நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

லதா ராமகிருஷ்ணன்


(வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)

பார்வையற்றோர் நலனுக்காகக் கடந்த இருபது வருடங்களாகப் பணியாற்றிவரும் ‘வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND – WFB) என்ற அமைப்பு தனது முக்கியப் பொறுப்புகளில் பார்வையற்றவர்களைக் கொண்டிருப்பது. உரிய ஆதரவும், வாய்ப்புகளும் சமூகத்திலிருந்து கிடைத்தால் பார்வையற்றவர்களால் எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும்; சமூக நலனுக்குச் சீரிய முறையில் பங்காற்ற முடியும் என்ற உண்மை குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் முனைப்போடு இயங்கிவரும் இவ்வமைப்பு இந்தக் குறிக்கோளோடு விழிப்புணர்வுக் கண்காட்சிகள் நடத்தியும், பார்வையற்றோர் உரிமைகள், திறமைகள் குறித்த கருத்தரங்குகள் நடத்தியும், வருடாவருடம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, +2 பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணாக்கர் களுக்கும், பார்வையற்ற ஆசிரியர் பயிற்சியில் முதல் மதிப்பெண் எடுப்பவர், தேசியப் பார்வையற்றோர் நிறுவனம் – பிராந்தியக் கிளை(NATIONAL INSTITUTE FOR THE VISUALLY HANDICAPPED REGIONAL CENTER)சார்பாய் நடத்தப்படும் பயிற்சிவகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் ஊக்கமளிப்பதாய் பரிசுத்தொகை அளித்தும், பல்துறைகளில் சிறந்து விளங்கும் பார்வையற்றத் திறமைசாலிகளுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் சாதனையாளர் விருது வழங்கியும் பார்வையற்றோர் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கி வருகிறது. தவிர, பார்வையற்றவர்களுக்கான நன்னலப் பணியில் ஈடுபடுபவர்களையும், பார்வையற்றவர்களின் பிரச்னைகளிலும், பணிகளிலும் பங்கெடுத்து சகமனித நேயத்துடன் இயங்கிவரும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு பார்வையற்றவர்களின் நண்பன்(FRIENDS-OF-THE-BLIND) விருது வழங்கியும், பார்வையற்றோர் குறித்த, மற்றும் பார்வையற்றோரால் படைக்கப்பட்ட எழுத்தாக்கங்களை நூலாக வெளியிட்டும் வருகிறது. அப்படி கடந்த சில வருடங்களில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள நூல்களில் சில:

1)காணாத உலகில் கேளாத குரல்கள்(பார்வையற்றோர் பிறப்பு முதல் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்னைகளைப் பற்றிப் பேசும் கட்டுரைகளடங்கிய நூல். நிறுவனத் தலைவர் டாக்ட.ஜி.ஜெயராமன் எழுதியவை. 2) மறுபார்வை ( ஏறத்தாழ 20 பார்வையற்றோரின் சுருக்கமான வாழ்க்கைசரிதைகள் இடம்பெறும் நூல் 3) ஊற்றுக்கண்கள்–பார்வையற்ற பள்ளிமாணவர்களுக்கு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதைகளின் தொகுப்பு 4) தற்காலத் தமிழ்க்கவிதைகள் – ப்ரெயில் எழுத்தில் ஏறத்தாழ ஐம்பது நவீன தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறும் நூல் குறிப்புகளடங்கிய நூல் 5) லூயி ப்ரெயில் இருநூறாவது ஆண்டுவிழா மலர் 6) ஓசைகளின் நிறமாலை – தர்மபுரி அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிபுரியும் திரு. கோ.கண்ணணின் கவிதைத் தொகுப்பு 7) The state of schools for the blind in Tamil Nadu – டாக்டர். ஜெயராமன் அவர்களால் எழுதப்பட்ட ஆங்கில ஆய்வு நூல். 8) தெய்வத் தமிழிசை – பார்வையற்ற இசையாசிரியர் திரு. மு.வெங்க்டசுப்ரமணியன் எழுதிய பாடல்கள் இடம்பெறும் சிறுநூல் 9) சமுதாயத்தில் நாம் – ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் திரு.ரகுராமனின் கட்டுரைகள் 10) கடவுளும், குழந்தையும் – திரு. இ.வெங்கடேசன் என்ற பார்வையற்ற இளைஞர் – தமிழாசிரியர் எழுதிய சிறுகதைகளடங்கிய நூல் 11) கண்ணோட்டம் – டாக்டர் ஜி.ஜெயராமன் எழுதிய சிறுகதைகள்.

(*இன்னும் 10 புத்தகங்களுக்கு மேல் வெளியிடுவதற்குத் தயாராய் உள்ளன. பிரசுரிக்க ஒரு நூலுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 தேவைப்படுகிறது. நிதியுதவி கிடைத்தால் அவற்றை நல்ல முறையில் பிரசுரிக்க முடியும்)

இந்த அமைப்பின் சார்பில் கவிஞர் கோ.கண்ணனுடைய முதல் கவிதைத் தொகுதி ‘ஓசைகளின் நிறமாலை’ வெளியானதைத் தொடர்ந்து அவருடைய இரண்டாவது கவிதைத்தொகுதியான ‘மழைக்குடை நாட்களை’ வெளியிட ஆர்வத்தோடு முன்வந்தார் நவீன விருட்சம் ஆசிரியர் தோழர் அழகியசிங்கர். கவிஞர் மு.ரமேஷின் இரண்டாவது கவிதைத் தொகுப்பை புதுப்புனல் நிறுவனம் வெளியிட முன்வந்தது.

தவிர, இந்த நிறுவனத்தின் செயலர்களில் ஒருவரான திரு. சிவராமன் – சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்துவருபவர் – பார்வையற்றோர்களுக்கான கணினிப் பயிற்சிப் பட்டறை ஒன்றையும் முன்னின்று நடத்தியுள்ளார். கணினியில் பார்வையற்றவர்களுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருளின் உதவியுடன் பார்வையற்றவர்கள் கணினியை சுயமாக இயக்கிப் பயன் பெறும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு இயக்கங்களையும் திரு.சிவராமன் ஆர்வமாக முன்னின்று நடத்திவருபவர்.

பார்வையற்றவர்களால் மொழிபெயர்ப்புத்துறையில் திறம்படச் செயலாற்ற முடியும் என்று நிரூபிக்கும் வகையில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தோடு இணைந்த அளவில் பார்வையற்றவர்களுக்கான மொழிபெயர்ப்புப் பட்டறை ஒன்றை வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் இரண்டொரு வருடங்களுக்கு முன் நடத்தியது. (குறைந்தபட்சம் ரூ.10000 இருந்தால் இந்தக் கோடை விடுமுறையில் அதுபோன்ற பயனுள்ள மொழிபெயர்ப்புப் பயிலரங்கத்தை மீண்டும் நடத்த இயலும்).

சென்னையில் இயங்கிவரும் KEYCEES HEALTHSOFT INDIA PVT.LTD என்ற நிறுவனம் பார்வையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. கணிசமான எண்ணிக்கையில் பார்வையற்றவர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் நிறுவனச் செயலர்களில் ஒருவராகிய திரு. வெங்கடேஷ்பாபு இந்த நிறுவனத்தில் மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட்டாகத் திறம்படப் பணியாற்றிவருபவர். இதன் நிறுவனர் திரு. கே.ஸி.ஆனந்த் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் நிறுவனத்தின் பணிகள் சிறக்க பலவகையிலும் உதவிபுரிந்துவருபவர். இந்த அமைப்பின் சிறப்பு அங்கத்தினராகவும் இடம்பெற்றிருப்பவர். திரு.ஆனந்தின் மனைவி திருமதி நந்தினி ஒரு சிறந்த பாடகி. இசைஞானம் மிக்கவர். பார்வையற்றோர் நலனில் அக்கறையுள்ளவர். அவருடைய முயற்சியின் பயனாய் கடந்த இரண்டு வருடங்களாய் அவர் சார்ந்திருக்கும் ஜி.நாராயணசாமி ஷர்மா அறக்கட்டளை கடந்த சில வருடங்களாக பார்வையற்ற இசைக்கலைஞர்களைத் தனது ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் இடம்பெறச்செய்து மரியாதை செய்துவருவதோடு பார்வையற்றவர்களின் இசைத்திறமைகளை வெளிப்படுத்தவும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வருடம் மார்ச் 19ஆம் தேதி இந்த அமைப்பு தனது 20ஆவது ஆண்டுவிழாவை சென்னை தாம்பரத்திலுள்ள கிறித்துவக் கல்லூரி வளாகத்தில் கொண்டாடியது. சமூகப் பிரக்ஞை மிக்க எழுத்தாளர்கள் திரு.பொன்.தனசேகரன்( சமூக உணர்வு மிக்க இதழியலாளர்-மொழிபெயர்ப்பாளர், தினமணி, தினமலர், ஆனந்த விகடன் முதலிய பல பத்ஹ்டிரிகைகளில் சீரிய முறையில் பணியாற்றியவர்; இணை ஆசிரியர்-புதிய தலைமுறை கல்வி), திரு.வெளி ரங்கராஜன்( நவீன தமிழ் இலக்கிய இதழ்களில் தொடர்ந்து இலக்கியம், நாடகவெளி, சமூகம், மனித உரிமைகள் குறித்து எழுதிவருபவர், தமிழ் நாடகங்கள் சார்ந்த விவரங்களை, போக்குகளை ஆவணப்படுத்தி அதன் மூலம் மாற்று நாடகங்களை வளர்த்தெடுக்கவும், நாடக ரசனையை மேம்படுத்தவும் வெளி என்ற இதழை நடத்தியதோடு அது குறித்த ஏராளமான கட்டுரைகளை எழுதியிருப்பவர்), கவிஞர்.கிருஷாங்கினி( நவீன தமிழ்ச் சிற்றிதழ்களில் நாற்பது வருடங்களுக்கும் மேலாக கவிதை, கதை, கட்டுரை, மதிப்புரை என பல தளங்களில் எழுதிவருவதோடு சமூக விழிப்புணர்வுடன் நடத்தப்படும் பல்வேறு செயல்பாடுகளில் தன்னை முனைப்பாக ஈடுபடுத்திக்கொள்பவர்) டாக்டர் அறிவானந்தம் (தேசிய பார்வையற்றோர் நன்னல அமைப்பு(NATIONAL INSTITUTE FOR THE VISUALLY HANDICAPPED) – பிராந்திய இயக்குனர்(in-charge) – பல வருடங்கள் பார்வையற்றோருக்கான பணியில் முனைப்பாக இயங்கி வருபவர் ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். கேய்ஸீஸ் ஹெல்த்சாஃப்ட் பிரைவேட் லிமிடட் நிறுவனத் தலைவர் திரு ஆனந்த் விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். விழாவின் முதல் அமர்வாய் அமைப்பின் செயலர்களில் ஒருவரும், சென்னை மாநிலக்கல்லூரியில் ஆங்கிலத் துறையில் துணைப் பேராசிரியராய் இயங்கிவருபவருமான திரு.வி.சிவராமன் ’இனி வருங்காலத்தில் பார்வையற்றவர்கள் நலவாழ்விற்காக நாம் செய்யவேண்டியது என்ன? என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றை முன்னின்று நடத்தினார். கணிணிப்பயிற்சியின் தேவை, தனியார் நிறுவனங்களும் தகுதிவாய்ந்த பார்வையற்றவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள முன்வரவேண்டும் என்பதுபோன்ற பல முக்கியமான கருத்துகள் அந்த அமர்வில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

தேனீர் இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணியளவில் நெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் நிறுவனர்-தலைவர் டாக்டர் ஜி.ஜெயராமன் அவர்கள் அமைப்பின் துவக்கம், செயல்பாடுகள், நோக்கம், இலக்குகள் குறித்து அறிமுக உரையாற்றினார். கேய்ஸீஸ் ஹெல்த்சாஃப்ட் பிரைவேட் லிமிடட் நிறுவனத் தலைவர் – இந்த அமைப்பின் கௌரவ உறுப்பினர் திரு ஆனந்த் பார்வையற்றவர்களின் வேலைத்திறன் குறித்துப் பேசினார். ஊடகங்கள் மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வோடு இயங்கவேண்டியதன் அவசியம் குறித்து சிறப்பு விருந்தினர்கள் பேசினார்கள்.

பத்தாவது வகுப்பு, மற்றும் +2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பார்வையற்ற மாணாக்கர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் சுந்தரராஜன் நினைவுப் பரிசு, மணிகண்டன் நினைவுப் பரிசு வழங்கப்பட்டன.

விழாவில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. உதயநிலா என்ற பார்வையற்ற மாணாக்கர்களுக்கான அமைப்பு சமீபத்தில் நடத்திய முழுநாள் தமிழ்மொழி நாள் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கவியரங்கில் ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கருப்பொருளின் கீழ் ஒன்பது பேர் இயற்றி வாசித்த கவிதைகள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டு வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் சார்பாய் விழாவில் வெளியிடப்பட்டன. ம்ழியெனில் நான் தமிழ்ழக, உறவெனில் நட்பாக, மரமெனில் வாழையாக, காகிதமெனில் புத்தகமாக, தீயெனில் தீபமாக என்பதான ஒன்பது தலைப்புகளில் இத்தொகுப்பில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மற்ற இரண்டும் இவ்வமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர். கி.ஜெயராமன் எழுதிய குழந்தைக் கதைகள். சண்டை வேண்டாம் நண்பர்களே என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும், தமிழிலுமாக இடம்பெற்றுள்ள சிறுவர் கதைகள் ஒன்பது. ஏற்கனவே பரிச்சயமான கதைகளில் முடிவு ஆக்கபூர்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமையும், இருமொழிகளில் அருகருகே இந்தக் கதைகள் தரப்பட்டுள்ளமையும் இந்த நூலின் சிறப்பு. மற்றொரு நூல் மை டியர் சின்னூ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் சின்னு என்ற செல்ல நாயின் சாகசங்களையும், அன்பையும் எடுத்துரைக்கிறது. இந்த மூன்று நூல்களையும் குறுகிய கால அவகாசத்தில் அழகுற வடிவமைத்து அச்சிட்டிருக்கிறது புதுப்புனல் பதிப்பகம்.

திரு.எல்.எஸ்.லூக் சிகாமணி, மதுரை, திரு.விசுவநாதன், செயலர், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம், பேராசிரியர் பொன்முடி, ஆங்கிலத் துறை, அரசுக் கலைக் கல்லூரி, வியாசர்பாடி, சென்னை, பேராசிரியர் எஸ்.எஸ்.சரசுவதி, வரலாற்றுத் துறை, ஆர்.வி.அரசு கலைக் கல்லூரி, செங்கல்பட்டு, திரு. கே.ஸ்ரீவத்ஸா, (ஓய்வுபெற்ற) அகில இந்திய வானொலி நிலைய இசைக்கலைஞர், பேராசிரியர் ஏ.விஜயகுமார். ஆங்கிலத் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை ஆகியோர் பார்வையின்மையையும் மீறி தங்கள் அயரா உழைப்பினாலும், விடா முயற்சியாலும் வாழ்வில் முன்னேறியதோடு ம்ட்டுமல்லாமல் தம்மொத்த பிறர் வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்பட கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அரும்பணியாற்றிவருபவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு இவ்விழாவில் ‘சாதனையாளர் விருது’ வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

விழா சிறப்புற நடைபெறவும், நூல்கள் வெளியிடப்படவும் உறுதுணையாக இருந்த நன்கொடையாளர்களுக்கும் பார்வையற்றவர்கள் நலனிலும், இவ்வமைப்பின் வளர்சசியிலும், செயல்பாடுகளிலும் எப்பொழுதும் உறுதுணையாக இருந்துவரும் அனைவருக்கும், விழா நடத்த இடமளித்து உதவிய தம்பரம் கிறித்துவக் கல்லூரி நிறுவனத்தாருக்கும் அமைப்பின் செக்ரடரி-ஜெனரல் பேராசிரியர் சுகுமார் மனமார நன்றி தெரிவித்தார்.

வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும் நூல் வெளியீடுகளுக்கும் உதவ விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரி அல்லது வங்கிச் சேமிப்பு எண்ணில் நிதியுதவி செய்யலாம். நீங்கள் தரும் நிதியுதவி முறையாகப் பயன்படுத்தப்படும், உரியவிதமாய் அங்கீகரிக்கப்படும் என்ற உத்திரவாதத்தை இந்த அமைப்பு அளிக்கிறது.

WELFARE FOUNDATION OF THE BLIND
Reg. No. 193/91
No.7, Iswaran Koil St, Kilampakkam, Urapakkam post,
Pin code 603 202 – Phone 044 22750896
email: wfbchennai@gmail.com
Dr.G.Jayaraman: 9444449368

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்