“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

மோகன் குமார்


“நம்பர் 1.. நீங்களும் ஆகலாம்” என்கிற சுய முன்னேற்ற நூல் எழுதியவர் ரஞ்சன். குமுதத்தில் நிருபராக வேலை செய்கிறார். பிசினஸ் மகாராஜாக்கள் போன்ற புத்தகங்கள் எழுதி உள்ளார். குமுதத்தில் பிரபலங்களின் “பயோடேட்டா” எழுதுபவர் என்றால் எளிதில் புரியும்.

முன்னுரையில் குமுதம் ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன், அமெரிக்காவில் உள்ளது போல சிறு சிறு அத்தியாயங்களுடன் ஒரு சுய முன்னேற்ற புத்தகம் எழுத வேண்டும் என்று கூறி ரஞ்சனிடம் இந்த புத்தகம் எழுத சொன்னதாக சொல்கிறார். ரஞ்சன் தன்னுரையில் வந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்கிறார். தொடர் வெளி வந்த போது, வாசித்து விட்டு தொலைபேசியில் பேசிய நபர் ஒருவர், இவர் வீடு தேடி வந்து விட்டதாகவும், கிடைக்காமல் போன சில அத்தியாயங்கள் இவரிடம் வாங்கி சென்றதாகவும், தன் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இந்த புத்தகமே காரணம் என அவர் சொன்னதாகவும் சொல்கிறார் !! புத்தகம் அந்த நபர் சொன்ன அளவு இருந்ததா என்றால், ஓரளவு மட்டுமே என்று தான் சொல்ல வேண்டி உள்ளது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு குட்டி கதை சொல்லி, அதனை ஒட்டி சில கருத்துகள் சொல்கிறார். உதாரணத்திற்கு ஒரு கதை.

ஒரு பெரிய நதியை ஒரு பெண் நீந்தி கடந்து சாதனை படைக்க முயல்கிறாள். முக்கால் வாசி தூரம் வந்த பிறகு அவள் “முடிய வில்லை; விலகுகிறேன்” என்கிறாள். உடன் படகுகளில் வருபவர்கள் “இன்னும் கொஞ்ச தூரம் தான்” என சொல்லி சொல்லி நீந்த வைக்கிறார்கள். . குறிப்பிட்ட அளவுக்கு மேல் முடியவில்லை என படகில் ஏறி விடுகிறாள். ஏறி சில நிமிடங்களில், கரை வந்து விடுகிறது. “கொஞ்ச நேரம் பொறுத்திருந்தால் வெற்றி கோட்டை தொட்டிருக்கலாமே ” என மனம் நோகிறாள் அவள்.

அடுத்த முறை பனி அதிகம், கரை தெரியவே இல்லை; ஆயினும் இம்முறை முழுவதும் அவள் நீச்சல் அடித்து சாதனை புரிந்தாள். “இம்முறை எப்படி சாத்தியம் ஆனது?”. என்று கேட்டதற்கு “கரையை சரியாக என் மனதில் பதித்து விட்டேன். பனி போன்ற ஏதும் என் இலக்கை தொந்தரவு செய்ய வில்லை” என்கிறாள்.

இலக்கை மனதில் பதித்து கொள்வதன் அவசியத்தை சொல்கிறது இக்கதை. இது போல மேலும் பல கதைகள் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் !

பயம் பற்றி மட்டுமே சில அத்தியாயங்கள் உள்ளன. இதில் ஒரு தகவல் ” சராசரி மனிதர்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஐந்து நிமிடம் கவலை படுகிறார்கள்” என ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்களாம்! பயத்தை வெல்வது எப்படி என சற்று விரிவாகவே அலசுகிறது புத்தகம்.

முன்னேற்றம் பற்றி சொல்லும்போது “வாழ்வில் 1 % மக்களே வெற்றிபெறுகிறார்கள். 99 % மக்கள் வெற்றி பெறுவதில்லை” என்கிறார். இதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு முன்னேற ஆசை உள்ளதே ஒழிய, அதற்கான திட்டமும் செயலும் இல்லை என்பதே. ஒரு சதவீத மக்கள் மட்டுமே வெல்கிறார்கள் என்ற தகவல் நம்மை நிச்சயம் சிந்திக்க வைக்கிறது !
ஆங்காங்கு சில நல்ல கதைகளும், கருத்துகளும் தென்பட்டாலும் கூட அவற்றில் பல “மேற்கத்திய” பாணியில் உள்ளது சற்று சலிப்பூட்டவே செய்கிறது. இதனை விடவும் இதே ஆசிரியர் எழுதிய “பிசினஸ் மகாராஜாக்கள்” புத்தகம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றுகிறது. வாழ்வில் சாதாரணமாய் இருந்து முன்னேறியவர்கள் வாழ்வில் நாம் அறிந்து கொள்ள நிறைய விஷயம் இருக்குமே ! அந்த புத்தகம் வாசிக்க நேர்ந்தால் நிச்சயம் எப்படி இருந்தது என பகிர்வேன்.

Series Navigation

மோகன் குமார்

மோகன் குமார்