிமாமாவுக்கு என்னையும் என் நண்பர்களையும் நன்றாகத் தெரியும். என்னிடமே என் நண்பனை சோம்பேறி என்று சொன்னால் ?

வேலை வாங்குவதாகத் தெரிந்தால் அவன் வேறு கோபித்துக் கொண்டு ’சூஃபிக்கவிதை’ எழுதி விடுவான் !

‘நான் எங்கே வேலை வாங்குனேன்? பெரிய எஜமான்லெ செய்ய வச்சாஹா ‘ என்று ‘லால் கெளஹர்’ நாடகம் எழுதியவரின் பேரருக்குச் சொன்னேன். என்ன செய்யப் போறீங்க இன்னும்?

‘ஹக்’கை (உண்மையை) சொன்னீங்க தம்பி’ என்று என் பக்தி மெச்சப் பட்டது. நானும் என்ன செய்ய? அதே பக்தியோ எஜமானின் புகழ் பாடும் பல கவிஞர்களைச் சந்தித்து விபரங்களைத் திரட்டினோம்.

சன் டி.வி புகழ் ஹலீம் நானாவைத்தான் பார்க்க முடியவில்லை. ‘வணக்கம் தமிழக’த்தில் வந்த கலைமாமணி. இன்னும் ஊருக்கு வராமல் சென்னையில் ஏதோ ஒரு சினிமா கம்பெனிக்குப் பின்னால் அவர் அலைந்து கொண்டிருப்பதாக வீட்டில் சொன்னார்கள். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களும் நானூறு L.P ரிகார்டுகளும் நூற்றுக்கு மேற்பட்ட கேஸ்ஸட்டுகளும் தந்த புலமையின் அலைச்சல் புகைய வைத்தது. ‘தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்’ என்ற பாடலைக் கேட்காத தமிழ் முஸ்லீம்தான் உண்டா?

விடுபட்ட போன தர்ஹாவைப் பார்க்கத்தான் நானா போயிருக்கிறார்களோ?

‘என்னதான் ஞாயமோ
இன்னும் சோதனை ஏனோ மீரா..
இன்னிசை நாதமோ
எந்தன் வேதனை சாஹே மீரா’

ஹலீம் நானாவின் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நிறைய பேர் இன்னும் அழுகிறார்கள். பெரிய எஜமானும் அழுதபடியே கேட்டிருக்க வேண்டும். ‘அவுலியாக்களின் தரிசனம் பெற்றால் ஆன்மாவுக்கே சுகம் சுகம்’ என்று எழுதிய தன் பக்தனை உச்சத்தில் ஏற்றியிருக்க வேண்டாமா? வாலி, வைரமுத்து அளவுக்கு அல்ல என்றாலும் சொந்தக்காரர் / திரை வசனகர்த்தா மாயவன் அளவுக்காவது ..

‘நாகூரார் மகிமை’ என்று ஒரு சினிமா கூட ஹலீம் நானாவின் எழுத்தாற்றலை நம்பி ஆரம்பிக்கப் பட்டது. ‘அன்னை வேளங்கண்ணி’ சினிமாவில் பாதியாவது சம்பாதித்துக் கொடுக்கும் என்று ஒரு பணக்கார காரைக்கால் மரைக்காயர் முயற்சி செய்த சினிமா..

பெரிய எஜமான் , படத்தை நிறுத்தி விட்டர்கள்.

அப்படித்தான் எல்லோரும் ஊரில் அப்போது பேசிக் கொண்டார்கள்.

காரைக்கால்காரர், தான்தான் படத்தின் நாயகனாக நடிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்திருக்க வேண்டும். அவர் நிழல் கூட விழக் கூடாது என்று ஹலீம் நானா பதில் பிடிவாதம் பிடித்திருக்க வேண்டும்.

இதே பிடிவாதம்தான் அவரது நாடக நண்பர் மர்ஹூம் சேத்த நானாவுக்கும். எல்லாமே அவருக்கு பெரிய எஜமான்தான்.

‘என்னா சேத்தான்..இப்படியே இருந்தா எப்படி? சொத்து கித்து சேத்தீங்களா இல்லையா?’ என்று கேட்டார் ஒருவர்.

‘இந்த அஞ்சு மனாராக்கள்தான் நம்ம சொத்து..!’ என்று பதில் வந்தது. தர்ஹா குளத்தை வேறு யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் போலும்.

‘சங்கத்துப் புலவர்களில்
அங்கம் வகிக்கும் அனா மூனா
சாமு தம்பி மரைக்காயர் தெரு பஹுதாது ‘ என்று பதம் பாடும் பஹுதாது நானாவின் முத்திரையடிகளிடையே ‘ஏன், கதவு நம்பர் சொல்ல்லையோ ?!’ என்று கேட்கும் குரல் அவருடையதுதான்.

‘சங்கையுடனே அவர் சபைதன்னிலமர்ந்து
சங்கைத் திறந்து கொண்டு இசை பாடும் ‘ என்ற வரிகள் வரும்.

‘அறைக் கதவை தொறந்துபுட்டா இசை பாடுவாஹா ? சங்கைத்தான் தொறக்கனும் ‘ – இவர்.

சேத்த நானாவை இப்போது பேட்டி எடுப்பது சிரமம். நான் என்ன லாயர் மாமாவா? ஊரின் எழுத்தாளர்களில் சங்கீத சங்கதிகளும், புகைப்படக் கலை நுணுக்கமும் நன்றாக அறிந்த அவரைப் பேட்டி கண்டிருந்தால் நன்றாக இருக்கும்தான்.

ஏன், அவருடைய உஸ்தாத் காதர்கானை பேட்டி காணலாமே ! பெரிய எஜமானுக்கு மால்கோஸ் ராகம் ஏன் பிடிக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். ஊர் ஜனங்களுக்குத்தான் அந்த ராகம் இன்னும் தெரிய மாட்டேன் என்கிறது. ஒவ்வொரு வருடமும் கந்தூரியின் ஏழாம் நாளன்று தர்ஹாவில் அவர் அந்த ராகத்தை நடு ஜாமத்தில் பாடி முடித்ததும் ஊரின் இசை மேதைகளில் யாராவது ஒருவர் எழுந்து , ‘மாமா..அந்த மால்கோஸ் ராகப் பாட்டை பாடுங்களேன்’ என்று கேட்டு அவரை வதைப்பது வாடிக்கையாக நடந்து வரும் விஷயம்தான்..

நண்பன் ரஃபீக் கூட கொஞ்ச நாள் அவரிடம் இசை பயின்றான். ‘குரல்’ என்று சிறுகதை எழுதி முடித்ததும் அங்கு போவதை நிறுத்தி விட்டான். தமிழ் நாட்டிற்கு இரண்டாவதாக ஒரு முஸ்லீம் வாய்ப்பாட்டுக் கலைஞன் கிடைக்காமல் போனது எவ்வளவு துரதிர்ஷ்டம் !

காதர்கான் லேசுப்பட்டவரல்ல. மூன்று காலத்தில் பாடுகையில் ஸ்வரமழை பொழிவதென்பது சாதாரணமா? தமிழ் முஸ்லீம்கள், அதோடு தெறிக்கிற எச்சிலைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். தப்பு.

காதர்கானின் குரு தாவுது மியான் சாஹிப், கிட்டப்பாவுக்கே சங்கீதம் சொல்லிக் கொடுத்தவர். புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் நாகூர் தர்ஹாவிலும் வித்வான்களாக அந்த காலத்தில் பிரபலமாக இருந்த ‘தர்பார்-கனடா’ சோட்டு மியான் சாஹிப், ‘டோலக்’ நன்னு மியான் சாஹிப் ஆகியோரின் பேரப்பிள்ளை. இதை சேத்த நானா சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘ குருவின் தாத்தாக்கள் காஷ்மீர் பிராமணர்கள் என்ற புது செய்தியை காதர்கான் சொன்னார். ஆனால் ‘இந்த செய்தி நமக்குள்ளே இக்கிட்டும்..அதுலே…என்னது..? ஆங்..Internet..அதுலே போட்டுராதீங்க..’ என்று ஏன் சொன்னார் என்பது தெரியவில்லை. அதில் சங்கீதம் இல்லை என்பது மட்டும் புரிந்தது.

‘சரி மாமா’ என்று கேட்டுக் கொண்டதும்தான் அவரது குருவின் சரித்திரத்தை விலாவாரியாக எடுத்துரைத்தார். அப்போது விளக்கு அணைந்தது. இருட்டிலேயே சங்கீத மின்மினிப் பூச்சிகள் ஊருக்கு வெளிச்சம் போட்டன. திடீரென்று பேச்சு சத்தம் இல்லை !

‘மாமா.. எங்கே போய்ட்டீங்க ?’

பதில், கொஞ்ச நேரம் கழித்து நடுக்கட்டு அறையில் இருந்து வெளி வந்தது. தாழ்வாரத்தில் பேசிக் கொண்டிருந்தவர் ஏன் அறைக்குப் போனார்? அதுவும் இந்த இருட்டில் ?

‘ஹெ..ஹெ.. ! எலிப்புள்ளையாரு அங்கே வெளையாட்டுக் காட்டுனாஹா . சத்தம் கேட்டு அடிக்கலாம்டு போனேன்; தப்பிச்சுட்டாஹா !’

ஒரு மால்கோஸ் ராகத்தை எடுத்து விட்டிருக்க வேண்டியதுதானே ..!

தன் குரு, காலில் வந்த கொடிய நோயால் அவதிப்பட்டு நடக்க முடியாமல் இருந்த போது எஜமான்தான் கனவில், தன் தர்பாரில் தங்கியிருந்து தொடர்ந்து மால்கோஸ் ராகம் பாடி வரச் சொன்னார்களாம். குணமாகி விட்டது ! ( மூன்று முறை கண்ணை மூடி கையால் தன் முகத்தை முத்தமிட்டுக் கொண்டார் எஜமானை நினைத்து இப்போது..) குருவின் தாத்தாக்கள் காஷ்மீரிலிருந்து நாகூர் வந்ததே எஜமான் இட்ட கட்டளைதான்.

எஜமானுக்கு என்னதான் தெரியாது ?

இன்றைய இசைப் புயல்கள் ஒவ்வொரு படத்திற்கும் ஒப்பந்தமான அடுத்த நாளே ஊருக்கு வந்து பெரிய தொகையாக காணிக்கையும் ஆயிரம் மிஸ்கீன்ளுக்கு குறையாமல் ‘பக்கிருவ சோறு’ம் ஆக்கிக் கொடுப்பதற்கான காரணமும் தெரியும்.

எத்தனை கவாலி அரங்கேற்றங்கள் !

புதிய பைத்து சபாக்கள் அதன் பாடகர்களின் அரங்கேற்றமும் அங்குதான் நிகழ்கின்றன. ‘தப்ஸ்’ கிழிபடும் வரை சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள். புதுமையாக இப்போதெல்லாம் பெண் பாடகிகளும் வந்து விட்டார்கள். இதில் மத பேதம் கிடையாது. அவர்களும் விரைவில் ‘தப்ஸ்’ அடிப்பார்கள் பாடிக்கொண்டே. எல்லாப் பாடல்களும் சினிமா மெட்டில் அமைந்தவை. ‘நேத்து ராத்திரி யம்மா..’ மெட்டில் கூட ஒன்று வந்தது. ‘யம்மா..’விற்கு பதிலாக ‘மீரா..’. அங்கே ஒரு லேசான அடி..

இஸ்லாமியப் பாடல் என்றாலே ஏன்தான் ‘ஓ..’ என்று ஒரேயடியாக எட்டு கட்டையில் ஆரம்பிக்கிறார்களோ தெரியவில்லை. விதி விலக்கும் உண்டுதான். திட்டச்சேரியில் ஹாஜா என்று ஒரு இளைஞனின் ‘பிறை காட்டும் ரமலான்’ பாடல் போல. சுகமான குரல்..

ஆனால் மால்கோஸ் பாட ஒரு காதர்கான் மட்டுமே தமிழ் நாட்டில் உண்டு.

பைத்து சபாவில் பாடிப் பயிற்சி பெற்று வளர்ந்த ஒருவரே தன் சிங்கக் குரலால் இஸ்லாமிய உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும்போது வித்வான் காதர்கான் மட்டும் புகழ் பெறாமல் போனதற்குக் காரணம் அவரது மனிதக் குரலாகத்தான் இருக்க வேண்டும். ஊர்ப் பிள்ளைகளுக்கு ‘முறையான இசை’ அப்பியாஸ ஊக்கம் உண்டாகும் உணர்ச்சிக்காக , சுர வரிசைகளின் கீழ் இஸ்லாமிய சொற்கட்டுகளைப் புகுத்திக் கொண்டே இருக்க வேண்டியதுதான். சரளி வரிசைகள், தாட்டு வரிசைகள், ஜண்டை வரிசைகளா ? தூக்கிப் போடு !

‘சங்கீததத்தால் அவர் லட்சாதிபதியானார். அதற்கு முன் கோடீஸ்வரராக இருந்தார்’ என்று ரஃபீக் எழுதினான்.

‘இப்படியே போடப் போறோம்.’ என்றேன்.

ஒன்றும் சொல்லவில்லை வித்வான். மெளனமாக இருந்தார் கொஞ்ச நேரம். மால்கோஸ் ராகத்தை முணு முணுத்துக் கொண்டிருந்தாரோ என்னவோ..

‘போடுங்களேன்..சரியாத்தான் சொல்லியிருக்கீங்க..ஆனா..’

‘என்ன மாமா ?’

‘இதுக்கு காசுலாம் கொடுக்க மாட்டேன் கண்டிப்பா ‘

‘அட நீங்க ஒண்ணு..உங்க பேட்டி கிடைச்சதே பெரிய விஷயம். நாங்கதான் கொடுக்கனும் ‘

‘அ!’

அவரது புதிய கேஸ்ஸட்டில் இருந்த , பெரிய எஜமான் மீது அவரே இயற்றிப் பாடிய ‘ஆதாரம் தாரீரோ..’ பாட்டை internetல் போடப் போகிறேன் – நாகூர் பக்கத்தில் ‘ என்றதும் ‘அ’, ‘ஆ’வானது.

‘பாட்டு மட்டும் அல்ல மாமா..கூடிய சீக்கிரம் உங்களை வீடியோ எடுத்து அதையும் போடப் போறோம்’ என்றான் ரஃபீக். காதர்கான் ஒரு நல்ல சீடனை இழந்துதான் விட்டார். ஆனாலும் என்ன, எஜமான் அவன் மூலமாகவே அவர் புகழைப் பரப்ப உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

Winamp ல் போட இப்போது பிரபலமான mp3 க்கு மாற்ற வேண்டும். கனடாவிலிருந்த கல்யாணம் என்ற நாகூர்காரரின் ஆவல் அது. தர்ஹா ஃபோட்டோவை முதலில் அனுப்பியவர்.

‘சேது லாரா’ என்ற பைரவி ராக ஆதி தாள உருப்படி , ஒரு முஸ்லீம் இசைவாணர் பாடிப் பதிவு செய்த முதல் தியாகராஜர் கீர்த்தனை என்ற பெருமையை உடையது என்கிறது காதர்கான் பற்றி கூறும் ‘இசுலாம் வளர்த்த இசைத் தமிழ்’ புத்தகம். அதையும் போடப் போகிறேன் கல்யாணம்…

கல்யாணம் , கூடவே தர்ஹா அலுவலகம் வெளியிட்ட எஜமானின் சுருக்கமான வரலாற்றையும் அனுப்பியிருந்தார். இது அவரது ஹோம் பேஜிலும் இருக்கிறது. நான், துருக்கி நாட்டின் தலை நகரில் – ஹாஜியா சோஃபியா பள்ளி வாசலில் – பெரிய எஜமான் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் மற்றும் அவர்கள் தன் சீடர்களுக்கு செய்த உபதேசங்களையும் கூடவே சேர்த்திருந்தது அவருக்குப் பிடித்திருந்தது. ஹைதர் அலி எழுதிய நாகூர் பாதுஷா நாயகம் புத்தகத்திலிருந்து ரஃபீக் மொழி பெயர்த்துக் கொடுத்திருந்தான்.

இத்தனை நாள் அந்த சொற்பொழிவு எங்கிருந்தது என்பதை எஜமானே அறிவார்கள். ‘குளிப்பாட்டுபவர்களின் கையில் கிடக்கும் ‘மைய்யத்’ போல இறைவனின் தக்தீரின் கைகளில் ஆகி விடு’ என்று சொன்ன எஜமான், ‘குதிரை மீது ஊர்ந்து வரும் போலோ விளையாட்டுக்காரனால் அடிக்கப் படுவதற்கு தயாராக நிற்கும் பந்தைப் போல ஆகி விடு’ என்றும் சொன்னதாக..

இடித்தது !. எஜமானுக்கு போலோ விளையாட்டு தெரியுமா ?

நமது குழப்பங்களைச் சகோதர சமயத்தவரிடம் தெரியப் படுத்தலாகாது – நாமே தெளியும் வரை. அதற்கு போலோ விளையாட்டும் தெரிய வேண்டும்.

கல்யாணம் போலவே பல சகோதர சமயத்தவர்கள் தர்ஹாவின் பல ஃபோட்டோக்களையும் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். பைரவன் , டேவிட், மாசிலாமணி..

ஃபோட்டோக்களை மூர்த்தியண்ணன் ஸ்டூடியோவில்தான் வாங்கினேன் ஸ்கேன் செய்து போடுவதற்கு. தெரிந்த ஆள் என்பதால் ஒரு மடங்கு அதிக சார்ஜ் !

‘பிஸினஸ் எப்படி அண்ணே ?’

‘அல்ஹம்துலில்லாஹ்! எல்லாம் எஜமான்ற துஆ பரக்கத்து !’ – பதில் , தொப்பி போட்டிருந்தது. மூர்த்திமரைக்கான் என்றுதான் அவரைக் கூப்பிடுகிறார்கள் ஊரில்.

மூர்த்திமரைக்கானின் வாழ்வே முக்கியமாக தர்ஹா ·போட்டோவை எடுப்பதிலும் விற்பதிலும்தான் இருக்கிறது. wide-angle இல்லாமல் 50 mm லென்ஸை வைத்து 131 அடி பெரிய மினாராவை முழுதாக எந்த மரத்தின் மீதோ ஏறி எடுத்து ஊரில் பரபரப்பை ஏற்படுத்தியவர். எஜமான்தான் அந்த மரத்தை கனவில் காட்டியிருக்க வேண்டும் அவருக்கு.

மூர்த்திமரைக்கான் என்ற பெயராவது இணைப்பு. பக்கிரிச்சி , பக்கிரி, நாகூரான் என்கிற தலித் மக்களின் பெயர்கள் ஊரில் சர்வ சாதாரணம்.

‘விந்தை எச்சிலில் எடுக்கிற அற்புதத்தை விட இதுதான் அற்புதம் ‘ என்பார்கள் அறுபதுக்கும் மேற்பட்ட ஆன்மீக நூல்களை , எளிய இனிய தமிழில் எழுதிய எஸ். அப்துல் வஹாப் பாகவி அவர்கள்.

இமாம் கஸ்ஸாலியின் ‘இஹ்யா’வில் பெரும்பகுதி இவர்களால் தமிழில் அற்புதமாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘இறை வணக்கம்’, ‘பக்தர்களின் பாதை’,’தர்க்கத்திற்கு அப்பால்’ என்பன அவர்களின் புகழ் பெற்ற நூல்கள். ஆனந்த விகடனில் நிறைய முத்திரைக் கதைகள் எழுதிய கமலப் பித்தன், அவர்கள் உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர்.

சின்ன எஜமான் யூசுப் தாதாவைப் பற்றி வெளி வந்த ஒரே புத்தகம் கமலப்பித்தனுடையதுதான். அந்த புத்தகத்தை விட அதிலிருந்த ‘புதிர்’ என்ற கவிதை கனமானது என்கிறார்கள். ஜபருல்லாஹ் நானாவின் கவிதை அது.

‘புதிர்’ஐ விட , அவர் தன் ஊரைப் பற்றி எழுதி வைத்திருந்தது எனக்குப் பிடித்திருந்தது.

‘வலியுல்லாஹ் உங்களுக்கு
வாரிக் கொடுப்பார்கள்’
என ஆசி வழங்கி விட்டு
வந்தவர்களிடம்
தர்மம் பெறுவது
எங்கள் ஊரில்தான்’ என்று ஆரம்ப பாராவே மிரட்டும். அதனாலேயே இதுவரை எதிலும் பிரசுரமாகவில்லை.

‘நாகூர் பக்கத்தில் போடவா நானா ?’ என்று அனுமதி கேட்டேன்.

‘போட்டா முழுசா போடனும்!’ என்று கட்டளை வந்தது. ‘சீதக்காதிகளாக மதிக்கப் படுகிற வட்டி ஷைலக்குகள்’ என்னைக் கொல்வதில் அத்தனை ஆனந்தம். பணத்திற்காக குர்பானி கொடுப்பவர்களை சாடியிருந்தார் அதில்.

அவருக்கென்ன, எதையும் தைரியமாக நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல சொல்வார். கேள்வி கேட்டவர்களை மடக்கும் சாமர்த்தியமும் இருக்கிறது.

‘என்னா உங்களுக்கு ஒரு 54 வயசு இருக்குமா ?’ என்று தெரியாத்தனமாக ஒரு ஆள் கேள்வி கேட்டு விட்டார் அவரை. இரண்டு வயது கூடுதலாகக் கேட்பதில் என்ன தவறு ?

‘அப்ப நான் ஹராமுலெ பொறந்தவண்டா சொல்றியும் ?’ என்று சாட்டை வீசப்பட்டது.

இதென்ன வம்பில் மாட்டிக் கொண்டோம் ! கேட்டவருக்கு ஜுரமே வந்து விட்டது..

‘வாப்பா கல்யாணம் பண்ணுனது , சரியா 50 வருஷத்துக்கு முன்னாலெ. இப்ப நான் கூடுதல் வயசுண்டா அப்படித்தானே நான் பொறந்திருக்க முடியும் ?’

இம்மாதிரி தர்க்கங்கள் எதில் புகழ் தேடித் தந்ததோ இல்லையோ அவுலியாக்கள் பற்றிய அவர் பார்வையில் புகழ் தேடித்தந்தது. ஊர் பற்றி எழுதியது ஒரு வித சோகத்தில் என்றாலும் பெரிய எஜமான் மேல் அவருக்குத் தனி மரியாதை உண்டு.

இவரின் அடுத்த பிரதிதான் ஜெ.ஜெ. ஜெஹபர் மரைக்காயரின் மகன் ஜெக்கரியா என்று கூப்பிடுவது சிரமம் என்பதால் ஜெ.ஜெவாகிப் போனார். இவரை பேட்டி காண நாமும் ‘ராப்பேய்’ ஆக மாற வேண்டும். இரவு ஒரு மணியிலிருந்து 3 மணி வரை தர்ஹா லைனின் உள்ள சிங்கப்பூர் கடை ஒன்றைத் திறந்து கொண்டு, மாட்டும் யாருடனாவது செஸ் ஆடிக் கொண்டிருப்பார். மாட்டுபவனுக்கு செஸ் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. விஷயம் தெரிந்தவர் அவரிடம் பேச்சு கொடுக்கப் பயந்து கொண்டு ‘நறுங்கி’ விடுவான். பேச்சுதான் ஜீவனம். சில இஸ்லாமியப் பத்திரிக்கைகளில் எழுதியிருந்தாலும் பேச்சாளர் என்று அறியப் படுவதே ஜெ.ஜெ.வுக்கு ஆனந்தம். மஹா குதர்க்கமான பேச்சு.

குதர்க்கத்திற்கு குதர்க்கம்தானே வேண்டும் ?

எட்டு ‘ரக்அத்’காரர்களின் முக்கிய பலமான பீ.ஜே வுக்கு இந்த ஜெ.ஜெ தான் சரியான போட்டி.

‘ஒரு மாடு இருக்கு. பசுமாடு. பால் நிறைய தருது. கறந்து கொள்றோம். இப்ப மாடு மெளத்தாப் போயிடிச்சி. கறக்க முடியுமா பாலை ?’ – கூட்டத்தில் பீ.ஜேவின் கேள்வி.

தலைமை தாங்கிய ஜெ.ஜெவைத்தான் கூட்டம் பதிலுக்காக நோக்கிற்று.

நல்ல கேள்வி இது என்றார் ஜெ.ஜெ. அவுலியாக்களை மாட்டோடு ஒப்பிடுகிற பீ.ஜேயின் நாகரீகத்தையும் , பெருந்தன்மையையும் பாராட்டினார். ‘வல்ல நாயன் நினைத்தால் காளையிலிருந்து கூட பால் வரும் – அதுவும் கொம்பிலிருந்து ‘ என்று ஆரம்பித்து ‘சூரத்து மர்யம்’இல் எந்த ஆடவனாலும் தீண்டப்படாத மர்யம், ஈஸாவை கருக்கொண்டதை உதாரணமாகச் சொன்னதும்தான் சாபுமார்களுக்கு நிம்மதி. (அறப்போரில்) இறந்தவர்களை உயிரோடு வைத்து உணவும் தருவதாகச் சொன்ன 3:169 வசனத்தையும் அன்று அவர்கள் மனனம் செய்து கொண்டார்கள்.

சாக்ரடீஸுக்கு தர்ஹா இருக்கும்போது (பார்க்க : மணவை முஸ்தபாவின் கட்டுரை) நம் ஷாஹுல் ஹமீது பாதுஷாவிற்கு ஏன் இருக்கக் கூடாது ?

4: 64ல் இறந்தோரிடம் உதவி தேடலாம் என்று குர்ஆன் சொல்கிறது.

‘முரீதி இதா மாகான பீசர்கி ஆயிபன் – உயீத்கு இதா ·பில் அர்லி லதப் ஹிம்மத்தி’ என்று முஹியித்தீன் ஆண்டகை அவர்கள் கூறியிருக்கிறார்கள் ( என்னுடைய முரீது எங்கிருந்து அவன் துயர் களைய அழைத்தாலும் நான் அவனுக்கு உதவி அவற்றை விலக்குவேன்)

ஜெ.ஜெயை பீ.ஜே கடுமையாக மறுத்தார் இப்படி: ‘கியாம நாள் வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை விட வழி கெட்டவர்கள் யார் ? தங்களை அழைப்பதையே அவர்கள் அறிய முடியாது ‘ (46:5). மேலும் ஆயத்துகளை அள்ளி வீசினார் ‘மாட்டிற்கு’ எதிராக.

ஆர்.எஸ்.எஸ் போர்டுகளுக்கு இணையாக, கப்ரு வணக்கத்தை நபி அவர்கள் சபித்திருக்கிறார்கள் என்றும் அவைகளை இடிப்போம் என்றும் இத்தனை தட்டிகளும் பேனர்களும் வைத்தாலும் மக்கள் குவிவது ஏன்? பால் வருகிறது ! இப்போது மாடு உயிரோடு இருப்பதாக அர்த்தமா அல்லது இறந்து விட்டதென்றா ? – ஜெ.ஜெயும் பதிலுக்கு வீசினார்.

கடைசியாக கூட்டம் , கற்களை வீசி தன்னைக் கலைத்துக் கொண்டது.

அன்று எல்லோருக்கும் பசி அடங்கியிருக்கும். அறிவுப் பசி என்று சொல்லிக் கொண்டார்கள். தணியாத எரிக்கும் பசி..

இன்று தமிழகமெங்கும் நடக்கிற இஸ்லாமியக் கூட்டங்களுக்கு அழைக்கப் படுகிற ஜெ.ஜெ. முன்பெல்லாம் எல்லாவற்றையும் கிண்டல் செய்வார்.

அவரை அடக்கியவர்கள்தான் குலாம் சாபு.

‘திக்ர்’ (தியானம்) செய்யும்போது ‘அல்லாஹ்..அல்லாஹ்’ என்று மூச்சு தோறும் சொல்வதைக் கிண்டல் செய்த ஜெ.ஜெ, ‘இப்ப உங்களை ஹமீதுண்டு கூப்பிடுறேன்..திரும்பிப் பாக்குறீங்க.. ‘ஹமீது..ஹமீது..ஹமீது..’ண்டா எப்படி ? ‘ என்று ஒரு கூட்டத்தில் பேசி கை தட்டல் வாங்கினார்.

‘நான் இப்ப உன்னெயெ ஜெ.ஜெ மியாண்டு கூப்பிடுறேன்..நீ திரும்பிப் பாக்குறா, இல்லே ?’ – குலாம் சாபு கேட்டார்கள்.

‘ஆமா’

‘அல்லாஹ், திரும்பிப் பாக்குறானா ?’

‘இல்லே’

‘திரும்புற வரைக்கும் கூப்பிடு !’ – மின்னல் இறங்கிற்று.

அன்றிலிருந்து அவர் குலாம் சாபுவின் சீடர்.

‘ஆண்டவன் தனியா உட்கார்ந்து ஷ்பெஷலா உருட்டுன பானை’ என்று பெரிய எஜமானைக் குறிப்பிடும் குலாம் சாபு, ‘தக்தீரை (விதியை) அவுலியாக்கள் மாற்றலாம்’ என்று சிலர் சொல்வதற்குக் கூறும் பதில் என்ன ?

‘Boatலெ போறான் ஒருத்தன்…போற ஆங்கிள் , வேகம், தன்னை மறந்த நிலை, இப்படித்தான் போவாங்குறதுதான் ‘தக்தீர்’. இவன்ற கூட்டாளி , ஹெலிகாப்டெர்லெ மேலே வந்துகிட்டிக்கிறான். அவன் பார்த்துடுறான் Boat போற இடத்து முடிவுலே நீர் வீழ்ச்சி இருக்குண்டு..பார்த்துட்டு செய்தியை தெரியப்படுத்துறான். இவன் சொல்றான் :’நான் போவலேப்பா..அதுவா போய்க்கிட்டிக்கிது..ஆனா எனக்கு சாவு நிச்சயம்!’. கேட்டவன், ஹெலிகாப்டர்லேர்ந்து ஏணியை கீழே இறக்கி வுட்டுடுறான். இவன் மேலே வந்துடுறான் – தப்பிச்சிக்கிட்டு ! இதுதான் தக்தீரே முக்தரம். இந்த தக்தீர் யாருக்கும் தெரியாது. அவுலியாக்களுக்குத்தான் தெரியும். அப்படீண்டா..தக்தீரையும் மாற்றலாம் ! கேள்விப்பட்டதில்லே ஹதீஸ் ? ‘துஆயில் அவுலியாயிவதுல் தக்தீர் ‘. அவுலியாக்களின் துஆ தக்தீரை மாற்றி விடும்..’

எப்போதோ குலாம் சாபு ஒரு கேஸ்ஸட்டில் பேசியது இது.

ஹக்கானி சாபு எனும் சீடர் ‘அவுலியாக்களுக்கு அந்த சக்தி இருக்கிறதென்று நம்ப வேண்டுமா ?’ என்று குழம்பிப் போய் கேட்கிறார் அதில்.

‘ஆமா..நம்பத்தான் வேணும். ஆனா நம்பிக்கை இல்லேண்டாலும் உண்மை உண்மைதான்’

‘புரியலே சாபு..’

‘நம்பிக்கையால நடக்கக்கூடிய காரியத்துக்கு நம்பிக்கை வேணும். நாம நம்பாத காரணத்துனாலே இருக்கிற ஒண்ணு இல்லாம ஆயிடாது. ‘நம்பிக்கை இருந்தா அடையலாம்’ங்குறது வேறே..ஆனா அந்த சக்தி இருக்குங்குற உண்மையை நம்பாவிட்டாலும் இருக்கத்தான் செய்யுது. அது நமக்கு உதவி செய்யாது; அவ்வளவுதான்’

‘அது இருக்கிம் ?’

‘ஆமா..இப்ப எஜமானை எடுத்துக்குங்க. அவங்க உதவி செய்யிறாங்க. நீங்க நம்பலே..நம்பாவிட்டாலும் கிடைக்கும். ஆனா நம்புறவங்களுக்கு கிடைக்கிற மாதிரி கிடைக்காது. சில நேரத்துலே நம்பாத காரணத்துனாலே கிடைக்காம கூட போகலாம். ஆனா நம்புனாலும் நம்பலேண்டாலும் பெரிய எஜமானுக்கு ‘ரஹ்மத்’ (அருள்) உண்டுங்குறது fact. Proved Fact. Purely Scientific..’

ரஃபீக்கிற்கு எங்கிருந்து இந்த கேஸ்ஸட் கிடைத்தது ? குலாம் சாபுவின் சீடர்களே அத்தனை கேஸ்ஸட்டுகளையும் இழந்து விட்டுத் தவிக்கிறார்களே..அவர்கள் கேஸ்ஸட்களை மட்டுமா தொலைத்தார்கள் ?

இதையும் கூட நாகூர் பக்கத்தில் போடலாம். http://www.sunnaah.org யில் உள்ள விஷயங்களை விட இது எந்த விதத்திலும் குறைந்ததல்ல. ஆனால் குலாம் சாபுவிடம் நான் அனுமதி பெற வேண்டும். கேட்டால் இப்போது கிடைக்குமா ? நான் ‘பைய்யத்’ (தீட்சை) வாங்கவில்லையே..

பெரிய எஜமானின் சக்திக்கு அவர்கள் செய்த ஆன்மீகப் பயிற்சிகள்தான் காரணம் என்றால் அந்தப் பயிற்சிகள்தான் என்ன ? குலாம் சாபு ஒருவருக்குத்தான் அதுபற்றித் தெரியுமென்று ஊர் நம்புகிறது. ஆனால் அவர்கள் அவ்வளவு எளிதில் சொல்வார்களா ?

ஒன்று மட்டும் சொல்லியிருக்கிறார்கள். எஜமான் காலத்தில் அத்தனை சித்தர்களும் மந்திரவாதிகளும் இருக்க , எஜமானுக்கு மட்டும் அற்புதங்கள் செய்யும் வலிமை எப்படி வந்ததென்று..

‘அவனுவலாம் கீழே கிடக்குற ஒரு ரூவா காசுக்கு ஆசைப்பட்டானுவ. எஜமான், ஆயிரம் ரூவாய்க்கு ஆசைப்பட்டாஹா. ஆயிரத்துலெ ஒண்ணு அடங்கிடும்லெ ?!’ என்று.

வ அன்லய்சானில் இன்ஸானி இல்லா மாஸாஅ… (எதற்காக ஒரு மனிதன் முயற்சி செய்கிறானோ அதனையே அடைவான்).

எங்கே சீர்திருத்தம் வேண்டுமோ அங்கேதான் அவுலியாக்கள் பிறப்பார்களோ ? இது அவர்களின் முயற்சியா அல்லது அவர்களை அடைய விரும்புகிற ஜனங்களின் முயற்சியா ?

துபாயில் கூட இரண்டு அவுலியாக்கள் இருந்தார்கள். துபாயில் இருந்ததாலோ என்னவோ மரமாக இருந்தார்கள்.

எதுவாக இருந்தால் என்ன ? ஜனங்கள் வழி பட வேண்டும். பயத்தோடு நின்று பாதை திறக்க மன்றாட வேண்டும். அற்புதங்கள் பற்றிப் பேச வேண்டும்…

குதிரை, ஒட்டகப் பந்தயங்கள் நடக்கும் நாத்-அல்-ஷிபாவில் , அல்-ஐன் ரோடில் நுழையாமல் ஹத்தா போகிற சாலைக்குத் திரும்பும்போது மர அவுலியாக்கள் இருந்தனர்.

இரண்டு பேருக்கும் பலமான வேலி போட்டிருந்தது. உலகப் புகழ் பெற்ற குதிரைப் பந்தயம் நடக்கிற இடத்தில் அதுவும் இளவரசர் ஷேக் முஹம்மது பின் ரஷீது பெரும் சிரத்தையோடு கட்டிய ஒட்டக மருத்துவமனைக்கு அருகாமையில் அந்த வேலி இருந்தது லட்சணமாக இல்லைதான்.

வியாழக்கிழமை இரவுகளில், பாகிஸ்தானிகள் வேலி ஏறிக் குதித்து, உள்ளே பச்சைத் துணியை தொங்க விட்டு, பத்தியும் கொளுத்தி வந்தார்கள். அவர்களின் நம்பிக்கைகளை, உலகின் முக்கிய கேந்திரமாக தன் நாட்டை உருமாற்ற நினைக்கிற மன்னர் அலட்சியப்படுத்த இயலுமா ?

போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறதென்று புல்டோசர் ஐ அருகில் கொண்டு வந்தால் கொஞ்ச தூரத்திற்கு முன் சக்கரம் நின்று விடுமாம். பலமுறை முயற்சி செய்தும் பயனில்லாமல் போகவே, ‘யாரோ’ ரெண்டு பெரியவங்க அடக்கமாகியிருக்காங்க’ என்று அப்படியே விட்டு விட்டதாக ஒரு கீழக்கரை காக்கா சொன்னார். விஷயம் உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ள நான் அலுவலகத்தில் அனுமதி வாங்கிக் கொண்டு அங்கு போய் ஒரு புல்டோசருடன் நின்று கொண்டிருந்தால் என் ‘தக்தீர்’ஐ அரபாப் எழுதி விடுவார். தேவையா இது ?

இதற்கா நான் துபாய் போனேன் ?

பத்து வருடமாகப் பார்த்த மர அவுலியாக்கள் ஒரு நாள் சாய்க்கப்பட்டார்கள் வேரோடு.

பாலம் கட்டியே ஆக வேண்டிய சூழல் ஏற்ப்பட்டபோது மர அவுலியாக்கள் விட்டுக் கொடுத்தார்கள் என்று பேச்சு..காரணங்கள்..

எல்லாச் செயல்களுக்கும் காரணங்கள் காணவா ஊர் போனேன் ? ஊருக்குப் போனது அஸ்மாவின் பக்கங்களை ஆசை தீரப் பார்க்கவா அல்லது நாகூர் இணையப் பக்கங்களை அதிகரிக்கவா ? அஸ்மாப் பொன்ணு, கோவிச்சுக்காதேடி..

இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்தான். ஆனால் இந்த சபருக்கு இது போதும். முதலில் நான் , என் அஸ்மாவுக்கும் பிள்ளைகளுக்கும். அப்புறம்தான் ஊருக்கு..

வெறும் ஊரைப் பற்றியே சொல்லிக் கொண்டிராமல் எல்லா முக்கியமான பக்கங்களுக்கும் பார்ப்பவர் போக , ‘லிங்க்’ கொடுக்க வேண்டும். ‘ We want Peace , not Peace Process ‘ என்று சொல்லும் தளங்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். ஈராக் செய்திகளுக்கும் முக்கியம் கொடுக்க வேண்டும் – திட்டம் விரிந்தது.

பயணம் சொல்லிவிட்டு ரயிலடி வந்தேன். இப்போதெல்லாம் அஸ்மா அழாதது ஒரு வகையில் நிம்மதியாகவும் மறு வகையில் உறுத்தலாகவும் இருந்தது. சிரிக்கிறாளோ? ஆனால் எப்போதும் ‘சரக்’ என்று கத்தியைச் சொருகினாற்போல ஏன்தான் பயண தினத்தில் மனசில் இத்தனை வலியோ …

மெய்தீன் மாமா ஆறுதல் சொன்னார். ரஃபீக்கும் அவரும் மட்டும் வந்திருந்தார்கள் வழியனுப்ப. மறந்து விட்டேன், உம்மா வீட்டிலிருந்து வேலைக்காரன் நாவப்பனும் வந்திருந்தான்.

மாமா, பெருமாள் கோவில் சிவன் கோவில் புகைப்படங்களைக் கொண்டு வந்திருந்தார். வேளாங்கண்ணி பற்றியும் எழுதி அனுப்புகிறேன் என்றார். ரஃபீக், பிரபல எழுத்தாளர் நாகூர் ரூமி (இவரைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்) கொடுத்தாரென்று ஹஸன் பஸ்ரி பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரையைக் கொடுத்தான். தத்கிரதுல் அவ்லியாவின் மொழிபெயர்ப்பு. ஹஸன் பஸ்ரி, பெருமானாரின் குவளையிலிருந்து ‘ஞானம்’ குடித்தவர் என்றார் மெய்தீன் மாமா. கடலிலிருந்து ஒரு துளி..

மாமா…இப்போது எனக்கு ஞானத்தை விடத் தேவை தெம்பு..!

சென்னை எக்ஸ்பிரஸ் புறப்படுகிற நொடியில் – இறைதாசனும் மறைதாசனும் இரைக்க இரைக்க ஓடி வந்தார்கள். சலாம் கொடுக்க அல்ல. அவர்களுடைய புகைப்படம் மற்றும் சில பாடல்களை என் வலைத்தளத்தில் போட வேண்டுமாம்.

‘எப்ப ஒளிபரப்புவீங்க தம்பி?’ என்றார்கள் , கொடுத்து விட்டு.

‘என்னது…!’ – நான் பதில் சொல்வதற்குள் ரயில், சில்லடியைத் தாண்டியிருந்தது. அவர்கள் யாவரும் மறைந்து விட்டிருந்தார்கள். ஊரெங்கும் தெரியும் பெரிய மினாராவின் விளக்குதான் தெரிந்தது.

இன்னும் கொஞ்ச தூரம் போனால் அதுவும் மறைந்து விடும்.

(END)

***

abedheen@gmail.com
http://abedheen.wordpress.com

Series Navigation

ஆபிதீன்

ஆபிதீன்