எட்டு கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி01

வந்த போதெதுவும்

சூது வாதில்லை.

போவதற்குள் எத்தனை

பொய்ப்பித்தலாட்டங்கள்?.
O

02
இன்றென்ன

கிழித்துவிட்டோம்.

நாளை மீது

நம்பிக்கை வைக்க.

O

03

இன்னொரு காதலென்றால்

இனிக்கத்தான் செய்கிறது.

இருபதிலும்

அறுபதிலும்.
O
04

நெடுநேரம் பறப்பதில்லை

நைந்த நூலில்

நாள்பட்ட காற்றாடி..
o
05

கவியெழுதி பிழைத்தல்

கடினம்.

காதலின்றி சாதல்

போல.

O
06

காதல் போயின்

இன்னொரு காதல்.

O
07

இருந்தவரைக்கும்

ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

போனபிறகென்ன

பொன்னாடையும்

பூமாலையும்.

O

08

சலிக்க சலிக்க

புணர்.

சாவதற்கு முன்

உணர்.


jagee70@gmail.com

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

எட்டு கவிதைகள்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

பாவண்ணன்1. மாயத்தோற்றம்

தாள்களுக்கிடையே வைத்து மூடிய
மைதோய்ந்த நூல்
விதம்விதமாக இழுபடும்போது
உருவாகின்றன எண்ணற்ற சித்திரங்கள்
ஒரு தாளில் தென்படுகிறது
ஊமத்தம்பூ
இன்னொன்றில் சுடர்விடுகிறது
குத்துவிளக்கு
அடுத்த பக்கத்தில் ஆர்ப்பரிக்கிறது
அலைஉயர்த்திய கடல்
அதற்கடுத்துப் படபடக்கிறது
முகமற்ற பெண்ணின் விரிகுழல்
பிறிதொரு பக்கத்தில்
உடலைத் தளர்த்தி
தலையை உயர்த்தி
செங்குத்தாய் விரிகிறது
பாம்பின் படம்


2. பட்டம்

பாலுக்குத் தாவும் குழந்தையென
வெட்டவெளியில்
கைவிரித்துத் தாவுகிறது பட்டம்

நிலைகுலைக்கும் காற்றின் எழுச்சியிலும்
அது
எம்பிஎம்பி பற்ற முனைகிறது
இடப்பக்கத்திலிருப்பது வலப்பக்கத்துக்கும்
வலப்பக்கத்திலிருப்பது இடப்பக்கத்துக்கும்
கணத்துக்குக் கணம்
மாறுவதைப் பார்த்துப் பித்தாகிறது

காற்றின் இனியமொழி கேட்டு
கணநேரம் அமைதிகொள்கிறது
கைகோர்த்து நடனமிட அழைத்ததும்
உற்சாகமாக பற்றிக்கொள்கிறது
இழுத்த இழுப்புக்கெல்லாம்
இடுப்பை நெளித்து ஆடிக் களிக்கிறது
சோர்வுறும் தருணத்தில்
பசியின் நினைவெழ
விலகி மேலெழத் தவிக்கிறது

தந்திரத்தின் ஆழத்தை எடுத்துச் சொல்லவோ
வேறு வழிகளில் மீட்டு நடத்தவோ
மாற்று ஏற்பாடுகள் எதுவுமில்லை

தரையிலிருந்து விடுக்கப்படும்
எந்த ஆலோசனைகளாலும்
அதை எட்டித் தொட இயலவில்லை

அதன் பசி ஆறாததாக இருக்கிறது
அதன் தாகம் தணியாததாக இருக்கிறது
அதன் கனவு நிறைவேறாததாக இருக்கிறது

விடாமல் எக்கிப் பற்றும்
காற்றின் ராட்சச விரல்களில்
சிக்கித் துவளினும்
திமிறி மறுபுறம் எம்புகிறது
அடிநூல் அறுபட்டதை அறியாமல்


3. வெட்டவெளி

பாதை தவறிய யானைகளென
அலைமோதும் மேகங்களின்
ஓலங்களுக்கு அஞ்சி
ஒடுங்கியிருந்தது ஊர்

இரவு முழுக்க
விடாது பெய்த மழையை
அவற்றின் கண்ணீர் என்றோ
மாறிமாறி இடிபடும் ஓசை
மிரண்டோடி மோதிக்கொண்ட
அவற்றின் பிளிறல்கள் என்றோ
அறியாதவர்கள் அனைவரும்
அச்சத்தில் மூழ்கியிருந்தார்கள்

அவற்றின் ஓலத்தைக் கேட்டு
தடம்பார்த்து வந்த தாய்யானை
ஒன்றையும் விடாமல்
எங்கோ வழிநடத்திச் சென்றது

காடுமின்றி
யானைகளுமின்றி
வெறிச்சென்றிருந்தது வெட்டவெளி4. சரித்திரம்

கண்கள் கைகள் கால்கள்
எல்லாம் உண்டு மரத்துக்கு
எந்த மரத்தை வேண்டுமானாலும்
நெருங்கிப் பாருங்கள்
தன்னைக் கடந்துபோகும்
எல்லா மனிதர்களையும் விலங்குகளையும்
ஒரே மாதிரி கவனிக்கிறது அது
அறிந்த விவரங்களையெல்லாம்
காற்றின் அகன்ற பக்கங்களில்
இலைவிரல் நீட்டி எழுதிவைக்கிறது
இரவுபகல் வேறுபாடின்றி
எழுதுவதிலேயே மூழ்கியிருக்கிறது

அந்த அளவு ஆழ்ந்து எழுதப்பட்ட
உலக சரித்திரம் வேறெங்கும் இல்லை

மாடுகள் நடந்த ஆதிஉலகம்
புழுதி பறக்க ஓடிய நால்வகைப்படைகள்
சீறிப் பறந்த துப்பாக்கி வாகனங்கள்
பறவைகள் நாடோடிகள் என
ஒரு சிறிய தகவலும் விடுபடாதபடி
நுட்பமாக எழுதப்பட்ட சரித்திரத்தை
எப்படிப் படிப்பது?

குறைவோ கூட்டலோ இன்றி
உள்ளது உள்ளபடி எழுதப்பட்டு
நீண்டுகொண்டே போகிறது சரித்திரம்

நாம் படிக்க இயலாத அச்சரித்திரம்
யாருக்காக எழுதப்படுகிறது?
இலையின் விளிம்புக்கு மறுபுறம்
காற்றுடன் கரைந்து நின்று படிப்பது யார்?

என்றென்றும் தொடரும் சரித்திரம்
ஆயுள்முழுக்க முயன்றாலும்
அறிய இயலாத சரித்திரம்


5. நாடோடி

மலையும் குளிரும் சூழ்ந்த நகரை
கடந்துகொண்டிருப்பதாக
தகவல் எழுதி அனுப்புகிறான் நாடோடி

ஏதோ கடைத்தெருவில் திரியும்போது
மனத்தைக் கவர்ந்த
ஓவியங்களையும் நூல்களையும் வாங்கி
பாதுகாப்பாக அனுப்பிவைக்கிறான்

தெரிந்தவர்கள் பார்வையில் பட்டால்
அன்பைத் தெரிவிக்கச் சொல்லி
புன்னகையுடன் கேட்டுக்கொள்கிறான்

ஆட்கள் எதிர்ப்படா தருணங்களில்
ஆகாயத்திடமும்
சூரியன் நிலாவிடமும் சொல்லியனுப்புகிறான்

வேகமாகச் செல்லும் என்ற எண்ணத்தில்
சில கவிதைகளையும்
காற்றில் மிதக்கவிடுகிறான்

மெல்லமெல்ல
தன் சேதிகளால்
வெளியனைத்தையும் நிரப்பியபின்னர்
ஏதாவது ஒரு துணுக்காவது
சேரிடம் அறிந்து சேருமென நம்புகிறான்.6. மாநகர கோவர்த்தனள்

புள்ளியாய்த் தொடங்கிய மழை
வலுக்க நேர்ந்ததும்
இடம்பார்த்து ஒண்டினர் பாதசாரிகள்
இருள்கவிழ்ந்த பொழுதில்
ஏதேதோ எண்ணங்கள் அவர்களுக்குள்
செல்பேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள்
துரதிருஷ்டத்தை நொந்துகொண்டார்கள்
கடந்த ஆண்டு மழையோடு
இந்த ஆண்டு மழையை
ஒப்பிட்டு பேசிக்கொண்டார்கள்
தார்ச்சாலையில் தவழந்தோடும் தண்ணீரை
வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தார்கள்

அப்போது
யாரோ ஒரு பிச்சைக்காரி
தன் பிள்ளைகளுடண்
ஒன்டிக்கொள்ள
தயங்கித்தயங்கி நெருங்கிவந்தாள்
உடனே ஒருவன்
கொஞ்சமும் தயக்கமின்றி
கெட்டவார்த்தைகளால் திட்டி விரட்டினான்
நகர்ந்துநகர்ந்து
இடத்துக்காக அவள் யாசிக்கவேண்டியிருந்தது
விரல்நுழைத்த சாவிக்கொத்தை
சுற்றிக்கொண்டிருந்தவள்
அருவருப்பாக அவளைப் பார்த்து முறைத்தாள்
ஒருவருக்கும்
அவளுக்கு இடம்தர மனமில்லை
இறுதியில்
பாராமுகங்கள் பார்க்கப் பார்க்க
கோவர்த்தன மலையைப்போல
ஈரமுந்தானையை தலைமேல் உயர்த்தி
குழந்தைகளை ஒடுங்கவைத்து
மழையிலேயே நின்றாள் அவள்


7. இரண்டு விஷயங்கள்

கிணறு என்ற சொல்லின்மூலம்
உங்கள் மனம் உருவகிக்கக்கூடிய
அமைப்புகளைப்பற்றி எதுவும் தெரியாது
நான் குடியிருக்கும் வீட்டில்
மாடிப்படிகளின் தொடக்கத்துக்கும்
குளியலறையின் சுவருக்கும்
இடையில் இருக்கிறது கிணறு
நாலு சதுர அடியுள்ள மூடியால்
அதை அடைத்துவிடலாம்
ஒரு சமயத்தில் ஒரு வாளியைமட்டுமே
கிணற்றுக்குள் இறக்கமுடியும்
பக்கச்சுவரில் இடிபடாமல்
இறக்குவதும் எடுப்பதும் எளிதல்ல
ஒரு பேச்சுத் துணைக்குக்கூட
அருகில் யாரும் நிற்கமாட்டார்கள்
ஒருவர் குடத்துடன் நகர்ந்தபிறகுதான்
இன்னொருவரால் நெருங்கிவர முடியும்
நூறடி ஆழத்தில் சுரந்தளிக்கும்
நிலவின் விரல்தீண்டா நீர்
அபூர்வமான பகல்கோணத்தில் தகதகக்கும்

ஒரு விஷயம்
இந்தக் கிணற்றங்கரையில்
கர்ப்பிணிப் பிச்சைக்காரிகளும்
நாடோடிகளும் நெருங்கிவந்து
ஒருபோதும் தண்ணீருக்குக் கையேந்துவதில்லை

இன்னொரு விஷயம்
தரைப்பள்ளத்தில் தேங்கும் தண்ணீரில்
தாகம் தணித்துக்கொள்ள
இறங்கிவந்ததுமில்லை
காக்கைகளும் குருவிகளும்


8. உருமாற்றம்

வலையை மெதுவாக இழுக்கிறார்கள்
இழுபட்ட பகுதிகள்
கொசுவம்போல தோளில் மடிபட
நெருங்கிவருகிறது நடுப்பகுதி
இருவர் தோள்களுக்கிடையே
ஊஞ்சலெனத் தொங்கும் வலைக்குள்
வகைவகையாக மின்னும் மீன்கள்
கரையேறிப் பிரிக்கப்பட்டதும்
தபதபவென மண்ணில் விழுகின்றன
உலுக்கப்பட்ட புளியம்பழங்களைப்போல
உதிராமல் வலையிலேயே
சிக்கிக்கொண்ட மீன்கள்
விரல்களால் நிண்டியதும் விழுகின்றன
மூச்சுக்கு உதவாத காற்றில்
திறந்துதிறந்து மூடுகின்றன அவற்றின் உடல்கள்
சிறியதும் பெரியதுமாய்
சிதறியவை அனைத்தையும்
கூடைக்குள் வாரிப் போடுகிறார்கள்
அன்றைய பொழுதுக்கு வேண்டிய
அரிசியையும் மதுவையும் நினைத்தபடி


paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்