கூடு விட்டு கூடு…

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

ருத்ரா.


31.07.03

விக்கிரமாதித்யனிடமிருந்து

வரம் வாங்கி வந்தேன்

கூடு விட்டு கூடு பாய.

அதை வைத்துக்கொண்டு

இந்த ஜனங்களின்

வாக்குச்சீட்டுகளில்

புகுந்துகொண்டு

இந்த கோட்டையைப்பிடிக்க

ஆசையில்லை.

தலையை தலையை ஆட்டும்

இந்த கொம்புமுளைத்த

ஜனநாயக மந்தையை விட்டு

எப்படி மீண்டுவருவது ?

அதை வைத்துக்கொண்டு

‘ஒசாமா பின் லேடனாய் ‘ மாறி

உலகத்து

மானிட வர்க்கங்களை எல்லாம்

பூண்டோடு அழிக்கும்

வெறிபிடித்த ஆசையில்லை.

அதை வைத்துக்கொண்டு

சந்தனமரக் கடத்தல்

வீரப்பனாய் மாறி

அரசாங்க கஜானாவின்

கோடி கோடி ரூபாய்களில்

‘தொட்டு பிடிச்சு ‘ விளையாடி

டிவியில் ‘மெகா சீரியல் ‘

காட்ட ஆசையில்லை.

அதை வைத்துக்கொண்டு

போப்பாண்டவராய் மாறி

உலகத்து மக்களின்

முதுகுகளில் எல்லாம்

உட்கார்ந்து கொண்டிருக்கும்

சிலுவைகளை

வருடிக்கொடுத்து

சுமைகுறைக்கும்

தொண்டுகள் ஆற்ற

ஆசையில்லை.

அதை வைத்துக்கொண்டு

அமெரிக்க அதிபராகி

‘நாசா ‘க்கரம் நீட்டி

சூரியனோடும்

சந்திரனோடும்

கைகுலுக்க ஆசையில்லை.

செவ்வாய்களுக்கும்

வெள்ளிகளுக்கும்

முத்தங்களை

தூவி விடும் ஆசையில்லை.

அதை வைத்துக்கொண்டு

‘மைக்ரோ ஸாஃப்ட்ஸ் ‘ஸின்

மந்திரத்தகடுகளில் எந்திரம் வைத்து

இந்த உலகத்து

சமுத்திரங்களின்

தண்ணீரை எல்லாம்

‘டாலர்களாய் ‘மாற்றி

அதில் கப்பல் விடும்

‘பில் கேட்ஸ் ‘ஸாய் மாறவும்

ஆசையில்லை.

கண்ணே!

எனக்கு ஒரே ஒரு ஆசை.

அன்பே !

என் ஆவியின் மூலைக்குள்

ஒரே ஒரு துடிப்பு.

என் இனிய சுவாசமே !

என் மூச்சுக்கடலுக்குள்

ஆசையின்

ஒரே ஒரு கீற்று

இழையாடுகிறது.

நான்

கூடு விட்டு கூடு பாய

எனக்கு ஒரு இடம் வேண்டும்.

அது எது என்று

உனக்குத் தெரியுமா ?

உன் கால் கொலுசுகளுக்குள்

கூடு விட்டு கூடு பாய

எனக்கு கொள்ளை ஆசை.

அந்த கொலுசுகள்

சிந்தும்

ஒலித்துளிகளில்

ஒளிந்து கொள்ள ஆசை.

‘ குலுங்க் குலுங்க் ‘ கென்று

குமிழியிடும்

அந்த நெஞ்சு துடிப்புகளை

நெசவு செய்ய ஆசை.

அந்தக் கொலுசின்

குண்டுமணிகளில் குடியிருந்து

காதல் எனும்

எரிமலைக்குள்

ஒரு தேன் மழையை

கர்ப்பம் தரிக்க ஆசை.

உன் கொலுசுகளின்

உள்ளிருந்து கொண்டு

மெளனப்பிழம்பை

கொஞ்சம் கொஞ்சம்

ஓசைப்பூக்களாய்

வீதியில்

தூவிவிட ஆசை.

கண்ணே!

கூடு விட்டு கூடு பாய

அலை பாய்கின்றேன்.

இந்த தேட்டையில்

உன் விழிக்காடுகளில்

அன்றொரு நாள்

அடிபட்டு

வீழ்ந்து விட்டேன்.

திசை தெரியவில்லை.

உன் கண்களின்

சுழிக்குள்

பூகோள விஞ்ஞானங்கள்

புதைந்து போயின.

உன் பார்வையின்

அந்த கூர்மை

இன்னும் தாங்கமுடியவில்லை

எனக்கு.

காயம்பட்டதில்

வர்ண வர்ணமாய்

கனவுக்களிம்புகள் தடவியும்

அதன் வலி

தாங்க முடியவில்லை.

அந்த அம்புகளிலிருந்து

தப்பிக்க வழிதெரியவில்லை

அதனால்

இப்போதைக்கு

உன்கண்கள் எனும்

அம்புக் கூட்டுக்குள்

‘கூடு பாய்ந்து ‘ விட்டேன்.

காயங்கள்

வலிக்கட்டும்.

இனிக்கட்டும்.

அம்பே தன் மீது

அம்பு விட்டுக்கொள்ளும்

அன்பு விளையாட்டு இது.

***
====ருத்ரா.

< epsi_van@hotmail.com >

Series Navigation

ருத்ரா

ருத்ரா