பொங்கலோ பொங்கல்

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

“கவியன்பன்”,கலாம்


வாய்க்கால் தண்ணீர் வந்திடும்
வாய்ப்பு மில்லை; பெய்திடும்

பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்

பேரா பத்தால் நெற்கதிர்

காய்த்து வந்தும் பொய்த்தது

காலம் தோறு மிந்நிலை

மாய்த்துக் கொள்ளும் மக்களோ

மங்கிச் சொல்லும் “பொங்கலோ”

பொங்க லன்று பொங்கிடும்

பொங்கற் சோறு போலவே

எங்கு மின்பம் தங்கிட

எம்வாழ்த் தாலே பெற்றிட

பங்க மில்லா வாழ்வினைப்

பற்றிப் போற்றி வாழ்ந்திட

அங்க மெங்கும் பொங்கிடும்

அன்பே வாழ்த்தாய்த் தங்கிடும்

சோற்றில் கையை வைத்திட

சேற்றில் காலை வைத்திடும்

ஆற்றல் மிக்க மக்களை

ஆர்வம் கொண்டு வாழ்த்திடு

ஏற்றம் பெற்ற ஏரினை

ஏந்திச் சிந்தும் வெற்றியால்

மாற்றம் பெற்று முன்வர

மக்க ளெல்லாம் போற்றுவோம்!

Series Navigation

கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்

கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்

பொங்கலோ பொங்கல்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

நாக.இளங்கோவன்


மூத்தகுடியின் முன்னோர்கள் ஆக்கிவைத்த பண்டிகைக் காலம்

இந்த பொங்கல் திருக்காலம். மனித வாழ்க்கை, அடிப்படையான அல்லது

அதிகப்படியான தேவைகளை அடைய அன்றாடம் ஏதொ ஒருமுறையில்

இயங்கிக் கொண்டே இருக்கிறது. இல்லவிழாக்கள் சுற்றம் சூழ

நடைபெறும்போது அங்கே மனநிறைவும் உறவும் வளர்கிறது.

திருமணங்கள், பிறந்தநாள்கள் போன்றவை அவை.

அதேபோல் ஊர்விழாக்கள் ஊராரை இணைத்து ஒருப்படுத்துகின்றன; பெரும்பாலும் ஊர்விழாக்கள் அனைவருக்கும் பொதுவான தெய்வ விழாக்களாக அமைகின்றன. தெய்வவழிபாடு, அதை ஒட்டிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போன்றவற்றில் அனைவரும் கலந்து கொண்டு இன்பம் துய்ப்பது ஊர்மக்கள் அனைவருக்கும் மனமகிழ்வையும் புத்துணர்வையும் ஒற்றுமையையும் வளர்க்கிறது.

இல்லங்கள் இணைந்து, ஊர்கள் இணைந்து ஒரு பெரும் சமுதாயமாக

ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன. இந்த விழாக்கள்

சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று அடையாளம் காட்டுகிற, அறிவுப் பூர்வமாகவும்,

உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும் போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்த சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக ஆகிவிடுகிறது.

இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான்

பொங்கல் பண்டிகைக்காலம். எத்தனைப் பொங்கல் காலத்தை இதுவரை இந்தத் தமிழ்க்குடி பார்த்திருக்குமோ! எண்ணி வியக்கிறேன் !

‘மேழிச் செல்வம் கோழைபடாது ‘ என்ற கொள்கையே இத்தமிழ்ச்

சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கிறது. அரசன் மகனை வாழ்த்தவந்த ஒளவையார் ‘இளவரசே வாழ்க பல்லாண்டு! ‘ என்று வாழ்த்தவில்லை! அரசே உன் ‘வரப்பு உயர்க ‘! என்று வாழ்த்தினார். காரணத்தை ஒளவையார் இவ்வாறு கூறுகிறார்.

வரப்புயர நீருயரும்!

நீருயர நெல்லுயரும்!

நெல்லுயுர குடியுயரும்!

குடியுயர கோனுயர்வான்!.

‘செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோலே ‘

என்கிறார் கம்பர். ‘உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி ‘ என்கிறார் வள்ளுவர். ஆக இந்த வேளாண்மையே (விவசாயம்) அனைத்தையும் ஆக்குகிறது, அசைக்கிறது. மனித ஆசைகள் இயந்திர ஓசைகளை உருவாக்கிய காலத்து முன் வேளாண்மை மட்டுமே சமுதாய நகர்வுகளுக்கு அச்சாணியாகத் திகழ்ந்திருக்கிறது. இது தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமல்ல எல்லாச் சமுதாயத்தினர்க்கும் பொருந்தும்.

வேளாண்மை அனைத்து மதங்களுக்கும் பொதுவானது. அனைவரின் பங்கும் ஏதோ ஒருவகையில் இதற்கு இருக்கிறது.

பொங்கல் விழாக்காலம் தமிழ்ச்சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு தமிழ்ச்சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் நல்விழாவாக, வேளாண்

திருக்காலமாக இருப்பது எவ்வளவு பொருத்தமான ஒன்று; எவ்வளவு அறிவார்ந்த, பெருமை படத்தக்க விழா அது!

அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற

முன்பனிப் பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாக முற்காலத்தில்

இருந்த தைமாத ஆரம்பம், விழாக்காலமாக விதிக்கப் பட்டது எத்தனை

அறிவார்ந்த பொருத்தமான செயல் என்று எண்ணி வியக்கிறேன்.

போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு

என்று ஒரு தொடர் விழாவே பொங்கல் விழா.

போகி என்பது மார்கழிக் கடைசி நாளில் கொண்டாடப் படுகிறது.

இதுநாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும் ‘ நாளாகக் கருதப்

படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும்

நாளாகக் கருதப்படுகிறது.

ஆனால் இதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

1) கவிஞர் கண்ணதாசன், தன் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தில்,

‘போகிப் பண்டிகை ‘ என்பது போகிகளின் ( சுகபோகிகளின் ) பண்டிகை

என்று எழுதியிருக்கிறார். அதை முதலாளித் திருவிழா என்று

குறிப்பதாகப் படுகிறது. அப்படியென்றால் வீட்டுப்பொங்கல், மாட்டுப்பொங்கல் போன்றவையெல்லாம் தொழிலாளிப் பொங்கல் என்றாகிவிடுகிறது. ஒருவேளை அவர் சொல்வதில் உண்மை யிருந்திருந்தால் அவர் ‘போகிப்பண்டிகை ‘ யின் சிறப்புக்களும் பாடப்பட்டிருக்கும்.

( பணக்காரன் பண்டிகையென்றால் அதற்குப் பகட்டும்

அதிகமிருந்திருக்காதோ ? ) பொங்கல் நாளுக்கு இருக்கும் சிறப்பு

போகிக்கு இருந்ததில்லை. ஆகவே கண்ணதாசனின் கூற்று சரியன்று.

2) மற்றொரு கருத்து என்னவென்றால், இடையில் தமிழை அழிக்க வந்த ஆதிக்க சக்திகள், தமிழருக்கு ‘பழையன கழித்தல் ‘ என்ற மந்திரம் போட்டு ‘போகி ‘ அன்று ‘பழைய ஓலைச் சுவடிகளை ‘ யும் சேர்த்து எரித்து அழிக்கச் செய்திருக்கிறார்கள். தமிழ் நிறைய அழிந்தது இதனால் என்று அறிஞர் பலர் கருதுகின்றனர். ஆடிப்பெருக்கில் ஆற்றில் வீசியும், போகியன்று தீயில் பொசுக்கியும் அழிந்த தமிழ் நூல்கள் பல. அதோடு சமணத்திற்கு எதிராக வைதீக மதம் நடத்திய போராட்டத்தில் சமண நூல்கள் பெரும்பாண்மையும்

அழிக்கப் பட்டன. போகி என்ற பண்டிகையை இப்படி தமிழ் வரலாற்றை

அழிக்க பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், போகி என்பதன் கொண்டாட்டம் இதுவாக இருக்கவே முடியாது.

3) போகி என்றால் ‘இந்திரன் ‘ என்று ஒரு அர்த்தம் உண்டு. இந்திரனுக்கு வணக்கம் செய்வது போகிப் பண்டிகை. தமிழர் வழக்கப்படி இந்திரன் என்பவன் மேகங்களை இயக்குபவன். மேகங்களே வேளாண்மைக்குத் தேவையான நீரைப் பொழிகின்றன. மேலும் ஐந்திணைகளில் ஒன்றான மருதநிலத்திற்கு ( வயலும் வயல் சார்ந்த இடமும் ) உரிய கருப்பொருள் இந்திரன் என்ற தெய்வம். ஆகவே போகி என்பது இந்திரன் பண்டிகை என்றால் அதுப் பொருத்தமானதுதான்.

ஆனால், இந்திரனுக்குத்தான் இந்திரவிழா என்று சித்திரை மாதத்தில்

கொண்டாடுவது பழந்தமிழர் மரபாயிற்றே! அப்புறம் ஏன் இந்திரனை போகியன்று கொண்டாட வேண்டும் ? என்று எண்ணினால் அது இந்திர வணக்கமாகக் கூட இருக்க முடியாது. (இந்த இந்திரன், தேவர் கோமானாக,

மாங்குடி மைனர் கணக்கில், புராணப் பெண்களைச் சுற்றி அலையும் இந்திரன் அல்ல. அவன், தமிழரின் மருத நிலக் கருப்பொருள்)

ஆதலால், கொண்டாடப் படும் நாள் அக்கால வழக்கப்படி வருடத்தின்

கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி. கடந்த வருடத்திற்கு ?நன்றி சொல்லும் நாள் ? போகிப்பண்டிகை.

தற்போது கூட ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான திசம்பர்-31 முக்கியமான கொண்டாட்ட நாள் என்பது எண்ணத்தக்கது.

இல்லம் தோறும் போகி அன்று, வைகறையில் ‘நிலைப்பொங்கல் ‘ நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கர்ப்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.

முதல் நாள் வைகறையில், வாசல் நிலையில் பொங்கல் நிகழ்ந்து, விழா,

நிலை தாண்டி இல்லம் நுழைகிறது. இரண்டாம் நாள் வீட்டுப் பொங்கல்.

காலைக்கதிரவன் முன், புத்தாடை போர்த்தி, பொன்னகை பூட்டி, தலைவன்,

மக்கள், சுற்றத்தார் சூழ்ந்து நிற்க தலைவிப் பொங்கச் சோறு சமைக்க,

அவரின் மகள் அவருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருப்பார்.

கதிரவனுக்குப் பொறுமை போதாதாகையால் சற்று வெப்பத்தை

அதிகரிப்பான்! அந்த அவசரம் புரிந்தோ என்னவோ, புதுப்பானையில்

பொங்கும் சோறு!

தலைவியின் உள்ளத்திலே பதைபதைப்பு இருக்கும். பொங்கச் சோறு பொங்கிவருவது உகந்த திசையில் வரவேண்டுமாம். (இலேசாக ஒரு அடுப்புக்கல்லை அதற்கு வசதியாக ஆரம்பத்திலேயே சற்று அமுக்கி வைத்து விடுவார்களாம் சிலர் 😉 )

அத்திசையில் பொங்கல் பொங்கி வழியும் போது தலைவியின் உள்ளம் பூரிக்கும்; இந்த இரண்டு மனநிலையும் முகபாவமும் ஒரு நொடியில் நிகழ்வுறும். சுற்றியுள்ள அனைவரும் ‘பொங்கலோ பொங்கல் ‘ என்று போற்றி, மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து சூரியனை மங்கலப் பொருள்கள் துணையொடு வணங்கிடுவர். இல்லுறை தெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்கிடுவர்.

சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், ஐவகை அல்லது எழுவகை அல்லது ஒன்பது வகைக் காய்கள் கொண்ட கறி செய்வர். வெண்சோறும் உண்டு; பழங்களும் இனிப்புகளும் மேலும் உணவிற்கு சுவை கூட்டும்.

உணவிற்கு முன்னர் தலைவனும் தலைவியும் தங்கள் மகளுக்கும் மருமகப்பிள்ளைக்கும் பொங்கல் சீர் அளித்து மகிழ்வர்.

குடும்பம், சுற்றம் முழுவதும் அமர்ந்து உணவுண்ணும் போது உண்டாகும்

குதூகலமானது ‘மனிதவாழ்க்கையின் மையம் பேசும் ‘.

பிறகென்ன, கரும்பைக் கணக்காக தந்தையோ தமையனோ வெட்டிக் கொடுக்க குழந்தைகளும் பெரியவர்களும் சுவைத்து மகிழ்தல் பேரின்பமாகும்.

இந்நாளை, வயல்கள், மாடுகள் இல்லாதவர்களும் கொண்டாடுகிறார்கள்.

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகர்க்கு ‘ என்ற வள்ளுவம் தமிழரிடத்து

என்றும் வாழ்ந்திருக்கிறது. மனிதர்களிடம் மட்டுமில்லை

விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள்.

மாடுகள், வயல்கள் உள்ளவர்கள் மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கலன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

வண்டியிழுக்க, ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, போரடிக்க என்று

எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி செய்வது மாடு; காளைமாடு.

காலைமாலை சுவைதரும் பால்தருவன பசுமாடு;

இவை அனைத்தும் அன்று குளித்து, கொம்புகளை சீவிக்கொள்ளும்.

கொம்புகளில் வண்ணங்களைப் பூசிக்கொள்ளும்; அன்று மட்டும்

மாடுகளுக்கு அடி விழாது. எருமைமாடுகளும், ஆடுகளும் கூட

கொம்புகளில் வண்ணம் பூசிக் கொள்ளும்.

பொங்கல் செய்து, பொங்கலை ஒருவர் எடுத்துக் கொண்டு,

வாழைப்பழங்களை ஒருவர் எடுத்துக் கொண்டு, ஒருவர் மணி அடித்துக்

கொண்டு ( சில இடங்களில் சங்கு ஊதுகிறார்கள் ), மாட்டின் அருகே

சென்று அதன் வாயைத் திறந்து சோற்றையும் பழத்தையும் ஊட்டி விடுகிறார்கள்.

பொங்கலோ பொங்கல் என்ற உற்சாகக் குரல்களும் கேட்கும்.

நான்காம் நாள் ‘காணும் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது ‘.

காணும் பொங்கலன்று குடும்பம், சுற்றம் சேர்ந்து சோறு கட்டிக் கொண்டு

வண்டி ஏறி, கடற்கரையோரம் அல்லது பிற இடங்களுக்கு சுற்றுலா

போல் செல்கிறார்கள். இதைப் பெரும்பாலும் தமிழக வடமாவட்டங்களில்

காணலாம். குறிப்பாக சென்னையில் மெரீனா கடற்கரையும், சென்னை

சாலைகளும் மக்களால் நிறையும்.

அய்ந்தாம் நாள், தென்பகுதிகளில் ‘மஞ்சு விரட்டு ‘ என்ற வீரவிளையாட்டு நிகழ்கிறது. இதில் பெண்ணும், பொன்னும் பெறுவாரும் உண்டு; குடல்சரிந்து மண்ணுக்குள் போவோரும் உண்டு. கிராமங்களில் அன்றைய தினம் சிறியவர்களை வெளியே போகக் கூடாது, மாடுகள் திசை தப்பி வரும் என்று எச்சரிப்பார்கள். நிறைய மாடுகள் பிடிபடாமல் திசைமாறி ஓடி வரும்.

பொங்கல் முடிந்து பணிக்குத் திரும்ப ஆரம்பிப்பர் தமிழர். வேலை செய்ய

ஆரம்பிக்கு முன் பொங்கல் நிகழ்ச்சிகளைப் பறிமாறிக் கொள்வர்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த காதலியரும்

காதலரும் மணம் புரிவர்.

வாழ்க தமிழர்;

வளர்க பொங்கல்.

———————————–

elangov@md2.vsnl.net.in

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்