சகுனம்

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

சாரங்கா தயாநந்தன்


அழகிய விடிகாலையொன்றில்
விழித்து வாயில் திறக்க
நின்றிருந்தது கறுப்புப் பூனை.
நிறக்கலப்புப் பாவனைக்காய்
மட்டும்
முகத்தில் இரண்டு
பச்சைக் கண்மணிகள்
பதித்து.
உறுத்துப் பார்த்தது.
ஏதோ என்னில் தான்
விழித்தது போல.
விசனமுறும் மனம் எனது.
‘பார்த்துப் போகச் ‘ சொல்கின்ற
தாயின் வார்த்தைகள் ரீங்காரிப்பதும்
கறுத்த பூனையினாலாகும்
துர்ச்சகுனம் பற்றிய
பாட்டி வழிக் கதைகளுக்கு
பழக்கமானதுமான
என் காதுகளைச் சுமந்த
அன்றைய பயணம்
நிம்மதி தொலைத்தது.
அவ்விதமான பயணங்களும்
காலைச் சகுனங்களும்
முடிவுற்ற
ஒரு அழகான அந்தியில்
வீடு வந்தேன்.
வீட்டின் முன்பதாகுமோர்
குறுக்குத் தெருவில்
கழுத்தில் தெறித்த
குருதிக்கோட்டுடன்
கிடந்தது கறுப்புப் பூனை
தன் மென்பச்சை விழிகளை
நிரந்தரமாய் மூடி.
—-
nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்

சகுனம்

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


பயணம் புறப்படும் போது மொட்டைத்தலை எதிரே வரக் கூடாது. கறுத்தப்பூனை குறுக்கே போகக் கூடாது.. .. ..சகுனத்தடைகளாம். மொட்டைத்தலையும் கறுத்தப்பூனையும் என்ன பாவம் செய்தன ? ஊன்றி யோசித்தும் பிடிபடவில்லை. உண்மையைச் சொல்வதானால் சகுனத்தில் எனக்கு நம்பிக்கை இருந்ததேயில்லை. நண்பன் நாராயணசுவாமி சகுனங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டி தன் சொந்த அனுபவம் சொல்லிக் களைத்தான். என்னையும் களைப்பித்தான்.

வீட்டார் அவனுக்காக பெண் பார்க்கப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்திருக்கிறார்கள். நல்ல காரியத்திற்கு கடவுளின் கடாட்சம் வேண்டும். சுவாமியறை சுவிட்சைத் தட்டியிருக்கிறான் நாராயணசுவாமி. ‘நிக்’ ஒலியோடு மின்சார விளக்கின் ‘பிய+ஸ்’ இணைப்பு விட்டுப் போயிற்று. போன இடத்தில் சாமுத்திரிகா இலட்சணத்தில் பெண் இருந்தும் சீதனம் பிடிக்காமல் வீட்டார் திரும்பியிருக்கிறார்கள். விளக்கு நூர்ந்தது அபசகுனம் என்று மூக்கால் அழுதான். வீட்டாரின் சீதன ஆசையில் போட வேண்டிய பழியை தற்செயலாகப் பற்றாமல் போன பல்ப்பில் போடுவது நியாயமில்லை என்று சொன்னேன்.

அத்தோடு நில்லாமல் இன்னொரு சம்பவமும் சொன்னான். அன்றாடம் எடுக்கும் அதிகாலை சவரத்தின் போது ஒருநாளுமில்லாதவாறு பிளேட் வெட்டி நாடியில் இரத்தம் கொட்டியிருக்கிறது. அலுவலகம் போயிருக்கிறான். நியாயமாகக் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு சிங்களத்தில் சித்தியடையாததால் தட்டுப்பட்டுப் போன சங்கதியை அன்றைக்கென்று அறிவித்திருக்கிறார்கள். காகம் குந்த பனம்பழம் விழுந்திருக்கிறது.

நல்லது கெட்டது எது நடக்க இருந்தாலும் தனக்கு ஏதோவொரு ரூபத்தில் முன்கூட்டியே காட்டிவிடுகிறது என்றான். சரி அப்படிக் காட்டுகிறதென்று வைத்துக் கொண்டால் போகிற விசயத்தைத் தள்ளிப் போடலாமே என்று கேட்க பெண் பார்க்க வருவதாகச் சொல்லிவிட்டு போகாமலிருப்பது எங்ஙுனம் என்று கத்தினான். யாரோ சொன்னார்களென்று கறுத்தப் பூனையை வெறுப்பது என்ன நியாயம் என்று கேட்டேன். அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பூனையைப் பார்ப்பது போல முறைத்தான். உனக்கு உனக்கென்று வந்தால்தான் எரிச்சல் தெரியும் என்று சபிக்கவும் செய்தான். எங்களுக்குள் இந்த வாதாட்டம் நிகழ்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் இருக்கும்.

இந்தப் பத்தாம்பழைய நிகழ்ச்சிகள் இவ்வளவு காலம் கழித்து ஏன் ஞுாபகத்தில் வர வேண்டும்! காரணம் இருக்கிறது. சகுனம் பற்றிச் சம்பாஷித்த ஐந்தாறு நாட்களில் சம்பவமொன்று நடந்தது. அதற்கும், இப்போது பிபிசி தொலைக்காட்சி சேவை காட்டிக் கொண்டிருக்கும் ‘ஒரிசா’ சூறாவளி பற்றிய விவரணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஒன்றரைக் கோடி மக்களை அடித்துத் துவைத்து கசக்கிப் பிழிந்து கந்தல்துணியாய் எறிந்து விட்ட ஒரிசா சூறாவளி பழசுகளைக் கிண்டிக்கிளறி மனம் முழக்க பரத்தி விட்டிருக்கிறது.

அந்த சம்பவத்திற்கும் சகுனத்திற்கும் என்ன தொடர்பு ? சொல்கிறேன். அது 1978 ஒக்டோபர் கடைசி வாரம் என்று பட்டும் படாமலும் நினைவிருக்கிறது. நான் கடமையாற்றிய திணைக்களத்தின் கடன் வழங்குசபை உறுப்பினர் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. வாக்குச்சீட்டுகள் அச்சிட அவசரமாக மட்டக்களப்பு போக வேண்டும். சக உத்தியோகத்தர் ஒருவரும் கூட வருவதாக ஏற்பாடு. இரவு 8.15 ரயிலில் புறப்படுவதற்கு ஒழுங்கு பண்ணிக்கொண்டோம். இரவுப் பிரார்த்தனை முடிந்து மக்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டு (மனைவிக்குந்தான்) வாசல் கதவை திறந்தேன்.

முகத்திலடித்தது போல் முன்னுக்கு நின்றார் முத்துலிங்கம் மாஸ்டர். முகத்தை முந்திக் கொண்டு மினுங்கிய மொட்டைத்தலை. எனக்கு கணிதம் கற்பித்த ஆசான். இளைப்பாறி விட்டார். கழுத்தடியில் கிழிந்திருந்த வாலாமணி பென்சன் இன்னும் கிடைக்காத வறுமை சொல்லிற்று. கட்டை உருவம்.

“பயணம் என்டு கேள்விப்பட்டன். என்ர பென்சன் விசயத்தை கொஞ்சம் பார்த்திற்று வா தம்பி”

“அதுக்கென்ன சேர் பாத்திற்று வாறன்”

வாத்தியார் போகவிட்டு, கொஞ்சம் உள்ளுக்கு வந்திற்றுப் போங்க என்று மனைவி அவசரமாகக் கூப்பிட்டாள். “முழுவியளம் அவ்வளவு நல்லாயில்லை. நாளைக்குப் போனா என்ன ?”

“எலக்சனுக்கு ஒரு கிழமைதான் இருக்கு”

“சொன்னாக் கேக்கமாட்டாங்க .. .. .. ம் கொஞ்சம் பொறுங்க” .. .. .. என்றவள் உள்ளே போய் கையில் திருநீறை அள்ளிக் கொண்டு வந்து நெற்றியில் அப்பிவிட்டு கண்களை மூடச்சொல்லி ஊதி வழியனுப்பினாள். கடவுளை நம்பினோரை நாளும் கோளும் என்ன செய்யும். சகுனமென்ற சலனமில்லாமல் நான் நடந்தேன். வரப்போகும் மாரிக்கு அடுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் மந்தார வானத்தின் பன்னீர்த்தெளிப்பு. ரயில்வே ஸ்டேசன் வரை போட்ட தனித்த நடையில், அடுத்தநாள் போய் இறங்கப் போகும் மட்டக்களப்பு மண் மனதில் விரிந்து விசாலமாகிக் கொண்டே வந்தது.

மீன்மகள் பாடுகிறாள் வாவிமகள் ஆடுகிறாள்

மட்டுநகர் அழகான மேடையம்மா இங்கே

எட்டுத்திசையும் கலையின் வாடையம்மா

ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ

முதன் முதலாக வேலை கிடைத்துப் போன இடம். விடலைப் பருவத்தின் இதமான ஐந்து வருடங்கள். அதன் சொச்சமாக இதயத்தில் தங்கிவிட்ட பாட்டு. கால்கட்டுக்கு முந்திய காலத்தை அக்குவேறு ஆணிவேராய் அனுபவித்துச் சுவைக்க வைத்த ஆச்சரிய பூமி. மட்டுறாலும் முந்திரிக்கொட்டையும் மட்டில்லாமல் உண்டு களித்த மண். புளியந்தீவும் கல்லடிப்பாலமும் நாம் கலகலத்துக் களித்த காத்திரமான காலத்தை கதை கதையாய்ச் சொல்லும். அந்த மண்ணுக்கேயுரிய நளினமான அழகு தமிழைக் கேட்க வேண்டும். என்னை எழுத்தில் ஊக்குவித்த அன்புமணி அங்குதான் இருந்தார்.; அவரையும் பார்க்க வேண்டும். காலையில் கால் வைத்தபோது சீதளக்காற்றும் நனைக்காத தூறலும் பழம் நினைவுகளை மீட்டி வரவேற்றன. முந்தி இருந்ததற்கு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டிராத தெருக்கள். மாலையில் நண்பர்களைக் கண்டு கதைத்து மகிழ வேண்டும். பார்த்து எவ்வளவு நாளாச்சு!

“இரவைக்கு போத்தல் எடுப்பமா ?” .. .. .. கூட வந்த நண்பர் சண்முகநாதன் கேட்டார். இவரைப்பற்றி ஒரு வார்த்தை. என் அண்ணனுக்கு நண்பராயிருக்க வேண்டிய வயது. பிரயாணத்திற்குத் தோதான குதூகல மனிதர். அவருடைய உடனிருப்பில் ஒரு பாதுகாப்பும் அக்கறையும் வளையம் போட்டிருக்கும். அளவிற்கு மீறிய உரிமை எடுத்துக் கொண்டு வா போ என்று ஒருமையிலும் பேசலாம். கோவிக்க மாட்டார்.

கத்தலிக் அச்சகத்தில் வாக்குச்சீட்டின் ‘புரூப்’ திருத்திக் கொண்டிருந்தோம். அவர் பெயர் வாசிக்க நான் சரிபிழை பார்த்தேன்.

“எம். வறனிபா”

“அண்ணன் திருப்பி வாசி”

“எம் வ ற னி பா”

“என்னன்ணை கேள்விப்படாத பேரெல்லாம் வாசிக்கிறாய். இஞ்ச கொண்டா பாப்பம்” .. .. .. வாக்குச்சீட்டில் எம். ஹனிபா என்று சரியாகவே அச்சிட்டிருந்தார்கள். அவருக்கு ‘ஹ’ வாசிப்பதில் கோளாறு. வ ற என பிரித்து வாசித்தார். போயும் போயும் புரூப் வாசிக்க உன்னைக் கூட்டி வந்தனே .. .. .. இப்படித்தான் அன்றைய ஈரமான காலை மட்டக்களப்பில் ஆனந்தமாகத் தொடங்கியது. முழு வேலையும் 4 மணிக்கு முடிய, நண்பர்கள் மூவரை அவர்கள் வீட்டில் சந்தித்து எட்டு மணிக்கு ‘தண்ணீர்தாங்கியடி’ வீட்டிற்கு தண்ணியடிக்க வருமாறு அழைத்துவிட்டு வந்தோம். வீட்டுக்காரர் குமாரசுவாமியும் எங்கள் ஒன்றுகூடலில் சேர்ந்து கொண்டார். இரவு உணவிற்காக முட்டையிடாத கோழியாகத் தெரிந்து, கூரையில் பறந்ததைக் கலைத்துப் பிடித்து சரிக்கிட்டியிருந்தார்.

எட்டரையாயிற்று. காற்றும் மழையும் வந்ததே தவிர நண்பர்கள் வரவில்லை. சாதாரணத்தில் வராமல் விடமாட்டார்கள். என்ன நடந்தது! மேசைகெளரவம் பேணுவதற்காக அவர்கள் கையாலேயே போத்தலைத் திறந்து ‘சியர்ஸ்’ சொல்லித் தொடங்க எண்ணியிருந்தேன். முழுசாக முன்னால் வைத்துக் கொண்டு பொறுத்திருக்க முடியாமல் ‘சண்’ மூடியைத் திருகி ஊற்றினார். முதலாவது சுற்று முடிய ஒன்பது மணியாயிற்று.

“என்னன்ணை காத்தாக் கிடக்கு. புயலடிக்கப் போகுதோ ?

“புயலா ஹா ஹா ஹா”.. .. .. காதலிக்க நேரமில்லையில் பாலையா சிரித்த அதே சிரிப்பு. அடுத்த சுற்று முடியுந் தறுவாயில் கூரைச் சிற்றோடுகள் பறந்து சிதறும் ஒலி கேட்க, குமாரசுவாமி கலவரத்துடன் முற்றத்தில் இறங்கி லைட் அடித்துப் பார்த்துவிட்டுப் பதறினார். புயலேதான்.

“புயலா, கத்தரிக்காய். மலையில நான் காணாத புயலா”.. .. .. சண் மூன்றாவது கிளாஸ் நிரப்பிக் கொண்டார். திறந்திருந்த ஜன்னலைப் பூட்டு;வதற்கிடையில் அதனைப் பெயர்த்துக் கொண்டு போகப் பார்த்தது புயல். முற்றத்து மாமரக்கொப்பு கிளிந்து சரிந்து சடாரென விழுந்தது. அதன் பின்னணியில் தலை சிலுப்பி கரகாட்டம் ஆடும் தென்னைகள். ஊ ஊ ஊ என விண் பறந்த ஊளை ஒலி. விளங்கிவிட்டது. சோலையைப் பாலையாக்க வந்த ஊழிக்காற்றுத்தான்.

புயலைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். சமுத்திரத்து மேல்வானத்தில் உருவாகி சுழன்றடிக்கும் புயலுக்கு ஒரு கண் இருக்கிறதாம். இந்தக் கண்ணைச் சுற்றிச் சுழன்று வருமாம் புயல். குறைந்த அமுக்கமிருக்கும் சுற்றாடலைத் தேடிப் பிடித்து வேகமாக அடிக்குமாம். 120 கிலோமீற்றர் வேகத்தில் அடித்தால் அது சின்னப்புயல். 250ல் அடித்தால் சென்னைத் தமிழ்வழக்கில் சொல்வதானால் ‘சூப்பர் புயல்’. ஒரிசா புயல் – சூப்பர் ரகம். மட்டக்களப்பில் அடித்தது குட்டிப்புயல்.

சமயம் பார்த்து பெருத்தமழை கைகோர்த்துக் கொண்டது. வலையறவுப் பக்கமாய் போன புயல் இனி வராது என்று எண்ணி ஆறுவதற்கிடையில் முன்னிலும் ஆக்ரோசம் கொண்டு சூறாவளியாய் திரும்ப வந்தது. அந்த வரத்து நல்லதற்கில்லை. அரைமணி நேரமாக அடித்த தண்ணி அரை நிமிடத்தில் நீர்த்துப் போயிற்று. சட்டிபானை வாளி ட்றங்குப் பெட்டிகள் நடுவீட்டினுள் இறைந்திருந்தன. பாதுகாப்புக்கென்று அக்கம் பக்கத்திலிருந்து வந்து ஒதுங்கியவர்கள் சொன்னதைக் கேட்கப் பயமாக இருந்தது.

“சமைச்ச சோத்தில வாய் வைக்க முதலே மண்விழுந்து போச்சே. எந்த வெறுவாய்க்கலம் கெட்ட பாவீட முகத்தில முழிச்சமோ”.. .. .. ஒரு கிழவி ஓலமிட்டாள். நெஞ்சில் யாரோ அறைந்தார்கள். இன்றைக்கென்று பார்த்து இங்கு வந்து இறங்கியிருக்கிறோம். திட்டமிட்டு இன்றைக்கென்று எங்களைக் கொண்டு வந்து சேர்த்தது எது ? சகுனம் உண்மையென்றால் எங்களுக்கல்லவா அதை முதலில் காட்டியிருக்க வேண்டும். புறப்பட்டுப் போகாதே ஆபத்து வரப் போகிறது என்று கவனம் காட்டியிருக்க வேண்டும்.

நெற்றிக்குள் மின்னல் வெட்டியது. அடடா, மனைவி சொன்னாளே, முழு வியளம் சரியில்லை என்று முத்தாய்;ப்பு வைத்தாளே கேட்டிருக்க வேண்டாமோ. ஐயா முத்துலிங்கம் வாத்தியாரே நீர் என்னைப் படிப்பித்த குருதான். உமக்கு பென்சன் இன்னும் கிடைக்கவில்லைத்தான். அதற்காக புறப்படும் நேரம் பார்த்து மொட்டைத் தலையோடு தரிசனம் தரத்தான் வேண்டுமா ? பொறு கிழவா உன்னை வந்து கவனிக்கிறேன்.

புயலுக்குப் பின் அமைதி என்று எழுதுவதெல்லாம் சும்மா. எப்படியிருக்கும் என்று காலையில்தான் தெரிந்தது. அழுமூஞ்சி வானம் வீட்டுக்கூரையால் நீக்கமறத் தெரிந்தது. நெளிந்து முறுக்குப்பட்டுக் கிடந்த தகரங்கள் புயலின் முரட்டுத்தனத்தைச் சொல்லாமல் சொல்லிற்று. சோலையாக இருந்த புளியந்தீவு நகரம் சாலையில் விழுந்து கிடந்த அலங்கோலத்தைப் பார்க்கப் புறப்பட்டோம். மட்டக்களப்பு வெட்டைவெளியாகியிருந்தது.

கொளுக்கி ஓடுகள் சிதறிக் கிடந்த கதலிக் அச்சகத்தை எட்டிப் பார்த்தபோது மனேஜர் நாலு சீட்டுகளைக் காட்டினார். அடித்ததற்கு அத்தாட்சியாக அதைத்தான் காப்பாற்ற முடிந்ததாம். பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்ப, சண் மூக்கால் அழுதார். திருகோணமலையிலும் புயலடிச்சதாம். பிள்ளைகள் என்ன பாடோ தெரியேல்லை. நான் எப்படியென்டாலும் வீட்டை போக வேனும்.

“என்னண்டு போறது. பஸ் ஒரு கிழமைக்கு ஓடாதே. நிலைமையை விளங்கிக் கதையண்ணை” என்றேன் நான்.

“பிள்ளையள்ர அருமை உனக்கென்ன தெரியும். நீ சின்னப்பொடியன்”.. .. .. அவர் மூக்கைச் சீறி கண்களால் கொட்டினார். பிள்ளைகளென்றால் மனுசனுக்கு உயிர்!

மாலையில் குமாரசுவாமியின் மூத்த குமாரன் தோளில் ஒரு சாக்கோடு வந்தான். அறைக்குள் இறக்கிவிட்டு தந்தையை இரகசியத்தில் கூப்பிட்டான். மளிகைச்சாமான் இலகுவில் கிடைக்க முடியாத இந்த பஞ்ச நேரத்தில் எங்கேயோ திரிந்து கஷ்டப்பட்டு அரிசி பருப்பு வாங்கி வந்திருப்பான். குடும்பப் பொறுப்புள்ள பிள்ளை

“கல்லடி சாராயக்குதம் புயுலுக்கு அடியோடு விழுந்து போச்சுது. சனம் எல்லாம் அள்ளிக் கொண்டு போகுது. கிடைச்சதை எடுத்துக் கொண்டு வந்தனாங்கள்”.. .. .. பையனின் முகத்தில் கடும் உழைப்பின் பெருமிதம் தெரிந்தது.

இரவாயிற்று. அடுப்பில் கருவாட்டுக் குழம்பு கொதித்து மணந்தது. திருமலையில் சில கிராமங்களை புயல் தாக்கியிருக்கிறது. நகரத்திலும் கரையோரங்களில் சேதம் ஏற்பட்டிருக்கிறது என ‘பற்றி’ றேடியோ செய்திகள் சொல்லிற்று. சண்ணிடம் எப்படி இதனைச் சொல்வது! மனுசன் உடனேயே போக வேனும் என்று ஒற்றைக் காலில் நிற்கப் போகுது. நான் அறைக்குள் போனேன். மேசையில் போத்தல் திறந்து அரைவாசிக்கு வந்திருந்தது.

“நடந்தென்டாலும் வீட்டை போறது நல்லது அண்ணன். போவமா ?” நான் கேட்டேன்.

“நீ தேவைக்கு மிஞ்சி பயப்பிடுறாய். இது ஊரோடொத்த விசயம். எங்கட கையில என்ன இருக்கு. எல்லாம் அவன் செயல்.”.. .. .. சண் சர்ரென்று கிளாசை நிரப்பிக் கொண்டே சொன்னார். மூலையில் இன்னும் நாலைந்து போத்தல்கள் அடுக்கியிருந்தன. அவை காலியாகும் வரை அவரை அசைக்க முடியாது. குழந்தைகளாவது குட்டிகளாவது!

ஆறாவது நாள் மீண்டும் அவர் முனகத் தொடங்கினார். அறை மூலையைப் பார்த்ததும் விசயம் தெளிவாயிற்று. போத்தல்கள் காலி. வீட்டுக் கவலையை மறக்க வேறென்ன செய்யிறது என்றார். இனி ஒரு நிமிடமும் நிற்கமாட்டார் என்று புரிந்தது. நாளைக்காலை நடந்தாவது போவதென்று தீர்மானித்த பின்தான் ஓய்ந்தார்.

சூறாவளிச் சூழ்நிலையிலும் ஒரு துளியேனும் முகம் சுளிக்காமல் ஒரு வாரமாய் ஆக்கிப் போட்டு விருந்தோம்பிய குமாரசுவாமியின் மனைவிக்கு முக்கியமாய் நன்றி செலுத்திவிட்டு அடுத்தநாள் நடக்கத் தொடங்கினோம். தாண்டவன்வெளிக்கப்பால் பஸ்கள் தாண்ட முடியாதென பஸ் ஸ்ராண்டில் சொன்னார்கள். ரயில்வே ஸ்டேசனில் ஒருதரம் விசாரித்துப் பார்ப்போம் என்றார் சண். ஸ்டேசன் மாஸ்றர் முகங் கழுவாமல் காய்ந்து போயிருந்தார். சண் அவரிடம் தமிழிலேயே கேட்டிருக்கலாம். நாங்க சாகக் கிடக்கிறம் உங்களுக்கு கண்டறியாத இங்கிலிஸ் என்று திட்டு விழுந்தது.

வெறுங்கையாக நான் நடந்தேன். சண் பாரமான பையோடு பக்கமாக நடந்தார் .. .. .. “என்னண்னை இந்தப் பாரம் தேவையா ? நடக்கிறது கஷ்டமல்லோ.”

“நான் தூக்குவன். நல்லெண்ணை ஊத்தி வைக்க உதவும்.”.. .. .. உள்ளேயிருந்தது காலி வெள்ளைச் சாராயப் போத்தல்கள்!

நடையில் வாழைச்சேனைக்கு வந்துசேர எனக்கு முழங்கால் வீங்கி விட்டது. ரயில்வே ஸ்டேசன் பக்கம் ரயில் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. இப்போது எப்படி ரயில்! மட்டக்களப்பு ஸ்டேசனிலிருந்து ஒரு பரீட்சார்த்த ஓட்டம் விட்டவர்களாம். வீங்கிய காலைக் கவலையுடன் பார்த்தேன். சரியாக விசாரித்து விட்டு நாளை புறப்பட்டிருந்தால் கால் வீங்கியிருக்காது. புயலைச் சந்திக்கவென நாளைக் குறித்து வைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். விதியை வெல்ல யாரால் முடியும்!

அடுத்தநாட் காலை எல்;லைக் கிராமமான கதிரவெளிக்கு வழியில் கிடைத்த லொறியில் போய் இறங்கினோம். அதற்கு அப்பால் போக முடியாது. இங்கு புயல் அடிக்க மலைநாட்டில் வெள்ளம் போட்டிருக்கிறது. மேவிய வெள்ளம் வெருகல் ஆற்றை மூடி பக்கத்துக் கிராமங்களை விழுங்கி கழுத்தளவில் ஓடிக்கொண்டிருந்தது. தெரு எது காடு எது எனக் கண்ணால் கண்டு பிடிக்க முடியாத காட்டாறு. அந்தக் கரைக்குப் போய் சேர வேண்டுமானால் நாலைந்து பேர் சேர்ந்து கைகளை அகலப்பாட்டில் பிணைத்துக் கொண்டு அவதானமாக தெருவில் நடக்க வேண்டும். காலால் தடவித்தான் வழியை உணர முடியும். கையை விட்டால் காட்டாறு கொண்டு போய் விடும். ஈஸ்வரா, இதென்ன சோதனை! போகாதே என்று ஒரு குறி காட்டினாய் நீ. அதைப் புறக்கணித்து வந்ததற்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

சட்டை லோங்ஸ் செருப்பு எல்லாம் மூட்டையாகச் சுற்றி தலையில் கட்டிக்கொண்டு பிணையல் எருமைகளாய் நாலு பேர் வெள்ளத்தில் இறங்கினோம். அப்போதும் போத்தல் பையை சண் கைவிடவில்லை. கழுத்தின் இருபக்கமும் கிழித்துக் கொண்டு போனது வெள்ளம். எங்களைப் போலவே இணைந்து வந்த நாலு பேர் எதிர்ப்பட்டனர்.

“இன்னும் எவ்வளவு தூரம் போக வேனும் ?”

“ஒரு மைல் போனா திட்டி வரும். அங்கிருந்து வள்ளத்தில வெருகலைக் கடக்கலாம்.” .. .. .. எங்களுக்கு மூச்சு வந்தது.

“ஆ இன்னொரு விசயம். வழியில ஒரு உடைஞ்ச பாலம் வரும். வெள்ளத்தில ஒதுங்கின ஒரு முதலை நிக்குதாம். பாத்துப் போங்கோ.” .. .. .. பாலத்தைக் கடந்து தப்பி வந்துவிட்ட தெம்பில் அவர் சொல்லிக் கொண்டே போனார்.

முதலையா! சப்த நாடியும் ஒடுங்கிப் போயிற்று. நீருக்குள் கால்கள் நடுங்கிற்று. வெள்ளத்தில் மிதந்து வரும் மரக்கிளைகள் எல்லாம் முதலை போலவே தோன்றின. செய்த பாவங்களுக்கு மத்தியிலும் கொஞ்சம் புண்ணியமும் இருந்திருக்க வேண்டும். இரக்கமான அந்த முதலை முகம் காட்டவில்லை. வள்ளத்தில் வெருகல் ஆறு கடந்து கிளிவெட்டி போய்ச் சேரும் வரை முதலைப் பயம் கூடவே வந்தது.

காலையிலிருந்து வெறும் வயிறு. கிளிவெட்டிச் சந்தியில் உண்டது செரிக்க மரநிழலில் உலாத்தியபடி பல்லுக் குத்திக் கொண்டிருந்த தெரிந்த ஆசிரியர் ஒருவர் என்ன புயலுக்குள் அம்பிட்டிட்டாங்க போல என்று கேட்டார். ம். இதுவும் ஒரு காலந்தான். வந்த ஆத்திரத்தில் நாராயணசுவாமி சொன்னதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். உனக்கு உனக்கு வந்தாத்தான் தெரியும். நாராயணசுவாமி தீர்க்கதரிசி. அவன் வாயில் சர்க்கரை அள்ளிப் போட வேண்டும்.

கடையில் ஒரு வடையைக் கடிக்கலாம் என்று நினைப்பதற்குள் கடைசி லோஞ்சைப் பிடிக்க நின்ற கடைசி பஸ் உறுமியது. அதைவிட்டால் அன்று இரவு மூதூரில் தங்கவேண்டிவரும். பசிக்களையோடு மூதூர் துறைமுகத்தில் இறங்க கடைசி லோஞ்ச் புறப்படத் தயாராக இருந்தது, பயங்கரமானதொரு பயணம் முடிவிற்கு வந்து விட்டது. இன்னும் ஒரு மணி நேரந்தான். தாய்மண்ணில் கால் வைத்துவிடலாம். போனதும் எல்லாத்தையும் கழட்டியெறிந்து போட்டு பாயில் விழ வேனும். நாலு நாளைக்கு எழும்பவே கூடாது.

புயல் ஓய்ந்தாலும் கடல் ஓயாதாம். சொன்னவருக்கு தங்கச்சங்கிலி மாட்ட வேண்டும். தூரத்திலிருந்து பனை உயரத்திற்கு கிளம்பி கூராக வளைந்து ஓடி வரும் அலையைப் பார்க்க நெஞ்சைக் கலக்கியது. வெளிய நிக்காம எல்லாரும் உள்ள போங்க என்று ஒருவன் கத்தினான். படகுகள் பாதாளமலைப் பக்கமாகப் போய் திருமலை துறைமுகத்தை அடைவதுதான் வழக்கம். பாதாளமலையை நெருங்கவே முடியவில்லை. ஒவ்வொரு அலையும் படகை விழுங்குவது போலவே பாய்ந்து வந்தது. புயலே பரவாயில்லை போலிருந்தது. நான் படகிற்குள்ளே இறங்கினேன். எஞ்சினுக்குப் பக்கத்தில் சிறிய இடம் கிடைத்தது. கடைசிக் கந்தாயம். நடக்கிறது நடக்கட்டும். இனியும் பயந்து சாக முடியாது. ஒருமுறைதான் சாக முடியும். கண்களை இறுக மூடிக் கொண்டேன். இறைவா, எல்லாம் ஆனவரே அளவற்ற வீரியத்தையும் எண்ணிறந்த பராக்கிரமத்தையும் உடையவர் நீங்களே. அனைத்திலும் நன்கு வியாபித்திருக்கிறவரும் நீங்களே. வாயு வருணன் அக்கினி ஆகிய எல்லாம் ஆனவரும் நீங்களே. உங்களைத் தவிர வேறு கதியேயில்லை.

டாசல் நாற்றம் மூச்சையடைத்தது. சத்தி தொண்டை வரை வந்து விட்டது. வீட்டுக்குப் போகிற அவசரத்தில் கடல் கொந்தளிப்பை பாராமல் வந்தது முட்டாள்த்தனம். மூதூரில் எழுத்தாள நண்பர் வ.அ. இராசரெத்தினத்தின் வீட்டில் இரவு தங்கியிருக்கலாமே!

திருமலை ஜெற்றியில் படகினை அணைத்தார்கள். எப்படி வந்து சேர்ந்தோமென்று யோசிக்க முயலவில்லை. தெய்வச்செயல்! பசிக்களையால் பேசுவதற்கு உயிரில்லை. கண் காட்டிவிட்டு வெறும் போத்தல்களை பத்திரமாய் சொந்த மண்ணில் கொண்டு வந்து சேர்த்த ஆறுதலில் தன் பாதையில் நடையைக் கட்டினார் சண்.

வீட்டு வாசலில் ஒரு சோடிச் செருப்புகள் தெரிந்தன. யாராவது விசாரிக்க வந்திருப்பார்கள். கதவைத் திறந்த மனையாள் ஆச்சரியத்தில் விழித்தாள்.

“தம்பி கொண்டு வந்த படகிலதானே வந்தனீங்கள் ?”

“படகா!!”

“உங்களிட்ட இருந்து ஒரு தகவலும் இல்லை. பஸ்ஸும் ஓடேல்லை. இன்று காலமைதான் படகு ஒழுங்கு பண்ணி கடலால் மட்டக்களப்பிற்கு தம்பி போனது”

கடவுளே! விதி வலிது. விதி வலிது! எல்லாம் எழுதிய எழுத்துப்படியே நடக்கிறது.

தம்பிக்காரனை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்தாள் மனைவி .. .. .. “அதுகள் உங்களைத் தேடி அங்க அலையப் போகுதுகள் பாவம் அவனுக்கு நீந்தவும் தெரியாது.”

“சரி சரி .. .. .. ஆர் வந்திருக்கிறது ?”

“முத்துலிங்கம் மாஸ்டர்”

கிழவா நீயா .. .. .. வீட்டிற்குள் வர, வாத்தியார் எழுந்து வந்து என்னைக் கட்டிப் பிடித்தார்.

செய்யிறதையும் செய்து போட்டு .. .. .. முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. என்ன செய்வது பார்த்துத் தொலைத்தேன். கண்களை நிறைத்துக் கொண்டு கன்னங்களில் விழத் தயாராக இருந்த கண்ணீர் மொட்டுகள். அவருக்குப் பேச்சுக் குழறியது. குழந்தை போல் தேம்பினார்.

எனது எட்டுநாள் கோபம் எங்கு பறந்தது! மனப்புயல் மாயமாய் மறைந்து போயிற்று.

இந்தக் குழந்தையா எனக்கு கெட்ட சகுனமாக வந்தது! அது என்ன செய்யும் பாவம்!

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்