சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

விக்ரமாதித்யன்.


‘விசிட்டர் ‘ பத்திரிக்கையிலிருந்து விலகி வந்தபிறகு, ஃப்ரீலேன்ஸரா ‘க பத்திரிகைகளுக்கு ‘மேட்டர் ‘ செய்து கொடுக்கலாம் என்று தீர்மானித்தாயிற்று. பெரியவர் சாவி, ‘குங்குமத் ‘திலிருந்து வெளியேறிய பிற்பாடு, பாவை.சந்திரன் பொறுப்புக்கு வந்திருந்தார் அப்பொழுது நானும் நண்பர் துரையும் சேர்ந்தே மேட்டர் ‘மேட்டர் ‘ பண்ணினோம். சில ‘மேட்டர் ‘களுக்கு நானே ‘ஐடியா ‘ கொடுப்பேன். நடப்பு விஷயங்களைச் (Current Matters) செய்திதாள் பார்த்து அவர்கள் சொல்வார்கள். திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மகப்பேறு மருத்துவமணையில் கைக்குழந்தை காணாமல் போனது எல்லாம் பாவை சொல்லி பேட்டிக்கண்டு எழுதியதென்றால், ‘நீங்கள் சமீபத்தில் கண்ட கனவு ‘ எல்லாம் என் மனசில் தோன்றியது. புதிதாக என்ன ‘மேட்டர் ‘ பண்ணலாம் என்றுதான் யோசித்துக் கொண்டிருப்பது. பத்திரிகையாளனாக வேண்டும் என்ற தாகம்.

ஒரு கல்லூரி மாணவி, ஒரு நடிகை, ஒரு தொழிலதிபர் இதுபோல மூன்று பேரிடம் கேட்கலாம் என்று எண்ணம். அந்த நாள்களில் சினிமாத்துறை எங்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாததால், மற்ற இரண்டையும் நாங்களே செய்துகொடுப்பதாகப் பேச்சு. தொழிலதிபர்க்கு பொள்ளாச்சி நா. மகாலிங்கம் பெயர் குறித்துக் கொடுத்திருந்தது. அது ஈசன் குரூப்ஸ் ஈஸ்வர ஐயர் என மாற்றப்பட்டது. டெலிபோன் டைரக்டரியில் தொலைபேசி எண் கண்டு பிடித்து, விஷயத்தைச் சொல்லி அப்பாயிண்ட்மென்ட் கேட்டேன். மறுநாள் சாயுங்காலம் வந்து பார்க்கும்படி சொன்னார் என்று தெரிவித்தார்கள். நானும் துரையும் போயிருந்தோம். நாங்கள் போன பொழுது மாலை 6.00 மணி தாண்டிவிட்டது. தனிச்செயலாளர் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். விஷயத்தைச் சொன்னதும், ‘ஐயா இந்த நேரத்தில் விசிட்டர்ஸைப் பார்ப்பதில்லையே. காலையில் வாங்களேன் ‘ என்றார்.

‘ஸார் சொல்லித்தான் வந்திருக்கோம். நீங்கள் போய்க் கேட்டுவிட்டு வாங்களேன் ‘ என்று கேட்டுக்கொண்டோம்.

வரவேற்பறையில் இருக்க வைத்துவிட்டுச் சென்ற அவர் இரண்டு நிமிஷத்திலேயே வந்து, ‘வாங்க ‘ என்று கூடவே அழைத்துக் கொண்டு போனார்.

பெரிய வளாகம். வலதுபுறம் ஒரு பங்களா. இடது பக்கம் இன்னொன்று. நடுவே திறந்தவெளி. விசிறிவாழை, பூந்தொட்டிகள். பிளைமவுத் கார். மூன்று தனி ஆட்டோக்கள். ஒரு செவர்லெட். மரங்களும் புல்பரப்புமாய் சுற்றிச் சூழ.

ஒரு தனி அறை.

‘வாங்க ‘ என்று வரவேற்றார் ஈஸ்வர ஐயர். எதிரே இருந்த ஸோபாவைக் காட்டி உட்காரச் சொன்னார். அவருக்குப் பக்கத்தில் டாபாயின்மீது ஒரு ஃபுல் ஃபாரின் ஸ்காட்ச் பாட்டில், இரண்டு ஸ்மால் குறைவாக. ஸ்பென்ஸர் சோடா. கண்ணாடி தம்ளரில் பொன்னிற திரவம்.

எங்களை ஏறெடுத்துப் பார்த்த ஐயர், ‘குடிக்கிறீங்களா ‘ என்று இயல்பாய்க் கேட்டார். அவர் கையில் க்ளாஸ்.

‘இல்ல இல்ல. வேண்டாம் ‘ என்று இரண்டு பேரும் அவசர அவசரமாய் ஒரே நேரத்தில் மறுத்தது இப்பொழுதும் ஆச்சரியம்.

‘என்ன ‘ என்று கேட்டார்.

சொன்னோம்.

‘எழுதிக்கிறீங்களா ‘ என்று சொல்ல ஆரம்பித்தார்.

துரை சொல்லச் சொல்ல வேகமாக எழுதிக்கொண்டிருந்தார்.

சரியான உயரம். சந்தன நிறம். திடகாத்ரமான உடம்பு. அறுபது வயசுக்கு மேல் இருக்கும். ஆனால், அப்படிச் சொல்லமுடியாது. அபூர்வமான மனுஷன். பார்த்த மாத்திரத்திலேயே, ஐயரின் கம்பீரம் மதிப்பை உண்டு பண்ணும். நல்ல முக லட்சணம். யாருக்கும் மரியாதை ஏற்படுத்தும்.

வெகு நிதானமாக ‘ஸிப் ‘ பண்ணிக் குடித்தபடியே, கடகடவென சொல்லிக் கொண்டிருந்தார்.

சற்றே நிமிர்ந்து பார்த்து, ‘காஃபி சாப்பிடுறீங்களா ‘ என்று கேட்டுவிட்டு இண்டர்காமில் பேசினார். வந்தது.

முடிந்தது எல்லாம்.

‘படிங்க அதை ‘ என்றார்.

துரை தெரியாதவர்கள் முன் படிக்கக் கூச்சப்படுவான்.

அவன் கையிலிருந்து வாங்கி வாசித்துக் காண்பித்தேன்.

‘சரியா இருக்கு. எடுத்துட்டுப் போங்க ‘ என்றதும்-

‘வர்றோம் ‘ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.

‘கொஞ்சம் இருங்க ‘ என்ற குரல்கேட்டுத் திரும்பினோம்.

‘நாளை காலையில வந்து வாங்கிக்கிறீங்களா. நான் ஒரு தடவை சரிபார்த்து வச்சுடுறேன் ‘ என்றார்.

‘சரியா இருக்கு ஸார். நாளைக்கு நாங்க கொடுக்கணுமே ‘ என்றேன்.

‘காலையில ஆபீஸ்உக்குக் கொடுத்துவிடுறேன்- ‘ என்றார்.

‘நாங்களே வந்து வாங்கிக்கிறோம் ‘ என்று கூறிவிட்டு வந்தோம்.

* * *

காலையில் பத்துமணிவாக்கில் போயிருந்தேன்.

செயலாளர் ஒரு கவரை எடுத்துக் கொடுத்தார்.

பிரித்துப் பார்த்தேன்.

முதல் நாள் ஐயர் சொல்லியது, ‘நீட் ‘டாக ‘டைப் ‘ செய்யப்பட்டிருந்தது.

‘சரி. நன்றி ‘ எனச் சொல்லிவிட்டு எழுந்து புறப்பட்டேன்.

‘உங்களைப் பார்த்துட்டுப் போகச் சொல்லியிருக்காங்க. இருங்க ‘ என்றவர் உள்ளே போய்க் கேட்டுவிட்டு வந்தார்.

சிறிது நேரத்தில் கூட்டிக்கொண்டு போனார்.

பேண்ட், ‘இன் ‘பண்ணிய ஷர்ட், டை யோடு இருந்தார் ஈஸ்வர ஐயர்.

என்னைப் பற்றி விசாரித்தார்.

‘இதில உங்களுக்கு என்ன கிடைக்கும் ? ‘

‘கொஞ்சம் அலைஞ்சு திரிஞ்சா 250ரூபா போல வரும் ‘

‘இது போதுமா ? ‘

‘ம்ஹ்ஊம். பத்திரிகையாளனா ஆகணும்கிறதுக்காகத்தான் இதில இருக்கேன். சப். எடிட்டர் மாதிரி ஆயிட்டா நல்ல சம்பளம் கொடுப்பாங்க. அதுக்கு முன்னனுபவம் கேட்பாங்க, அதான். ‘

‘ஏன் நீங்களே ஒரு பத்திரிகை நடத்தக்கூடாது நண்பர்களோட சேர்ந்து. ‘

‘முடியாது. சாத்தியம் இல்லை. லட்சக்கணக்கில் முதல் வேணும். நெட் ஒர்க் இருக்கணும். முன்ன மாதிரி இல்லை. சாதாரண ஆளுல்லாம் நடத்தமுடியாது, இப்பம். ‘

‘இதில எப்படி வாழ்றீங்க. ‘

‘கஷ்டம்தான். வேற தொழில் தெரியாது. ‘

‘பத்திரிகையில் வேலை கிடைச்சா சேர்ந்துருவீங்களா. ‘

‘ஆமா. ஃப்ரீலான்ஸ் பண்ணி வாழ முடியாது. ‘

‘சரி. உங்களுக்கு வேலை கிடைக்கிறவரைக்கும் மாசம் 250 ரூபாய் வாங்கிக்கிங்க. நான் தர்றேன். தினம் காலையில ஒன்பது மணிக்கு போன் பண்ணுங்க. ஏதாவது வேலை இருந்தா சொல்றேன். வந்து பாருங்க. சாயங்காலம் ஒரு தடவை போன் பண்ணுங்க. போனுக்குத் தனியா தந்துருவாங்க. ‘

‘ரொம்ப சந்தோஷம் ‘ என்று சொல்லிவிட்டுப் புறப்படும் நேரம் கேட்டார்:

‘உங்களுக்கு எந்த ஊரு ? ‘

‘திருநெல்வேலி. ‘

‘திருநெல்வேலியில எங்க. ‘

‘டவுன். ‘

‘இங்க யாருல்லாம் இருக்கிங்க. ‘

‘அப்பா, அம்மா, நான். ‘

‘அப்பா என்ன செய்றார். ‘

‘இப்ப சும்மாதான் இருக்காங்க. ‘

‘ஊர்ல என்னபண்ணிட்டு இருந்தாரு. ‘

‘சொந்தமா சைக்கிள்கடை வச்சிருந்தாங்க. சிங்கம்பட்டி ஜமீன்ல செக்ரட்டரியா இருந்தாங்க. ‘

‘அப்பாவை வந்து பார்க்கச் சொல்லுங்க. ‘

‘வர்றேங்க. ரொம்ப நன்றி. ‘

* * *

அப்பா போய்ப் பார்த்தார்கள். ஈசன் க்ரூப்ஸ் ஊழியர்கள் காலனிக்குப் பொறுப்பு. யார் வீட்டிலாவது பல்பு ஃபியூஸ் ஆகிவிட்டால், வேறு பல்பு போட்டுக் கொடுக்கவேண்டும். ஃபேன் ரிப்பேராகிப் போய்விட்டால், எலெக்ட்ரீஷியனிடம் சொல்லி பழுதுபார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். குழாய் கெட்டுப் போய்விட்டது என்றால், பிளம்பரிடம் சொல்லிச் சரிசெய்து கொடுக்கவேண்டும். அலுவலக நேரம் முடிய காலனியிலேயே இருக்கவேண்டும். இதுதான் வேலை. ஐநூறு ரூபாய் சம்பளம். ஒரேநாளில் வாழ்க்கையே மாறிவிட்டது.

காலையில் போன்பண்ணுவேன்.

‘நாளைக்கு வாங்க ‘ என்பார்.

திடாரென்று கூப்பிட்டு விடுவார், ஆட்டோவை அனுப்பி. போவேன். அதேபோல, திரும்பும்பொழுது ஆட்டோ இருந்தால் வீட்டில் கொண்டுபோய்விடச் சொல்வார்.

வேலை என்று ஒன்றும் இராது, அனேகமாக.

வாரத்தில் இரண்டு நாள் போய்ப்பார்க்கவேண்டி வரும். சும்மாதான் பத்திரிக்கைக்காகச் செய்ய வேண்டியது எதுவும் இருந்தால் வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார். போகவேண்டாம். முதல் தேதியில் கவரில் 250 ரூபாய் போட்டுக்கொடுத்து விடுவார்கள்.

ஒருநாள் வீட்டில் கடிதம் கொடுத்துவிட்டுப் போயிருந்தார்கள். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்திருக்கும், எப்பொழுதும். கவரில் போட்டுத்தான் கொடுத்து அனுப்புவது.

* * *

‘ஐடென்டிஃபிகேஷன் ‘ க்கு என்ன தமிழ் வார்த்தை. ‘

‘அடையாளம்னு சொல்லலாம் ஐயா. ‘

‘இல்ல. இல்ல. இன்னும் எளிமையா இருக்கணும். எல்லோருக்கும் புரியணும். ‘

‘ஐயா நாளைக்கு வந்து சொல்றேன் ‘ என்று கிளம்பினேன்.

நேரே பேருந்து பிடித்து கே.கே.நகரிலுள்ள தேவநேயப் பாவாணர் வீடுபோய் அவரிடம் கேட்டேன்.

பாவாணர் ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்ஸிடி பிரஸ் டிக்ஷனரி, சென்னைப் பல்கலைக்கழக அகராதியை எல்லாம் ‘ரெஃபர் ‘பண்ணிப் பார்த்துவிட்டுத் தனித்தமிழ்ச் சொல் ஒன்றைக் கூறினார்.

ஐயரிடம் மறுநாள் போய்ச் சொன்னேன்.

‘இது அர்த்தம் சரிதான். ஆனால், யாருக்குப் புரியும். எளிய தமிழா இருக்கணும் ‘ என்றார்.

‘ஐயா, பழகப்பழக எல்லாச் சொல்லும் புரியும் ‘ என்றேன்.

‘ம்ஹ்ஊம். சொல்லும்போதே புரியணும் ‘ என்று மறுத்துவிட்டு, ‘இருங்க. கேட்டிருவோம் ‘ என்று எழுத்தாளர் அகிலனுக்கு போன்செய்து கேட்டார். பேராசிரியர். அ.ச.ஞானசம்பந்தனிடம் கேட்டார்.

இரவு ஒன்பது, ஒன்பதரை இருக்கும்.

யோசித்துக் கொண்டிருந்தேன்.

‘ஐடென்டிஃபிகேஷன் ‘ இவ்வளவு சிக்கலா.

என்ன ஒரு தமிழ்ப்பற்று.

எளியதமிழ்தான் வேண்டும் என்கிறாரே.

ஏற்கனவே, எழுபதுகளின் கடைசியில் இலக்கியச் சிந்தனை ‘யின் மாதாந்திரக் கூட்டம் ஒன்றின் கதைத் தெரிவின் பொழுது, எழுத்தாளர் சுஜாதா, ‘ஐடென்டிஃபிகேஷன்க்குத் தமிழ் தெரியலை ‘ என்றதும், ‘தமிழ் தெரியாம ஏன்யா எழுதுறே ‘ என்று தமிழ்ப் பற்றாளர் ஒருவர் இடைமறித்துக் கேட்டதும் ஏனோ நினைவுக்கு வந்தது.

ஐயரும் நாமும் எந்தப்புள்ளியில் சந்திக்கிறோம், இவரையும் நம்மையும் எது இப்படி இணைத்து வைத்தது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன்.

‘சரி. நீங்கள் போகலாம். ‘ என்றதும் விடுதலையான மாதிரி இருந்தது.

* * *

ஈஸ்வர ஐயர் நிரம்ப சுவாரஸ்யமான மனுஷன். காலையில் பத்தரைக்கெல்லாம் அலுவலகம் போய்விடுவார். சாயங்காலம் திரும்பி வந்ததும், குளித்துவிட்டு, வேஷ்டி – அங்கவஸ்திரத்துடன் காரில் ஏறி, கற்பகாம்பாள் கோயில். அறங்காவல் குழுத்தலைவர் என்று ஞாபகம்.

வீட்டில் வேலையாளைக் கூப்பிட (பூஜை) மணிதான்.

ஹாலின் நடுவே பூஜையறை, விசாலமாய்.

திட்டமிட்டு, பார்த்துப்பார்த்துக் கட்டிய வீடாய் இருக்கும். கோடை விடுமுறையில், தஞ்சாவூர்ப் பக்கம் வேதம் படிக்கிற பிள்ளைகள் (ஆதரவற்றவர்கள்) வந்து தங்கியிருப்பார்கள். பத்துப் பனிரெண்டாவது பேராவது இருக்கும்.

குளியலறை துப்புரவாய் இருக்கவேண்டும்.

கைகழுவ வைத்திருக்கும் சாம்பிள் ஹமாம் தினசரி புதிதாக இருக்கவேண்டும்.

கை துடைக்கும் தேங்காய்ப் பூத்துண்டு நாளும் மாற்றப்பட வேண்டும்.

உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை என்றுதான் மாறிமாறிப் பேசுவார்.

வேட்டியைத் தழையத் தழையக் கட்டியிருந்தால், அது எவ்வளவு தப்பு, அதனால் கிருமிகள் எப்படிப் பற்றும் என்று எடுத்துச் சொல்வார்.

ஐயருடைய சுறுசுறுப்பு ஆச்சரியமானது.

காரியங்களைத் தள்ளிப்போடுவது பிடிக்காது.

உடனுக்குடன் முடிவெடுத்து அமல் படுத்துவார்.

அவருக்கு திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி.

உழைப்பால் உயர்ந்தவர்.

ஐயருடைய செயல்திறமும் வேகமும் படித்துக்கொள்ள வேண்டிய நல்ல அம்சங்கள்.

ஓசூரில் அவர்கள் ஃபேக்டர் ஒன்று இருந்தது.

வாரம் ஒரு முறை அவரே போய்வருவார்.

* * *

இது இப்படி இருக்கையில், நண்பர் சமயவேல்தான் ஒருநாள் கேட்டார் : ‘நீங்க எங்க போய்ச் சேர்ந்திருக்கீங்க, நம்பி. தொழிலாளரை ‘எக்ஸ்ப்ளாய்ட் ‘ பண்ற ஒரு முதலாளிகிட்ட. இதோ பாருங்க, அவர் நிறுவனத்தில் ஸ்ட்ரைக். ‘

நாங்கள் நடந்து கொண்டிருந்தது சைதாப்பேட்டை ரயில் நிலைய மேம்பாலம். அவர் காண்பித்தது அங்கு ஒட்டியிருந்த போஸ்டர்.

‘என்ன செய்ய சமயவேல். நீங்க கம்யூனிஸ்ட். நான் என்னய்யா பண்ண. ‘

‘இல்ல நம்பி. நீங்க எங்க போய்க்கிட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சா போதும். ‘

* * *

அடுத்த மாதமே புதிதாகத் தொடங்கியிருந்த ‘அஸ்வினி ‘ பத்திரிகைக்கு நல்ல ப்ரூஃப்-ரீடர் வேண்டுமென்று வேலைக்குக் கூப்பிட்டு விட்டிருந்தார்கள்.

வேலையில் சேர்ந்ததும் ஐயரிடம் சொன்னேன், தொலைபேசியில்.

அப்பா ஒரு வருஷமோ என்னவோ அந்த வேலையில் இருந்தார்கள்.

ஈஸ்வர ஐயரை அவ்வப்பொழுது போய்ப் பார்ப்பது உண்டு. பிறகு எப்படியோ அந்தத் தொடர்பு விட்டுப் போயிற்ரு.

கொஞ்ச காலம் கழித்து ஒருநாள் மாலைச் செய்தித்தாளின் வால் போஸ்டரில் ஐயரின் மரணச்செய்தியைப் பார்த்ததும் மனசை உலுக்கிவிட்டது.

ஈஸ்வர ஐயரை மாதிரி இன்னொருவரைப் பார்க்கமுடியாது. அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன் இருந்தான்.

***

Series Navigation