நற்பேறு பெற்றவன் நான்..

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

செங்காளி


கனவின்றி தூங்கிக் காலையில் எழுந்தேன்
எனக்கிலை நோயேதும் என்பதை உணர்ந்தேன்
நோயினால் வருந்துவோர் நாட்டிலே நிறைய
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்

தினசரித் தாள்தனை திறந்து பார்த்தேன்
நடப்புச் செய்திகளைப் படித்து முடித்தேன்
படிக்கவே தெரியாப் பாமரர் பலபேர்
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்

குளித்து முடித்துப்பின் மடிப்புகள் கலையா
ஆடைகள் அணிந்து அழகு பார்த்தேன்
மாற்றுடை இல்லா மக்கள் மிகையாய்
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்

சுவையான உணவு சூடாக இருக்க
வேண்டும் அளவு விரும்பி உண்டேன்
பசியால் வாடுவோர் பட்டினி கிடப்போர்
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்

வடிவான மனைவி வழியனுப்பி வைக்க
விரைவாக ஊர்தியில் வேலைக்குச் சென்றேன்
வேலைகள் இன்றி வாடிடும் மக்கள்
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்

வேலை முடிந்து வீடு திரும்பினேன்
மனைவியும் மக்களும் மகிழ்வுடன் நோக்க
அனாதை என்போர் ஆயிரக் கணக்கில்
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்

பஞ்சு மெத்தைப் படுக்கையில் சாய்ந்தேன்
கண்களை மூடுமுன் கூரையைப் பார்த்தேன்
வானமே கூரையாய் வாழும் ஏழைகள்
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்

நற்பேறு பெற்றநான் நல்லதும் செய்கிறேன்
அகிலத்துக் கேற்றதோர் ஆடையைப் போர்த்திட
பாரிலே பொங்கிடும் பசியினைப் போக்கிட
குவலயத் துக்கொரு கூரையை வேய்ந்திட
என்னால் முடிந்ததை எடுத்துச் செய்கிறேன்

வசதிகள் குறைவாய் வாழ்க்கையில் இருப்பினும்
சிரிப்புடன் வாழும் சிலரைப் பார்க்கிறேன்
அவர்களின் மனத்திறன் அறிந்து வியக்கிறேன்
எல்லா மிருந்தும் ஏங்குவோர் பலரை
எதிலே சேர்ப்பது என்பதை அறிகிலேன்..

**
natesasabapathy@yahoo.com

Series Navigation