தெய்வ தசகம்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

ஸ்ரீ நாராயண குரு தேவர் அருளியது


தெய்வமே எங்களை காத்தருள் செய்குவாய்
கைவிடாதெம்மை நீ ஆண்டருள் செய்குவாய்
பவகடல் தாண்டவே செய்குவாய் நாதனே
நின்பதம் எம்மரும் தோணியாய் நிற்குமே (1)

ஒவ்வொன்றாய் எண்ணி எண்ணித் தொட்டு எண்ணிடும்
எல்லாப் பொருட்களும் எண்ணி முடிந்தபின்
எஞ்சிடும் த்ருக்கினைப் போலவே எம் உளம்
நின்திருப் பாதத்தில் ஒன்றிடச் செய்குவாய் (2)

அன்னமும் ஆடையும் தேவையாம் யாவுமே
இன்னல் ஒன்றின்றியே தந்தெமைக் காத்துமேல்
தன்யராய் மாற்றிடும் நீ ஒரு மூர்த்தியே
வல்லமை உள்ளவன் எங்கட்குத் தம்பிரான் (3)

ஆழியும் அலைகளும் காற்றொடு ஆழமும்
போலவே நாங்களும் மாயையும் நிந்திரு
மேன்மையும் நின்அருள் ஜோதிப் பிரகாசமும்
நீயுமாய் என்னுளே நின்று விளங்குவாய் (4)

நீயன்றோ சிருஷ்டியும் சிருஷ்டிக்கும் நாதனும்
சிருஷ்டி ஜாலங்களாய் நிற்கும் பிரபஞ்சமும்
நீயன்றோ தெய்வமே சிருஷ்டிக்கப்பட்டுள
யாவுமாய் மாறிடும் எல்லாப் பொருட்களும்! (5)

நீயன்றோ மாயையும் மாயாவி ஆவதும்
மாயா வினோதனாய் நின்றிடும் நாதனும்
நீயன்றோ மாயா விலாசத்தை மாற்றியே
ஸாயுஜ்யம் நல்கிடும் ஸத்குண சீலனும்! (6)

நீ ஸத்யம் எங்கும் நிறைவான மெய்ப்பொருள்
நீ சித் எனும் ஞானம் நீயே ஆனந்தமும்
நிகழ்வதும் வருவதும் போனதும் வேறல
நீயன்றோ ஓதிடும் ஓர் மொழி ஆவதும்! (7)

அகம் புறம் எங்கணும் இடைவெளி இன்றியே
நின்றிடும் நின்பதம் மேன்மையாம் மென்பதம்
வாழ்த்துகின்றோம் உனை வாழிய நாதனே
வாழ்க நீ வெல்க எம் நாதனே தெய்வமே (8)

வாழ்க மகாதேவ வெல்க எம் நாதனே
தீனதயாளனாம் ஏழை பங்காளனே
வெல்க எம் நாதா சிதானந்த மூர்த்தியே
தயாசிந்துவாம் கருணாகர ஜயஜய (9)

ஆழமாய் உள்ளதாம் நின்அருள் ஜோதியாம்
ஆழியில் நாங்கள் அனைவரும் ஆழுவோம்
ஆழ்வதால் நித்தியம் வாழுவோம் வாழுவோம்
ஆனந்த வாரியில் வாழுவோம் வாழுவோம் (10)

[தமிழில் : ஐயா துளசிராம் 1990 செப்டம்பர் 5]
[தட்டச்சு: மண்ணாந்தை]

Series Navigation

ஸ்ரீ நாராயண குரு தேவர் அருளியது

ஸ்ரீ நாராயண குரு தேவர் அருளியது