குட்டிக்கதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

ப மதியழகன்



வாத்தியார்
வகுப்பறைக்கு வந்தபின் தான்
ஆரம்பிக்கும் ஆட்டமும் பாட்டமும்
அவர் சொல்லும் கதைக்கு
மகுடிப் பாம்பாக மயங்கும்
குழந்தைகள்
அவருடைய ஒவ்வொரு
செய்கைகளையும்
பார்த்து ரசிக்கும் அரும்புகள்
சொந்த வாழ்வில்
சோகம் இருந்தாலும்
அதை குழந்தைகள் முன்பு
வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டார்
அவருக்கு எங்கிருந்து
கதைகள் கிடைக்கின்றன
என வியக்கும்
பள்ளிக்கூட பிஞ்சுகள்
வகுப்பறைக்கு கதைகள்
சுமந்து வரும்
அந்த வாத்தியார்
ஒரு நாள் வரவில்லை
செய்தி மட்டும் வந்தது
அவர் விபத்தில் இறந்துவிட்டாரென்று
அவர் சொல்லும்
குட்டிக்கதை போல
அவருடைய வாழ்க்கைக் கதையும்
சீக்கிரத்தில் முடிந்தது
குழந்தைகளுக்கெல்லாம்
பெருவருத்தம்
மயான ஊர்வலத்தில்
அவர் கதை சுமந்து வரும்
பாதையெல்லாம்
பூக்களால் நிறைந்தது.

Series Navigation