டி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

ருத்ரா


இங்கே விழிகள் இல்லை.

ஒளியின் சுவடுகளும் இல்லை.

இருட்டில் நனைந்த

கருவிழிகளில்

விடியல் வெளிச்சத்தின்

வேர்கள் பாயவில்லை.

இவை உயர்ந்த சிகரங்கள் அல்ல.

இருளின் படுகுழி.

இறந்துகொண்டிருக்கும்

நட்சத்திரங்களை

புதைக்கத்தயாராகும்

பள்ளத்தாக்கு இது.

மரணச்சுவைக்காக

மல்லாந்து படுத்துக்கொண்டு

வாய் பிளந்து

உடைந்துகிடக்கும்

அந்த தாடைகளில்

என்ன வார்த்தைகள் எதிரொலிக்கும் ?

மனிதனின் வீடு

வெறும் ‘ஃபாசில்களின் ‘ சாம்ராஜ்யமா ?

சந்திப்பு நிகழும் களம் இது.

ரதத சதைகளிலிருந்து

ஒளியைத் தேடுங்கள்.

சிரையும் தமனியும் சந்திக்கும்

மயிர்ப்பின்னல் குழாய்களிலிருந்து

கசியும் இரத்தத்தில்

உதிக்கும் சூாியனின்

சிவப்பைத் தேடுங்கள்.

கருப்பு இருட்டின்

ரத்தக்குழம்பிலிருந்து

மின்னல் பூக்களை பறித்தெடுங்கள்.

ஆத்மா என்றொரு

அடங்காத வார்த்தைக்குள்

அது அடைபடுமுன்

அதில் அடைந்து கொள்ளுங்கள்.

எதற்கு இன்னமும் நாம் நடுங்க வேண்டும் ?

தேடல் சகதியினுள் வீழ்ந்து

அதையே நம்மீது சுற்றி சுற்றி

ஆக்கிக்கொண்ட

புழுக்கூடு இது.

கனவுகளின் கனம் தாங்காமல்

வர்ணமயக்கங்களின்

வெக்கை தாங்காமல்

அந்த பிரபஞ்சம் ஒரு நாள்

தும்மல் போடுவது போல்

வெடித்த துடிப்புகளில்

தேடிப்பாருங்கள்.

பேசுவதற்கு நா எழவில்லை.

இந்த ஆற்றங்கரை யோரம்

ஞான ஸ்நானங்களுக்காக

காத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆறு உப்புகிறது.

வீங்கும் வெள்ளத்தில்

தண்ணீர் விடைக்கிறது.

கரை உடைப்புகளில்

ராட்சச கன்னிக்குடம்

உடைத்துக்கொண்டு

மரண ஓலங்களின் பிரசவம் !

உடல் திசுக்களுக்குள்

சின்னா பின்னமாய்

ஹிரோஷிமா நாகசாகிகள்…

கபாலக்காடுகளிலிருந்து

மீண்டும் முளைக்கப்போகும்

ஈடன் தோட்டங்கள்….

காட்சிகள் இல்லை

கண்கள் இல்லை.

அந்த கருப்பு முண்டமான

வானத்திலிருந்து

இங்கே துருவி துருவி

பார்த்துக்கொண்டிருக்கும்

அந்த ‘துருவ ‘ நட்சத்திரம் மட்டுமே

நம் கண்கள்.

அவிந்து போகாத

நம் அமரக்கண்கள் அவை.

உதிர்ந்து போகாத

ஆயிரம் அடுக்கு இதழ்

ரோஜாப்பூ

உன் புருவமுனையில் குவிகிறது தொிகிறதா ?

மூடுகின்ற வானம்

திறக்கின்ற ஜனனங்களின்

சாவிக்கொத்துகளை

கண்ணுக்குத் தொியாத

அந்த விரல்களில் வைத்துக்கொண்டு

சுழற்றுவது

புலப்படவில்லையா ?

குண்டலினியை சூடேற்றி

மூளைச்செதில்களில்

தீயொித்து தியானம் செய்ததில்

அந்த அர்த்தங்கள்

விழி திறந்தனவா ?

பரமண்டலத்து பிதாமகனுக்கு

வெட்டுக்கிளிகள் தின்னும்

இந்த குமாரன் யோவான்

காத்துக்கிடப்பது

தொிந்து விட்டதா ?

விாியன் பாம்புக்குட்டிகள்

இரத்த நாளங்களுக்குள் பேசும்

இரகசியங்கள்

வெளிப்பட்டுவிட்டனவா ?

இந்த அந்தி வெளிச்சத்தில்

இறப்பு எனும்

இராட்சதப் பறவை இட்ட

எச்சத்தில்

மீண்டும் மீண்டும் பிறப்புகள்…!

நம்பிக்கைச்சுவடுகள்

நத்தை உழுத வாிகளாய்…

இந்த யாத்திரையில்

அங்குலம் அங்குலமாய்

கரையும் தூரங்கள்..

ஆனாலும்

விதைகளை தின்றுவிட்டு

செடிமுளைக்க

காத்துக்கொண்டிருக்கும்

உன் கனவுகளே

உன் தோள்பட்டையில் தொங்கும்

‘ஜோல்னா பைகள் ‘..

நடை தளராதே !

உன் முழங்கால்களில்

வானம் இடறும்.

காலடியில்

நட்சத்திரக் கூழாங்கற்கள்

சர சரக்கும் சங்கீதமே

உனது உற்றதோழன்.

நடை தளராதே!

(முற்றும்)

Series Navigation

ருத்ரா

ருத்ரா