(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -4 ஆண்டனி & கிளியோபாத்ரா முடிவுக் காட்சி

This entry is part of 34 in the series 20070816_Issue

சி. ஜெயபாரதன், கனடா


எடுத்துவா என் அங்கியை ! அணிந்திடு கிரீடம் !
என்னுள் மரிக்காது இருக்குது ஆசை !
எகிப்தின் திராட்சை ரசம் இனி
ஈரப் படுத்தாது என் உதடை !
அதோ, கேட்குது, ஆண்டனி அழைப்பது !
என் உயர்ந்த செயலை மெச்சிட அவர்
எழுந்து வருவது எனக்குத் தெரியுது !
பதியே ! வருகிறேன் ! அந்தப் பட்டம்
நிரூபணம் ஆக நிலைபடும் என் துணிவு !
அக்கினி நான் ! வாயு நான் ! மற்ற
நீரும் நிலமும் அடிப்படை வாழ்வுக்கு !
ஏற்றிடு இறுதியாய் என் முத்தத்தின் சூட்டை !
கனிவுள்ள ஈராஸ் ! சார்மியான் !
உம்மிட மிருந்து விடை பெறுகிறேன்,
நீண்ட விடை பெறுகிறேன் ! … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

எத்தகை ஈனமான ஆயுதம் இது ? ஆயினுமோர்
உத்தம வினைதனைச் செய்யப் போகுது !
விடுதலை அளித்திடும் எனக்கு ! என்
முடிவு தீர்மான மானது ! என்னுள்
இருக்கும் பெண்மை எல்லாம் தீர்ந்தது !
தலை முதல் தடம்வரை பளிங்குச்
சிலையாய் அடங்கிப் போனேன் இப்போது !
மாறிப் போனது நிலா ! மற்றும் அண்டக்கோள்
வேறில்லை எனக்கு ! … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

+++++++++++++++

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -4

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் கண்டு பேசி அவள் முன்பாக ஆண்டனி உயிரை விடுகிறான். அக்டேவியஸ் ஆண்டனி இறந்த செய்தியைக் கேட்டு, கிளியோபாத்ராவைக் காண தூதனை அனுப்புகிறான். சாமர்த்தியமாகப் பேசி கிளியோபாத்ராவைச் சிறைப்படுத்துகிறார் ரோமானியப் படையினர். இறுதியாக அக்டேவியஸ் கிளியோபாத்ராவைச் சந்திக்கிறான். அதற்குள் கிளியோபாத்ரா பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறாள்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -4

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் தனியறை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஈராஸ், சார்மியான், ஆலயப் பூசாரி, அக்டேவியஸ், தொலபெல்லா, புரோகியூலியஸ் மற்றும் ரோமானியப் படையினர்.

காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா தப்பிச் செல்ல தொலபெல்லா முயல்கிறான். ஆனால் கிளியோபாத்ரா அரசியாக இனிமேலும் வாழ விருப்பமின்றி உயிரை மாய்த்துக் கொள்ள முனைகிறாள்.

கிளியோபாத்ரா: சார்மியான் ! போ பட்டம் சூடிய போது அணிந்த என் ஆடைகளைக் கொண்டு வா ! எனது கிரீடத்தை எடுத்து வா ! பொன் ஆபரணப் பேழையைத் தூக்கி வா ! ஈராஸ், சார்மியான் இருவரும் எனக்கு இறுதி அலங்காரம் செய்ய வேண்டும் ! (சார்மியான் போகிறாள்). ஈராஸ் நீ ஆலயப் பூசாரியை அழைத்துவா ! பூட்டி வைத்திருக்கும் பாம்புப் பெட்டியை எடுத்துவரச் சொல் ! பிரமிட் புதை அறையில் விளக்கேற்றச் சொல் ! வண்ண வண்ணப் பூக்களால் அலங்கரிக்கச் சொல் ! வாசனைப் பத்திகளைக் கொளுத்தி மணம் பரப்பச் சொல் !

ஈராஸ்: அப்படியே செய்கிறேன் மகாராணி !

(ஈராஸ் போகிறாள்)

கிளியோபாத்ரா: [தனக்குள் பேசிக் கொள்கிறாள்] நான் விடைபெறும் தருணம் வந்து விட்டது ! என்னை ஆண்டனி கூப்பிடுவது உள்ளத்தில் தெரிகிறது! என்னரிய துணிகரச் செயலைப் போற்றுவார் ஆண்டனி. ஆண்டனி என் பதி ! மனைவி என்னும் மதிப்பான பட்டத்தை எனக்கு அளித்த என் உன்னதப் பதி அவர் ! நானே அக்கினி ! நானே வாயு ! எனது மற்ற பஞ்ச பூதங்களான நீர், நிலம், வானம் ஆகியவற்றை அடிப்படை வாழ்வுக்கு விட்டுவிடுகிறேன்.

(சார்மியான் ஆடை, அணிகள், கிரீடத்துடன் வந்து கிளியோபாத்ராவுக்கு அலங்காரம் செய்கிறாள். அப்போது ஆலயப் பூசாரியுடன் உள்ளே நுழைகிறாள் ஈராஸ். பூசாரியின் கையில் பாம்புப் பெட்டி இருக்கிறது. )

சார்மியான்: [அலங்காரம் முடிந்த பிறகு பூரிப்புடன்] மகாராணியைப் பார்த்தால் மயங்கி விழாத மனிதர் இருக்க முடியாது ! எத்தனை கொள்ளை அழகு ! நமது ஓவியர் பக்கத்தில் இல்லை, படத்தை வரைவதற்கு ! ஓவியரை அழைத்து வரவா மகாராணி !

கிளியோபாத்ரா: [கவலையுடன்] வேண்டாம், கால தாமதம் ஆகக் கூடாது ! அக்டேவியஸ் வருவதற்குள் நமது வேலை முடிய வேண்டும். மரண தேவனைக் காக்க வைக்கக் கூடாது ! [பூசாரியைப் பார்த்து] மரக் கூடையை என் கையில் கொடு ! (ஆலயப் பூசாரி மரக் கூடையை மேஜையில் வைக்கிறார். அதை இலேசாகத் திறந்து உள்ளே நெளியும் பாம்புக் குட்டிகளைப் பார்க்கிறாள்) உள்ளே நஞ்சிருப்பது தெரியாமல், வெளியே கொஞ்சிக் கொண்டிருக்கும் நல்ல பாம்புக் குட்டிகள் ! எத்தகைய ஈனமான ஆயுதம் இது ! எனக்கு விடுதலை அளிக்கும் கருவி இது ! உன்னத ராணியின் ஒப்பிலா வரலாற்றை முடிக்கப் போகும் சின்னப் புழுக்கள் இனம் ! ஈராஸ் ! எனது தீர்மானம் உறுதியாகி விட்டது ! அதை முன்னோக்கிப் பார்க்கிறேன். பின்னோக்கிப் பார்ப்பதால் ஒளிமிகுந்த என் வாழ்க்கை முன்னோக்கி மீளாது ! என்னுள்ளே இனி எனது பெண்மை இல்லாமல் போனது ! நானோர் ஆத்மா இழந்த கூடுதான் ! இந்தக் கூடு இருந்தால் என்ன ? மரித்தால் என்ன ? ஆவி போயினும் என் ஆத்மா எகிப்தில் நிலைத்து நிற்கும். [பூசாரியைப் பார்த்து] நாகக் குட்டி கொட்டினால் வலிக்குமா ? வலி உணராமல் உயிர் போக வழியுண்டா ?

ஆலயப் பூசாரி: [தடுமாறிக் கொண்டு] மகாராணி ! குட்டி நாகத்தின் நச்சுப் பல்லில் வெளிவருவது துளி விஷமே ! முதலில் முள் குத்துவதுபோல் தெரியும். குருதியில் நஞ்சு கலக்கும் போது வலி உண்டாகும். பிறகு பொழுது அடைவது போல் சிறுகச் சிறுக ஒளிமங்கி இருளாகிவிடும் !

கிளியோபாத்ரா: [ஆர்வமாக] இந்தக் குட்டி நாகம் கொட்டி யாராவது சாவதைப் பார்த்திருக்கிறாயா ?

ஆலயப் பூசாரி: ஆமாம் மகாராணி ! நேற்று நிகழ்ந்த சம்பவம் ஒன்று ! கணவனால் துரத்தப் பட்ட நடு வயது மாதொருத்தி உயிரை மாய்த்துக் கொள்ள என்னிடம் வந்தாள் ! கண்ணை மூடிக் கொண்டு பெட்டிக்குள் கையை விடு என்று சொன்னேன் ! வலது கையை விட்டவள் அலறினாள் ! தரையில் விழுந்து துள்ளினாள் ! அவ்வளவுதான், சிறிது நிமிடங்களில் அவள் வாழ்வு முடிந்தது !

கிளியோபாத்ரா: [சற்று எரிச்சலுடன்] சரி, சரி, மரப் பெட்டியை வைத்து விட்டுப் போ ! இங்கு நடப்பதை யாரிடமும் சொல்லாதே ! பின்வழியாக ரோமானியப் படைக் கண்ணில் படாமல் வெளியே செல் ! போ ! பிரமிட் புதை அறை பூக்களால் அலங்கரிக்கப்பட வேண்டும். வாசனைப் பத்திகளின் மணம் மூக்கைத் துளைக்க வேண்டும். போ எல்லாவற்றையும் தயார் செய் !

[ஆலயப் பாதிரி நடுங்கிக் கொண்டு விரைகிறான்]

கிளியோபாத்ரா: எனது நீண்ட கால இறப்பில்லா வாழ்வு தொடங்கப் போகிறது ! விடை பெறுகிறேன் என்னினிய எகிப்த் நாடே ! இனி உனது திராட்சை ரசம் என் உதடுகளை ஈரப் படுத்தாது !
உன் புனித பூமிமேல் என் பூப்பதங்கள் இனி நடக்கா ! உன் நைல் நதி இனி என் தாகத்தைத் தீர்க்காது ! உன் பரந்த பாலைவனப் பசுஞ்சோலை எனக்கு பஞ்சணை தராது ! விடை பெறுகிறேன் எகிப்த் நாடே ! [நாகப் பெட்டியைப் பார்த்துச் சிந்தித்து] நானிந்த நச்சுக் குட்டிகளைச் சோதிக்க வேண்டும் ! சாவது சீக்கிரமா அல்லது தாமதிக்குமா என்று நான் இப்போது காண வேண்டும் ! அக்டேவியஸ் வருவதற்கு முன்னே நான் போக வேண்டும் ! உயிரற்ற உடலைத்தான் அவர் காண வேண்டும் !

ஈராஸ்: மகாராணி ! நான் சோதனைக்குத் தயார் ! மகாராணி மரிப்பதை நான் என் கண்ணால் பார்க்க மாட்டேன் ! உங்களுக்கு முன்பே நான் சாக வேண்டும் !

கிளியோபாத்ரா: [பாம்புப் பெட்டியைத் திறந்து] என்னிடமிருந்து விடை பெறு ஈராஸ் ! வா ! வந்து வலது கரத்தைப் பெட்டிக்கு உள்ளே விடு !

[ஈராஸ் கையைப் பெட்டிக்குள் விட்டுச் சட்டென எடுக்கிறாள். வலி ஏறிச் செல்ல கையைப் பிடித்துக் கொண்டு தரையில் சாய்கிறாள். சில நிமிடங்களில் மரணம் அடைகிறாள்]

கிளியோபாத்ரா: [பாம்புப் பெட்டியை நோக்கி] பயனுள்ள ஆயுதம்தான் ! பாம்பென்றால் படையும் நடுங்கும் ! ஆனால் •பரோ பரம்பரைப் பாவை கிளியோபாத்ரா பயப்பட மாட்டாள் ! பாம்புதான் என்னைக் கண்டு பயப்பட வேண்டும் ! [பெட்டியைத் திறந்து ஒரு குட்டிப் பாம்பைக் கையில் எடுக்கிறாள்] குட்டி நாகமே ! உன் நச்சுப் பையைக் காலி செய் ! உன்னை ஊட்டி வளர்த்த இந்த அரசிக்கு விடுதலை அளித்திடு ! நானிந்த உலகை விட்டு நீங்கி விட்டேன் என்று அக்டேவியசுக்கு எடுத்துச் சொல் ! [பாம்பைத் தன் முலை மீது தீண்ட விட்டு] ஈதோ என் மார்பு ! இதன் வழியாக உன் விஷத்தை என் குருதியில் ஊட்டு ! எனக்கொரு நிம்மதி நிலையைக் காட்டு ! எகிப்த் அரசியை யாரும் கைப்பற்ற முடியாதென நிலைநாட்டு ! [பாம்புக் குட்டியை விட்டெறிகிறாள்] உனக்கும் விடுதலை இன்று ! ஓடிப் போ ! [நெளிந்து நெளிந்து குட்டி நாகம் விரைகிறது]

[கிளியோபாத்ரா வலியுடன் தள்ளாடிக் கொண்டு பள்ளியறைப் படுக்கையில் சாய்கிறாள். சிறிது நிமிடங்களில் அவள் உயிர் பிரிகிறது]

சார்மியான்: மகாராணி ! மகாராணி ! ஈதோ நானும் வருகிறேன் [பாம்புப் பெட்டியைத் திறந்து கையை விடுகிறாள். சிறிது நேரத்தில் கிளியோபாத்ரா அருகிலே அவளும் மரிக்கிறாள். அப்போது தொலபெல்லா, ரோமானியக் காவலருடன் உள்ளே நுழைகிறான்.]

தொலபெல்லா: [ஆச்சரியமுடன்] என்ன அமைதி ! ஒரே அமைதி ! ஓர் அரவங் கூடக் கேட்கவில்லை. [தரையில் நெளிந்தோடும் குட்டிப் பாம்பைப் பார்த்து நடுங்குகிறான்] அரண்மனையில் பாம்புக் குட்டி ஏன் வந்தது ? எங்கே இங்கிருந்த கிளியோபாத்ரா ? எங்கே ஈராஸ் ? எங்கே சார்மியான் ?

முதல் காவலன்: [உள்ளே தேடிச் சென்று] ஈதோ ஈராஸ் ! செத்துக் கிடக்கிறாள் ! அதோ சார்மியான் அவளும் செத்துப் போய்விட்டாள் !

தொலபெல்லா: [மிக்க கவலையுடன்] எங்கே எகிப்த் மகாராணி ?

இரண்டாம் காவலன்: [படுத்திருக்கும் கிளியோபாத்ராவைப் பார்த்து] ஈதோ அலங்கார உடையில் மகாராணி தூங்குகிறார்.

தொலபெல்லா: [ஓடிவந்து பார்த்து] அந்தோ தெய்வமே ! தப்பிச் செல்ல யோசனை கூறினேன் ! இப்படியா மகாராணி மரிக்க வேண்டும் ? யாரும் சிறைப்பிடிக்க முடியாத உலகத்துக்குப் போய் விட்டார் மகாராணி !

[அப்போது அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் உள்ளே நுழைகிறார்]

மூன்றாம் காவலன்: ரோமானியத் தளபதி அக்டேவியஸ் வருகிறார். ஒதுங்கி நிற்பீர் !

அக்டேவியஸ்: தொலபெல்லா ! எங்கே கிளியோபாத்ரா ?

தொலபெல்லா: [மனக் கவலையுடன்] தளபதி ! மகாராணியை என்னால் காப்பாற்ற முடியவில்லை !
மகாராணியாகவே மரித்து விட்டார்.

அக்டேவியஸ்: எப்படி மரித்தாள் ? ஒருதுளி இரத்தம் கூடச் சிந்தவில்லையே !

தொலபெல்லா: [பாம்புப் பெட்டியைக் காட்டி] அதோ அவள் ஆயுதப் பெட்டி ! கிளியோபாத்ராவைத் தீண்டிய நாகக் குட்டி என்னைத் தாண்டித்தான் ஓடியது !

அக்டேவியஸ்: [கிளியோபாத்ராவின் அருகில் வந்து] எகிப்து ராணி ! பகட்டான உடை ! பளிச்சென மின்னும் கிரீடம் ! சாவிலும் தேவதையாய்க் காட்சி அளிக்கிறாள் ! ராஜ குடும்பத்தில் பிறந்தாள் ! ராஜ குடும்பத்தில் வளர்ந்தாள் ! ராணியாக ஆண்டாள் ! ராணியாகவே மாண்டாள் ! மெய்யாக வென்றவள் கிளியோபாத்ரா ! அவளை ரோமாபுரி வீதியில் இழுத்துச் சென்று வேடிக்கை புரியலாம் என்று நினைத்திருந்தேன் ! அந்த திட்டத்தில் தோல்வி அடைந்தது நான் ! ஆண்டனி புதைக்கப்பட்ட இடத்தருகில் அவளையும் அடக்கம் செய்வீர் ! ரோமாபுரி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், எகிப்துக்காக இப்படிச் செய்கிறேன். ஆண்டனி கிளியோபாத்ரா இருவரும் வரலாற்றுக் காதலர்கள் ! ஒரே இடத்தில் இருவரும் அடக்கம் ஆகட்டும் ! துன்ப முடிவாகப் போகும் என்று நான் நினைக்க வில்லை ! ரோமாபுரி இராணுவ மரியாதையுடன் ஆண்டனியும் கிளியோபாத்ராவும் அடக்கம் ஆவார் ! நமது கடமை இது. ஏற்பாடு செய் தொலபெல்லா ! அதற்குப் பிறகு நாம் ரோமுக்குத் திரும்புவோம் !

[ரோமானியர் மூன்று சடலங்களையும் தூக்கிக் கொண்டு செல்கிறார்]

(கிளியோபாத்ரா நாடகம் முற்றுப் பெறும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Aug 14, 2007)]

Series Navigation