குழிவு

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

மதியழகன் சுப்பையா


[1]
கடற்கரையின் இளங்குளிர் காற்று அறையின் அத்தனை பொருட்களையும் சில்லிடச் செய்து கொண்டிருந்தது. வீட்டின் வாசல்கள் மற்றும் ஜன்னல்களின் அருகாமைகளைத் தவிர மற்ற இடங்களனைத்திலும் மெல்லிய இருள். படுக்கையறையிலிருந்து மருந்தும் மலமும் கலந்த நெடி. நீண்ட நாட்களாக மாற்றப்படாத மெத்தைவிரிப்பு. கசங்கி மங்கி, மேலும் அழுக்கு சேர்க்கையால் இன்னும் அடர்த்தியாகியிருந்தது போர்வை. சருமப் போர்வைக்குள் நரம்புகள் சுற்றப் பட்ட எழும்புக்கூடாய்க் கிடந்தாள் கவிதா. அவளது கண்களில் மட்டும் அசைவு இருந்தது. ஈரம் இருந்தது. ஜீவன் இருந்தது.
ஈரம் நிறைந்த அந்தக் கண்கருவிழியின் அசைவுக்கும் அதிகமாய் அதனுள் ஒரேயொரு பிம்பம் மட்டும் அசைந்தாடிக் கொண்டிருந்தது. அவ்வுருவம் கவிதாவின் கணவன் நரேந்திரன். மலக்கிண்ணத்தை கவிதாவின் கால்களுக்கிடையிலிருந்து விலக்கினான் நரேந்திரன். சீலைத் துணியொன்றாலும், பிறகு பிளாஸ்டிக் கப்பில் இருந்த நீரைத்தொட்டு அவளது ஆசனவாயை துடைத்தான். சாறிழந்த மாம்பழம்போல் சூம்பிப் போயிருந்தது அவளது பிருஷ்டம். துடைக்கையில் தோல் சுருண்டு துணியோடு இழுபட்டது.
படுக்கையறையின் வாசல்பக்கத்தையே வெறித்துக் கொண்டிருந்தன அவ்விழிகள். நரேந்திரன் மலக்கிண்ணத்தையும் துணித் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நகர்ந்தான்.
தூரத்தில் மாநகர மின்ரயிலின் தடதட ஓசையும் பிளிறல் சத்தமும் கேட்டது. கனரக வாகனங்களின் ஹாரன் ஒலியும் கலந்துகொண்டது. பால்காரர்களும் பாவ்காரர்களும் மாறிமாறி தங்கள் சைக்கிளின் மணியை ஒரேமாதிரியான தாளத்தில் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.
நீர்விட்டு சுத்தப்படுத்திய மலக்கிண்ணத்தை துணியால் துடைத்து கவிழ்த்தினான் நரேந்திரன். இரண்டு காலுறைகள், இரண்டு பைஜாமாக்கள் மற்றும் கனத்த சட்டைக்கு மேல் கம்பளி ஸ்வெட்டர், தலையில் மப்ளர் கட்டி அதன்மேல் குரங்குகுல்லாயும் போட்டிருந்தான். நரேந்திரனின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததன. எழுபத்மூன்று வயதுகள் கடந்த விரல்கள் எதனால் இப்படி நடுங்குகின்றன. வயோதிகத்தாலா இல்லை டிசம்பர் மாத குளிரினாலா? தெரியவில்லை. இரண்டாலும் கூட இருக்கலாம்.
வீட்டின் முன் பகுதியில் பராமரிக்கப் படாமல் செடியும் புதருமாகக் கிடந்தது. பின்பக்கமும் அப்படித்தான். தாதர் கடற்கரைக்கு அருகே சின்னதாக அமைந்திருந்தது அந்த அழகு பங்களா. ஆள் அரவமற்று அமைதியாகவே இருந்தது. பங்களாவின் இரு பிரிவு கேட் துருவேறி இயக்கமில்லாமல் இருந்தது. கேட்டின் ஒருபுறம் ஒருவர் மட்டும் போய்வரும் இடைவெளி விட்டு திறந்திருந்தது. கேட்டின் இரண்டு பிரிவுகளும் மண்ணில் பதிந்து நகர்த்த இயலாத நிலையில் இருந்தன. முற்றமெங்கும் வஞ்சகமில்லாமல் வளர்ந்து கிடக்கும் புற்கள்.
பங்களாவின் காம்பாவுண்டுக்குள் பறவைகளின் சத்தம் எப்பொழுதுமிருக்கும். அடர்ந்த வளர்ந்த ஒரு கொய்யாமரம், ஒரு செம்பருத்தி, கடந்த நாற்பது ஆண்டுகளில் ஒருமுறை கூட காய்க்காத மாமரம். மற்றும் மண்டிக் கிடக்கும் புதர்கள்.
[2]
’’ என்னப்பா நரேன் வயசு முப்பத தாண்டிட்டு, இன்னும் எவ்வளவு நாள்தான் ஜாலி பண்ணலாமுன்னு இருக்க?’’ விஸ்வாஸ் கையிலிருந்த விஸ்கி கோப்பையில் ஐஸ் கட்டிகளை நிரப்பிக் கொண்டே கேட்டான். நரேந்திரனுக்கு முப்பத்திரெண்டு வயதுகள் ஆகி விட்டதை யாரவது இப்படி சுட்டிக் காட்டும் போதுதான் உணர்வான்.
பாம்பே சயின்ஸ் கிளப் என்ற அரசுசாரா நிறுவனத்தின் நிதிச் சலுகையில் ஆய்வுகளை செய்துவந்தான் நரேந்திரன். தனிமங்கள் குறித்த ஆய்வில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தான். மெண்டலீவ் பீரியாடிக் அட்டவணை மற்றும் லாங்பார்ம் அல்லது மார்டன் பீரியாடிக் அட்டவணையைத் தொடர்ந்து கூட்டுப் பொருட்களின் ஒத்தியல் அட்டவணை ஒன்றை உருவாக்கும் தீவிர முயற்சிலும் தனிமச் சேர்க்கையால் ஆக்கப் பொருட்களை உருவாக்கும் தீவிர முயற்சியிலும் ஈடுபட்டிருந்தான்.
வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியையும் ஆராய்ச்சிக்கென அர்ப்பணித்திருந்தான் அவன்.
திருமணம் செய்து கொள்ள நரேந்திரனுக்கும் ஆசைதான். ஆனால் தனது லட்சியப்பாதையில் குடும்ப வாழ்க்கை குறுக்கீடாக இருந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தான். புரிதலுடன் கூடிய நல்லதுணை கிடைத்தால் நல்லாதான் இருக்கும். ஆனால் அதற்காக முனைந்து தேடிக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது.
எப்பொழுதும் ஆய்வுக் கூடமும், ஆய்வு நூல்களுமாக கிடக்கும் நரேனுக்கு வேறு எந்த விஷயத்திலும் கிஞ்சித்தும் விபரமில்லை எனலாம். அவனது கல்யாணம் குறித்து யாராவது கேட்டால் செய்துக்கணும்’ என்று ஒற்றை வார்த்தையை புன்னகையுடன் பதிலாய்ச் சொல்வான். மேலும் கேள்விகள் தொடரும் பட்சத்தில் ஒரு அகன்ற புன்னகையை அப்படியே கேள்வி கேட்டவர் விலகிப் போகும் வரை வைத்திருப்பான், அவ்வளவுதான்.
அவனது அம்மாவைத் தவிர வேறு பெண்களிடம் அவன் பெரிதாய் பேசியதுகூட கிடையாது. மேலும் ஆராய்ச்சிகளில் தனக்குள்ள ஈடுபாட்டின் காரணமாக தன்னால் குடும்ப வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கிவிட முடியும் என அவனுக்குத் தோன்றவில்லை. ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவளுக்கு நேரம்ஒதுக்க முடியாமல் துரோகம் செய்யவும் விருப்பமில்லாதிருந்த்து அவனுக்கு.
பாம்பே சயன்ஸ் கிளப் சார்பாக பாரம்பரிய தினக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. நரேனுக்கு தனது நண்பர்களின் அரட்டையில் ஆர்வமில்லாமல் கையில் கோக்கம் சர்பத்துடன் ஓரமாக நின்றபடி வானத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘ நமஸ்கார்’ என்று அவனை இயல்புக்கு இழுத்தது ஒரு குரல். எதிரே ஒரு இளம்பெண் அழகே உருவாய் நின்று கொண்டிருந்தாள். இதுவரை அப்படியோரு பெண்ணை கண்டதில்லை.
பதிலுக்கு ‘நமஸ்கார்’ என்று கைக்குப்ப முயன்றான். கையிலிருந்த கோக்கம் சர்பத் குலுங்கிச் சிந்தியது. ’நீங்கள் மிஸ்டர் நரேந்திரன் தானே ?’ என்று கேட்டாள் முகம் மலர. ‘ஆமாம்’ என்றான் சிறிய தாமதத்திற்குப் பின். அவனுக்கு மீண்டும் மீண்டும் ஆமாம் ஆமாம் என்று சொல்லவேண்டும் போல் இருந்தது. அவன் இப்படி தாமதமாய் பதில்சொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கே வியப்பாகப் பட்டது. ‘’என் பெயர் கவிதா. நமது சயின்ஸ் கிளப் சார்பாக வரும் பத்திரிக்கையில் வடிவமைப்பாளராக சேர்ந்துள்ளேன்’’ என்று அவன் பேசக் காத்திருந்தாள். ‘’ஓ! அப்படியா! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி’’ என்றான் அதே காலதாமதத்தில்.
அவனுக்குள் மனப்பாடமாய் இருந்த மூலக்கூறு வாய்ப்பாடுகளும், ஆய்வுக் குறிப்புகளும் நீர் பட்டு சிதரும் காகிதத்தின் மைக் குறிப்புகளைப் போலாகிக் கொண்டிருந்தது. அவன் புன்னகை மாறாமல் அவள் மீது பார்வையைப் பதித்து வைத்திருந்தான்.
கவிதாவுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. விலகிப்போகத் தீர்மானித்து செயற்கையாய் ஒரு புன்னகையை உதிர்த்து. ‘’பழைய இதழ் தொகுப்புகளில் உங்கள் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். அப்படித்தான் உங்களை எனக்குத் தெரியும்’’ என்று கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள். முதல் இரண்டுமுறை பேசிய அதே காலஇடைவெளியில். ‘’அப்படியா? நன்றி’’ என்று பதிலளித்தான்.
‘’சரி, நான் கிளம்புகிறேன்’’ என்று புருவங்களை மேலே தூக்கி மிக அழகான ஒரு புன்னகையுடன் அவனைப் பார்த்தபடியே பின்னோக்கி மூன்று அடிகள் நடந்து திரும்பினாள். வரம் கொடுத்து விட்டு விலகும் தெய்வத்தைப் போல் நரேந்திரனுக்குள் ஒருவித ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டு விலகிப் போய்க்கொண்டிருந்தாள்.
நரேன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல் அவளைத் தொடர்ந்து. ‘’ மேடம், மேடம்’’ என்று மென்மையாய் அழைத்தான். கவிதா திரும்பினாள். இதழில் புன்னகை மாறாமல் விழிகளால் என்னவென்று கேட்டாள். ‘’ மன்னிக்கனும், நான் கொஞ்சம் மூடி. சட்டுன்னு யார் கிட்டயும் பேசிட மாட்டேன். நீங்க எங்க தங்கியிருக்கீங்க?’’ என்று கேட்டான். அவனது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. வார்த்தைகளில் வறட்சி. சுவாச சத்தம் அவளுக்கும் கேட்டுக் கொண்டிருந்தது.
’ஒரு நிமிஷம்’ என்று கெஞ்சி விட்டு சிறு துள்ளலுடன் மறைந்தாள். கையிலிருக்கும் சர்பத்தை ஒரு மிடறு குடித்தான். தப்பாக எதாவது கேட்டு விட்டோமோ என்று பயம் வேறு. கண்ணுக்கெட்டும் தூரம் வரை துழாவினான். குடித்த ஒரு மிடறு, திடப் பொருளாய் தொண்டைக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. போன வேகத்தில் திரும்பி வந்திருந்தாள் அவள். கையிலிருந்த ஒரு சிறு அட்டையை அவனிடம் கொடுத்தாள். ‘ இதுதான் என் முகவரி. பக்கத்திலதான் மாட்டுங்காவில் இருக்கேன். முடிஞ்சா வாங்க’ என்று கிளம்ப ஆயத்தமானாள்.
பவுண்டன் பேனாவால் அழகாய் எழுத்தப் பட்டிருந்த முகவரி அச்சுக் கொர்த்து வைத்தது போல் இருந்தது. ‘’ நான் தான் எழுதினேன். காலிகிராஃபில ஆர்வம் உண்டு’ என்று தனது புன்னகைகளில் சிறப்பானவற்றை தேர்ந்து வழங்கிக் கொண்டிருந்தாள். ‘’ வேறு எதில் ஆர்வம் உண்டு?’’ கேட்டான் நரேன். அவளைப் பேச விட்டுக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமாய் இருந்தது அவனுக்கு.
நரேனின் பார்வையும் பேச்சில் அவன்காட்டும் ஆர்வமும், உடலசைவில் ஒருவித மாற்றமும், வார்த்தைகளில் குழைவும் என அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்துகொண்டிருந்தாள் கவிதா. தன் அழகில் ஆண்களுக்கு கிறக்கம் உண்டாவதை அவள் கண்டிருக்கிறாள். ஆனால் அது அவளுக்கு அசவுகரியத்தையே கொடுத்திருக்கிறது. ஆனால் நரேன் அவளைப் பார்த்த பார்வை புதுமையாய் இருந்தது. அவன் அறிவாற்றலைப் பற்றி படித்திருந்தாலும். மனம் ஒரு குழந்தையாக இருப்பதை இந்த சின்னப் பொழுதில் புரிந்து கொண்டாள்.
’’இலக்கியத்தில் ஆர்வம் உண்டு. கவிதையில் தணியாத ஈர்ப்பு’’ என்றாள். ‘’உங்கள் பெயர் கூட கவிதா தானே, புனைப்பெயரா?’’ என்றான் நரேன் கொஞ்சம் இயல்பாக. ‘‘இல்லை. எங்க தாத்தா வைச்ச பேரு. அது என் இயல்புக்கு சரியாயிட்டு’’ என்று அவன் அவளை, அவள் பேசுவதையும் அசைவதையும் ரசிப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கவிதாவின் தோழி ஒருத்தி வந்து அழைத்தபோது தலையசைத்து விட்டு அவளுடன் கிளம்பினாள். கண்டிப்பாக வீட்டிற்கு வரும்படி அவனைக் கேட்டுக் கொண்டாள். அவள் விலகிப் போனபின்னும் அவளது பிம்பம் அங்கேயே நிழலாடுவதைப் போல் உணர்ந்தான் நரேன்.
மெதுவாய் நகர்ந்து ஒரு நாற்காளில்யில் அமர்ந்து கடந்த பதினைந்து நிமிடங்களை அசை போட்டுக் கொண்டிருந்தான்.
[3]
அலுமினிய வாளியொன்றில் சில துணிகள் ஊற வைக்கப் பட்டிருந்தன. அந்த வாளி அலுமினிய வாளியா இல்லை துத்தநாக தகர வாளியா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அதன்மேல் அழுக்கும் சோப்புத்தூளும் காய்ந்து திரண்டிருந்தது.
வாளிக்குள்ளிருந்த துணிகளை எடுத்து கருப்பு கடப்பா கல்லில் போட்டு ஒரு உருளையான கட்டையால் அடித்துக் கொண்டிருந்தான். கட்டையானது துணிகளுக்கும் ஓங்கும் கைகளுக்குமிடையில் ஏறியிறங்கிக் கொண்டிருந்ததே தவிர அடிப்பது போலில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஊறவைத்த துணியாக இருக்கலாம். அழுக்கு பிழிந்து வழிந்து கொண்டிருந்தது. மற்றொரு பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் துணிகளைப் போட்டு அலசினான். பின் ஒவ்வொரு துணியாய் பிழிந்தான். துணிகளை இரண்டாய் மடித்து இரண்டு முலைகளில் பிடித்துக் கொண்டு பிழிந்தபோது துணிகளை விட அவனே அதிகமாய் திருகினான்.
மீதியான தண்ணீரை முதுகில் பாரம் ஏற்றிக் கொண்டவனைப் போல் குனிந்து தூக்கியபடி செடிகளடர்ந்த பகுதிக்கு வந்து ஊற்றினான். நீரைத் தெளித்துக் கொண்டிருக்கும் பாவனையில் அவனது உடல் அசைந்து கொண்டிருந்தது. ஆனால் வாளி நீர் முழுவதும் ஒரே இடத்தில் ஊற்றப் பட்டிருந்தது.
இத்தனை பெரிய ஆய்வாளனாக இருந்தும் செடிகளுக்கு நீர் தெளிக்கும் வசதியை கண்டு பிடித்து பயன்படுத்தவில்லை என்பதில் நரேனுக்கு வருத்தமே. செடிகளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு தொடர் இருமல் வந்து அவனது உடலை உலுக்கியது. தொடரும் இருமலை கட்டுப் படுத்திக் கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. வாயிலிருந்து எச்சில் ஏனோ தானோவென்று வளர்ந்து வெளுத்துப் போயிருந்த அடர்ந்த தாடி வழி ஒழுகி ஸ்வெட்டரில் ஊறிக் கொண்டிருந்தது. இருமலின் வீர்யத்திற்கு தக்கபடி நெஞ்சில் உஷ்ணம் பரவிக் கொண்டிருந்தது. வாளியை ஊன்றிக்கொண்டு உட்கார முயன்றான். சிறிதுநேரம் குனிந்து நின்று இருமிக் கொண்டிருந்தான். கால்களை மடக்கிக்கொண்டு அவனால் உட்கார முடியவில்லை. எப்படியோ உட்கார்ந்து கொண்டான்.
மெல்ல மெல்ல இருமல் தணிந்தது. பூமியின் மெல்லிய வெப்பத்தை அவனால் உணர முடிந்தது. நெஞ்சில் உதித்த ஒருவித உஷ்ணம் அடிவயிறு வரை பரவிக் கொண்டிருந்தது. தொண்டையில் ஒருவித அரிப்பையும் எரிச்சலையும் உணர்ந்தான். வாயில் ஊறிய எச்சிலை விழுங்கி தொண்டையை நனைத்துக் கொண்டிருந்தான். கண்களும் நிரம்பி விட்டிருந்தது. வலது கண்ணையும் இடது கண்ணையும் முறையே வலது மற்றும் இடது தோள்களில் அழுத்தி பிழிந்து துடைத்துக் கொண்டான்.
[4]
ஞாயிற்றுக்கிழமையின் பொன் மாலைப்பொழுது. மத்திய மாதுங்காவின் பூக்கடை வீதி தொடங்கி மகேஸ்வரி பூங்கா வரை மக்கள் ஆங்காங்கே மெதுவாய் நகர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. டாக்சியிலிருந்து இறங்கினான் நரேன். பிரிந்தாவன் பில்டிங் எங்கே என்று டாக்சி டிரைவரிடமே விசாரித்தான். எதிர்த்திசையில் மூன்றாவது கட்டடத்தைக் காட்டினார் டிரைவர்.
சாலையைக் கடந்து அந்த நான்கு அடுக்கு கட்டடத்தின் முதல் மாடியில் ஆறாம்எண் வாசலை அடைந்தான். கதவு திறந்திருந்தது. எப்படிக் கூப்பிடுவது என்று தயங்கியபடி, தனது கையில் வைத்திருந்த பெரிய மிட்டாய் டப்பாவை இடது வலது என்று மாற்றிக் கொண்டிருந்தான். வீட்டிற்குள்ளிருந்து கவிதா ‘’ஹல்லோ மிஸ்டர் நரேந்திரன், வெல்கம்’’ என்று மகிழ்ச்சிப் பெருக்கில் கத்தினாள்.
வருக! வருக! என்று அழைக்கும் பாவனையில் அவனை உள்ளே அழைத்து. சோபாவில் உட்காரச் சொன்னாள். ‘’இது தான் என் அப்பா விஸ்வநாதன்’’ என்று தனது தந்தையை அறிமுகப்படுத்தினாள். அவரும் படித்துக் கொண்டிருந்த ஆங்கில புத்தகம் ஒன்றை குப்புற வைத்துவிட்டு நமஸ்கரித்தபடி அவன் எதிரில் உட்கார்ந்துகொண்டார்.
‘’அம்மா..’’ என்று கூவியபடி உள்ளே ஓடினாள் கவிதா. கவிதாவைக் கண்டதும். கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது நரேனுக்கு. இப்பொழுதும் அவள் உள்ளேஓடிப் போகும் அழகையே பார்த்துக் கொண்டிருந்தான். கவிதாவின் அப்பா எதிரில் இருப்பதற்கு மரியாதைகொடுத்து அவர்பக்கம் திரும்பி புன்னகைத்தான்.
‘‘உங்கள சந்திச்சதா கவிதா சொன்னா. உங்க ஆய்வுக் குறிப்புகள் பற்றி நானும் படிச்சிருக்கேன். நல்ல முயற்சி. கீப் இட் அப்’’ என்று மிக அழகான ஆங்கில உச்சரிப்பில் சொல்லி புன்னகைத்தார். பிரிட்டிஷ் கால படிப்பும் ஆங்கிலயேர் ஆட்சியின்போதான பணியும் அவர் மொழியை அப்படி பழக்கி வைத்திருந்தது.
கவிதா தட்டில் பலகாரங்களையும், இரண்டுவகை பழத் துண்டுகளையும் நிரப்பி ஒரு முக்காலியை இழுத்து அப்பாவுக்கும் நரேனுக்கும் இடையில் வைத்தாள். இப்பொழுது அவள் முகம்கழுவி ஒரு மெல்லிய அலங்காரம் செய்திருந்தாள். பருத்தி சேலை உடுப்பில் பார்க்க இன்னும் அழகாய் இருந்தாள்.
சேலை தலைப்பில் கையைத் துடைத்துக்கொண்டு கவிதாவின் அம்மா வரவேற்பறை வந்துசேர்ந்தாள். நரேனை கைகூப்பி வரவேற்றாள். கவிதாவின் புன்னகையும், பேசும் கண்களும் அவளது அம்மாவின் ஆசி என்பது நரேனுக்கு விளங்கிற்று.
கவிதா மீண்டும் உள்ளே ஓடிப்போனவள், நால்வருக்கும் காப்பி எடுத்துக்கொண்டு திரும்பிவந்தாள். ‘’எங்கயாவது கிளம்பிக்கிட்டிருந்தீங்களா?’’ நரேன் கேட்டான். ’’இல்லையே’’ என்று மூன்றுபேரும் கோரசாக சொன்னார்கள்.
நரேனின் குடும்பம் பற்றியும் உடன் பிறந்தவர்கள் பற்றியும் கவிதாவின் அம்மா கேட்டுக் கொண்டிருந்தாள். அவனது ஆய்வுப் பணிகள் மற்றும் நிதிஉதவிகள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார் கவிதாவின் அப்பா. முழு ஆயத்தத்துடன் தேர்வுக்கு வந்திருக்கும் மாணவனைப் போல் தடுமாற்றமின்றி பதில்சொல்லிக் கொண்டிருந்தான் நரேன்.
பார்வைகளால் கவிதாவிடம் எதையோ சொல்ல முயற்சித்தும் கொண்டிருந்தான் நரேன். தோட்டாக்கள் தீர்ந்த துப்பாக்கியைப் போல் அம்மாவும் அப்பாவும் கேள்விகள் தீர்ந்து அமைதியான நிலையில் திடீரென திட்டமிட்டிருந்தபடி ‘’ எனக்கு கவிதாவைப் பிடித்திருக்கிறது. நீங்கள் சம்மதித்தால்… ’’ என்று கேட்டுவிட்டு பழத்துண்டு ஒன்றை வாயில் நிரப்பிக் கொண்டான்.
கவிதாவின் முகத்தில் மாற்றம் உண்டானது. வேகமாக எழுந்து உள்ளேப் போய்விட்டாள். இதற்கு முன் இரண்டு முறை உள்ளேபோனது போல் இல்லை இப்பொழுது. நடையில் வேகமிருந்தாழும் உற்சாகமில்லை. கவிதாவைத் தொடர்ந்து கவிதாவின் அம்மாவும் உள்ளேபோனாள். விஸ்வநாதன் அமைதியாக இருந்தார்.
நரேனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எழுந்து போய்விட நினைத்தான். வாயிலிருந்த பழத்தை அரைகுறையாய் மென்று விழுங்கினான். ‘’என்னை மன்னிச்சிடுங்க… நீங்க சவுத் இந்தியன் நான் மகாராஷ்டிரன்.. பொருத்தமில்லைதான் ஆனால் கல்யாணமே வேண்டாமுன்னு இருந்தேன். கடந்தவாரம் உங்கமகளைப் பார்த்ததுக்கு அப்புறம்தான் இந்த முடிவே எடுத்தேன். உங்களுக்கு விருப்பம் இல்லையன்னா வேண்டாம். இல்ல வேறு எதாவது நீங்க முடிவெடுத்திருந்தா… அப்படியே செய்ங்க’’ என்று சொல்லிவிட்டு செயற்கையான ஒரு புன்னகையுடன் எழுந்தான். விஸ்வநாதன் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் நரேன் உட்காரவில்லை.
கவிதாவின் வீட்டில் நரேனை அனைவருக்கும் பிடித்திருந்தது. கவிதாவுக்கும் தான். ஆனால் நரேனும் கவிதாவும் பேசி பகிர்ந்துகொள்ளும் படியாக எந்தவொரு விஷயப் பொருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. கவிதாவுக்கு இந்த வருத்தம் தான். நரேனை திருமணம் செய்து கொள்ளும்படி வீட்டாரும் கேட்டுக் கொண்டனர். முடிவை கவிதாவிடமே விட்டுவிட்டனர்.
நரேன் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே அவன்மீது அத்தனை அக்கறையில்லை. அவன்விட்டார் அவன் ஒரு வங்கிக் கணக்காளனாக வரவேண்டுமென்றே விரும்பினார்கள். அவனோ தனது பள்ளிப்படிப்புக்குப் பின் உதவித்தொகை பெற்று பட்டப் படிப்பையும் முடித்துவிட்டான். ஆய்வுக்காய் ஆயிரக்கணக்கில் நிதியையும் பெற்றுக் கொண்டிருக்கின்றான்.
நரேந்திரன் திருமணம் செய்து கொண்டாலே போதும் என்றிருந்தது அவனது குடும்பம். அவன் யாரைத் திருமணம் செய்து கொண்டால் என்ன. யாருக்கும் எந்த எதிர்ப்பும் இல்லை. மேலும் கவிதாவின் அழகும் அறிவும் அவளது குடும்பத்தினர் பழகும் முறையும் எல்லோரையும் கவர்ந்து விட்டிருந்தது.
ஆனால் கவிதா நரேனை கண்டு பேசவேண்டும் என நினைத்தாள். தன்னிடம் எதைக்கண்டு நரேன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தான் என்று கேட்க நினைத்தாள். மனதுக்குள் கேள்விகளின் ஒரு பட்டியலைத் தயார் செய்தாள். அந்தப் பட்டியலில் நரேன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எந்த வேண்டுதலும் கோரிக்கையும் இல்லை. கவிதாவுக்கு நரேனிடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவனது பணியில் அவன் முழுமையாக ஈடுபடலாம் மேலும் கவிதாவையும் அவளது பணியில் முழுமையாய் ஈடுபட அனுமதிக்க வேண்டும் அவ்வளவுதான்.
ஆனால் எதாவது ஒரு புள்ளியில் இருவரும் தத்தம் துறைகளை மறந்து பணிகளை ஒதுக்கி விட்டு ஒன்றிணைய வேண்டுமே. அது எந்தப் புள்ளியாக இருக்கும் என்று அவனிடம் கேட்க நினைத்தாள். அது நட்பாக, அன்பாக, காதலாக எப்படியாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் முடிவுடன் நரேனை சந்திக்க தீர்மானித்தாள்.
[5]
கண்களுக்குள் பச்சை வண்ணம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஒரு முழத்துக்கும் மேலாக வளர்ந்திருக்கும் புல் வாசனை நாசி ரோமங்களை விலக்கிக் கொண்டு வாசனைஉணரும் மொட்டின் பரப்பை எட்டியது.
கண்களை மூடி வாளியின் ஆதரவில் உட்கார்ந்திருவன் திடுக்கிட்டு விழித்தான். ஒரு குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டதைப் போல் உடலெங்கும் ஒருவித உற்சாகம். உட்கார சிரமப் பட்டதை விட சில மடங்கு சிரமத்திற்கும் தடுமாற்றத்திற்கும் பின் எழுந்து குனிந்தபடியே அறைக்குள் வந்து சேர்ந்தான்.
ஏற்கனவே கொளுத்தி வைத்திருந்த கரித்துண்டுகள், தீ விழுங்கி சிவந்து போயிருந்தது. ஈயப் பாத்திரத்தில் நீர் விட்டு அனல்பரக்கும் கரித்துண்டுகளின் மேல் வைத்தான். ஒரு வட்ட அலுமினிய டப்பாவிலிருந்து கோதுமைமாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டான். நின்றபடியே கண்களை மூடிக்கொண்டிருந்தான். இப்பொழுதும் தொண்டையில் எதோ கசப்பை தடவிவிட்டது போல் ஏதோ செய்தது.
அடுப்பில் வைக்கப் பட்டிருந்த நீரிலிருந்து ஆவி வெளிப்படுவதை எதேச்சையாய் பார்த்தான். ஒரு வெங்காயத்தை எடுத்து உரித்தான். நீண்டகாலமாக வெட்டப்படாத நகம் வளர்ந்து சுருண்டு போயிருந்தது. ஆனால் அது வெங்காயம் உரிக்க உகந்ததாய் இல்லைதான். உரித்த வெங்காயத்தை அருகிருந்த கத்தியால் இரண்டு துண்டுகளாக வெட்டி பலகையில் வைத்து தயிர் கடையும் கட்டனையால் தன் சக்தியணைத்தையும் கூட்டி நசுக்கினான்.
அடுப்பில் தண்ணீர் கொதிக்கும் நிலையை அடைந்து விட்ட நிலையில் அதில் நசுக்கிய வெங்காயத்தையும், அருகிலிருந்த டப்பாக்களிலிருந்து காயம், மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்தான். இந்தக் கொதிக்கும் கலவையில் தயாராய் வைத்திருந்த கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கிளறினான்.
அடுப்பில் இருந்த கோதுமைக் கஞ்சி டிப் டிப்பென குமிழி உடைத்து கொதித்துக் கொண்டிருந்தது. நடுங்கியபடியே அதை கிண்டிவிட்டுக் கொண்டிருந்தான். மேலும் கொஞ்சம் நீர் கலந்து கிண்டினான்.
[6]
தாதர் சவுபாத்தி மாலைநேரக் குதுகலத்துடன் இருந்தது. ஆதவன் மெல்ல மெல்ல கடலுக்குள் இறங்கிக்கொண்டிருந்தான். கவிதா ஆதவன் நீருக்குள் இறங்கும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். அருகில் நரேந்திரன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது குறித்து அவளுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால் பேச வேண்டுமென அழைத்தது கவிதா தான்.
வெளிச்சமும் இருளும் கலந்த ஒருவித சாம்பல் நிறம் எங்கும் பரவிக் கிடந்தது. கடலின் நடுப்பகுதி நீரும் அதற்கு மேலானா வெளியும் மஞ்சளும் சிகப்பும் கலந்து ஓவியமாய் விரிந்து கிடந்தது.
‘’என்ன ஏன் உங்களுக்குப் பிடிச்சது?‘’ கவிதா துவங்கினாள். அவள் எப்பொழுது கேள்விகளைக் கேட்பாள் என்று காத்திருந்தவனைப் போல் ‘’உன்னைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனா உன்னைப்பார்த்தா எனக்குள் ஒருவித மகிழ்ச்சி உண்டாகிறது. உன்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டுமாய் இருக்கிறது. உன்னுடன் நீண்ட பொழுது இருக்க வேண்டுமாய் மனம் விரும்புகிறது’’ என்று ஒரு கையில் ஈரமணலை அள்ளி மறுகையில் போட்டு அதன் குளிர்ச்சி உணர்ந்தான்.
கவிதா ஆள்காட்டி விரலால் மணலைக் கிண்டிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது எதையோ எழுதினாள். வளைவாய் நேராய் கோடுகளையும் போட்டுக் கொண்டுருந்தாள்.
‘’உனக்கு என்னை பிடிக்கலையா? இல்லை கலை, இலக்கியம் என்று எனக்கு ஈடுபாடு இல்லை என்று கவலையா?’’ அவன் கடலைப் பார்த்தபடி பதிலுக்காய் காத்திருந்தான்.
நசுக்கி மசாலா போட்டு பொறித்த வட்டவட்ட மக்காச்சோளம் விற்ற ஒருவனை அழைத்தாள். எழுமிச்சை பிழிந்து இரண்டு பொட்டலங்களை வாங்கிக் கொண்டாள். கவிதா எதுவும் பேசவில்லை. அவளையும் கடலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். நரேனுக்கு ஏமாற்றமாய் இருந்தது. ஆனாலும் அவன் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
இருவரும் நீண்ட நேரம் பேசாமலிருந்தனர். இருவரையும் இருள் போர்த்தி இருந்தது. கடற்கரையில் ஆங்காங்கே வியாபாரிகள் எற்றிவைத்திருந்த பெட்ரமாஸ் விளக்குகள் ஒரு குறிப்பிட்ட வட்டப் பரப்பளவு இருளை விழுங்கிவிட்டிருந்தது.
’’போகலாமா?’’ நரேன் கேட்டான். ‘’சரி’’ என்றாள் கவிதா. கவிதாவின் நீண்ட மவுனமும் இப்படி ஒற்றை வார்த்தைகளால் ஆன பதிலும் நரேனை உற்சாகமிழக்கச் செய்தது. பொறுமையில்லாமல் ‘’பேசக் கூப்பிட்டுட்டு ஏன் எதுவுமே பேசாம வர்ர?’’ என்று கேட்டான். இப்பொழுது முதல் சந்திப்பின்போது அவனது வார்த்தைகளில் இருந்தமாதிரியான தடுமாற்றத்தை அவள் உணர்ந்தாள். ‘ வாழ்க்கை முழுசும் நான் பேசப் போறேனே’’ என்று அவனைப் பார்த்தாள். இருளில் மின்னிய அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
[7]
கவிதாவின் அருகில் போடப் பட்டிருந்த உயரமான நாற்காலியில் உட்கார்ந்தான். அவளைப் பார்த்து புன்னகைத்தான். மேலுதட்டை மறைத்து வளர்ந்திருந்தது மீசை. அவன் புன்னகைத்ததை லேசாக வெளியே காட்டியது கீழுதடு. ‘’வெளியே புல்லு ரொம்ப வளர்ந்துட்டு கவிதா’‘ ‘‘திரிலோக் பவுண்டேஷன்காரங்க ஒரு மூட்டை கோதுமை மாவும் கொஞ்சம் காய்கறியும் மசாலாப் பொருட்களும் கொடுத்துட்டுப் போனாங்க‘’ என்று அவளது கைகளைத் தடவிவிட்டான். கவிதாவின் உடம்பில் எந்த அதிர்வும் இல்லை. கண்ணின் கருவிழிக்குள் ஒரு வித சுருங்கலும் விரிதலும் உண்டானது, அவ்வளவுதான்.
‘“ஆங், பாரத் விக்யான் பத்திரிக்கையில என் பேட்டி வெளியாயிருக்கு. அன்னைக்கு எழுதிக் கொடுத்தேன்ல, அதுதான். அதுக்கு இரண்டாயிரம் ரூவா கொடுத்தாங்க. அதோ உன் புத்தகத்துல பத்திரமா வைச்சிருக்கேன்,’‘ என்று சொன்னதும் இருமத் துவங்கினான். குண்டுகளை வீசும் விமானம் உருமுவதைப் போல் தொடர்ந்து இருமினான்.
துவங்கியது போலவே கொஞ்சம் கொஞ்சமாய் இருமல் தணிந்தது. வாயில் எச்சில் வடிய , கண்களும் நிரம்பியது. ஒரு துணியால் கண்ணையும் வாயையும், வாயில் வழிந்த எச்சிலையும் துண்டைத்துக் கொண்டு மீண்டும் கவிதாவைப் பார்த்து சிரித்தான். கவிதா உடலின் எந்தவொரு அணுவிலும் அசைவின்றி கிடந்தாள்.
[8]
இரண்டு குடும்பத்தின் முக்கியமானவர்கள் வருகை தர பதிவுத் திருமணம் இனிதே நடந்தது. திருமணநாள் மாலையில் அலுவலகத்தில் நண்பர்கள் சார்பாக விருந்தும் கொடுக்கப் பட்டது.
நரேன் சந்தோஷமாக இருந்தான். அலுவலகப் பணியுடன் பதிப்பகம் ஒன்றிற்காய் தொகுப்பு நூல் பணியில் தீவிர உழைப்பில் இருந்தாள் கவிதா. நரேனும் தனது ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தான்.
தாதரில் இருந்த ‘பங்கஜ்’ என்ற ஒற்றைப் பங்களாவில் ஆய்வுக் கூடத்தை அமைத்திருந்தான் நரேன். கவிதாவும் வீட்டின் ஒரு அறையை நூலகமாக மாற்றி வைத்திருந்தாள். நரேன் குடுவைகளையும் கவிதா புத்தகங்களையும் சுரண்டிக் கொண்டிருந்தார்கள். உணவுக்கும் ஓய்வுக்கும் மட்டுமே தத்தம் ஆய்வு அறைகளை விட்டு வெளியே வரும்படியாக பழகிப் போனார்கள்.
கவிதாவும் நரேனும் கல்லூரிகளில் சிறப்பு விரிவுரைகளுக்காய் அடிக்கடி அழைக்கப் பட்டார்கள். நரேன் வெளியேபோய்த் திரும்புகையில் எல்லாம் எதாவது பரிசு பொருளுடன் வந்து கவிதாவை வியப்பூட்டுவதை வழக்கமாகக் கொண்டான் . தனது தனிமச் சேர்க்கைகள் குறித்த ஆய்வில் விரைவில் பல நல்ல பலன்களை செய்துகாட்டும் நிலையையும் எட்டிவிட்டான்.
கவிதா கருத்தரித்த செய்தி நரேனை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நண்பர்களை அழைத்து வீட்டில் விருந்து கொடுத்தான். கவிதாவுடன் பெரும் பொழுதைக் கழித்து வந்தான். மேலும் தனது தூக்கத்தையும் ஓய்வையும் தியாகித்துவிட்டு ஆய்விலும் ஈடுபட்டு வந்தான்.
ஒருநாள், தனது ஆய்வில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிக் கொண்டிருக்கையில் கே.இ.எம் மருத்துவமனையில் கவிதாவைச் சேர்த்திருப்பதாக தொலைபேசியில் தகவல் சொல்லப் பட்டது. பெரும் கவலையுடன் மருத்துவமனை விரைந்தான் நரேன். கவிதா நேஷனல் கல்லூரியில் சிறப்புரையாற்றச் சென்றபோது மாடிப்படிகளிலி கால்தடுமாறி படிகளில் உருண்டு விழுந்துவிட்டாள் என்றும், கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்லிவிட்டு மருத்துவர் விரைந்தார்.
[ 9]
அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வைத்திருந்த கோதுமைக் கஞ்சியில் ஒரு பகுதியை பெரிய கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு ஒரு நீண்ட மெல்லிய கரண்டியால் கவிதாவின் தொண்டைவரை கரண்டியைத் திணித்து ஊட்டினான். கால்நடைகளுக்கு மூங்கில் கணு மூலம் மருந்து கொடுப்பது போல் இருந்தது அவன் கவிதாவுக்கு உணவூட்டும் பாங்கு.
நான்கைந்து கரண்டிகள் கொடுத்தபின் அதே கரண்டியில் இரண்டு திரவ மருந்துகளின் கலவையை சம விகிதத்தில் ஊற்றிக் கொடுத்தான் பின் கோதுமைக் கஞ்சியைத் தொடர்ந்தான். வலப்பக்க தாடையில் கோதுமைக் கஞ்சி வழிந்தபோது துடைத்தும் விட்டான்.
[10]
’‘இங்க மிஸஸ் கவிதாவோட ஹஸ்பண்ட் யார்?‘’ நர்ஸ் கவிதாவை அனுமதித்துள்ள அறைக்கு வெளியே நின்று கத்தினாள். அருகில் நின்று கொண்டிருந்த நரேந்திரன் தாவி ஓடி ‘‘நான் தான் கவிதாவோட கணவன் நரேந்திரன், என்ன விஷயம்? கவிதா எப்படி இருக்கிறாள்?‘’ கேள்விகளை அடுக்கினான். அவன் வாழ்வில் முதல் முறையாக அழுகையுணர்வை உணர்ந்தான். அனுமதித்தால் கதறி உருண்டு அழுது விடக் கூடிய நிலையை எட்டியிருந்தான்.
டாக்டர் மக்ரண்ட் தம்லே ஒரு செயற்கையான புன்னகையோடு நரேந்திரனை வரவேற்கிறார். ‘‘ஸோ, ஹவ் இஸ் யுவர் எக்ஸ்பெரிமென்ட்ஸ் மிஸ்டர் நரேந்திரன்?’‘ கைவிரல்களைக் கோர்த்துக்கொண்டு மேசையில் ஒழுங்காய் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை எடுத்து மீண்டும் அதேஇடத்தில் வைத்துக்கொண்டிருந்தான்.
‘‘கவிதாவுக்கு என்னாச்சு டாக்டர்?‘’ நரேன் எந்த உணர்ச்சிகளும் இல்லாது வார்த்தைகளை மட்டும் வரிசைப்படுத்தி கேட்டான். ‘‘மிஸ்டர் நரேன், ஐ யம் சாரி, முதல் விஷயம் உங்க மனைவியின் கர்ப்பம் கலைந்து விட்டது‘’ என்று அவர் மேலும் பேச வாயெடுத்தார் அதற்குள் நரேன் இடையில் ‘‘இரெண்டாவது விஷயம் என்ன டாக்டர், கவிதாவுக்கு மேஜரா எதாச்சும் ஆயிட்டா? பிளீஸ் சொல்லுங்க‘’ என்று தழுதழுத்தான்.
‘‘ரெண்டாவது, உங்க மனைவிக்கு டோட்டல் பாரலைஸ் அட்டாக் ஆகியிருக்கு. அதிர்ச்சியில அவங்க மூளைநரம்புகள் பாதிக்கப்பட்டு உடம்பு முழுக்க இயக்கம் பாதிச்சுப் போச்சு. அவங்களுடைய எல்லா உருப்புகளும் சரியா இருக்கு. ஆனா எந்த உருப்புக்கும் மூளையிலிருந்து கமாண்ட்ஸ், அதாவது ஆணைகள் போறது ரத்தாயிடுச்சு, ஸோ அவங்க கண்ணின் கருவிழியைக் கூட அவங்க இஷ்டத்துக்கு அசைக்க முடியாது. ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னான்னா அவங்க இன்னர் பார்ட்ஸ், அதாவது ஜீரண உருப்பு நார்மலா இருக்கு, இட்ஸ் ஸோ பெக்குலியர்.‘’
நரேனுக்கு உலகமே இருண்டு விட்டது. கண்களில் கண்ணீர் பெருகி உலகமே வெள்ளத்தால் அழிக்கப் படுவதை போல் இருந்தது.
குழந்தை அழிந்தது அவனுக்கு வருத்தமில்லை. ஆனால் கவிதா உயிருடன் இருந்தும் ஒரு சவத்தைப் போல வாழப்போகிறாளே என்ற பெருங்கவலை அவனைக் கொன்று கொண்டிருந்தது.
‘‘டாக்டர், இதுக்கு வைத்தியம் இல்லையா? ஃபாரின்ல எதாவது டிரிட்மெண்ட் பாசிபொலிட்டி இருக்கா?‘’ என்று நரேன் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டும் மூக்கை பலமாக உறிஞ்சிக்கொண்டும் கேட்டான்.
’’நரேன் உங்களுக்குத் தெரியாததா. இதுவரைக்கும் இப்படி பெக்குலியர் கேஸ நான்கூடப் பார்த்ததில்லை. பட் வி வில் சுயர்லி டிரை. இது நமக்கு ஒரு சவாலான பிரச்சனை. வில் ட்ரை அவர் பெஸ்ட் ’’ என்று வழக்கத்தைவிட பெரிதாய்ப் புன்னகைத்து எழும்பினார். போதும் இது போல் இன்னும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வுசொல்ல வேண்டியிருக்கிறது என்ற பொருளில் ஒரு புன்னகை செய்துவிட்டு எழுந்தார்.
நரேனுக்கு கவிதாவை உடனடியாகப் பார்க்க ஆசையாய் இருந்தது. கண்டிப்பாய்ப் பார்க்கலாமென அனுமதித்தார்கள். ஐசியூவில் வெள்ளைநிறப் படுக்கையில் வெள்ளைத் துணியால் பொதிந்து கிடத்தப்பட்ட அவள் காகிதத்தில் பொதிந்த ஒற்றை ரோஜாவாக காட்சியளித்தாள்.
நரேன் எவ்வளோவோ முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை. சத்தமிட்டு அழுதான். கவிதா கண்களை மூடிய நிலையில் இருந்தாள். மயக்கமாகக் கூட இருக்கலாம். ஆனால் இனி வாழ்க்கை முழுவதுக்கும் இப்படித்தான் இருக்கப் போகிறாள்.
எந்தப் பிரச்சனையானாலும் ஓடிவந்து கவிதாவிடமே சரணடைவான் நரேன், ஆனால் இன்று …. இனி….. யாரிடம் போவான்?
குழந்தையைப் போல் திடீர் திடீரென அழுதான். யாரும் அவன் துக்கத்தை பகிர்ந்து கொள்ள வரவில்லை.
[11]
ஒருமாத காலத்தில் கவிதாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டது மருத்துவமனை. கவிதா மருத்துவமனையிலிருந்த காலகட்டத்தில் அவளைப் பராமரிக்கும் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டான்.
யாருடைய உதவியுமின்றி அவனால் கவிதாவுக்கான சகலத்தையும் செய்யமுடிகிறது. ஏன் அவளுக்காய்ப் பேசுவது கூட இவன் தான். கவிதாவிடம் கேள்விகளைக் கேட்டுவிட்டு, நீ இப்படித்தான் பதில் சொல்லியிருப்ப, என்று பதிலையும் சொல்லி விடுவான்.
நரேனின் அப்பா தவறிவிட்டார். நரேன் கவிதாவையும் சக்கர நாற்காளியில் வைத்து கூட்டிப்போகத் திட்டமிட்டிருந்தான் ஆனால் அது சரியாக இருக்காது என்று அவன்மட்டும் போய்வந்தான்.
கவிதாவின் பெற்றோர் நரேன்வீட்டில் வந்துதங்கி மகளை கவனித்துக் கொண்டனர். நரேந்திரனால் தனது ஆய்வுகளுக்கு கொஞ்சம் நேரம்ஒதுக்க முடிந்தது, ஆனால் அவனால் ஆய்வுகளில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.
மேலும் கவிதாவின் பெற்றோர் ‘எப்படி இருந்த புள்ள இப்படி ஆயிட்டாளே’ என்று புலம்பி கண்ணீர்வடித்த படியே இருப்பது நரேனுக்கு சரியாகப் படவில்லை. அவர்களையும் அனுப்பிவிட்டான்.
இனி எப்பொழுதும் கவிதாவைத் தானே பார்த்துக் கொள்வது எனத் தீர்மானித்தான். வீட்டின் ஆய்வுக்கூடத்தை, இருக்கும் பணத்தைக்கொண்டு மேம்படுத்தினான். ஆய்வுக் குறிப்புகளையும் தாண்டி சமையல்குறிப்புகளில் பெரிதும் ஆராய்ச்சிசெய்தான். ஆனால் கவிதாவுக்கு திரவ ஆகாரம் தவிர்த்து எதையும் கொடுக்கமுடியாத நிலையில் கவிதாவின் உணவே அவனது உணவாகவும் ஆனது.
கவிதாவுக்கு ஊட்டி விடும்போது பெரிதும் மகிழ்வான். திருமணமான புதிதில் ஆய்வுகளில் தீவிர மூழ்கலின் போது கவிதா இப்படித்தான் ஊட்டி விட்டிருக்கிறாள். நினைத்து அழுது கொள்வான்.
சமீபமாக அவனுக்கு அழுகை வருவதில்லை. கவிதாவை கவனிக்கும் பணிகள் அவனது நாள் முழுவதையும் தின்று கொண்டிருந்தது.
நரேன் தனது ஆய்வுக்கூடத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்தான். ஆய்வுக்கூடங்களில் அதிகநேரம் தங்கிவிட்ட பொழுதுகளில் கவிதாவின் தனிமையை நினைத்து வருந்தினான்.
தேவைகளைக் கூட கேட்டுபெற முடியாத கவிதாவின் நிலை நரேனை வேதனைப் படுத்தியது. அவளுக்கு எப்பொழுது என்ன வேண்டும் என்று தனது புரிதலின் பெயரில் செய்து கொண்டிருந்தான். பல நேரங்களில் சோதனகளையும் செய்து கற்றுக் கொண்டிருந்தான்.
பல ஏடுகளைப் படித்து கிடைத்த அனுபவங்களின் மூலம் கவிதாவைப் பராமரித்து வந்தான். மருத்துவ உலகம் குறித்தும் புதிய மருத்துவர்களின் சாதனை குறித்தும் தனக்கு எட்டும் தொலைவில் இருக்கும் செய்தித்தாள்களையும் நூல்களையும் வாங்கிப் படித்துவந்தான்.
பல மருத்துவ மனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் கடிதங்களையும் அனுப்பி வைத்தான். ஆனால் முறையாக யாரும் பதில் அளிக்கவில்லை.
சிலர் அவளை ‘கருணைக் கொலை‘ செய்துவிடுவது குறித்து ஆலோசனை எழுதியிருந்தார்கள். காரணம் குணப்படுத்த முடியாது என்று தெரிந்தபின்னும் தொண்ணூற்றொன்பது விழுக்காடு பிணம் போன்ற ஒரு உடலை வைத்துப் பராமரிப்பது முட்டாள்த்தனம் என்றும் அதனை பிரபலமான ஒரு விஞ்ஞானியே செய்து கொண்டிருப்பது சகிக்கமுடியாத ஒன்று எனவும் கடிதங்கள் வந்திருந்தன.
இவ்வாறான கடிதங்கள் நரேனின் மனதைக் காயப் படுத்தின, அதனால் அவன் உதவிகேட்டு கடிதம் எழுதுவதை நிறுத்திக் கொண்டான்.
கவிதாவை கவனிப்பதும், அவளுக்குப் பிடித்த இலக்கிய நூல்களை வாசித்துக் காட்டுவதும் என பொழுதுகளைப் போக்கிக் கொண்டிருந்தான். கவிதாவை இந்த நிலையில் விட்டு அவனால் தனது சோதனைக்கூடத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை.
பலமுறை முயற்சித்து விட்டு பின் சோதனை அறைக்குப் போவதையே நிறுத்திக் கொண்டான்.
[12]
கவிதா எப்பொழுதும் படுத்தே கிடந்தாள். நரேனுக்கு முதலில் எதற்கெடுத்தாலும் கவிதாவைத் தேடிவருவது அயர்வாக இருந்தது. ஆனால் பழகிவிட்டான். மணிக்கணக்காய் அவளையே பார்த்துக் கொண்டிருப்பான்.
காலையிலும் மாலையிலும் நர்ஸ் ஒருத்தி வந்து ஆடை மாற்றிவிட்டுப் போவாள். அவசியமான மருந்துகளையும் கொடுத்துவிட்டுப் போவாள். ஆனால் அவளுக்கும் இந்த வேலை அலுத்துவிட்டது. தினமும் வீடு தேடி வந்து இப்படி செய்து கொண்டிருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை.
வேறு நர்ஸ்களை இதே பணிக்கு அமர்த்தினான். சிலர் வந்து சில நாட்களிலிலேயே ஓடி விட்டார்கள். சிலர் அதிகப்பணம் கேட்டார்கள். நரேனின் கண்டுபிடிப்புகள் ஒன்றிரண்டுக்கு ராயல்டியாக கொஞ்சம் பணமும், சமூக அமைப்புகளிலிருந்து பணமும், தொண்டு நிறுவனங்களிலிலிருந்து உதவிகளும் கிடைத்தன. ஆனால் அவை நர்ஸ் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதி கொடுப்பவையாக இல்லை.
மேலும் கவிதாவை நர்ஸ்கள் புரட்டி எடுப்பதை நேரில் கண்ட நரேன் சகல பணிவிடைகளையும் தானே செய்வது என்று முடிவெடுத்தான்.
பங்களாவுக்கு அருகிலுள்ள மலிகைக் கடையில் வீட்டுக்குத் தேவையான சாமான்கள் பட்டியலை கொடுத்து விட்டால், கடைக்காரப் பையன் பொருட்களை கொடுத்துவிட்டுப் போவான். அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம், வீட்டின் அனைத்து மூலைகளையும் அடைத்துக் கொண்டிருக்கும் புத்தகங்களையும் கதவுதிறந்த நிலையில் தூசு படிந்துபோய்க் கிடக்கும் ஆய்வுக் கூடத்தையும் நின்று கவனித்து விட்டுத்தான் நகர்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.
நண்பர்கள் பலர் அடிக்கடி வந்து அரட்டையடிப்பது உண்டு. சாப்பிட விதவிதமாய் வாங்கி வந்தார்கள். ஆனால் கவிதாவால் எதையும் சாப்பிட முடியாது என்ற நிலையில் நரேனும் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டான்.
வீடுதேடி வரும் நண்பர்கள் நரேனையும், கவிதாவையும் உற்சாகப் படுத்த பல தகவல்களையும் விஷயங்களையும் சொல்வார்கள். ஆனால் கவிதாவின் கருவிழி மட்டும் எப்பொழுதாவது அசையும். நரேனும் கேட்டுக் கொண்டிருப்பானே தவிர முகத்தில் உடலில் எந்தவித பாவங்களையும் காட்ட மாட்டான். இது நண்பர்களை உற்சாகம் குறையச் செய்தது.
நண்பர்களும் வேலை, குடும்பம் , பிள்ளைகள் என பல காரணங்களைச் சொல்லி நீண்ட இடைவெளிகளில் வந்து சந்தித்துப் போனார்கள் பின் ஒவ்வொருத்தராக வருவதை நிறுத்திக் கொண்டார்கள்.
நரேனுக்கு பெரிதாய் வருத்தமில்லை. வீட்டிற்கு வரும் பெண்களில் பலர் திடீரென சத்தமிட்டு அழத் துவங்கி விடுவார்கள். கவிதாவின் நிலையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று கதறுவார்கள். கவிதாவின் கண்கள் வருத்தப்படுவதை நரேன் பலமுறை கண்டிருக்கிறான். அதனால் இப்படியானவர்களை வரவேண்டாம் என்று எப்படிச் சொல்வது என்றும் யோசித்துக் கொண்டிருந்தான். அதற்குள் அவர்களாகவே ஆளுக்கொரு காரணம் சொல்லிக்கொண்டு வருவதை நிறுத்திவிட்டார்கள். ஆனால் நண்பர்களின் மேல நரேனுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது.
நீண்ட இடைவெளிகளில் சில நண்பர்கள் வந்து சந்தித்துவிட்டுப் போவார்கள். அவர்கள் நரேன் கவிதாவை கவனித்துக்கொள்ளும் பாங்கு கண்டு வியப்பார்கள். மேலும் அவர்கள் இருவருக்குள்ளும் இன்னமும் காதல் குறையாமல் இருப்பதை சொல்லிக்காட்டுவார்கள்.
கவிதாவின் குடும்பமோ, நரேனின் குடும்பமோ நெருங்கிய நண்பர்களோ யாரும் நரேனை வேறுதிருமணம் செய்துகொள்ளும்படி சொல்லவில்லை என்பது வியப்பிலும் வியப்பு. கவிதாவை நரேன் கவனித்துக்கொள்வதைக் கண்ட யாருக்கும் அப்படியொரு எண்ணம் தோன்றாதுதான்.
நரேனுக்கு இப்படி ஆகியிருந்தால் அவன் தற்போது செய்யும் பணிவிடைகளை விட பல மடங்கு அதிகமாய் கண்டிப்பாய்க் கவிதா செய்திருப்பாள் என்று நரேனுக்குத் தோன்றும்.
[13]
தாதருக்கு அடுத்த ரயில் நிலையத்திற்கு எதிர்த்தாற்போல் உள்ள டாட்டா அறிவியல் ஆய்வு மையத்தில் சிறப்புரையாற்ற நரேனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். வருடக்கணக்காக வெளியில் போகாமல் இருப்பது சலிப்பை உண்டாக்கியது. ஆனால் இப்படி வெளியில் போகவரத் துவங்கிவிட்டால் கவிதாவை கவனிப்பதை தான் விட்டுவிடுவோமோ என்றும் அஞ்சினான். ஒருவழியாக சிறப்புரைக்கான கட்டுரையை எழுதி முடித்துவிட்டான். அந்தக் கட்டுரைக்காக பல புத்தகங்களைப் புரட்டி பார்க்கலாம் என புத்தக அலமாரியை நெருங்குகையில் அவனுக்குள் உண்டாகும் ஒருவித மாற்றத்தை உணர்ந்தான்.
அவன் கவிதாவை மறந்து கொண்டிருந்தான். கட்டுரைக்கான குறிப்புகளை பென்சிலால் குறித்துக்கொண்டு சில புத்தகங்களைப் புரட்ட நினைத்தவன். தனது நினைவில் இருந்த விஷயங்களை மட்டுமே வைத்து கட்டுரையை முடித்தான்.
சிறப்புரைக்குப் போவதுகுறித்து உறுதியான முடிவுக்கு வரவில்லை. கவிதாவிடம் கட்டுரையை வாசித்துக் காட்டினான். அவளது இரண்டு விழிகளிலும் ஈரம் பொங்கி இருந்தது. ‘‘கவிதா நான் லெக்சருக்கு போயிட்டு வரவா?’’ கெஞ்சலாகக் கேட்டான். அவளிடமிருந்து என்ன பதிலை எதிர்பார்க்க முடியும். ஆனால் அவளது விழிகள் ‘‘நல்லபடியா போய்ட்டு வாங்க’’ என்று சொல்வதைப் போல் தான் இருந்தது.
நரேனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. டாட்டா சயின்ஸ் நிறுவத்தினரை அழைத்து கட்டுரையைக் கொடுத்து விட்டான். வேறு எதுவும் சொல்லவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து ஒரு பார்சல் வந்தது. அதில் நரேனின் உரையை மாணவி ஒருத்தி வாசித்ததாகவும். அந்த கட்டுரை மிக அற்புதமான விஷயங்களைச் சொல்லியதாகவும் அதனை தங்கள் பாடப் புத்தகத்தில் இணைத்துக்கொள்ள இருப்பதாகவும் கடிதம் ஒன்று இணைக்கப் பட்டிருந்தது. இது குறித்த செய்தி வெளியான பத்திரிக்கைகளும் அனுப்பப் பட்டிருந்தது.
பத்திரிக்கையில் நரேனின் இளவயதுப் புகைப்படம் ஒன்றை அச்சிட்டு இருந்தார்கள். கோட்டும் டையுமாக அழகாய் இருந்தான். நரேன் அந்த பத்திரிக்கையை கவிதாவிடம் காட்டினான்.
‘‘கவிதா இங்க பாரேன், என் போட்டோ பத்திரிக்கையில் வந்திருக்கு.‘’ என்று சிறுபிள்ளைபோல் குதூகலித்தான். மேலும் கவிதாவின் பழைய புகைப்படங்களையும் அவர்களின் திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட படங்களையும் கொண்டு வந்து காட்டி அந்த புகைப்படங்கள் எடுக்கப் பட்ட சூழ்நிலைகள் குறித்து சொல்லிக் கொண்டிருந்தான்.
கவிதா கண்களால் சிரித்துக் கொண்டிருந்தாள்.
[14]
காலச் சக்கரம் சுற்றிக் கொண்டிருப்பதை எத்தனை பேர் அறிவார்கள். காலச்சக்கரம் யாருக்காகவும், எதற்காகவும் நிற்காமல் சுற்றிக் கொண்டிருக்க காரணம் யார்தான் அறிவார். இரவும் பகலும் வெளிச்சமும் இருளும் என மாறி மாறி வருவதை மட்டும் நரேன் உணர்ந்தான் ஆனால் மணிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள் மற்றும் வருடங்கள் என்று உருண்டோடிக் கொண்டிருப்பதை அவன் கணக்கில் வைத்துக்கொள்ள வில்லை.
முன்பெல்லாம் ஆய்வின் போது இப்படி காலம் நேரம் கணக்கிடாமல் ஆய்வில் மூழ்கியிருக்கிறான். இப்பொழுதும் அவன் கடிகாரத்தையும் காலத்தையும் மறந்து விட்டிருந்தான். கவிதாவுடனான வாழ்க்கை நாற்பது ஆண்டுகளாய் ஸ்தம்பித்து விட்டது. அவள் குணமடைந்து எழுந்து உலாவத் துவகிங்னால், காலத்தை நகரவிடலாம் என்று இறுக பிடித்து வைத்திருந்தான், அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருதான்.
கவிதா குணமாகி விடுவாள். பட்டாம் பூச்சியாய்ர் பறக்கத்துவங்கி விடுவாள், தனது ஆய்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் தினமும் கவிதாவுக்கு கோதுமைக் கஞ்சியும் பழச்சாறும் கொடுத்துக் கொண்டிருக்கிறான் கூடவே மருந்துகளும். ஆனால் காலச்சக்கரம் நாற்பது ஆண்டுகள் சுற்றி விட்டிருக்கிறது என்று அவனுக்கு உணர்வில்லைதான்.
அவர்கள் குடியிருந்த வீடு நாற்பது ஆண்டுகளாய் ஸ்தம்பித்து விட்டது. மிகப் பெரிய வியப்பு என்னவென்றால் கவிதாவுக்கு படுத்த படுக்கையாக நாற்பது ஆண்டுகள் எப்படி ஓடியிருக்க முடியும் என்பதுதான். இன்று ஓடியாடிக் கொண்டிருக்கும் மக்களே கண்ட வியாதிகளையும் சொல்லிக் கொண்டு காலத்திற்கு முன்பாகவே கடமை முடிந்தது என கரையேறி விடுகிறார்கள்.
நின்று கொண்டே மரங்கள் ஆயிரம் காலம் வாழ்வதில்லையா. ஆரோக்கியமாக இருப்பதில்லையா. கவிதாவும் கட்டிலில் படர்ந்த மாமிச மரமாக இருக்கலாமில்லையா. வித்தியாசம் என்னவெனில் இவள் உதிர்ப்பதுமில்லை புத்திலை வளர்ப்பதுமில்லை. பூப்பதுமில்லை காய்ப்பதுமில்லை.
வீட்டில் அலமாரி போல் ஆளுயர பிரிட்டிஷ் கடிகாரம் ஒன்று எப்பொழுதும் டிக்டிக்கென ஓசை எழுப்பிக்கொண்டே இருக்கும். நரேன் தினமும் காலை அந்த கடிகாரத்தின் காதுகளை திருகிவிட மறப்பதில்லை. அவன் கவனித்துக் கொண்ட இரண்டில் ஒன்று கடிகாரம் மற்றொன்று கவிதா.
கடிகாரத்தைப் போல கவிதாவின் உடலுறுப்புகள் ஒவ்வொன்றாய் செத்துக் கொண்டிருப்பதை நரேன் அறிவான். மிக சமீபமாய் அது தீவிரமடைந்து வருவது கண்டு அவன் அவளுக்கு பலவித மசாஜ்கள், பயிற்சிகள் என செய்து அசைக்கமுடியாத பாகங்களை அசைத்து அதனை உயிர்ப்பாக வைத்திருந்தான்.
[15]
நரேன், கவிதாவின் குடலின் நீளம் அகலம் வரை துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான். எந்தெந்த நேரத்தில், எவ்வளவு கால இடைவெளிகளில் அவளது உடற்பாகங்களைப் பிடித்து விட வேண்டும் என அவனது மூளை உருவாகி இருந்த தனிம அட்டவனைகளை அழித்து விட்டு புது அட்டவணை வரைந்திருந்தது. இந்தப் புரிதல்கள் அவன் ஒரு விஞ்ஞானி என்பதால் உண்டானதில்லை, கவிதாவின் மீதான காதலும் அன்பும் கற்றும் கொடுத்ததாகச் சொல்லலாம்.
கவிதாவுடன் அவன் எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பான். அவனுக்கு எப்பொழுதுமே தனக்குத்தானே பேசிக் கொண்டிருப்பதாகப் படவில்லை. கவிதாவுக்கான கேள்விகளையும் பதில்களையும் கூட அவனே சொல்லிக் கொள்வான். அருகிலிருந்து பார்ப்பவர்கள் கவிதாதான் கேட்கிறாள், பேசுகிறாள் என்று உறுதியாக சொல்வார்கள். கவிதாவுடன் வாழ்ந்த சிலமாத காலத்தில் கவிதாவை இந்த அளவுக்கு அவன் புரிந்துவைத்திருப்பது அவனது ஆழமான அறிவுக்குச் சான்று.
ஒரு ஜீவன் இன்னோரு ஜீவனை இப்படி அணுஅணுவாக புரிந்து கொண்டிருக்க முடியுமா? என்பது பெரியக் கேள்விதான். இவர்களுக்குள் இது எப்படி சாத்தியமானது என்பது வியப்புதான்.
[16]
அன்று வழக்கத்திற்கும் முன்னதாகவே நரேன் எழுந்துகொண்டான். கவிதாவைப் பார்த்தான். அவள் வழக்கம்போல் அசைவின்றிக் கிடந்தாள். நரேன் தனது ஆய்வுக் கூடத்தைப் போய்ப் பார்த்தான். புத்தக அலமாரிகளைப் போய் பார்த்தான். வீட்டைச் சுற்றி வளர்ந்திருந்த செடிகளையும் மரங்களையும் பார்த்தான். வானம் மெதுவாய் வெளுத்துக் கொண்டிருந்தது. வழக்கமான காரியங்களைச் செய்தான்.
ஒரு அட்டையில் பேனாவாள் அழுந்த எதையோ எழுதினான். வாசல் கதவில் வந்து அதை மாட்டி விட்டான். கதவைத் திறந்து வைத்தான். கவிதாவின் அறைக்குப் போனான். கவிதா விழித்திருந்தாள். அவளுக்கு வழக்கமான பணிவிடைகளைச் செய்தான்.
கோதுமைக் கஞ்சியை கவிதாவுக்கு ஊட்டினான். கவிதாவின் கண்களில் ஒருவித பதட்டம் இருந்தது. நரேன் இன்று அதிகம் பேசவில்லை. என்றைக்கும் போலான உற்சாகமில்லை. பெருங்கஷ்டம் ஒன்றை விழுங்கியவனைப் போல் அமைதியாக இருந்தான். கவிதாவின் கண்கள் ஏன்.. என்னாவாயிற்று, என்று கேட்டுக் கொண்டிருந்தன.
இன்று நரேந்திரன் கவிதாவின் கண்களை அதிகம் பார்க்கவில்லை. அவனது கைகள் வழக்கத்திற்கும் அதிகமாய் நடுங்கியது. ‘’கவிதா இன்னைக்கு காலையில இருந்தே ஒரு மாதிரியா படபடப்பா இருக்கு. மனசுக்கு சரியில்லை. உடம்பெல்லாம் உதருது’‘ என்று நரேந்திரன் அமைதியானான். கவிதா உள்ளுக்குள் துடித்துக்கொண்டிருந்தாள். அவள் தனது கண்களால் எதையோ சொல்ல முற்பட்டுக் கொண்டிருந்தாள். ஒன்றும் முடியவில்லை.
நரேன் இருமத் துவங்கினான். கையில் வைத்திருந்த கோதுமைக் கஞ்சி குலுங்கிச் சிந்தியது. கஞ்சியை மெதுவாய் மேசையில் வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்து இருமினான். தீவிரமான இருமல் திடீரென நின்றுபோனது.
தலையை உயர்த்தியபடி நாற்காலியில் சவுகரியமாய்ச் சாய்ந்திருந்தான் நரேன். அவனது உடலின் நடுக்கம் நின்று போயிருந்தது. அவனது விழிகள் கவிதாவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த விழிகள் காய்ந்து விட்டிருந்தன.
அசைவின்று கிடந்த கவிதாவின் கண்களில் மட்டும் ஜீவன் அழுது கொண்டிருந்தது.
வீட்டு வாசல் கதவில் தொங்க விட்ட பலகையில் ’மூன்று முறைக்கு மேல் மணியடித்தும் அல்லது அழைத்தும் யாரும் பதில் தராத பட்சத்தில், தயவு செய்து உள்ளே வாருங்கள்’ என்று எழுதப் பட்டிருந்தது.
“Madhiyalagan Subbiah” ,

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா