பரிமளவல்லி 20. கிருமியின் தாக்குதல்

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

அமர்நாத்


20. கிருமியின் தாக்குதல்

சரவணப்ரியா எழுப்பிக்கொடுத்த இரண்டு ஐபுப்ரோnஃபன் மாத்திரைகளை விழுங்கியதன் பலன் பரிமளா கண்விழித்தபோது இரண்டு ஜன்னல்களிலும் ஒளி தெரிந்தது. அவை கிழக்குநோக்கி யிருந்தாலும் குளிர்காலமாயிற்றே, ஐந்துமணிக்கு எப்படி வெளிச்சம் வரும்? கடிகாரத்தை எட்டிப்பார்த்தாள். ஏழு:பதினைந்து. இன்னேரம் ஏர்போர்ட்டில் இருக்க வேண்டாமோ? ஒருவேளை இன்று ஞாயிறாக இருந்து தன் வீட்டிற்கே வந்துவிட்டோமோ? ஆனால், அறை வித்தியாசமாக இருக்கிறதே. சமஸ்க்ருத புத்தகங்கள் அடுக்கிய அலமாரி இல்லை. எல்லாம் குழப்பமாக இருந்தது. எழுந்திருக்க முயன்றாள். தலை கனத்தது. கட்டில் அசையும் சத்தம்கேட்டு சரவணப்ரியா கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தாள்.
“பரி! நடுவிலே எழுந்தப்புறம் நல்லா தூங்கினே போலிருக்கே. இப்போ எப்படி இருக்கு?”
வந்த இருமலை அடக்கிக்கொண்டு, “பரவாயில்லை” என்றாள்.
“களைப்பா இருந்தா படுத்துக்கோ!”
சரவணப்ரியா வெப்பமானியைக் கொண்டுவந்து அவள்வாயில் வைத்தாள்.
“நூறுக்கு மேலே காட்டறதே.”
ஆசிரியையிடம் பயந்த மாணவியைப்போல், “நான் மத்தியானமா ஊருக்குக் கிளம்பட்டுமா?” என்று பரிமளா மெதுவாகக் கேட்டாள்.
“முதல்லே உன்னை டாக்டர்கிட்டே அழைச்சிட்டுப் போகணும்.”
“வெறும் ஜலதோஷம்தானே, டாக்டர் எதுக்கு?”
“அதை டாக்டர் சொல்லட்டும். நீ ராத்ரி எப்படி இருந்தேன்னு உனக்கு எப்படித் தெரியும்?”

முகத்தைத் துடைத்து தலையைச் சீர்செய்து பயணத்திற்கு வைத்திருந்த உடையில் பரிமளா கீழே இறங்கிவந்தாள்.
“சாப்பிடப் பிடிக்கலியே.”
“ஓட்மீல்லே மேப்ல் சிரப் போட்டு செஞ்சிருக்கேன். அரைகப் தான், சாப்பிடு!”
மறுப்பதில் பலனில்லை என பரிமளா அதை மெதுவாக வாய்க்குள் தள்ளினாள்.
“சாமியோட ‘வாக்-இன்-கிளினிக்’குக்கு போயிட்டுவா!”
பரிமளா அதற்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
“நான் வீட்டுவேலைகளை கவனிக்கணும். முக்கியமா உன் துணிகளைத் தோய்க்கலாம்னு இருக்கேன். பெட்டிகளைத் திறக்கலாமா?”
“நான் திரும்பிவந்தப்புறம் பண்ணலாமே.”
“அதுக்கு ரெண்டுமூணுமணி ஆனாலும் ஆகும். அதுவரைக்கும் தள்ளிப்போட முடியாது.”

குளிர் காலமானதால் மருந்தகத்தின் காத்திருக்கும்கூடத்தில் நிரம்பி அதற்கு வெளியிலும் கும்பல். கைக்குழந்தைகள், பள்ளிச்சிறுவர்கள், வயோதிகர்கள், பல இனத்தவர்கள் என்று மேலுக்குத்தான் வித்தியாசங்கள். இருமலும், சிவந்த கண்களும், தொங்கிய முகமும் நோயாளிகள் அனைவருக்கும் பொதுச்சொத்து. அவர்களையும் அவர்களை அழைத்துவந்தவர்களையும் மகிழ்விக்க தலைக்குமேலிருந்த தொலைக்காட்சியில் யாரோ விருந்து சமைத்தார்கள். நாற்காலிகளின் வரிசைகளுக்கு நடுவில் காலாவதியான வதந்திப் பத்திரிகைகள். அந்த வதந்திகள் செய்திகளாகியிருந்ததால் யாரும் அவற்றைச் சீந்தவில்லை.
பரிமளாவை உட்கார வைத்துவிட்டு வரவேற்புஅட்டையில் அவள் பெயரை சாமி எழுதியபோது, அங்கே அமர்ந்திருந்த பெண், “ஒருமணியாவது காத்திருக்க வேண்டும்” என்று எச்சரித்தாள்.
“பரவாயில்லை.”
“வருகைக்கு என்ன காரணம்?”
“ஜுரம், இருமல்.”
“யாருக்கு?”
“என் சினேகிதிக்கு.”
“இதற்குமுன் அவள் இங்கே வந்திருக்கிறாளா?”
“இல்லை, இதுதான் முதல்தடவை.”
“அப்படியென்றால்” என்று க்ளிப்-அட்டையில் இரண்டு காகிதங்களைச் செருகி ஒரு பேனாவுடன் அவனிடம் நீட்டினாள். அவற்றை சாமி எடுத்துச்சென்று பரிமளாவிடம் தந்தான்.
“டீச்சரம்மா! உனக்கொரு பரிட்சை.”
அவளுடைய மருத்துவ சரிதத்தை அந்தக் காகிதங்களின் பெட்டிகளில் அடக்கிவிட்டு அவனிடம் திருப்பித் தந்தாள்.
“உன்னுடைய இன்ஷ{ரன்ஸ் கார்டையும் குடு!”
இரண்டையும் வரவேற்புப் பெண்ணிடம் எடுத்துச்சென்றான். அவள் அட்டையை சரிபார்த்துவிட்டு அவனிடமே தந்தாள். “கோ-பேமென்ட் இருபது டாலர்” என்பதை நினைவூட்டினாள். சாமி திரும்பவந்து அவளருகில் அமர்ந்தான்.
“திடீர்னு இப்படி உடம்புக்குவரும்னு நினைக்கலை.”
“உனக்கு குளிர் ஒத்துக்கலை போலிருக்கு.”
“நான் திரும்பிப் போனப்புறம் அங்கே வந்திருக்கக்கூடாதோ?”
“அங்கே தனியா கஷ்டப்பட்டிருப்பே. இங்கேன்னா உதவிக்கு நாங்க இருக்கோம்.”
“இருந்தாலும் என்னாலே உங்களுக்கு எவ்வளவு வேலை?”
“நீ அப்படியெல்லாம் நினைக்கக்கூடாது. இந்தியாலே ஒருத்தர் வீட்டுக்குப் போய் தங்கினா வேலைக்காரிக்கு சம்பளத்திலே கொஞ்சம் சேர்த்துக் கொடுத்திடுவோம். இங்கே வேலைக்காரி இல்லாததனாலே யார் வீட்டுக்காவது நாங்க போனா உடனே சமைக்கவோ, பாத்திரம் தேய்க்கவோ உதவிசெய்ய ஆரம்பிச்சிடுவோம். நீயும் அப்படித்தான் பண்ணினே. அமெரிக்க சமுதாயத்திலே நாம் ஒரு ‘சப்-கல்சர்’. அதுக்குன்னு சில பழக்கவழக்கங்கள், ஒழுங்குமுறைகள். உன்னைப் பாத்துக்கறது எங்கள் பொறுப்பு. எங்களுக்கு நேரம் இருக்கு. எங்களாலே முடியறது. செய்யறோம், அவ்வளவுதான்.”
சோதனை பகுதியின் கதவு திறந்து நர்ஸ் அழைக்க ஒருவர் ஒருவராக உள்ளே சென்றனர். அவர்கள் இடத்தைப் புதிதாக வந்தவர்கள் பிடித்துக்கொண்டார்கள்.
பரிமளா தொடர்ந்து இருமும் ஒரு சிறுவனைப் பார்த்தாள். ‘பாவம்! சனிக்கிழமையை அனுபவிக்க முடியாமல் தொந்தரவுதரும் இருமல். பள்ளிநாட்களில் வந்திருக்கக் கூடாதோ!’ பள்ளி என்றதும் அனிடாவின் நினைவு வந்தது. அவளை அழைத்தாள்.
“என் பயணம் இன்னொருமுறை தள்ளிப்போய் விட்டது, அனிடா! இந்தமுறை உடல்நலம் காரணம்.”
“ஐ’ம் சாரி, பரி! சீரியஸாக இல்லையே.”
“இல்லை என்றுதான் நினைக்கிறேன். டாக்டரைப் பார்க்கக் காத்திருக்கிறேன்.”
“நான் உன்வீட்டில் தான் இருக்கிறேன். க்ரூஸிலிருந்து மிஸ் ஜோன்ஸ் திரும்பிவரும்வரை காத்திருப்பேன்.”
பேசிமுடித்ததும், பரிமளாவின் எண்ணங்கள் முந்தைய இரவுக்குத் தாவின. தூக்கத்தைக் கெடுத்த கவலைகளில் ஒன்று நினைவுக்கு வர, “சாமி! விவரம் சொல்லாம உன்னை ஒண்ணு கேக்கலாமா?” என்றாள்.
“தாராளமா.”
“நான் உனக்கொரு செக் கொடுத்துட்டு, அப்புறம் மனசுமாறி பாங்க்கைக் கூப்பிட்டு பணம்தராதேன்னு அதை என்னாலே நிறுத்தமுடியும், இல்லையா?”
“ரெண்டுமூணு நாளுக்குள்ள.”
“அதேமாதிரி, என்னுடைய கணக்கிலே நேத்திக்கி ஒருசெக் டெபாசிட் பண்ணினேன். அந்தப் பணம் எனக்கு வேண்டாம், அதைத் திருப்பி அனுப்பிடுங்கோன்னு பாங்க்லே சொல்லமுடியுமா?”
“முடியாது. செவ்வாய்க்குள்ளே அது உன் கணக்கிலே சேர்ந்துடும். உனக்கு அந்தப்பணம் வேண்டாம்னா அந்த டாலருக்கு நீ ஒருசெக் எழுதி யார் உனக்கு பணம் கொடுத்தாளோ அவாளுக்கே திருப்பி அனுப்பிடலாம்.”
“பாரிமலா கோலப்பேன்” என்ற அழைப்பைக் கேட்டு பரிமளா எழுந்து நர்ஸ் அருகில் சென்றாள்.
“நான் உன்பெயரை சரியாக உச்சரித்தேனா?”
“பர்nஃபக்ட்.”

சரவணப்ரியா பரிமளாவின் பெட்டிகளைத் திறந்து வெள்ளைத் துணிகளையும், வண்ண உடைகளையும் தனித்தனியே பிரித்து இரண்டு கூடைகளில் கீழே எடுத்துவந்தாள். வண்ண உடைகளை இயந்திரம் துவைக்கத் தொடங்கியது. முடிவதற்கு நாற்பத்தைந்து நிமிடமாகும். உடல்நிலை சரியில்லாத போதுதான் தனிமை அதிகமாக வருத்தும் என்று அவளுக்குத் தோன்றியது. அவளுக்கு ஜுரம் என்றால் சாமியே சமைப்பதிலிருந்து எல்லா வீட்டுவேலைகளையும் கவனித்துக் கொள்வான். மருந்து வாங்கிவருவான். அவளுக்குக் குடிக்க வெந்நீர் காய்ச்சித்தருவான். சற்று குணமானதும் கிருமிகளைப் போக்க படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை உறை எல்லாவற்றையும் வெந்நீரில் தோய்ப்பான். பரிமளாவுக்கு அப்படி யார் இருக்கிறார்கள்? சரவணப்ரியாவின் கண்களில் ஈரம் பரவியது.

மருந்தகம் சென்றுவந்த களைப்பிலும், இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்தில் ஒருமிடறு விழுங்கியதாலும் மதிய உணவிற்குப்பின் பரிமளாவுக்கு மயக்கம். பட்டம்பெற்றாலும் மருத்துவ அனுபவம்சேர்க்கும் ஒரு இளம்பெண் அவளைப் பரிசோதித்து, ‘குளிர்காலத்தில் ஊரில் உலாவும் கிருமியின் ஆக்கிரமிப்பு’ என்ற பொதுவான முடிவுடன் இருமலுக்கும், ஜுரத்திற்கும் சீட்டு எழுதித்தந்தாள். ‘நிறைய திரவம் குடி’ என்ற அறிவுரையும் தந்தாள். பரிமளா விழித்தபோது ஜன்னலில் இருள் சேர்ந்திருந்தது. எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருந்தாள்.
அனிடா அழைத்து, “பரி! நான் உனக்குத் தொந்தரவு தரவில்லையே?” என்று அன்பாகக் கேட்டாள்.
“இல்லை.”
“இப்போது எப்படி இருக்கிறாய்?”
“நான் நல்ல கவனிப்பில் இருக்கிறேன்.”
“மூன்று மணிக்கு மிஸ் விட்னி ஜோன்ஸ{ம், ரெட்டும் ‘க்ரூஸி’லிருந்து திரும்பி வந்தபோது கதவைத் திறந்தேன். அவர்களுக்குப் பின்னால் ஒரு இந்தியன் பெரிய பூச்செண்டு ஒன்றை எடுத்துவந்தான். அவனுக்கு நடுவயது, நடுவில் மட்டும் கொஞ்சம் பருமன். ரெட் அந்தப் பூச்செண்டு விட்னிக்கு என்று நினைக்க, அவன் எப்படி அந்தவிதமாக நினைக்கலாம் என்று அவள் அவனைக் கோபிக்க ஒரே ரகளை. அதற்கு நடுவில், நீ வீட்டில் இல்லை என்றவுடன் வந்த ஆளுக்கு ஒரே ஏமாற்றம், தான் யார் என்றுகூடச் சொல்லாமல் திரும்பிப் போய்விட்டான். நேற்று அவன்தான் கூப்பிட்டு உன்னைப்பற்றி துருவித்துருவிக் கேள்விகேட்டான் என்று நினைக்கிறேன்.”
“இருக்கும். விட்னியும், ரெட்டும் என்ன ஆனார்கள்?”
“விட்னி தனியாக இருக்கிறாள். நான் என் வீட்டிற்குத் திரும்பிச் செல்கிறேன். திங்களுக்குள் உன்னால் வரமுடியுமா?”
“நாளை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஒருநாள் ஓய்வில் முன்னேற்றம் தெரியலாம். எதற்கும், கெட்டுப்போகக்கூடிய பால், காய், பழங்களை சாப்பிட்டுவிடு!” மூன்றுநாள்தானே, திரும்பிப் போகும்போது உதவும் என்று பரிமளா அவற்றை வைத்துவிட்டு வந்திருந்தாள்.
“நீ சொல்வதற்குமுன்பே நான் அவற்றை காலிசெய்து விட்டேன்” என்று அனிடா சிரித்தாள்.
“தாங்க்ஸ்.”
“உடலைக் கவனித்துக்கொள், பரி!”
அனிடாவைத் தொடர்ந்து பத்தூ.
“நீ சான்டா க்ளாரா திரும்பி வந்திருப்பேன்னு நினைச்சேன்.” முதல்நாள் ஆங்கிலத்தில் பேசிய அவன் இப்போது தமிழில் நீயென்று ஆரம்பித்தது வினோதமாகப் பட்டது.
“திடீர்னு உடம்பு சரியில்லை, படுத்துண்டிருக்கேன்.”
“உடம்புக்கு என்ன?”
“குளிர் ஒத்துக்காததாலே ஜுரம். இப்போ பரவாயில்லை.”
“நீ எங்கே இருக்கே?”
“தெரிஞ்சவா வீட்டிலே.”
“அங்கே எதுக்குப் போனே?”
“ஒரு க்ரான்ட் கிடைக்கும்போலே இருந்ததுன்னு வந்தேன். ஆனா கிடைக்கலை.”
“நீ பேசறது காதிலே சரியா விழலை. நீ இருக்குற இடம் ஊருக்குத் தள்ளியோ?”
“ஆமாம். நாஷ்வில்லேர்ந்து இருபதுமைல் தெற்கே.”
“உனக்குப் பக்கத்திலே டெலிNஃபான் இருந்தா, அந்த நம்பர் குடு!”
அவள் அப்படிச் செய்ததும் அவன் தொலைபேசியில் அழைத்தான். அவன் குரல் தெளிவாகக் கேட்டது. அவனும் மனத்தளவில் நெருங்கிவந்தது போல் தோன்றியது.
“நான் திரும்பிவரச்சே என்னைப்பாக்க நீ நேர்லே வருவேன்னு தெரியாது, அதுவும் பெரிய பூச்செண்டை எடுத்துண்டு.”
“அதுக்குள்ள அந்தப்பெண் உன்னைக் கூப்பிட்டு ‘நியுஸ்’ சொல்லிட்டாளாக்கும். நேத்திக்கு உன்னைத் தேடிக்கண்டுபிடிச்சு பேசினதோடு விட்டுடுவேன்னு நினைச்சியா?” என்று அவளைக் குற்றவாளி ஆக்கினான்.
“இன்னும் என்ன இருக்கு?” என்றாள் சாதாரணமாக.
“நீ என்மேலே கோபப்பட்டா, அது தப்பே இல்லை. பிஎச்.டி. முடியறதுக்கு முன்னாடி என் அம்மாவுக்கு உன்னைப்பத்தி எழுதினேன். ‘அண்ணா மன்னிக்கு குழந்தையில்லை. நம்ம குலத்துக்கு உனக்குப் பிறந்தாத்தான் உண்டு. முப்பத்தெட்டு வயசுக்குமேலே அவளுக்கு குழந்தை பிறக்குமோ பிறக்காதோ, பிறந்தாலும் எப்படி இருக்குமோ’ன்னு அடம் பிடிச்சா. அது போறாதுன்னு ராகினியைப் பாத்துட்டுவந்து, ‘ஜாதகம் அபாரமா பொருந்தறது, பெண் அழகா அடக்கமா இருக்கா’ன்னு சொன்னா. அவளைநம்பி இங்கிருந்தே கல்யாணத்துக்கு சரின்னேன்.”
“இப்போ எதுக்கு அதெல்லாம்?”
“நான் உனக்கு செஞ்சது பெரிய தப்பு. அதுக்கு ராகினிதான் தண்டனை.”
பரிமளா அவர்கள் குடும்பவாழ்க்கையை விவாதிக்க விரும்பவில்லை. பேச்சை மாற்ற “இன்னும் ‘டிஜிடாலிஸ்’லேதான் இருக்கியா?” என்றாள்.
“ஆமாம்.”
“நல்ல கம்பெனியாச்சே.”
“ரொம்ப வருஷமா சாக்ரமென்ட்டோலே இருந்தேன். ஒருமாசமாத்தான் சன்னிவேல் ஆஃபீஸ்.”
கலகலவென தட்டுகள் மோதும் ஒலி.
“பின்னாடி என்ன சத்தம்?”
“பையனோட பர்த்டே பார்ட்டி.”
“நீ அங்கே இருக்க வேண்டாமோ?”
“நான் இல்லாட்டா ராகினிக்கு சந்தோஷம்தான்.”
ராகினியின் பெயர் மூன்றாம்முறை வந்தவுடன் உரையாடலை முடிக்கும்நேரம் வந்தது என பரிமளா தீர்மானித்தாள்.

அன்றிரவும் ஆழமான தூக்கம் என்று சொல்வதற்கு இல்லை. மறுநாள் எழுந்தபோது களைப்பாக இருந்தது. திங்கள் திரும்பிப்போவது கூட சந்தேகம்தான், செவ்வாய் முடியலாம். அதனால், பள்ளியின் நிர்வாகத்திற்கு இரண்டுநாள் விடுமுறைக்கு ஒரு மின்-தபால் அனுப்பவேண்டும்.
எட்டுமணிக்கு பத்தூ அழைத்ததில் கொஞ்சம் உற்சாகம் வந்தது.
“என்ன காலங்கார்த்தாலே ஆறுமணிக்கு?”
“ராகினியும் பையனும் இன்னும் எழுந்திருக்கலை. போரடிச்சுது, உன்னைக் கூப்பிடலாம்னு பாத்தேன். உடம்பு எப்படி இருக்கு?”
“நேத்திக்கி இருந்தமாதிரிதான்.”
அவனுக்கு மேலே என்ன பேசுவதென்று தெரியவில்லை போலிருக்கிறது.
பரிமளாவே, “வரதண்ணாவும், பத்மா மன்னியும் இப்போ எப்படி இருக்கா?” என்று கேட்டாள்.
“அவா பேரை நன்னா ஞாபகம் வச்சிருக்கியே? பரவாயில்லை.”
“அவாளைமாதிரி எவ்வளவுபேரை இந்த லோகத்திலே பார்க்கமுடியும்?”
குற்ற உணர்வைக் காட்டும் ஒருநீண்டமௌனம்.
“எங்களுக்குள்ள இப்போ எந்த ‘கான்டாக்ட்டும்’ இல்லை.”
“ஐ’ம் சாரி.”
பரிமளா காரணம் கேட்கவில்லை. சொல்வதா வேண்டாமா என்று விவாதித்தபின் அவனே சொன்னதுபோல் தோன்றியது. “ரெட்டைக்குழந்தை போனப்புறம் மன்னிக்கு குழந்தையே பொறக்காதுன்னு சொல்லிட்டா. எங்களுக்கு பையன் பொறந்ததும், அண்ணா இன்னொரு குழந்தையைப் பெத்து ஆறுமாசத்துக்குள்ள தத்து குடுக்க முடியுமான்னு கேட்டார். ராகினி, நான் என்ன ‘சர்ரோகேட் மதரா’? அதெல்லாம் முடியாதுன்னுட்டா. அதுக்கப்புறம் பதினைஞ்சு வருஷமா பேச்சுவார்த்தையே இல்லை” என்று ஏதோ சாக்ரமென்ட்டோ கிங்ஸ் எப்போதும்போல லாஸ்ஏஞ்சலஸ் லேகர்ஸிடம் (கூடைப்பந்தாட்டத்தில்) தோற்றுவிட்ட செய்தியைச் சொல்வதுபோல் சொன்னான்.
பேச்சைமாற்ற பரிமளா, “ஏன் சீக்கிரமே எழுந்தே?” என்றாள்.
“ஏதோ கவலை.”
“நான்தான் ஒவ்வொரு மாசமும் சம்பளம் சரியா வரணுமேன்னு கவலைப்படணும். உனக்கு பணத்துக்கென்ன கவலை?”
“பணம் ஒண்ணுதானாh? வாழ்க்கைதான் திருப்தியாப் போகலை” என்று அலுத்தாற்போல் சொன்னான்.
‘ஏன்?’ என்று பரிமளா கேட்கநினைத்து, பிறகு அவன் சொந்தவாழ்வில் தலையிட வேண்டாமென மௌனம் மேற்கொண்டாள். ஆனால் அவன் விடவில்லை.
“நீ நிஜமாகவே தனியாக இருக்கிறாய், நான் ராகினியோட தனியாக இருக்கிறேன். வேற வித்தியாசமில்லை. வீட்டில் எந்த சாமான் வாங்குவது அதை எங்கே வைப்பது எல்லாம் அவள் தீர்மானம். எனக்கு எந்த உரிமையுமில்லை. எதாவது சொல்லவந்தால், ‘உங்களுக்கு ஒன்றும் தெரியாது, பேசாம இருங்கோ’ என்று அலட்சியம். அதைப்பார்த்து குழந்தைகளுக்கும் என்மீது துளிக்கூட மதிப்பில்லை. என்ன படிக்க வேண்டும், எந்த காலேஜ் போகவேண்டும் என்று என்னை ஒருவார்த்தை கேட்டதில்லை. எல்லாம் உன் மனசை நோகடிச்சதுக்கு தண்டனை. சரிவிடு! உன்னை எதுக்கு நான் போரடிக்கணும். அப்புறம் பேசலாம்” என்று அவனே உரையாடலை முடித்தான்.
பத்தூவின் குற்ற உணர்வு பரிமளாவுக்குக் கொஞ்சமும் புரியவில்லை. ‘டிஜிடாலிஸி’ல் வேலைகிடைத்தவுடனேயே அவன் போக்கு வெகுவாக மாறிவிட்டதென்று மற்ற மாணவர்கள் பேசிக்கொண்டது அவள் காதில் விழுந்திருந்தது. ஒரு விலையுயர்ந்த சட்டையை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது அவர்கள் உறவை முடிப்பதற்காக என்று அவளும் உணர்ந்திருந்தாள். அதனால், அவன் கல்யாணப் பத்திரிகையைத் தபாலில் அனுப்பிவிட்டுச் சொல்லாமகொள்ளாமல் கழற்றிக்கொண்டபோது, எதிர்பார்த்தது நடந்ததென்ற எண்ணம். ஏதோ இருந்தவரை சந்தோஷத்தைத் தந்த நட்பு, அவ்வளவுதான் என்ற திருப்தி. அவளுக்கு ஏதோ தீங்கிழைத்ததுபோல் அவனே ஏன் இப்படி வருந்துகிறான்?
சிறிதுநேரம் கழித்து சாமி அவளறையில் நுழைந்தான்.
“கார்த்தாலே என்ன சாப்பிடறே?”
“வாய் ஒரே கசப்பு.”
சாமி வெப்பமானியைக் கொண்டுவந்து வாயில் வைத்து எடுத்தான்.
“மறுபடி ஜுரம் வந்திருக்கு. நாளைக்குள்ள சரியாகலைன்னா வான்டர்பில்ட் டாக்டர்கிட்டே போவோம்.” இரண்டு அரை கிராம் ஐபுப்ரோnஃபன் மாத்திரைகளும் பெரிய தம்ளரில் வெந்நீரும் கொண்டுவந்து கொடுத்தான். அவற்றை அவள் விழுங்கியபிறகு தம்ளரை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு வெளியேசெல்லக் காலடிவைத்தான்.
“பத்தூ நேத்திக்கி, இன்னிக்கி, ரெண்டு தடவை கூப்பிட்டுட்டான்” என்று பரிமளா சொன்னதும் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“வெள்ளிக்கிழமை அவன் பேசினதிலேர்ந்து நான் எதிர்பார்த்ததுதான்.”
“ராகினிக்கும் அவனுக்கும் நடுவிலே ஏதோ தகராறுமாதிரி தெரியறது.”
அதற்காகத்தான் பரிமளாவின் பக்கம் திரும்பியிருக்கிறானோ என்ற சந்தேகம் அவனுள் எழுந்தது. இருந்தாலும், “திருமணம் நீண்டகால உறவு. ஆரம்பிக்கும்போது ஒரேமாதிரி இருந்தாலும் போகப்போக ரெண்டுபேரும் மாறும்போது மனவேற்றுமை வரத்தான் செய்யும்” என்ற பொதுவான உண்மையைச் சொன்னான்.
“இத்தனை வருஷமானாலும் நீங்க ரெண்டுபேரும் மாறலை. எல்லாருமே உங்களைமாதிரி இருக்க முடியுமா?”
“நாங்களும் மாறியிருக்கோம். பாதி விஷயத்திலே ஒரேவிதமா மாறியிருக்கோம். அதை அதிருஷ்டம்னு சொல்லலாம். மிச்ச பாதியை மதிக்கக் கத்துண்டிருக்கோம். அது புத்திசாலித்தனம்.”
அவர்களுக்குள் என்ன தகராறு என்ன கேட்கநினைத்து, பிறகு, “கொஞ்சநேரம் தூங்கு! அப்புறம் வந்து பார்க்கறேன்” என்று வெளியேவந்து அறைக்கதவை சாத்தினான்.

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்