நடராஜன் கந்தக்குமார்
நீள்செவ்வகமரபெட்டி-நடுக்கூடத்தில் நாலுபேர் இறக்கிவைத்து விட்டு சென்றனர்.வீட்டில் ஒரே நிசப்தம்.மேகலைக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை.உடனே பெட்டியை திறக்க வேண்டும்.அப்பா ஒருவேளை பெரிய பார்ஃபி பொம்மை வாங்கி அனுப்பி இருக்கலாம்.பலவாறு கற்பனை மேகலைக்கு.அம்மாவிடம் கேட்கலாமென்றால்,கேட்குமளவு பொறுமையில்லை அவளுக்கு.சொல்லும் மனநிலையில் அவளம்மாவும் இல்லை.பெட்டி அருகில் நெருங்கினாள் மேகலை.
“என்ன கதிரேசா,பகல்லே கனவா? வீட்டு ஞாபகமா?” கூட வேலை பார்க்கும் கண்ணனுக்கு கதிரேசன் வாயைக்கிளருவதில் ஒரு சந்தோஷம்.
அவன் ஏக்க பெருமூச்ச்ில் இவனுக்கு ஒர் அல்ப நிம்மதி.
கட்டுமான வேலையிடம்.பாதிவளர்ந்த நிலையில் இருபது மாடிகட்டிடம்.மதிய இடைவேளை.
புல்தரை லேசாக நனைந்திருந்தது சற்றுமுன் தூறியமழையில்.
ஒருக்களித்தநிலையில் படுத்திருந்த கதிரேசன் தலையமட்டும் அசைத்துவிட்டு கண்கள் சொருகிப்போனான்.மனம் அவனை அவன் உலகத்திற்குள் இழுத்துச்சென்றது.
‘முதல்ல முத்தண்ணனுக்கு பெரிய கும்பிடுபோடணும்.நிறைய நன்றிகடன் பட்டிருக்கிறேன்.
முதலாளி சம்பளம் தாமதமாகதந்தாலும் முத்தண்ணனனிடம் கொடுத்து ‘உண்டி’யில் சேர்த்துட்டா டாண்ணு வீடுபோய் சேர்ந்திடும் அடுத்தநாளே!.இந்தபணத்தைவைச்சு சிங்கப்பூர் வர்றதுக்கு வாங்கிய எஜண்டு கடன்,வீட்டுக்கடன்,வட்டிக்கடன்,மகள்படிப்பிற்கு கொஞ்சம்,கடைசிகாலம் தள்ள,கைச்செலவுக்குன்னு பிரிக்கிறதுக்குள்ள பொட்டு முடியில்லாம உதிர்ந்திடும்போல.
தொலைபேசி அழைப்புஅட்டை-இங்குதான் நேரம் அட்டைக்குள் அடங்கிகிடக்கிறது.அம்மா,அப்பா,என்பொண்ணுன்னு பேசிவிட்டு என்மனைவிடம் பேசும்போது,ஒரு ‘ஹ்லோ’ சொல்லமட்டும் நேரம் சொச்சம் இருக்கும்.
ஒவ்வோருமுறையும் ஒரு ‘ஹ்லோ’வில் குடும்பம் நடத்துகிறோம்.அதில்கூட ஒருசுகம்தான்.அவள்சொல்லும் ஒருவார்த்தையில் ஆயிரமாயிரம் அர்த்தம் பொதிந்துகிடக்கும்.ஏக்கம் கொட்டிகிடக்கும்.விடியவிடிய பேசிதீர்க்க ஆசைதான்.நேரம் இருக்கிறது.இருந்தும் பேசிக்கொள்கிறோம்,தனித்தனியே.அவள் அங்கே.தலையணையில் முகம் புதைந்தபடி நான் இங்கே.
‘சினிமா டிக்கெட் பத்துவெள்ளி(250 ரூபாய்)! நான் ஒருத்தன் இங்கே பார்க்கிறநேரத்தில்,ஊர்ல குடும்பமே ஒருமாசம் சேர்த்துவைச்சு டூரிங் டாக்கீஸ்ல படம்பார்த்துவிடுவாங்கள்ல!’. நான் என் புலம்பலைச் சொல்லி அடங்குவதற்குள்,என்நண்பர்கள் பாதிபடம் தாண்டிப் பார்த்திருப்பார்கள்.என் கஷ்டம் எனக்கு.அவர்களைச் சொல்லி நியாயமில்லை.
பெருமாள்கோயில் சுண்டலும்,சர்க்கரைப்பொங்கலும் தராத திருப்தி,தேக்காதெருக்களில்,ஊர்ஞாபகத்தில்,சிக்னல்பார்க்காமல்,ரோடு சலதாண்டுவதில், நம்மஊர் ஜனங்களோட முண்டியடித்து,முகம்குலுக்கி,தோளொடுதோள் உரசி,கூட்டத்தோடு கூட்டமாக கரைவதில்,நாங்கள் உயிர்வாழ்கிறோம் ஓவ்வோரு ஞாயிற்றுக்கிழமைகளில்.
முத்தண்ணன் இவ்வளவு நேரத்திற்கு,ஊர்போய் சேர்ந்திருக்கணும்.நம்மவீட்டுல பார்சலைக் கொடுத்திருக்கணும்.இதுபற்றி முத்தண்ணன்கிட்ட பேசியது நினைவில் பளிச்சுன்னு வந்துபோனது.
“என்ன கதிரேசா! பார்சலெல்லாம் கனமா இருக்கு.பெண்டாட்டி ஞாபகமோ? ஊர்ஞாபகம் ஒட்டிக்கிச்சோ “.குசும்புடன் கேட்டான் முத்தண்ணன்.
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லண்ணே.நான் ஊர் போறதுக்கு இன்னும் ரெண்டு வருஷமோ இல்ல மூணு வருஷமோ தெரியலை. இந்த பார்சல் என் பெண்டாட்டிக்கில்லை.என் புள்ள ஆசைப்பட்டதால…….”நெளிந்தேன் நான்.
மனதுக்குள் ‘ உங்களமாதிரி மாதம் ஆனா ‘தாள'(பண) எண்ணுகிறவனில்லைணே நான்!.போன மாதம் பூரா ஒரு மணி நேரம் ஓவர்டயம் பார்த்ததில்,’சல்லிசல்லி ‘யாய்,ஒடியாடி பார்த்து பார்த்து சேர்த்த ‘காசில்’ வாங்கினது.என் உழைப்பு,ஆசை,ஆசையோட சேர்ந்த பெருமூச்சு,பாசம் எல்லாம் சேர்ந்தா கனமாகதானே இருக்கும்!.’பொருமினேன் நான்.
கண்ணன்விட்ட குறட்டை கதிரேசனை அவன் நினைவுகளிலிருந்து வெளியே இழுத்து போட்டது.என்ன ஆச்சர்யம்.சற்றுமுன்பு விமானம் பிடிச்சு ஊருக்கு போயிருந்த பார்சலும்,அதை கையில்பிடித்தபடி முத்தண்ணனும் கதிரேசன் கண்ணெதிரே நின்றுகொண்டிருந்ததை அவனால் நம்பமுடியவில்லை.கண்களை கசக்கிவிட்டான்.
குறட்டைவிட்ட கண்ணன்கூட எழுந்து விட்டான்.
“கதிரேசா! அவசரவேலை.முதலாளி கடைசி நிமிஷத்துல லீவு தரலை.இந்தா! உன் பார்சல்! வேறு யாரவது ஊருக்கு போனாங்கன்னா சொல்லியனுப்புறேன்.”சொல்லிவிட்டு மறைந்துபோனான் முத்தண்ணன்.
கதிரேசன் கண்கள் கலங்கின.ஒவர்டைம் பார்த்தபோது,வலிக்காத உடலும்,மனமும் இப்போது பெரும்வேதனையும் வலியும் கொடுத்தது.
முத்தண்ணன் திருப்பிகொடுத்த அழகாக பேக்கிங் செய்யப்பட்ட ஜிகினாத்தாளை பிரித்தான்.
உள்ளே பார்ஃபிபொம்மை சிரித்தது.அவன்விட்ட பெருமூச்சில்,பார்ஃபி தங்கநிறகேசம் ஒருமுறை ஆடியது.
‘இன்னும் எவ்வளவுநாள் என்பொண்ணு மேகலை காத்திருக்கவேண்டுமோ.அவளுக்கு பிடித்த பார்ஃபியை பார்ப்பதற்கு.’மனம் விம்மினான்.
“அண்ணே! மழை வர்றதுக்குள்ள,பத்தாவது மாடியில் சன்னல் கண்ணாடிச்சட்டம் பொருத்தணும்.”அவசரப்படுத்தினான் கண்ணன்.
கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட மின் துாக்கி,பத்தாவது மாடிநோக்கி விரைகிறது,கண்ணாடிசட்டத்தையும்,இருவரையும் ஏற்றிக்கொண்டு.கதிரேசன் மனம்மட்டும் தரையில் முத்தண்ணன் பேசிய நினைவுகளில் எஞ்சியிருந்தது.
இருண்டமேகங்கள்.மழை மெதுவாக தூறல்கொண்டு வேகம்பிடித்தது.சுப்பர்வைசர் அவசரப்படுத்தினான்.கதிரேசனும்,கண்ணனும் முடிந்தவரை முயன்றார்கள்.சட்டம் மூன்றுமூலைகளில் சரியாகப்பொருந்தியது.இவர்களில் அவசரம் புரிந்துகொண்டதுபோல.
ஒருமூலைமட்டும் சரியாகப்பொருந்தாமல் விளையாட்டு காட்டியது.
ஓரே ஒரு எக்கு எக்கி, கால் நூனி பேலன்ஸில் கதிரேசன் சட்டத்தை சரியாக பொருந்தியகணத்தில் நினைவுகளில் அமிழ்ந்தான் கதிரேசன் ….மேகலை..!பார்ஃபி பொம்மை..! கால் தவறினான்.சரிந்தான்.
கதிரேசன் கைகள் சட்டைப்பையில் இருந்த பார்ஃபியை இறுகப்பற்றின.பொம்மையை தன் நெஞ்சுக்கு அருகில் கட்டிக்கொண்டான்,பொம்மைக்கு அடிபடக்கூடாது என்ற அவசரத்தில்.
‘கதிரேசா…!…கதிரேசா…!கண்ணனின் கத்தல் கொஞ்சம்கொஞ்சமாக சுருதி குறைந்து விழுகின்றது கதிரேசன் காதில்.அவன் மனம் பரந்தபரவெளியில் பறந்துகொண்டிருந்தது.உடல் தரையைத் தொட்டது.
நீள்செவ்வகமரபெட்டி-நடுக்கூடத்தில் நாலுபேர் இறக்கிவைத்து விட்டு சென்றனர்.வீட்டில் ஒரே நிசப்தம்……….மேகலைக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை…………..பெட்டி அருகில் நெருங்கினாள் மேகலை.
அம்மா மூலையில் முடங்கி கிடந்தாள் விசும்பியபடியே.
பெட்டி திறந்தது.
உடலெங்கும் பரபரப்பு ஒட்டிகொண்டது மேகலைக்கு.
அப்பா என்னை இந்தமுறையும் ஏமாற்றவில்லை.
‘அடக்க’மான பெட்டி.அமைதியாக உள்ளே அப்பா.
அவளுக்கு புரியவில்லை.’அடக்க’மான அப்பா.அமைதியாக பெட்டி.!என்று??
அவர் கையில் இறுக பற்றியபடி,பார்ஃபி பொம்மை.
அடக்கமுடியாமல் அம்மா அழுகிறாள்.
மேகலையும் அழுகிறாள்,அம்மா அழுவதை பார்த்து.
அவள் கண்கள்மட்டும் பொம்மைமீது.
இருந்ததை இழந்ததால்,இழப்பதால் அவள் அம்மா அழுகிறாள்.எதிர்காலம் அம்மா கவலை.
அப்பாவை நினைத்து பெருமை மேகலைக்கு.சொன்னபடி செய்ததால்.மனம் முழுவதும் சந்தோஷம்.ஆனால்,எதோ ஒரு சூன்யம் கவ்வி கிடக்கிறது அந்த அறை முழுவதும் அவள் சந்தோஷத்தை குலைப்பதைபோல.
சூழ்நிலையின் அடர்த்தியின் ஆழநீளங்கள் ஒவ்வோருவருக்கும் ஒரே நேரத்தில் வெவ்வேறு பொருள்படுகின்றன,அவரவர் தேவைகளையும் பார்வைகளையும் பொருத்து.
சாலையோர வாகனவிபத்து.இறந்துபோனவர் நமக்கு தெரியாதவரென்றால்,ஒரே உச்சுக்கொட்டலில் முடித்துகொள்கிறோம்.
தெரிந்தவரென்றால் அவர் நினைவு வரும்போதெல்லாம் வருத்தப்படுகிறோம்.
உயிர் ஒன்றுதான்.நம் பார்வையும் பரிதாபமும் மட்டும் வேறுவேறு கனங்களில்.
அப்பா எழுந்த உடன் பொம்மை வாங்கி,அவள் நண்பர்களுக்கு காண்பிக்க வேண்டும்.அப்பாவின் விழிப்பிற்காக காத்திருக்கிறாள் மேகலை.
knatarajan@sg.pepperl-fuchs.com
- மனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி!
- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்
- குழந்தைகளுக்கான தோட்டம்!
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் ! (கட்டுரை: 30)
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 23 யாரென் கதையை நம்புவார் ?
- தாகூரின் கீதங்கள் – 35 யாத்திரைப் பயணி நான் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)
- புதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா
- கவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா!
- மறந்துபோகும் பிறந்த நாள்கள்
- Call for papers for the fourth annual Tamil Studies Conference, “Home, Space and the Other”
- “இலக்கிய உரையாடல்” : எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி”
- Ramayana for Youth Balakanda Monday July 7 – Friday July 11, 9 a.m. – 12 p.m
- மென்தமிழ் இணைய இதழ்
- நீங்கள் விரும்பியதையெல்லாம் வணங்கிக்கொள்ளுங்கள்!
- கமண்டலத்தில் நதி – சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா
- The launch of the NFSC portal for folklore journals
- அக்கா
- காதலில் தொடங்கிய என் பயணம்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 24 ந.பிச்சமூர்த்தி.
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-3 (சிவகுமார்)
- நான் கண்ட தன்வந்திரி
- மெழுகுவர்த்தி
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 15
- ஊமச்சி
- குளியலறையில் பேய்!
- Last kilo byte – 17 கொக்கு மீனை திங்குமா ?
- காலடியில் ஒரு நாள்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9
- நினைவுகளின் தடத்தில் – 12
- கவிதை
- Last Kilo byte – 15 – காக்கை, குருவி எங்கள் …
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-2 (தனேஸ்குமார்)
- இழப்பு
- வறுமை
- குங்குமப்பூ
- பட்டமரங்களும் பச்சைமரமும்
- வாடிய செடி