பெரியபுராணம் – 3

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

பா. சத்தியமோகன்


21 .

நெற்றியில் கண்ணர் நான்கு பெரும் தோள்கள்
திருநீறணிந்த சிவ மேனிக்கு அடியார் அனேகர்
அந்த அடியார்க்கெல்லாம் தலைவர் நந்தி தேவர்
மலர் போன்ற அவர் கையில்
திருப்பணி விடையும் உடைவாளும் பிரம்பும் இருந்தன.
கற்றைவார் சடையான் அருளினால்
நந்திதேவர் காவல் செய்வது இக்கயிலை திருமலை.

22.

கையில் மானும் வலக்கையில் மழுவும்
கங்கை சூழ்ந்த கரையைப் போன்று கட்டிய நீண்ட சடை
அதில் ஒளி வீசும் மூன்றாம் பிறை நறுக்கு
நறுமணம் கொண்ட கொன்றை மாலை உடைய சிவபெருமான்
கயிலை மலையில் வீற்றிருக்கும் காட்சி
அளப்படும் பெருமை மெய்யொளி தழைக்கும் தூய்மை
வெற்றி வெண்குடை அநபாயச்சோழர் மனம் போல் ஓங்குவது.

23.

இத்தனை தன்மைகள் கொண்ட கயிலை மலையில்
இன்ன தன்மையன் என அறிய இயலாச் சிவனை
தன்னையே உணர்ந்து சிவனை சை பெருக அனுபவிக்கின்ற
உபமன்னிய முனிவரென்னும் அரிய சிறப்புடைய முனி.

24.

அந்த உபமன்னியமுனி யாதவனாகிய
துவாரகை மன்னன் மாதவன் கண்ணனின் முடி மீதே தன் அடி சூட்டியவர்!
பூத நாயகன் சிவபெருமானுக்கு தி அந்தம் இல்லாத்
தொண்டினைச் சூட்டியவர்.

25.

அம்முனிவர் அருட்பாற்கடலை உண்டவர்
சித்தம் நிறைவு பெற்று அதுவே உருவானவர்
பக்தர்களாயிருக்கும் முனிவர் பல்லாயிரர்
சுத்த யோகிகள் சூழ இருந்த இடத்தில் –

26.

அந்த இடத்தில் அப்போது ஓரொளி யிரம் சூரிய ஒளி என
பொங்கிய பேரொளியாய் முன்தோன்றிடத்
சுற்றிலும் சூழ்ந்திருந்த மாதவர் எல்லோரும்
இங்கு இதென்கொல் அதிசயம் என்றாரே.

27.

அந்தி வான் மதி சூடிய சிவபெருமான் திருவடி சிந்தித்து
உணர்ந்த உபமன்னிய முனி
தென் திசை நாவலூர் நம்பி சுந்தரமூர்த்தி எனும் வன் தொண்டன்
எந்தை அருளால் கயிலைக்கு வந்துள்ளார் என்றார்.

28.

கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத்திசை கண்டு
மெய்யில் னந்தப் புளாகம் கடலைப் போல் கிளர
நீள்சடை மாமுனி உபமன்னி செல்ல
ஐயம் நீங்க மேலும் கேட்டனர் அந்தணர்.

29.

சம்புவின் அடித்தாமரைப் பாதம் அல்லால்
வேறு எவரையும் இறைஞ்சா முனிவரே! வணங்கினீரே ஏன் என்றதும்
“தம்பிரான் சிவனை தனதுள்ளம் முழுதும் தழுவியவர் நம்பிரூரன்
அவர் நம்மால் தொழப்படும் தன்மை உடையார்” என்றார்.
(சம்பு : சிவபெருமான் )

30.

உபமன்னிய முனிவர் சொன்னதும்
வெற்றிப் பேரொளியார் செய்த விழுத்தவம்
நன்று கேட்க விரும்பும் நசையினோம்
எங்கட்கு இன்றே அதை உரைப்பீர் என்றனர் முனிவர்கள்.

— தொடரும்.

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்