வான் முகில்

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

கோமதி நடராஜன்


நீல வானில்,
நீந்தி மகிழும் மேகமே!
நீ ஆணா ? அல்லது, பெண்ணா ?
பெண்தானே ?
நினைத்தேன்.
இதமாய் பதமாய்,
உலா வருவதைக் கண்டதுமே,
தெரிந்து கொண்டேன்.
நீ பெண் என்பதை.
பெண்ணே! நீ,
மடி மீது தவழும், மழலையா ?
மனதைக் கவரும், குமரியா ?
குமரிதானே!
நினைத்தேன்,
அலுங்காமல் குலுங்காமல்
அசைந்து வரும்போதே .
அறிந்து கொண்டேன்.
நீ குமரியென்று.
குமரி என்றால்,
இன்னும் நீ
காதல் வயப்படவில்லையா
காளை எவனும்
கண்ணில் படவில்லையா ?
பட்டுவிட்டானா ?
நினைத்தேன்.
பூமி நோக்கி உன் தலை
நாணத்தில் கவிழும் போதே
புரிந்து கொண்டேன்.
நீ காதலிக்கிறாய்,
அப்படியென்றால்,
காதலன் ,காதலனாகவே
இருக்கிறானா ?கணவனாக
கை பிடித்து விட்டானா ?
சந்தோஷம்!
மணமான மங்கையா நீ ?
மின்னலொளி தோரணமாக
இடிமுழக்கம் வாத்தியமாக
அருகிலிருந்தே
வாழ்த்தினரோ,தேவர்கள் ?
பதினாறும் பெற்று பெறு வாழ்வு பெற
பூமியிலிருந்தே
நாங்களும் வாழ்த்துகிறோம்.
இனி நாங்கள் வேண்டுவது,
உங்கள் குழந்தைகளாம்,
மழைத்துளிகளை.
‘மட மடவென்று ‘
மண்ணில் விழுந்த மழலைகளை
வாரி அணைக்கக் காத்திருக்கிறோம்
‘சட சடவென்று ‘,
பூமி தொட்டப் பூச்சரங்களைக்
கொஞ்சி மகிழ தவமிருக்கின்றோம்.
எதிர்பார்த்து நிற்கிறோம்.
ஏங்க வைத்து விடாதே!
வான்பார்த்துக் காத்திருக்கிறோம்,
வாட வைத்து விடாதே!
ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்