சுந்தர ராமசாமி
நண்பர் கள்ளழகர் அவர்கள் ‘கலையும் படைப்பு மனமும்’ என்ற தலைப்பில் பேசும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். விரிந்த பரப்பைத் தலைப்பு கொண்டிருந்தால் பேச்சாளர் உல்லாசமாகத் துள்ளித் திரியலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். பலவற்றையும் உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்குத் தலைப்பு விசாலமானதாக இருந்தால் நெருக்கடி இல்லை என்றும் அவர் எண்ணியிருக்கலாம். தலைப்பு எதுவாக இருந்தாலும் சரி; நான்கு பேர் முன்னிலையில் பேசுவதே ஒரு நெருக்கடி சார்ந்த விஷயம்தான். தொழில்முறை பேச்சு பழக்கத்திற்கு வந்து மொழி எந்திரமயமாகி பேச்சாளனை அது ஒரு கருவியாக ஆக்கிக் கொண்டு நன்கு அறிந்த தண்டவாளத்தில் வழக்கமான கூச்சல்களை எழுப்பியவாறு ஓடத் தொடங்கும்போது பேச்சாளருக்கு நெருக்கடி என்பது இல்லை. மரபில் பதிவாகிவிட்ட கருத்துக்களை நினைவாற்றலின் வலுவில் தொகுத்து மேற்கோள் காட்டி வின்னியாசம் புரிகிற போதும் நெருக்கடி என்பதில்லை. ஆனால் பேசுகிறவன் தலைப்புடன் ஒரு தீவிரமான உறவை ஏற்படுத்திக் கொண்டு தலைப்புக்குத் தன் மனம் கற்பிக்கும் பொருள் என்ன என்று சிந்திக்கத் தொடங்கினால் – அது பரந்த பலவற்றையும் ஏற்றுக் கொள்கிற தலைப்பாக இருந்தாலும் கூட – நெருக்கடி தவிர்க்க முடியாததுதான்.
படைப்பாளியோ – பேச முற்படும்போது மட்டுமல்ல – எப்போதும் உள்ளூர நெருக்கடியுடன் இருக்கிறான் என்பது என் எண்ணம். காலம், பிரக்ஞை சார்ந்த நெருக்கடி இது. நான் மதிக்கும் படைப்பாளிகளுடன் நெருங்கிப் பழகிய நேரங்களில் அவர்களது நெருக்கடியை அநேக சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். அவர்கள் உல்லாசமாக இருப்பது போன்ற பாவனையைக் காட்டிக் கொண்டிருக்கும் போது கூட மனதின் அடி ஆழத்தில் நெருக்கடி அலை மோதிக் கொண்டிருக்கும். இந்த அவதானிப்பு உண்மை என்றால் படைப்பாளி ஏன் நிம்மதி இல்லாமல் இருக்கிறான் என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.
இப்போது கலை என்றால் என்ன ? படைப்பு மனம் என்றால் என்ன ? இவை பற்றி என் மனதிலிருக்கும் பிம்பங்களை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இங்கு நான் பயன்படுத்தும் ‘பிம்பங்கள்’ என்ற சொல் முக்கியமானது. நான் பயன்படுத்தியிருக்க வேண்டிய சொல் ‘சிந்தனைகள்’ என்பது. இந்த இரண்டு சொற்களுக்கான வேற்றுமையைப் பற்றி நாம் யோசிக்கலாம்.
சிந்தனையின் தளத்துக்குள் நுழைய முடியாமல் தொடர்ந்து நாம் வெளியே வழுக்கி விழுந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். கலை என்றால் என்ன என்ற கேள்வி எழுந்ததும் ஆங்கில மொழி மூலமாகத்தான் அதற்கு விடை கிடைக்கும் என்றே தொடர்ந்து நம்பி வந்திருக்கிறோம். படைப்பு மனம் என்றால் என்ன என்ற கேள்வி சார்ந்தும் இதே நம்பிக்கைதான் வெளிப்பட்டிருக்கிறது. நம் உப்பு, புளி பிரச்சனைகளைப் பற்றி நாமே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வாழ்க்கை சார்ந்த அடிப்படை பிரச்சினைகளைப் பற்றி நமக்காகவும் மேற்கத்திய உலகம் சிந்தித்து வருகிறது என்று நம்ப ஆசைப்படுகிறோம்.
இருபதாம் நூற்றாண்டுக்குரிய சிந்தனைத் தளம் பற்றிய கற்பனை ஒன்று நம் மனத்தில் இருக்கிறது. இந்தக் கற்பனை, வாசிப்பு சார்ந்த பிம்பங்களால் உருவாக்கப்பட்டது. ஆங்கில வாசிப்பின் மூலம் தெளிவின்றியும் இடறி விழுந்தும் திரட்டிக் கொண்ட சிந்தனைகள் பலவும் இந்த வாசிப்பு சார்ந்த வெளிப்பாடுகள் – பேச்சு அல்லது எழுத்து இரண்டுமே – ஆங்கில மொழி அறியாதவர்களுக்கும் சிந்தனை சார்ந்த கற்பனைத் தளத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. நம் வாழ்வு சார்ந்தும் நம் இலக்கிய மரபு சார்ந்தும் ஒரு சிந்தனைத் தளத்தை உருவாக்க நம்மால் இன்று வரையிலும் முடிந்ததில்லை. இன்றைய நம் வாழ்க்கையை மேற்கத்திய சிந்தனை சதா கசக்கிக் கொண்டிருக்கிறது. இதை ஒரு அவஸ்தை என்று சொல்லலாம். சிந்தனைத் தளத்திற்குள் நுழைய முடியாமல் நாம் சறுக்கி விழுந்து கொண்டிருப்பதால் நம் மனங்களில் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தத்துவங்களைச் சார்ந்த தெறிப்புக்களைப் பிம்பங்கள் என்றுதான் சொல்ல முடியும். கலை பற்றியும் படைப்பு மனம் பற்றியும் நம் மனங்களில் இருக்கக்கூடிய பிம்பங்களை நாம் ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். அல்லது இரவல் சிந்தனைக்குள் போய் இரவல் சிந்தனைதான் என்பதைக் காட்டிக் கொள்ளும் வகையிலோ அல்லது காட்டிக் கொள்ளாத வகையிலோ சில வித்தைகள் செய்து காட்ட முடியும். வெட்கப்பட வேண்டிய இந்த வித்தைகளை வெட்கப்படாமல் பலரும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நம் வாழ்க்கை சார்ந்து சிந்திக்க முடியாமல் போன வெட்கம் நம்மீது கவியாமல்போனது, நாம் வாழ்க்கை சார்ந்து சிந்திக்க முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம்.
கலை ஒரு வலுவான பொருள் என்பது ஒரு பிம்பம். ஒரு பொருள் அதன் உள்ளார்ந்த சக்தியின் எழுச்சியில் சுவாசிக்கத் தொடங்கிவிடுகிறது. ‘கல்லும் பிராணன் எடுத்து மேலெழுந்து பறந்தது’ என்று தொடங்குகிறது என் கவிதை ஒன்று. கல் பறவையாக மாறும் கதைதான் கலையின் கதை. இது மிக விந்தையானது. ஆனால் இந்த விந்தைதான் பரிணாமத்தில் நிகழ்ந்தது. ஜடத்திலிருந்து மனிதன் தோன்றியது போல் ஜடப்பொருளுக்கு உயிர் தருகிறான் மனிதன். கலையில் ஒளுரும் இந்த உயிரம்சம்தான் முக்கியம். அந்த அம்சம்தான் மனத்தைத் தொடுகிறது. தொடர்ந்து மனித மனங்களை ஸ்பரிசித்துக் கொண்டேபோகிறது. இந்த ஸ்பரிசம் காலத்தின் மீதான ஒரு பயணத்தைக் கலைக்கு சாத்தியப்படுத்துகிறது. மனித உறவு நிகழவில்லையென்றால் கலை ஜடமாகிவிடும். மனித உறவு நிகழும் போது கலை உயிர்ப்புக் கொள்ளும். நான் கண்ட கனவு ஒன்றில் குழம்பி மறிந்த ஒரு காட்சியைத் தெளிவுபடுத்திச் சொல்வது என்றால் உறங்கிக் கொண்டேயிருக்கும் ஒருவனின் கட்டிலருகே மற்றொருவன் வந்து கூர்ந்து பார்க்கும் போது அவன் விழித்துக் கொள்கிறான். பார்ப்பவன் விலகி மறைந்ததும் மீண்டும் தூக்கத்தில் அவன் ஆழ்ந்துவிடுகிறான். இது விட்டுவிட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஓவியத்தை ஒருவன் பார்க்கும் போது அது உயிர் பெறுகிறது. நாவலை ஒருவன் படிக்கும் போது அது உயிர்ப்புக் கொள்கிறது. மனித உறவை நம்பித்தான் கலைகள் உயிர்வாழ முடிகிறது.
இப்போது கலை என்ற சொல்லை விட்டுவிட்டு படைப்பு என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அதாவது இலக்கியப் படைப்பை. நமக்குள் பொதுவாக நிற்பது அது. படைப்பில் மனித உறவை சாத்தியப்படுத்தும் கூறு எப்படிக் கூடுகிறது ? நான் போற்றும் படைப்புக்கு என் மனம் தரும் பொருள் என்ன ? ஒரு உதாரணத்தை முன்வைத்துப் பார்க்கலாம். நான் என் 25 வயதிற்கு மேல் 30 வயதிற்குள்ளான ஐந்தாண்டு காலத்தில் லேவ் தல்ஸ்தோயின் ‘போரும் வாழ்வும்’ நாவலை இருமுறை படித்தேன். இப்போது அந்த நாவலைப் பற்றிய என் அனுபவத்தை என் மனத்தில் மறு உருவாக்கம் செய்வது, அந்த ஐந்தாண்டுகாலத்தில் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மறு உருவாக்கம் செய்வதைவிடச் சுலபமாகப்படுகிறது. அப்படியென்றால் எது ஆழமான பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறது. வாழக்கையா ? படைப்பா ? ஏறத்தாழ கடந்த நாற்பது வருடங்களில் ‘போரும் வாழ்வும்’ தந்த அனுபவம் பெரிய அளவுக்குப் பின்னகர்ந்துவிடவில்லை என்பதும் தெரிகிறது. அன்று உருவான காட்சிகள் இன்றும் தெளிவாகவே இருக்கின்றன. பல குதிரைகளின் முகங்கள் நினைவில் இருக்கின்றன. அவற்றின் உடல்களின் பல்வேறு இடங்களை அவை சிலிர்த்துக் கொள்கின்றன. ஆனால் ஒவ்வொரு குதிரையும் தன் உடம்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டுமே சிலிர்த்துக் கொள்ளும் காட்சி வடிவம் காலத்தின் போக்கில் எந்தவிதமான மாற்றமும் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. துணை கதாபாத்திரங்களின் பெயர்கள் மங்கிப் போன ஒன்றுதான் காலம் அனுபவத்தின் மீது சரிந்ததற்கு ஒரே அடையாளமாக மிஞ்சியிருக்கிறது. அப்படியென்றால் வாழ்க்கையின் சாராம்சம் மனதில் பதிவது போல் வாழ்க்கை பதியவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.
படைப்பு எந்த அளவுக்கு வாழ்க்கையின் சாராம்சத்தைத் தேக்குகிறதோ அந்த அளவுக்கு அது உயிர்ப்புப் பெறுகிறது என்று சொல்லலாமா ? படைப்புக் கொள்ளும் உயிரின் இழைகளைப் பிரித்துக் கொண்டே போனால் அதனுள் மொழிக்கும் படைப்பாளிக்குமான ஒரு பிரத்யேகமான உறவு, மனித ஜீவன்கள் – அவர்கள் எப்படியிருப்பினும் சரி – அவர்கள் மனித ஜீவன்கள் என்பதாலேயே அவர்கள் மீது படைப்பாளி கொள்ளும் ஒரு பிரத்யேக நேசம், வாழ்க்கை தரும் தத்தளிப்பைப் பற்றிய ஊடுருவல்கள், பிரபஞ்ச நாடகத்தின் பிரம்மாண்டம், மனித மனங்களின் அடியாழங்களில் சதா கசிந்து கொண்டிருக்கும் நெகிழ்ச்சி என்று பல ஆற்றல்களின் கூடி முயங்கிய சங்கமம் நம் நினைவிற்கு வருகிறது. படைப்பு என்பதை நாம் ஈரம் என்று சொல்லத் தோன்றுகிறது. சிறு கசிவாகவோ அல்லது பெரிய கடலாகவோ. எப்படியும் ஈரம். மனித வாழ்க்கைக்கு ஆதாரமாக இன்றுவரையிலும் இருப்பதும் இதுவாகவே இருக்கலாம்.
படைப்பு மனத்தின் கூறுகளைப் பற்றிப் பார்க்கலாம். படைப்பு மனத்தைத் தமிழ் மனம் என்றோ இந்திய மனம் என்றோ பிரிக்காமல் உலகப் படைப்புக்கள் அனைத்தையும் உருவாக்கிய ஒரே மனம் என்ற கற்பனையில் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும் அளவுக்குப் பல கூறுகள் எல்லா படைப்பாளிகளுக்கும் பொதுவாக இருக்கின்றன.
சமூக இயக்கத்திற்கு அவசியமான நெறிகளையும் சமயம் போற்றும் நெறிகளையும் – இவை ஒன்றோடொன்று கலந்து கிடக்கின்றன என்று நினைக்கிறேன் – வாழ்க்கையின் ஆரோக்கியம் சார்ந்த கூறுகளாக நாம் எடுத்துக் கொள்வோம் என்றால் படைப்பாளியை ஒரு ‘நோயாளி’ என்றுதான் நாம் வரையறை செய்ய நேரும். சமூக இயக்கங்களும் சமய இயக்கங்களும் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு நன்னெறிப்பாதையில் படைப்பாளி விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட ஒரு ஜீவனாகவே இருந்து வந்திருக்கிறான். ஏன் படைப்பாளியை சமூகம் உள்ளூர ஒதுக்க வேண்டும் ? அவ்வாறு தன்னை ஒதுக்கும் சமூகத்தைப் படைப்பாளி வென்றெடுத்த வரலாறைப் பின்னகர்த்தி வைத்து நாம் இப்போது சிந்திக்க வேண்டும். வென்றெடுத்த பின்பும் புறக்கணிப்பின் எச்சங்கள் இன்றும் பாக்கி இருக்கின்றன. பின்னகர்ந்து கிடக்கும் சமூகங்களின் முக்கியமான குணங்களில் ஒன்று படைப்பாளிகளை அசட்டை செய்வது.
தமிழ்ச் சமூகத்தின் ஆசிரியர் வர்க்கம் படைப்பாளிகளை மதிக்கிறதா ? அரசியல்வாதிகளும், வணிகர்களும், சமயத் தலைவர்களும், சக மனிதனைக் கவிழ்ப்பதற்குத் திரைப்படம் எனும் அறிவியல் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறவர்களும் படைப்பாளிகளை நேசிக்கிறார்களா ? இந்தக் கேள்விக்கான பதிலைக் காண நீங்கள் ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினால், ‘படைப்பாளிகளை நாங்கள் நேசிக்கத்தானே செய்கிறோம்’ என்ற கெட்டிக்காரத்தனமான பதிலில் படைப்பாளிகளின் ஜடங்களைத்தான் அவர்கள் நேசிக்கிறார்கள் என்ற நடைமுறைவாதம் இருப்பதை நாம் பார்க்க முடியும்.
புதுமைப்பித்தனை நேசிக்கச் செய்ய நாம் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. புதுமைப்பித்தனிடம் உயிர்ப்பு இருக்கிறதென்றால் அவரிடம் சாராம்சம் இருக்கிறது என்று பொருள். அந்தச் சாராம்சம் தமிழ் வாழ்வின் சரிவை அனுபவப்படுத்துகிறது. சரிவை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் சரிவின் மீது கவனத்தைத் திருப்புபவர்களை நேசிப்பார்களா ? சாராம்சம் சார்ந்த பார்வை வலுப்படும்போது சமூக விமர்சனம் கூர்மை கொள்கிறது. உயிரியக்கத்திற்கும் உறக்கத்திற்குமான வேற்றுமையும் உறக்கத்திற்கும் ஜடத்தன்மைக்குமான வேற்றுமையும் புலப்படத் தொடங்குகின்றன. அதிகாரத்தின் சகல பீடங்களிலும் வெவ்வேறு முகங்களுடன் உட்கார்ந்து கொண்டிருக்கும் எல்லோருமே உயிரற்ற, சதையற்ற, வனப்பிற்குரிய கோலங்களுமற்ற எலும்புக்கூடுகளாகவே இருப்பதை உணர முடிகிறது. ஆற்றல் வேறு, ஆற்றல் சார்ந்த பாவனைகள் வேறு. இதை நாம் பிரித்தறியும் போது பாவனைகள் கலகலக்கத் தொடங்குகின்றன. பாவனைகளைக் கண்டுகொள்ளவும் ஆற்றலின்மையை உணரவும் அவசியமான கூர்மையைப் படைப்பு உருவாக்க முயல்கிறது. மொத்த படைப்புக்களிலிருந்து பெற்ற அனுபவங்களை இப்படித்தான் சுருக்கிச் சொல்ல முடிகிறது.
படைப்பாளி ஒரு பாதுகாப்பற்றச் சூழலில்தான் இயங்க வேண்டியிருக்கிறது. சமூகம் ஏற்பது – சமூகம் மறுப்பது. இந்தப் பிரிவினையின் அடிப்படையில் படைப்பாளி சிந்திப்பதில்லை. இது தன் இருப்பைப் படைப்பாளி கணக்கிலெடுத்துக் கொள்ளும் சிந்தனை. படைப்பாளியின் சிந்தனை ஒரு விசேஷ அர்த்தத்தில் கனவு சார்ந்த சிந்தனை. அதை புரட்சிகரமான கனவு என்று நாம் சொல்லலாம். அது எப்போதும் நிதர்சனம் சார்ந்த, நடைமுறைவாதம் சார்ந்த புரட்சிகரத்தைவிடப் புரட்சிகரமானது. வரலாறு படைப்பாளியின் புரட்சியை பலமுறை ஆமோதித்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் புரட்சிகரமான சமுதாயத்தை உருவாக்க முயன்ற புரட்சிவாதிகளின் கைகளில் படைப்பாளிகள் மிக மோசமான கொடுமைகளுக்கு ஆளானார்கள். இந்தக் கொடுமை முற்பட்ட நூற்றாண்டுகளிலும் நிகழ்ந்திருக்கிறது. இது நிதர்சனம் சார்ந்த புரட்சிகரத்தைவிடப் படைப்பாளியின் கனவு சார்ந்த புரட்சி, புரட்சிகரமானது என்பதைத்தான் காட்டுகிறது. இக்கருத்தை நாம் இங்கு விவாதிக்க முற்பட்டால் தமிழ் வாழ்க்கை சார்ந்த உதாரணங்களை நான் உங்களுக்குத் தர முடியும்.
படைப்பாளி சார்ந்த உணர்வுகளை நாம் தொகுக்கும்போது நாம் விரும்பியோ விரும்பாமலோ அதன் மீது ஒரு புனிதம் ஏறிவிடுகிறது. படைப்பாளிகளில் ஒரு பகுதியினரேனும் அந்தப் புனிதத்தைத் தொடர்ந்து உடைத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். சமூகப் பார்வையில் படைப்பாளி ஆற்றல் மிகுந்தவனாகவும் பலவீனம் மிகுந்தவனாகவும் இருக்கிறான். படைப்பாளிகள் லெளகீகம் சார்ந்த தன் கையாலாகாத்தனத்தைச் சுய மதிப்பீட்டில் உணர்ந்து வந்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் பொருந்தாமல் போய்விடும் அவலம் அவர்களை ஆட்கொள்கிறது. மொழியை எந்தக் காரியத்திற்காகத் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் பயன்படுத்துகிறார்களோ அந்தக் காரியத்திற்காக அதைப் பயன்படுத்தக் கூடாது என்ற பிடிவாதம் படைப்பாளிக்கு இருக்கிறது. இவ்வாறு லெளகீகத் தளத்திலும் மேல்நிலைப் பயணம் என்ற ஆன்மீகத் தளத்திலும் மொழி பொருந்தாமல் இருக்கும் அவலம் படைப்பாளியின் மீது கவிகிறது. தன் படைப்புடன் தொடர்பு கொண்டு நிற்கும் போதோ அல்லது மற்றொரு படைப்பில் தன்னை இழக்கும் போதோதான் படைப்பாளிக்கு தன் இருப்பு நிறைவாக இருக்கிறது. பிற நேரங்களில் படைப்பாளி தன் இருப்பு சார்ந்த அடையாளத்தை உணரமுடியாமல் தவிக்கிறான்.
படைப்பு நீங்கலான பிற லெளகீகப் பணிகளை ஏற்பதில் படைப்பாளி கொள்ளும் தயக்கம் பிறருடைய பார்வையில் அவனைச் சோம்பேறி ஆக்குகிறது. லெளகீகத்தை முற்றாகத் தவிர்க்க முடியாத படைப்பாளி தன் சோம்பேறித்தனத்தை நினைத்து வருந்துகிறான். அவன் மிகப்பெரிய உழைப்பாளியுங்கூட. ‘உழைப்பாளியாகிய நான் எப்படி சோம்பேறியாக இருக்கிறேன் ?’ என்பது அவனுக்கு விளங்காமல் இருக்கிறது. மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவன் போல் தங்களைக் காட்டிக் கொள்ளும் படைப்பாளிகளில் பலரும் மிகுந்த தாழ்வு மனப்பான்மைக்கு ஆளானவர்கள். இளமையில் கவ்விய தாழ்வு மனப்பான்மை, புற்று நோய் உடலைப் பாதிப்பது போல் அவர்கள் மனங்களைச் செல்லரித்திருக்கிறது. வாளின்றிக் கேடயம் மட்டுமே கொண்ட ஒரு வீரன் எதிராளியின் வாள் வீச்சு தன் மீது பாயாமல் தடுத்துக் கொள்வது போல் படைப்பை முன்வைத்துத்தான் படைப்பாளி வாழ்க்கையின் வாள் வீச்சைத் தடுத்துக் கொள்கிறான்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிக மோசமான அவமானத்திற்கோ அல்லது புறக்கணிப்பிற்கோ அல்லது ஈவிரக்கமற்ற மிதிபடலுக்கோ ஆளாகும் போது படைப்பாளி, ‘நான் மிகச் சிறந்த படைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்’ என்று தனக்குத்தானே அரற்றிக் கொள்கிறான். தன்னைப் புறக்கணிக்கும் சமூகத்திற்கு மிகப்பெரிய படைப்புக்களை அளித்து அதை அவமானத்திற்கு ஆட்படுத்திவிட முடியும் என்று அவன் கற்பனை செய்து கொள்கிறான். அவனுடைய பழிவாங்கல் முறை இது. சமூகத்தின் தடித்தனம் அவன் அறியாதது அல்ல. திரைகளை அகற்றி யதார்த்தத்தின் நிஜ முகங்களை நிரூபிக்கவும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கற்பனை படைப்பாளிக்குத் தேவையாக இருக்கிறது. இப்படிப் பார்க்கும் போது படைப்பாளி புனிதங்கள் எதுவுமற்று துன்பியல் நாடகத்தின் கதாநாயகன் போல் காட்சி தருகிறான்.
திருநெல்வேலி ஹோட்டல் ஆரியாஸில், உரைகல் (இலக்கிய வட்டம்) கூட்டத்தில் வாசித்த கட்டுரை. 12.12.1998. (சொல்புதிது, ஜூலை-செப். 1999)
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- வாழ்க்கையும் கனவுகளும்
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- தமிழாக்கம் 1
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- விமரிசன விபரீதங்கள்
- கலையும் படைப்பு மனமும்
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- உணர்வும் உப்பும்
- விசுவரூப தரிசனம்.
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- நெஞ்சினிலே….
- ஒரு தலைப்பு இரு கவிதை
- உழவன்
- மொய்
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- ஹைக்கூ
- கம்பனும் கட்டுத்தறியும்
- கூடு விட்டு கூடு…
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- விடியும்! நாவல் – (7)
- கோயில் விளையாட்டு
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கடிதங்கள்
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- நேற்று இல்லாத மாற்றம்….
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- அன்னை
- ஊனம்
- வாழ்க்கை
- மனமா ? மத்தளமா ?
- முற்றுமென்றொரு ஆசை
- சந்தோஷமான முட்டாளாய்…
- ஒற்றுப்பிழை