குரு அரவிந்தன்
(தமிழ் படமே பார்ப்பதில்லை என்று விமர்சித்தவர்களை எல்லாம் இரண்டாவது தடவையும் தியேட்டர் வாசலுக்கு இழுத்துவந்த அற்புதமான கலைப்படைப்பு – குரு அரவிந்தன்.)
உறவு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர்; திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது.
அல்பியன் சினிமாவில் பிற்பகல் 3:00 மணி காட்சியைப் பார்த்துவிட்டு ஈழத்து மூத்த நாடக, சினிமாக் கலைஞர் நண்பர் கே.எஸ். பாலச்சந்திரனுடன் காரிலே திரும்பி வரும்போது எங்கள் உரையாடல் உறவு படம் பற்றியதாகவே இருந்தது. அடிக்கடி செல்பேசியில் அவருக்கு அழைப்பு வருவதும் அவர் அற்புதம், அபாரம், எங்கடை கனடிய தமிழ்ப்படத்திற்கு இது ஒரு திருப்புமுனை, நல்ல எதிர்காலம் இருக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வரும்போது எனது கவனம் நெடுஞ்சாலையில் இருந்தாலும் அவரது வார்த்தைகளைக் கிரகித்துக் கொண்டேயிருந்தது. அகஸ்தியர் கையால் குட்டு வாங்கும் அதிஸ்டம் கிடைத்தது போல, கனடிய தமிழ் திரைப்பட உலகின் ஒரு மூத்த கலைஞரின் பாராட்டைப் பெறுவதற்கு ஏற்ற படம்தான் திவ்வியராஜனின் உறவு என்பதை என் மனமும் ஏற்றுக் கொண்டது.
கனடிய தமிழ் திரைப்படத்துறையில் திடீரென ஒரு மந்தநிலை ஏற்பட்டபோது, ஈழத்து தமிழ் திரைப்படத்துறை போல கனடிய தமிழ் திரைப்படத்துறையும் முகவரியற்றுப் போய்விடுமோ என்ற பயம் இங்கே உள்ள தமிழ் சினிமாக் கலைஞர்களிடையே ஏற்பட்டதென்னவோ உண்மைதான். அதிஸ்டவசமாக சமீபத்தில் வெளிவந்து பல பரிசுகளைப் பெற்ற லெனின் எம். சிவத்தின் 1999 என்ற தமிழ்ப்படம் கனடிய தமிழ் சினிமா சோடை போய்விடவில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருந்தது. அடுத்து, இப்போது வெளிவந்திருக்கும் உறவு படமும் சாதனை படைக்கக் காத்திருக்கிறது.
கனடிய தமிழ் திரைப்பட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் முதல் முயற்சியாக ‘அன்பூற்று, ஏமாற்றம்’ போன்ற படங்கள் ஏ. முருகு என்பவரால் சாதாரண வீடியோ கமெராவால் தயாரிக்கப்பட்டாலும் தொழில்நுட்பக் குறைபாடுகாரணமாக அவை மக்களிடம் தகுந்த முறையில் சென்றடையவில்லை. 1996ல் ரவிஅச்சுதனின் நெறியாள்கையில் ஸ்ரீமுருகனால் தயாரிக்கப்பட்ட ‘உயிரே உயிரே’ என்ற தமிழ் படம் அரங்கம் நிறைந்த காட்சியாகக் காண்பிக்கப்பட்டதையும் இங்கே நினைவுகூரலாம்.
கணவன், மனைவி என்றால் தனியே ஒருவர் அல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் மனதாரப் புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவதும் தான் திருமண பந்தத்தின் முதலாவது விதி என்பதை உணர்ந்து கொள்ளாவிட்டால் அந்தக் குடும்பமே சந்தேகத்தில் அழிந்து போய்விடும் என்பது மட்டுமல்ல, குடும்பப்பிரச்சனையில் தேவையற்ற மூன்றாம் மனிதரின் தலையீடும் ஒரு குடும்பத்தை அழித்துவிடும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்தப்படத்தின் மூலக் கருவாகும். இலங்கையில் பிறந்ததால்தான் கதாநாயகன் அப்படி நடந்து கொள்கிறான் என்ற மனப்பான்மையோடு படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதினால் அது அபத்தம். மேலை நாட்டில் பிறந்தவர்கள்கூட இதைவிட மோசமாக நடந்து கொள்ளலாம். ஆணோ பெண்ணோ புரிந்துணர்வுதான் குடும்பவாழ்க்கையில் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டால்சரி. கதை வசனம் நெறியாள்கை மூன்றையும் கலைஞர் திவ்வியராஜனே செய்திருப்பதால் ஒவ்வொரு அசைவிலும் அதை மானசீகமாக உணர்ந்து செய்திருப்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்தப் படத்தின் மூலம் தான் சிறந்ததொரு நெறியாளர் என்பதை நிரூபித்திருக்கின்றார்.
நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள். சுதாகரனுடனான உரையாடலில் திவ்வியராஜனின் குறும்புப் பேச்சு பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கிறது. கதாநாயகன் சுதாகரன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வீரம், பாசம், காதல், சோகம், என்று எல்லா உணர்வுகளையும் திறமையாக வெளிக் கொண்டுவந்திருக்கிறார். கதாநாயகி சங்கீதா பற்றிச் சொல்லவே தேவையில்லை, அவர் ஒரு நடனதாரகை என்பதால் முகபாவனை மூலமே அத்தனை உணர்வுகளையும் அள்ளிக் கொட்டுகின்றார். அவரது விழிகள் பல கதைகள் சொல்லாமல் சொல்கின்றன. எந்த சபையிலும் பாரதிபாடல்கள் ரசிகர்களை இலகுவில் கவர்ந்துவிடுவதுண்டு. அந்தப் பாரதிபாடலை வைத்தே அப்பா க.நவமும் மகள் சங்கீதாவும் ரசிகர்களை படம் தொடங்கிய உடனேயே தங்கள் பக்கம் இழுத்துவிடுகிறார்கள். திவ்வியராஜனின் முதற்படமான சகா படத்தில் அப்பாவாக க. நவம் நடித்தபோதே இவர் சிறந்ததொரு குணசித்திர நடிகர் என்பதை இனம் கண்டு கொண்டேன். அதை இந்தப் படத்திலும் அவர் நிரூபித்து அப்பா பாத்திரத்திற்கு இயல்பாகவே உயிரூட்டியிருக்கிறார். பாரதி கவிதை படிக்கும் போது எல்லோர் மனதைத் தொடுகின்றார். நாங்களும் அவருடன் சேர்ந்து வாய்க்குள் அந்தக் கவிதையை முணுமுணுக்கிறோம். இவர்களுக்கு எந்த விதத்திலும் தான் குறையவில்லை என்பதை நிரூபிப்பதுபோல சித்திரா பிலீக்ஸ் தனது நடிப்புத் திறமையை ஒவ்வொரு அசைவிலும் இயல்பாக வெளிக்காட்டுகின்றார். மகள் தன்னிடம்கூடச் சொல்லமுடியாமல் தவிப்பதைப் பார்த்துப் பெற்றதாய் துடிக்கும் இடம் அபாரம். கதாநாயகனின் பெற்றோராக நடித்தவர்களும் தங்கள் நடிப்பாற்றலைத் திறமையாக வெளிக்காட்டியிருக்கிறார்கள். பண்பட்ட நடிகரகளான கதிர் துரைசிங்கம், சிறிமுருகன் போன்றவர்களின் நடிப்பு மட்டுமல்ல, ஏன் வெள்ளைவானில் வந்தவர்கள்கூட நிஜமான பாத்திரங்களாய் மாறியிருந்தார்கள்.
மொத்தத்தில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் எந்தவிதத்திலும் ரசிகர்களுக்குக் குறை வைக்கவில்லை என்பதைப் படம் முழுவதும் காணமுடிகின்றது. சினிமாத்துறையில் நானும் ஈடுபாடு கொண்டவன் என்பதால், திவ்வியராஜனின் கடின உழைப்பிற்கு இந்தப் படத்தின் மூலம் பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். திரைக்குப்பின்னால் திருமதி திவ்வியராஜனின் உழைப்பும் நிறைய இருப்பது நன்கு தெரிகின்றது. எதற்கெல்லாமோ அள்ளிக் கொடுக்கும் ரசிகர்களே கனடிய தமிழ் சினிமாவையும் வாழவையுங்கள். சாதனை படைக்க வைப்பதும் விடுவதும் இனி உங்கள் கையிலேயே தங்கியிருக்கிறது. குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய படம் என்பதால் தயங்காது குடும்பத்தோடு சென்று பாருங்கள். பதினைந்தே வருட அனுபவம் கொண்ட கனடிய தமிழ் திரைப்படத்துறையைத் தயவு செய்து 100 வருடங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த தமிழகத் திரைப்படங்களுடனேயோ அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்த எந்திரன் போன்ற படங்களுடனோ ஒப்பிட்டுப் பார்த்துக் கணிப்புச் சொல்லாதீர்கள். இது எம்மவர் எடுத்த படம் என்பதால் ஆதரவு தரவேண்டியதும் எங்கள் கடமை என்பதை மறந்து விடாதீர்கள். குழந்தை ஒன்று காலடி எடுத்து வைத்து நடக்கத் தொடங்குகின்றது. அதன் கைகளை ஆதரவேடு பற்றி அணைத்துச் செல்வதே ரசிகர்களாகிய எங்கள் தார்மீகக் கடமையாகும்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜீவன்ராம் ஜெயம் பாராட்டப்பட வேண்டியவர். குறைந்த வசதிகளோடு மிகவும் அற்புதமாகக் கமெராவைக் கையாண்டிருக்கிறார். கமெராக் கோணங்கள் மிகவும் அற்புதம். பாராட்டுக்கள். சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், இசையமைப்பு ஒலியமைப்பு, எடிற்ரிங் போன்றவை தரமாக இருக்கின்றன. எந்த ஒரு இடத்திலும் சோர்ந்து போகாமல் படம் இயல்பாக நகர்கிறது. இதுபோன்ற படங்கள் மேலும் வெளிவரவேண்டும். கனடியதமிழ் சினிமாவுலகை உலகறியச் செய்ய வேண்டும். ரசிகர்களாகிய உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
கனடிய தமிழ் சினிமா வரிசையிலே அடுத்து கனடாவில், குரு அரவிந்தனின் கதை வசனத்தில், மதிவாசனின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் வேலி படமும் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16
- முள் பயணத்தினிடையே
- பூங்கொடியாய்
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் முதன்முதல் நிகழ்த்திய சிறிய பெரு வெடிப்புகள் (கட்டுரை -8)
- மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை (தொடர்ச்சி-2)
- இவர்களது எழுத்துமுறை – 15 ஆர்.கே.நாராயணன்
- யாப்பு உறுப்பு : கூன்
- படவிமர்சனம் – உறவு
- உடைந்த சூரியனும் நானும்…
- நரகத்தின் வாசல்
- தொலையும் சூட்சுமங்கள்
- மாய வலை
- மரமாக மனித வாழ்க்கை
- ஏவலர்கள் எஜமானர்களாய்
- யாதும் நலம்
- சொல்லத் தயங்கிய ஒன்று…!
- செல்லங்கள்
- துரோகம்…!
- பதிலைத்தேடும் கேள்விகள்..
- காதலுக்கினிய!
- ஞான வாழ்வு நல்கும் சச்சிதானந்த சற்குவருவின் பெருவழிப்பாதை
- பரிமளவல்லி 20. கிருமியின் தாக்குதல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -4
- பராசக்தி ஏற்பாடு
- குழிவு
- தவிப்பு
- புனிதங்களின் பேரில் கற்பிதங்கள் – ரமீஸ்பிலாலியின் பதிவை முன்வைத்து
- அறிவியல் என்னும் வழிபாடு
- ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்
- ஓபாம நமஹ!
- முள்பாதை 55
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 6 Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -3
- எங்கே எடுத்து செல்வேன்?
- மழையே நீ பெண்தான் !!
- பள்ளங்களில் தேங்கும் உரையாடல்..
- கல்லா(ய்) நீ
- காதலனின் எதிர்பார்ப்புகள்