மலர்மன்னன்
நாள் நெருங்க, நெருங்க, செல்லம்மாவுக்குக் கவலை அதிகரித் தது. பாப்பாவுக்கோ, அதற்கு நேர்மாறாகக் குதூகலம் அதிகரிக்க லாயிற்று. அம்மாவுக்கு ஒருவிதத்தில் தவிப்பு என்றால் குழந்தைக்கு இன்னொரு விதமான தவிப்பு. முன்னது இயலாமை யின் ஆதங்கத் தவிப்பென்றால் பின்னது சீக்கிரம் வராதா என்கிற பொறுமையிழந்த அவசரத் தவிப்பு.
நாட்கள் குறைந்துகொண்டே வருகையில், “அம்மா. இன்னும் எத்தனை நாள் இருக்கு” என்று நச்சரித்துக்கொண்டே இருந்தாள், பாப்பா சகுந்தலா.
“இன்னும் ரெண்டு நாள்தான்” என்றாள் செல்லம்மா.
“ஹய்யா, ரெண்டே நாள்” என்று குதித்துக்கொண்டு வாசலுக்கு ஓடினாள், பாப்பா.
சொல்லப்போனால் ஒரு வாரத்துக்கும் முன்பிருந்தே அக்கம் பக்கங்களில் தீபாவளி களை கட்டி விட்டது. ஒவ்வொரு நாளும் அஸ்தமித்து, அடுத்த நாள் உதிக்க, உதிக்க, தீபாவளியை வரவேற்கிற உற்சாகம் உத்வேகம் கொண்டது. முக்கியமாகக் குழந்தைகளிடம் அதன் தாக்கம் அதிகம் வெளிப்பட்டது. சின்னக் கடைத் தெருவிலும் பெரிய கடைத் தெருவிலும் வழக்கமாய் சந்தடி குறைந்து காணப்படுகிற ஜவுளிக்கடைகளிலும் பலகாரக் கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்துவிட்டிருந்தது. தெருவோரங் களில் சிறியதும் பெரியதுமாய்த் தாற்காலிகப் பட்டாசுக் கடைகள் முளைத்திருந்தன. சிறுவர்கள் அவற்றைச் சூழ்ந்து நின்றவாறு ஒவ்வொரு பட்டாசு ரகத்தின் தனிச் சிறப்பைப் பற்றியும் தமக்குள் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.
புதுச்சேரி பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்டிருந்த பிரதேசமாக இருந்தால் என்ன, அதுவும் பாரத தேசத்தின் பிரிக்க முடியாத தோர் அங்கமேயல்லவா? பாரதத்தின் பொதுப் பண்டிகையான தீபாவளியின் பரபரப்பு அங்கு எப்படி இல்லாது போய்விடும்?
அப்போதெல்லாம் எல்லா வகையான பட்டாசுகளும் சீனாவிலி ருந்துதான் வரும். ஓலை வெடி, தரையில் ஓங்கி அடித்தாலே காதுகளைச் செவிடாக்கிவிடுகிற மாதிரியான ஓசையுடன் வெடிக்கிற வெங்காய வெடி போன்ற ஒருசில நாட்டு ரகப் பட்டாசுகள்தாம் சிறிய அளவில் குடிசைத்தொழில் போல ஆங்காங்கே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும்.
சீனாவிலிருந்து வரும் ஊசிப் பட்டாசுக்குத்தான் குழந்தைகளிடம் மகிமை அதிகம். பெரிய பையன்கள் சரம் சரமாகக் கொளுத்திப் போட்டு அட்டகாசம் செய்கையில், சிறுமிகளும் வயதில் குறைந்த சிறுவர்களும் திண்ணைப் படிக்கட்டில் உட்கார்ந்து சரத்தைப் பிரித்து, ஒவ்வொரு ஊசிப் பட்டாசாக எடுத்து நீளமான ஈர்க்கங் குச்சியில் செருகி, நெருப்பில் காட்டி சாவகாசமாக வெடித்துக் கொண்டிருப்பார்கள்.
சகுந்தலா பாப்பாவுக்கு ஒவ்வொரு ஊசிப்பட்டாசாக எடுத்துக் குச்சியில் செருகி வெடிக்கிற வயசுதான். அம்மாவைப் பிடுங்கி யெடுத்து, எப்படியோ ஒரு சரம் ஊசிப் பட்டாசை வாங்கி அவள் வெடித்துத் தீர்த்துமாயிற்று. இனிமேல் தீபாவளிக்குத்தான் பட்டாசு என்று அம்மா நிர்தாட்சண்யமாகச் சொல்லிவிட்டாள். அது முதல், பாப்பாவிடமிருந்து தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் என்கிற நச்சரிப்பு தொடங்கி விட்டது.
செல்லம்மாவின் கவலை செல்லம்மாவுக்குத்தான் தெரியும். கணவரிடம் அதைப் பகிர்ந்துகொள்வதால் ஒரு பயனும் இல்லை.
‘தேசம் அடிமைப்பட்டுக் கிடக்கிறபோது தீபாவளிப் பண்டிகை.ஒரு கேடா’ என்று அவரே ஒரு வாணமாய்ச் சீறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ‘நாட்டிலுள்ள ஏழை பாழைகள் எல்லாருக்கும் தீபாவளியைக் கொண்டாட எப்போது வசதிப்படுகிறதோ அப்போது நாமும் கொண்டாடினால் போகிறது’ என்றும் அவர் சமாதானம் சொல்லக் கூடும். அவள் வேண்டுமானால் கணவர் சொல்வது சரிதான் என்று திருப்திப்பட்டுக்கொள்ள முடியும். ஆனால் பாப்பாவுக்கு இதெல்லாம் புரிகிற வயசா? ஊர்க் குழந்தைகள் எல்லாரும் கும்மாளம்போட்டு தீபாவளியைக் கொண்டாடுகிற போது அவளால் மட்டும் முகத்தை உம்மென்று வைத்துக் கைகளைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா?
மூத்த பெண் தங்கம்மா நிலைமை பரவாயில்லை. காசியில் அத்தை வீட்டில் அவளுக்கு எல்லாப் பண்டிகைகளுமே அமர்க் களமாக நடந்தேறிவிடும். சகுந்தலா பாப்பாதான் பாவம், பெற் றோருடன் இருக்கிற ‘புண்ணியத்’திற்காக வளரும் பிராயத்திற்கு அத்தியாவசியமான தேவைகள்கூட நிறைவு செய்யப்பெறாமல் வளர வேண்டியிருக்கிறது.
பெற்றெடுத்தது மணி மணியாய் இரண்டே குழந்தைகள். ஆனால் அதுகளைக்கூடச் சரிவரப் பராமரிக்க முடியவில்லையே!- செல்லம்மாவுக்கு இந்த நினைப்பு வந்துவிட்டால் ஒவென்று சத்தம் போட்டு ஒரு பாட்டம் அழத்தோன்றும். சிரமப்பட்டு அந்த வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வாள். கணவரிடம் இந்தக் குறைகளையெல்லாம் சொல்லி ஆற்றிக்கொள்ள முடியாது. அவருடைய உலகமே வேறு. அது அமரர்கள் வாழ்கின்ற உலகம். அங்கு பேசப்படுகின்ற விஷயங்களே வேறு. உப்பு புளி மிளகாய் பற்றாக்குறைகள் பற்றிய புலம்பல்களுக்கெல்லாம் அங்கு இட மில்லை. அது உணர்ச்சி மயமான கவிதைகள் காற்றில் மிதக்கும் பூமி. சோகரசம் ததும்புவதானாலும்கூட கோபாவேசத்துடன்தான் அது சீறிப் பாய்ந்து வரும். ‘பாட்டுத் திறத்தாலே இவ்வையகம் பாலிக்கிற’ வித்தியாசமான புருஷனாயிற்றே, அவளுக்கு வாய்த்திருக்கிற கணவர்!
வேண்டுமானால் தீபாவளிக்குப் பட்சணம் என்று வீட்டிலேயே இனிப்புக்கு அதிரசமும் காரத்திற்கு முள்ளு முறுக்கும் கொஞ்சம் போலச் செய்து ஒப்பேற்றிவிடலாம். கோடித் துணிக்கு?
அப்புறம் குழந்தை முகத்தில் சிரிப்பைக் காண்பதற்காகவாவது இரண்டொரு பட்டாசுக் கட்டுகள் வேண்டாமா? எப்படியாவது பாப்பாவுக்கு மட்டுமாவது ஒரு சொக்காயும் பாவாடையும் எடுத்துவிட்டால் தேவலை. அதற்காவது சந்தர்ப்பம் வாய்க்குமா? – வீட்டு முற்றத்தின் ஓரம் உட்கார்ந்து சிந்தனை வயப்பட்டிருந் தாள், செல்லம்மா.
மாடிப்படிகளில் காலடியோசை கேட்டது. செல்லம்மா எழுந்திருப் பதற்குள் கவிஞர் இறங்கி வந்துவிட்டார். மனைவியின் முகக் குறிப்பிலிருந்தே அகத்தில் அவள் படுகிற சங்கடத்தைக் கண்டு கொண்ட கவிஞர், “என்ன யோசனை செல்லம்மா?” என்றார்.
“பெரிசா என்ன யோசனை வேண்டியிருக்கு! தீபாவளி வந்து டுத்தே, அதுதான். பேருக்காச்சும் எதான பண்ண வேண்டாமா, அதுவும் ஒரு குழந்தை இருக்கற வீட்டிலே!”
“இதுதானா உன்னோட விசாரம்? எண்ணிக்கு தீபாவளியாம்?”
“இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு.”
“அட, முழுசா இரண்டு நாள் இருக்கே! அதுக்குள்ள அசுவமேத யாகமே நடத்திடலாம்” என்று சிரித்தார், கவிஞர்.
‘பேச்சுக்கொண்ணும் குறைச்சலில்லை’ என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் செல்லம்மா.
“உனக்கு விஷயம் தெரியுமா, செல்லம்மா, கல்கத்தாவிலே தீபா வளியைக் காளி பூஜையாக் கொண்டாடறதுதான் வழக்கம். துர்கா பூஜையின்போது எப்படி தெருவுக்குத் தெரு துர்கா தேவி பொம்மை செய்து கொண்டாடறாளோ அதே மாதிரி தீபாவளி
யன்னிக்கு கன்னங் கரிய நெறத்திலே, நாக்கு மட்டும் ரத்தச் சிகப்பா வெளியே தொங்கறாப்பல மஹா காளி பொம்மை செய்து கொண்டாடுவா! மார்வாரிகளுக்கு தீபாவளி புது வருஷப் புதுக் கணக்கு தொடங்கற தினம். லக்ஷ்மி பூஜை பண்ணி ஐசுவரியங் கள் வேண்டுகிற சுப தினம். வட பாரதத்திலே பல இடங்கள்ள அது ராவணனை வதம் செய்யும் ராம லீலாவுந்தான்! ஆக நம்ம தேசம் முழுக்க ஒவ்வொரு விதமா மகிழ்ந்து கொண்டாடற பண்டிகை தீபாவளி. அதனால அது பாரத தேசத்தார் எல்லாருக்கு மான தேசியப் பண்டிகை! ராம லீலாவை வடக்கே ஸ்ரீராம நவமி, துர்கா தேவி நவ ராத்திரி, மஹா சிவ ராத்திரின்னு முக்கியமான சமயங்கள்ளயும் கொண்டாடறதுண்டு. தீபாவளியும் அதுலே ஒண்ணு!”
செல்லம்மாவுக்கு அதைக் கேட்டதும் ஒரு பிடி கிடைத்துவிட்டது: “நீங்க சொல்ற மாதிரி அது நம்ம தேசத்தோட தேசியப் பண்டிகைன்னா நம்மளால முடிஞ்ச வரைக்கும் அதை நாம நல்லபடியாக் கொண்டாடறதுதானே நியாயம்?”
“யார் இல்லைன்னது?”
“அப்ப அதுக்கு இன்னும் ஒரு வழியையுங் காணமே! ரெண்டே நாள்தானே இருக்கு? பாப்பாவானா எப்பம்மா தீபாவளின்னு அரிச்சுப் பிடுங்கறா. பாவம், குழந்தைக்கு என்ன தெரியும் வீட்டு நெலமை!”
“பலே செல்லம்மா, நீ வக்கீலாப் போக வேண்டியவ! என்னையே மடக்கிட்டயே சாமர்த்தியமா!”
“நீங்கதான் மெச்சிக்கணும் என் சாமர்த்தியத்தை!”
“எதுக்கு சலிச்சுக்கறே? நம்ம வீட்டிலே தீபாவளி வெளிச்சம் இல்லாம இருண்டு கிடக்க அந்தப் பராசக்தி விடுவாளா என்ன?
பார்த்துண்டே இரு. பண்டிகை கொண்டாடறதுக்கு வேண்டியதெல் லாம் தன்னால வரதா இல்லையா பாரு” என்று செல்லம்மாவுக்கு ஆறுதல் சொன்னார் கவிஞர்.
மறுநாள் பொழுது சாய்வதற்குள் கவிஞர் சொன்ன மாதிரியே நடந்துவிட்டது.
ஒரு கூடை நிறைய அரிசி, பருப்பு, மாவு, எண்ணெய், பசு நெய் சர்க்கரை, வெல்லம் என்று பண்டிகைக்கு வேண்டிய மளிகை யெல்லாம் வந்திறங்கிவிட்டது. ஒரு பெரிய பையில் எட்டு முழ வேட்டி, அங்க வஸ்திரம், புடவை, ரவிக்கைத் துண்டு, பாப்பாவுக்குப் பொருந்துகிற மாதிரி சொக்காய், பாவாடை! .போதாக்குறைக்கு ஒரு பெரிய பொட்டலமாகப் பட்டாசுகள்! ஒரு தட்டத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம்!
இரண்டு ஆட்கள் எல்லாவற்றையும் சுமந்து வந்து நடுவீட்டில் இறக்கி சீர்வரிசை மாதிரி அடுக்கி வைப்பதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், செல்லம்மா.
கட்டிவைத்த பொட்டலத்திலிருந்து வீசிய வெடி மருந்து வாசனையை வைத்து உள்ளே இருப்பதெல்லாம் பட்டாசுகள் எனப் புரிந்துகொண்டு கைகளைக் கொட்டிக் கும்மியடித்துக் குதூகலித் தாள், பாப்பா.
“யார் அனுப்பினா, இதெல்லாம்? நம்ம வீட்டுக்குத்தானா?” என்று சிறிது தயக்கத்துடன் அவர்களிடம் கேட்டாள், செல்லம்மா.
“செட்டியார்தான் குடுத்துவிட்டாரு. பாட்டுக் கட்டற நம்ம சுதேசி சாமி வீட்டிலே கொண்டு வையுங்கன்னாரும்மா” என்றான், மளிகைக் கூடையைச் சுமந்து வந்தவன்.
“இருங்க, மோர் கொண்டு வரேன். குடிச்சுட்டுப்போகலாம்” என்று உள்ளே சென்று ஒரு சொம்பு நிறைய கறிவேப்பிலை கசக்கிப் போட்ட நீர்மோரும் இரண்டு பெரிய குவளைகளும் எடுத்து வந்து ஊற்றிக் கொடுத்து அவர்களை உபசரித்து அனுப்பி வைத்தாள், செல்லம்மா.
கீழ் வீட்டில் சந்தடி கேட்டு மாடியிலிருந்து இறங்கி வந்த கவிஞர், “என்ன செல்லம்மா, என்ன அது பொட்டலம், பைன்னு எல்லாம் தடபுடலா இருக்கு?” என்றார், புன்முறுவலுடன்.
“செட்டியார் கொடுத்தனுப்பியிருக்கார், தீபாவளிக்காக” என்றாள், செல்லம்மா.
“ஓஹோ, கலவை சங்கரச் செட்டியார் மூலம் பராசக்தியோட ஏற்பாடா? பேஷ், பேஷ்!” என்று சிரித்தார், கவிஞர்.
“ஆமா, நீங்க சொன்னாப்பலயே பராசக்தி நம்ம அகத்துலே தீபாவளிக்கு ஏற்பாடு பண்ணிட்டா” என்றாள் செல்லம்மா, மகிழ்ச்சியுடன்.
“ஆனா இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு” என்றார், கவிஞர்.
“என்ன அது” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் செல்லம்மா.
கவிஞர் மனைவிக்கு பதில் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்து விட்டார். சிறிது நேரம் மெளனமாக நின்றிருந்தவர், திரும்பவும் படியேறி மாடிக்குச் சென்றுவிட்டார்.
முதல் நாள் இரவும் மறுநாள் காலையும் என தீபாவளி வந்தே விட்டது. இரவுத் தீபாவளியைப் பாப்பா சகுந்தலா உற்சாகமாகப் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதைக் கவிஞர் பார்த்து ரசித்த போதிலும் அவர் முகம் சுரத்தில்லாமல்தான் காணப்பட்டது.
செல்லம்மாவுக்கு அவரது சோர்வின் காரணம் தெரியவில்லை. கேட்டால் வெளிப்படையாகக் கூறும் வழக்கம் அவருக்கு இல்லை; எதுவானாலும் அவராகக் கூறினால்தான் உண்டு என்பதை அவள் அறிவாள். சரி, அவராக இயல்பு நிலைக்கு வரட்டும் என்று விட்டுவிட்டாள்.
இரவு உணவைக்கூட கவிஞர் ஈடுபாடு இல்லாமல் ஒப்புக்காகத் தான் உண்டு முடித்துவிட்டு மாடிக்குப் போனார். செல்லம்மா
மிகுந்த மனக் கிலேசத்துடன் அவரைப் பின் தொடர்ந்து மாடிக்குச் சென்றாள்.
மாடி அறையில் கவிஞர் ஏதோ யோசனையாய் இரு கரங்களை யும் பின்னால் ஊன்றி, கால்கள் இரண்டையும் நீட்டிப் போட்டு மல்லாந்து உட்கார்ந்திருந்தார்.
கவிஞர் மனதுள் இப்போது கவிதை வரி எதுவும் உருவாகி ஓடவில்லை என்பதைச் செல்லம்மா அறிவாள். ஏனெனில் கவிஞருக்கு எப்போதுமே முன்னும் பின்னுமாகச் சிறிது நேரம் உலவி, கவிதை வரிகளைத் தீர்மானம் செய்துகொண்டு அதன் பிறகு சிறிதும் தாமதமின்றி மளமளவென எழுதத் தொடங்கி விடுவதுதான் வழக்கம். இப்படிக் கைகளைத் தரையில் ஊன்றிக்கொண்டு சிந்தனையில் மூழ்கிக் கிடப்பது அவரது வழக்கத்திற்கு விரோதம். அதிலும் மனதில் கவிதை ஊற்றெடுக்கிறபோதெல்லாம் அவரது முகம் இன்னதென்று விவரிக்கவியலாத பொலிவுடன் மிளிரும். இப்போதோ அப்படி விசேஷம் ஏதும் அவர் முகத்தில் தென்படவில்லை. உதடுகள் மட்டும் அவ்வப்போது அசைந்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
செல்லம்மா கணவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. பேசாமல் படியிறங்கி வந்து கீழ் வீட்டில் பாப்பாவைப் பக்கத்தில் படுக்கவைத்துக்கொண்டு தானும் படுத்து விட்டாள்.
நடுநிசியாகியிருக்கும். திடீரென வாசற் கதவு தடதட வென்று அவசரமாகத் தட்டப்படுவதைக் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்த செல்லம்மா வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் .
இதென்ன தீபாவளியும் அதுவுமாகப் பாதி ராத்திரியில்? மறுபடியும் பிரிட்டிஷ்காரன் போலீஸ் தொந்தரவாயிருக்குமா?- செல்லம்மா எழுந்து செல்வதற்குள் சப்தம் கேட்டுக் கவிஞரே இறங்கி வந்து நேராக ரேழிக்குச் சென்று ‘யாரது’ என்று அதட்டல் போட்டார்.
“நாந்தான் சாமீ, உத்தராவதி” என்று வெளியிலிருந்து குரல் கேட்டது.
“அட. உத்தராபதியா, என்ன இந்த நேரத்திலே?” என்று குரலில் வியப்பு தொனிக்கக் கேட்டவாறு கதவைத் திறந்தார், கவிஞர்.
நாட்டுப்புறத்தவரைப் போலத் தோற்றமளித்த இருவர் வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்தனர்.
“வாங்க உள்ளே,” என்று அவர்களைக் கூடத்திற்கு அழைத்து வந்தார்.
இருவரில் முன்னின்றவன் இடுப்பு வேட்டியின் மடிப்பிலிருந்து குழாய் மாதிரி சுருட்டிய சிறிய காகிதப் பொட்டலங்கள் இரண்டை எடுத்துக் கவிஞர் முன் காணிக்கை வைப்பதுபோலத் தரையில் நிமிர்த்தி வைத்தான்.
“என்ன இது உத்தராபதி?” என்று வினவினார், கவிஞர்.
புதுச்சேரிக்கு அவர் வந்து சேர்ந்ததிலிருந்தே பண்டிதர், பாமரர் எனச் சகல தரப்புகளிலும் அவருக்கு அபிமானிகள் திரண்டு விட்டிருந்தனர். உத்தராபதி அதிகம் விவரம் அறியாத, ஆனால்
கவிஞர் மீது காரணம் சொல்லத் தெரியாத அளவுக்கு தேவதா விசுவாசத்தை வளர்த்துக் கொண்ட சாதாரணர்களில் ஒருவன்.
“ஒரு பொட்டலம் ஒரணா. இன்னொரு பொட்டலம் இரண்டணா. அதென்னமோ சாமி, எனக்கு சொல்லத் தெரியலே. அசந்து தூங்கிக் கிட்டிருந்தப்ப திடீர்னு முழிப்புக் குடுத்துச்சு, யாரோ தட்டி எழுப்பினாப்பல! ‘ஒரணா, ரெண்டணான்னு சில்லறையா எடுத்துக்கிட்டு நம்ம சுதேசி சாமி வீட்டுக்குப் போய்க் குடுத்துட்டு வாடா உத்ராவதி’ன்னு எனக்குள்ளேயிருந்தே ஒரு கொரல் கேட்ட மாதிரி இருந்துச்சு. ஒடனே ஒரு பத்து ரூபாத் தாளை எடுத்துக் கிட்டு நம்ம காசுக் கடைச் செட்டியார் வீட்டுக்குப் போயி அவர எழுப்பி அவர்கிட்ட குடுத்து சில்லரை மாத்தி எடுத்துக்கிட்டு வந்தேன். தொணைக்கி என் சினேகிதன் இவனையும் அழைச்சுக்கிட்டு வந்தேன். ரொம்ப நாழியாகிப் போச்சு. அப்ப நாங்க வரட்டா சாமி” என்று கையெடுத்துக் கும்பிட்டான், உத்தராபதி. கூட வந்தவனும் கவிஞரை நோக்கி பய பக்தியுடன் தொழுதான்.
“பலே பாண்டியா! நல்ல காரியம் செய்தாய். போய் வாருங்கள், என் சகோதரர்களே” என்று நாடக பாணியில் கைகளை விரித்து அவ்விருவரையும் வாழ்த்தி வழியனுப்பினார், கவிஞர்.
பிறகு செல்லம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“தீபாவளிக்கு நாம் மட்டும் கோடித்துணி கட்டி, இனிப்புகள் சுவைத்து, வெடி வெடித்து மகிழ்ந்தால் அது முழுசான தீபாவளியா இருக்குமா செல்லம்மா? பொழுது விடிந்ததும் வீட்டு வேலைக்கு வர அம்மாக்கண்ணு, ரிக்க்ஷாக்கார முனுசாமி, தெருக்கூட்டுகிறவர்கள், துணி வெளுக்கிறவர்கள்னு எல்லாரும் வருவார்கள். அவர்களுக்கெல்லாம் நம்மால் ஆனதைக் கொடுத்து அவர்களை மகிழ்வித்தால்தானே நம்ம மகிழ்ச்சிக்கு ஒரு அர்த்தம் இருக்கும்? அதுக்கு இன்னும் ஏற்பாட்டைக் காணுமேன்னு யோசனையா இருந்தேன். இப்பப் பார்த்தியா, மகா சக்தி அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டா” என்று முகம் மலரச் சிரித்தார், கவிஞர்.
“மானத்தைக் காக்க ஓர் நாலு முழத் துணி வாங்கித் தரவேண்டும், தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித் தரவும் கடனாண்டே என்று தனக்கு நாலு முழத் துணி இருந்தால் போதும், ஆனால் மற்ற சிலருக்கு வேட்டிகள் கொடுக்கக் கடன் பட்டிருப்பதாய் கண்ணன் என்னும் சேவகன் தன் எஜமானிடம் சொல்வதாக நான் ஒரு கண்ணன் பாட்டுப் போட்டிருக்கிறேனே, அது உனக்குத் தெரியுந்தானே, செல்லம்மா” என்று மேலும் சொல்லிச் சிரித்தார், ‘மகாகவி சுப்பிரமணிய பாரதி’ என்று அறியப்பட்ட அந்தக் கவிஞர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++.
ஆதாரம்: மகாகவி பாரதியாரின் இரண்டாவது மகள் சகுந்தலா பாரதி எழுதிய ‘என் தந்தை’ என்ற சிறு நூல்.
நன்றி: அமுதசுரபி தீபாவளி மலர் 2010
.
.
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16
- முள் பயணத்தினிடையே
- பூங்கொடியாய்
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் முதன்முதல் நிகழ்த்திய சிறிய பெரு வெடிப்புகள் (கட்டுரை -8)
- மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை (தொடர்ச்சி-2)
- இவர்களது எழுத்துமுறை – 15 ஆர்.கே.நாராயணன்
- யாப்பு உறுப்பு : கூன்
- படவிமர்சனம் – உறவு
- உடைந்த சூரியனும் நானும்…
- நரகத்தின் வாசல்
- தொலையும் சூட்சுமங்கள்
- மாய வலை
- மரமாக மனித வாழ்க்கை
- ஏவலர்கள் எஜமானர்களாய்
- யாதும் நலம்
- சொல்லத் தயங்கிய ஒன்று…!
- செல்லங்கள்
- துரோகம்…!
- பதிலைத்தேடும் கேள்விகள்..
- காதலுக்கினிய!
- ஞான வாழ்வு நல்கும் சச்சிதானந்த சற்குவருவின் பெருவழிப்பாதை
- பரிமளவல்லி 20. கிருமியின் தாக்குதல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -4
- பராசக்தி ஏற்பாடு
- குழிவு
- தவிப்பு
- புனிதங்களின் பேரில் கற்பிதங்கள் – ரமீஸ்பிலாலியின் பதிவை முன்வைத்து
- அறிவியல் என்னும் வழிபாடு
- ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்
- ஓபாம நமஹ!
- முள்பாதை 55
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 6 Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -3
- எங்கே எடுத்து செல்வேன்?
- மழையே நீ பெண்தான் !!
- பள்ளங்களில் தேங்கும் உரையாடல்..
- கல்லா(ய்) நீ
- காதலனின் எதிர்பார்ப்புகள்