ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

எஸ்.ஜெயஸ்ரீ



வாழ்வனுபவங்களைக் கட்டுரைகளாக முன்வைக்கும் கலைஞர்களில் முக்கியமானவர் பாவண்ணன். அவருடைய கட்டுரையாக்கத்தைப்பற்றி ஒரு வசதிக்காக இப்படி வரையறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. முதலில் வாழ்வில் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு கணத்தில் தன் மனத்தைக் குவிக்கிறார் அவர். பிறகு அப்புள்ளியின் அடியில் ஒரு மகாநதியே பொங்கிப் புரண்டோடுவதை ஒரு தரிசனமாகக் காண்கிறார். மொழியின் வழியாக இரண்டையும் அழகாக இணைத்து ஒரு கட்டுரையாக மாற்றுகிறார். மணலும் கூழாங்கற்களும் மட்டுமே நம் கைகளில் தட்டுப்படும்போது, அவர் மூழ்குவதும் தெரியாமல் முத்தெடுப்பதும் தெரியாமல் வந்து நிற்கிறார். ஒவ்வொர்ன்றும் ஓர் அற்புதமான கலையனுபவமாக இருக்கிறது. அவருடைய புதிய தொகுப்பான ஒட்டகம் கேட்ட இசை மனம் கவர்ந்த பல அனுபவங்களைக் கொண்டிருக்கிறது. தன் வாழ்வனுபவங்களில் விரிவுகொள்ள சாத்தியமுள்ளவற்றை சிறுகதைகளாக எழுதுவதாகவும் மற்றவற்றை அனுபவப்பதிவுகளாக கட்டுரைகளாகவும் எழுதுவதாக பாவண்ணன் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஆனால், இந்த அனுபவக்கட்டுரைகளையே சிறுகதைகளைப் போன்று அவர் எழுதிச் செல்வதுதான் வாசகர்களைக் கவரக்கூடிய விஷயமாக இருக்கிறது. வாசகர்களின் மனத்தில் என்ன விதமான தாக்கங்களையும் விரிவுகொள்ளும் மன்நிலையையும் சிறுகதைகள் தரமுடியுமோ, அதே அளவு தாக்கங்களையும் விரிவுகளையும் இக்கட்டுரைகளும் தருகின்றன.
தொகுப்பில் பதினேழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பத்து கட்டுரைகள் அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் அவர்களுடைய அனுபவங்களைப் பற்றியும் அமைந்துள்ளன. மற்ற ஏழு கட்டுரைகள் அவர் பார்த்து மனம் பரிகொடுத்த விஷயங்களைப் பற்றியும் அமைந்துள்ளன. விதவிதமான மனிதர்களைப் பற்றிய கட்டுரைகள் வாழ்வின் பல புதிய பக்கங்களை நமக்கு அறிமுகப் படுத்துகின்றன.
தொகுப்பின் முக்கியமான கட்டுரைகளில் ஒன்று ”விடை தெரியாத கேள்வி”. மன்நலம் குன்றியவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் பந்தயம் பற்றிய ஒரு செய்தியையும் அவர் எதிர்கொண்ட ஒரு மருத்துவமனை நிகழ்ச்சியையும் மிக அழகாக இணைத்துக் காட்டும் கட்டுரை இது. மனவளர்ச்சி என்பது வெறும் உடல்வளர்ச்சிமட்டுமல்ல. இரண்டும் நேர்விகிதத்தில் இல்லை. போட்டியில் தோல்வியடைந்த சிறுமிமேல் மற்ற சிறுமிகள் காட்டிய அன்பையும் மருத்துவமனையில் கண்ணீரைத் துடைக்கும் சிறுவனின் சித்திரத்தையும் காட்டும் பாவண்ணன், எது நல்ல மன்நலம் என்கின்ற கேள்வியை நம் மனத்தில் தோன்றவைக்கிறார். ”பந்தயவெற்றி என்பது பல சமயங்களில் இரக்க உணர்வை அழித்துவிடுகிறது. வெற்றி வேறு. இரக்கம் வேறு “ என்கிற வேறுபாடுகளை மனவளர்ச்சிதான் சொல்லித்தருகிறது என்ற வரகள் ஆழ்ந்து யோசிக்கத்தக்கவை. மன்நலத்தை எதைவைத்து எடைபோடுவது என்ற கேள்வி வாசிப்பவரின் மனத்தில் ஓர் அலையை எழுப்புகிறது.
மறக்க முடியாத முகம் என்றொரு கட்டுரை. ஒரு பேருந்து நிலையத்தில் சிறிதுநேரம் காணக்கிடைக்கிற காட்சிகள் தொகுத்து முன்வைக்கப் படுகின்றன. அக்காட்சிகள் வழியாக இன்றைய வியாபார உத்திகள், பெருகிவரும் தனியார்மயம், விதவிதமான மனிதர்கள், விதவிதமான குழந்தைகள், பெண்கள் என சமூகத்தின் ஒருகுறுக்குவெட்டுத் தோற்றமே காட்டப்படுகிறது. ஒருபுறம் பணத்தைக் கொட்டிப் படிக்க வசதி படைத்த குழந்தைகள், மறுபுறம் குப்பை பொறுக்கும் சிறுவர்கள், பணம்தேடி ஓடித் திரியும் நடுத்தர வர்க்கத்து ஆண்கள், பெண்கள், வேலையே கிடைக்காமல் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஏதேதோ வேலை செய்யும் இளைஞர்கள் என்று இந்த சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை வெறுமனே இந்தக் காட்சிகள்மூலமே வாசகருக்கு உணர்த்திவிடுகிறார் பாவண்ணன். கைப்பேசியில் தன் முதலாளியிடம் பணிவாகப் பேசும் ஒருவர், அடுத்த நிமிடமே, தனகுக் கீழ் வேலை செய்பவர்களிடம் அதிகாரமாகப் பேசுவது, யாரோ ஒருவரின் கட்டளைக்குப் பயந்து அடுக்கடுக்காக பொய் சொல்வது என வயிற்றுப் பிழைப்புக்காக மனிதர்கள் எப்படியெல்லாம் நடிக்க வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. வாழ்வதற்கான வழிமுறைகளாக இப்படி சிலர் பின்பற்றியிருக்க, தான் காதலித்துக் கைப்பிடித்தவனோடு வாழ முடியாமல் தவிக்கும் பெண்ணின் முகத்தை பாவண்ணன் காட்டும்போது, வாசிப்பவர் மனத்திலும் அந்தப் பெண்ணின் முகம் பாரமாய் ஏறிக்கொள்கிறது. காதல், திருமணம் என்பதெல்லாம் கூட இபொபடி சூழ்நிலைக்கேற்றபடி வார்த்தை மாற்றிப் பேசும் வியாபாரமாகி விட்டதோ என்ற கேள்வி எழுகிறது.
”வலசை போகாத பறவை” என்ற காட்டுரையில் பூங்காவில் இனிமையாகத் தவழும் இசை, மின்சாரச்செலவைக் காரணம் காட்டி நிறுத்தப்படுவதையும் ஒரு வீட்டையே பறவைகளுக்காக அளித்த பெரியவரையும் ஒருசேரக் காட்டி மனிதர்களின் வெவ்வேறு மனவெளிகளைக் காட்டுகிறார் பாவண்ணன். பெரியவரின் தனிமை மரணமும் பறவைகளின் தவிப்புக்குரல்களும் மனத்தைப் பிசைகின்றன.
”வாழ்வைத்தேடி”, ”கிஷண் மோட்வாணி” போன்ற கட்டுரைகள் வயிற்றுப்பிழைப்புக்காக மாநிலம்விட்டு மாநிலம் வரும் மக்களின் வாழ்க்கை எத்தனை அல்ல்லுக்கு உள்ளாகிறது என்றும் அவர்கள் எப்படி துரத்தப்படுகிறார்கள் என்றும் வருத்தப்பட வைக்கிறது. நாடா? மாநிலமா? எது நம் இடம்?
”ஏரியின் அமைதி” கட்டுரையில் காட்டப்படும் சரஸ்வதி, படிக்கும் ஆர்வமிருந்தும் குடும்பப் பொறுப்புகளைத் தாங்கிக்கொள்வதற்காக படிக்க்முடியாமல் போகும் எத்தனையோ பெண்களின் குறியீடு.
”இருட்டின் தடம்” என்ற கட்டுரையில் நண்பருக்காக்க் காத்திருக்கும் ஒரு தருணத்தில் குடிபோதையில் மதுக்கடையிலிருந்து வெளிவரும் விதவிதமான மனிதர்களைப் பாவண்ணன் காட்டுகிறார். குடிப்பவர் எல்லாருமே குடிகாரர்கள், போதையில் தள்ளாடுகிறவர்கள், அவ்வளவுதானே என்றுதான் சாதாரணமாகத் தோன்றும். ஆனால், இக்கட்டுரையை வாசிக்கும்போது அப்படிமட்டும் தோன்றுவதில்லை. ஒவ்வொருவர் மனத்திலும் எத்தனை வருத்தங்கள்? ஏமாற்றங்கள்? காழ்ப்புணர்ச்சிகள்? சகமனிதர்களின் வருத்தங்களைப் பகிர்ந்துகொள்ளவும் ஆறுதல்படுத்தவும் அன்புகொண்ட மனிதர்கள் குறைந்துவிட்டார்களா? மற்றவர்களின் மன்ங்களைக் காயப்படுத்தியும் துன்பப்படுத்தியும் பார்க்கும் மனிதர்கள் பெருகிவிட்டார்களா? குழந்தைகள் பார்த்திருக்க மதுவின் போதையில் தள்ளாடி, தான் பெற்ற குழந்தைகளே தங்களை அழைத்துப் போகும் அவலத்துக்கு எப்படி தங்களை ஆட்படுத்திக்கொள்கிறார்கள்? இப்படி அந்தப் போதையில் சுகம் காண்பவர்களாக ஏன் மாறிப் போனார்கள்? என அடுக்கடுக்காக ப்ல் கேள்விகள் மனத்தில் எழுகின்றன.
”நான்கு எழுத்துகள்” கட்டுரை மனத்தைக் கனக்கவைக்கும் மற்றொரு கட்டுரை. வ்யிற்றுப்பிழைப்பே பெரிய கேள்விக் குறியாக இருக்கும்போது குழந்தைகள் படிப்பு, பள்ளிக்கூடம் என்பதையெல்லாம் எப்படி யோசிக்கமுடியும்? அவர்களை அலைக்கழிக்கும் இந்தச் சமூகமும் அரசாங்கமும் அல்லவா இந்தக்குழந்தைகள் இப்படி படிப்பறிவற்று, நாகரிகமற்று முரட்டுத்தனமாகவே வளர்வதற்குக் காரணம்?
ஜி.டி.நாயுடு பற்றி இவர் படித்த புத்தகத்தின் மூலம் அம்மாமனிதரை வாசகர்களுக்கு அழகாக அறிமுகப் படுத்துகிறார். ஒரு பெரிய சாதனையாளரை இறுதிவரை அரசாஙகம் அங்கீகரிக்கவேயில்லை என்ற வேதனையைப் பதிவு செய்திருப்பது பாவண்ணனின் நெகிழ்ச்சியைக் காட்டுகிறது.
குரல்களின் திசை கட்டுரை திருவிழாக் கூட்டத்தில் தன் குழந்தையைத் தொலைத்துவிட்ட ஒரு தாயின் நிலைமையைச் சொல்கிறது. இது பலருக்கும் காணக் கிடைக்கின்ற காட்சியாக இருக்கலாம். இறைவனைத் தேடி அடைந்துவிட்த் துடிக்கும் பக்தனின் மனத்ஹ்டையும் தொலைத்துவிட்ட தன் குழந்தையத் தேடிக் குரலெழுப்பும் தாயின் மனத்தையும் காட்டுகிறார். பக்தனுக்கு இரங்கும் இறைவன் அந்தத் தாய்க்கும் இரங்கக் கூடாதா? குழந்தையைக் கண்ணில் காட்டக்கூடாதா ? அந்த்த் தாய் ‘பசுபதீ’ என்று குரலெழ்ப்புகையில் அந்த எழுத்து குரலாய் மாறி ஒரு நிமிடம் அசைக்கிறது. கோபுரத்தின்மேல் வானத்தையொட்டிக் காட்சியளிக்கும் பிறைச்சந்திரனை, அந்தச் சிவனே வந்து நிற்பதுபோல எழுதும் பாவண்ணனின் கற்பனை அற்புதமானது.
தலைப்புக்கட்டுரையான ஒட்டகம் கேட்ட இசை மிகவும் அற்புதமாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. தான் கேட்ட பல இசை நிகழ்ச்சிகளை, குரல்களை, பாடல்களை அடுக்கடுக்காக அழகாக வர்ணிக்கிறார். பிறந்த கன்றுக்குப் பாலூட்ட மறுக்கும் தாய் ஒட்டகம் பற்றிய மங்கோலியத் திரைப்பட்த்தை இறுதிக்கட்ட்த்தில் இணைத்துக் காட்டுகிறார் பாவண்ணன். அந்தத் தாய் ஒட்டகம் ஏன் பால் புகட்ட மறுத்த்து? நிறவேறுபாட்டால் ஒரு தாய் தன் குட்டியை வேறு என நினைக்கும? அது எப்படி தாய் மனம் கல்லாகும்? பிரசவம் தந்த வலி அதன் மனத்தை இறுகச் செய்திருக்குமா? என்ன காரணமோ? ஆனால் மன இறுக்கத்தைத் தளர்த்தி மடி இரறுக்கத்தையும் தளர்த்தி மடி இறுக்கத்தையும் தளர்த்தியது இசையல்லவா? இசைக்கு உருவம் இல்லை.. மனத்தின் இறுக்கங்களுக்கும் உருவம் இல்லை. இறுக்கத்துக்கு காரணம் கூட பலசமயம் தெரிவதில்லை. விலங்கானாலும் சரி, மனிதர்களானாலும் சரி, மன இறுக்கத்தைத் தளரவைப்பதுதான் இசை. பாடல்கள் கேட்டு மடிசுரக்கும் பசுக்களையும் கோகுலத்துப் பசுக்களெல்லாம் கோபாலன் குழல்கேட்டு நாலுபடி பால் கறந்த்தையும் இங்கே இனைத்துப் பார்க்கலாம். இசையை ரசிப்பதற்கு ராகம், தாளம், இசைநுட்பங்கள் எதுவுமே தேவையில்லை. இசையை ரசிக்கும் மனம் மட்டுமே போதும் என்பதைப் பாவண்ணன் தன் முறையில் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
“ஒரு பறவயின் படம்”, ’குழந்தையும் அமுதமும்”, “ஒரு சிற்பம், ஒரு கவிதை, ஓர் ஓவியம் போன்ற கட்டுரைகள் தான் ரசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளும் தன்மையில் அமைந்திருக்கின்றன. ஒரு கிளையிலிருந்து எம்பித் தாவி சுதந்திரமான வான்வெளியில் அலைந்து திரிந்துவிட்டு கூட்டையும் பறவைபோல மிக எளிய ஓர் படத்தில்இருந்து தொடங்கி சுதந்திரமாகத் தாவித்தாவிச் செல்கின்றது பாவண்ணனின் மனப்பறவை. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பறவையின் பயணம் என்றே சொல்லவேண்டும்.
( ஒட்டகம் கேட்ட இசை- கட்டுரைகள். பாவண்ணன். காலச்சுவடு வெளியீடு. கே.பி.சாலை. நாகர்கோயில். )

Series Navigation

எஸ்.ஜெயஸ்ரீ

எஸ்.ஜெயஸ்ரீ