இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

அரவிந்தன் நீலகண்டன்


‘சமுத்ரோ அஸ்மி விதர்மண ‘

சத்தியத்தின் இயற்கை குறித்து

—————————————-

உண்மைக்கான ஏகபோக உரிமையை கோருபவர்கள்

தம் அதிகார உணர்தலாலேயே குருடாகி

தம் பார்வையை திணித்தலை நிறுத்துவர்.

ஏனெனில் பிரபஞ்சம் கண்டறியப்படுவது ஒற்றை விழியால் மட்டுமல்ல

மாறாக கூட்டான பல ஒளிக்கதிர்கள்

வேறுபடுத்தியும் பின்னிப் பிணைந்தும்தான்.

பன்மையான சிருஷ்டித்துவம் ஒழுங்கின்மையை ஏற்படுத்துவதில்லை

மொழிகளின் பன்மையும் மானுடத்தின் எதிரியல்ல

ஆயின் அச்சிறு கொடுங்கோலனோ அனைத்தையும் தன் ஒற்றைத்தன்மையில்

அடக்கிட விரும்புகிறான்

அடக்கியாள, அனைத்திற்கும் தன் ஒற்றைப்பார்வையை அளிக்க விரும்புகிறான்.

ஆயின் உண்மைப் பெரியோர் எவரோ அவர்,

எவர் மீது காலம் ஞானம் எனும் அருட்கொடையை அளித்திருக்கிறதோ அவர்

அவர் அறிவார்

சத்தியம் தரிசனத்தில் பிறக்கிறது எனும் உண்மையை

அவர் அறிவார்

மானுடத்தின் பல்வித நடனங்கள் அனைத்துமே அழகு நிறைந்தவை என,

அவை அனைத்துமே நம் புவியின் பெரும்பாடல்களால் செழுமை அடைந்தவை என.

[மாஸிஸி குனினி எனும் ஆப்பிரிக்க ஸுலு கவிஞரின் கவிதை. ‘முன்னோர்களும் புனித மலையும் ‘ (1988) எனும் கவிதை தொகுப்பிலிருந்து]

பெளத்த தத்துவ அறிஞரான பேரா.லோகேஷ் சந்திராவே இறையியற் பன்மையின் (theo-diversity) முக்கியத்துவத்தையும் அதற்கும் உயிரிப்பன்மைக்கும் இடையேயான உறவு குறித்தும் ஆதார கருத்துக்களை உருவாக்கியுள்ளார். அவரது வார்த்தைகளில், ‘உயிரிப்பன்மை இயற்கையின் அதி உயர் விதியாகும். நூறாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் மேலும் ஒர் லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரின வகைகளும் பாரதத்தில் மட்டுமே உள்ளன.அதைப்போலவே மானுட அகவாழ்வு கண்டடைய வேண்டியவை பன்மையான உறவர்த்தங்கள், இயற்கையின் கவிந்தியங்கும் ஞானம், பன்மையின் ஒளி, மற்றும் பன்மையை, மாற்றத்தை, மெளனத்தை தன்னகத்தே உள்வாங்கிய புனித உறவுகள். ‘அது ஒன்றே ஒன்று மட்டுமே ‘ என்பதல்ல ஒன்று பலவாக வெளிப்படும் அறிதலே நம் தேடலில் வெளியாகும். ஏகோகம் பகு சயம். தொழில்நுட்ப பரவலும் அறிவியலின் தேடலும் கண்டடையும் உண்மைகளின் தவிர்க்க இயலா விளைவு இறையியற் பன்மையாகும். மானுடத்துவத்தின் உயர் பரிணாமத்துக்கான இன்றியமையா தத்துவம் அது. ஆனந்தத்தை இலக்காக அடைவதல்ல தன் இயற்கையே ஆனந்தம் (சத்-சித்-ஆனந்தம்) என மானுடம் அறிய இறையியற் பன்மையின் ஏற்பது அவசியம். ‘

மாற்ற இயலா விதிகள் மற்றும் வெளிப்பாடுகள் (Commandments & Revelations)ஆகியவை சார்ந்த சமய மரபுகளிலிருந்து எழும் நாகரிகங்கள் பன்மை மதிக்கா இயல்புடையனவாக தம்மை மட்டுமே சிறந்தவையாக மற்றவை அளித்து தம்மை நிலைநிறுத்துதலை வரலாற்றின் விதியாக (பிரிட்டிஷார் இந்தியாவில் என்ன கொடுமைகளை செய்தாலும் அவர்கள் வரலாற்றின் கருவியாக செயல்பட்டனர்-மார்க்ஸ்) இறை கட்டளையாக கண்டுள்ளன. அதற்கு மாறாக தர்மத்தை அடிப்படையாக கொண்ட பண்பாட்டு மரபுகள் கால மாற்றத்தை அதன் பன்மை கொண்ட இயங்குதன்மையை ஏற்றுள்ளன. மாறாக பரவு சமயங்கள் பன்மை அழிப்பது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. இப்பார்வையிலேயே வளர்க்கப்பட்ட பார்வை கொண்ட அறிவுஜீவிகள் இறையியற்பன்மை அழிவினை ஒரு அழிவாகவே கருதியதில்லை என்பது மட்டுமல்ல அத்தகைய அழிவினை ஒரு விரும்பத்தக்க மாற்றமாகவே கருதுகின்றனர். ஆனால் இறையியற்பன்மை அழிவென்பது ஒரு அமைதியான ஒற்றை மனித மனதின் சமய மாற்றம் இல்லை. மாறாக குடும்ப சிதைவுகள், சமுதாய பண்பாட்டு அழிவுகள், ‘மற்றவரை ‘ உருவாக்கும் வெறுப்பியல், சமுதாயத்தின் மண்சார்ந்த வரலாற்றுணர்வுகளை அழித்தல் என பல கூறுகளை உள்ளடக்கியது.

பாரதத்தின் வடகிழக்கில் வனவாசி சமுதாய இயக்கங்களின் இன்றைய வரலாறு இவ்விரு உலகங்களின் மோதலின் விளைவுகளை காட்டுவதாகும்.

‘நாங்கள் லாங் நியாம் கேலம் நியாம் அல்ல ‘:

அஸாமிய ஹிந்து தாந்திரிக மரபு முழுக்க முழுக்க வடகிழக்கின் வனவாசி சமய மரபுகளேயாகும். காமாக்ய ஹிந்து கோவிலே இவ்விதத்தில் வனவாசி மரபுகளின் காப்புறைவிடமாக விளங்குகிறது. ஆனால் கிறிஸ்தவ மதமாற்ற சக்திகள் பாரத வடகிழக்கில் ‘பணியாற்ற ‘ ஆரம்பித்த பின் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமானது வனவாசி சமுதாயங்கள் ஒரே நேரத்தில் தம்மை ஒருமாற்று இனமாக கருதியதும், தம் பெற்றோரின் கலாச்சாரங்களை கீழாக நோக்க ஆரம்பித்ததும் ஆகும்.. அமெரிக்க பாப்டிஸ்ட் ஸொசைட்டியால் வெளியிடப்பட்ட ‘A Corner in India ‘ எனும் பிரச்சார நூலில் மிஷினரி மேரிமீட் கிளார்க் நம் வனவாசி சகோதரர்களை ‘காட்டுமிராண்டிகள் ‘ என்றும், ‘பண்பாடற்றவர்கள் ‘ என்றும் ‘wild ‘ (காட்டு விலங்குகளைப்போல ?) என்றும் குறிப்பிடுகிறார். இந்நூல் கெளகாட்டியிலுள்ள கிறிஸ்தவ இலக்கிய மையத்தால் இந்திய வெளியீடாகவும் வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களாக்கப்பட்ட காஸி வனவாசிகள் தங்கள் ‘சத் சுக மின்ஸ்தம ‘ திருநாளை கொண்டாட அனுமதி மறுக்கப்படுகின்றனர். காஸிகள் தங்கள் தர்மம் தமக்கு இறையால் கொடுக்கப்பட்டதாக கருதுகின்றனர்.மிகச்சிறந்த பிரபஞ்சவியலும், ஒழுக்கவியலும் கொண்ட இம்மக்களின் சமயத்தின் இருப்பே மிஷினரிகள் மறுக்கப்பட்டது. மிஷினரிகளின் பிரச்சாரம் இவர்களிடையே ‘உங்களுக்கு என்று எந்த இறை நம்பிக்கையும் இல்லை ‘ என்கிற பொருள்படும் ‘கேலம் நியாம் ‘ எனும் கோஷத்துடன் முழுவீச்சில் நடத்தப்பட்டது. காஸி பெருமக்கள் மிகுந்த துயரத்துடன் இதற்கு பதிலிறுத்தனர், ‘நாங்கள் லாங் நியாம் (சமயம் உடையவர்கள் )கேலம் நியாம் அல்ல ‘. சீன தாக்குதல்கள், மிஷினரி தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் அருணாச்சல பிரதேச வனவாசி சமுதாயங்களுக்கு இன்று ஒரே ஆறுதலாக விளங்குவது விஸ்வ ஹிந்து பரிஷத்தும் விவேகானந்த கேந்திரமும் தான். ஒரு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு காலனிய பிரிட்டிஷார் தம் மக்கட்தொகை பணியாளர்களிடையே வனவாசிகளை ஹிந்துக்கள் அல்ல என பிரிக்க முயன்றனரோ அதைப்போலவே மெக்காலேயின் இன்றைய புத்திரர்கள் தம் பழைய காலனிய எஜமானர்களின் அடிச்சுவட்டிற்கு விசுவாசமாக வனவாசிகளை ஹிந்துக்கள் அல்ல என ‘நிரூபிக்க ‘ முயன்று வருகின்றனர். அதே சமயம் களத்தில் வனவாசி குடும்பங்களின் பாதுகாப்புக்கு அவற்றின் கலாச்சார பன்மையின் பாதுகாப்புக்கு அகில பாரத அளவில் பாடுபடுபவை ஹிந்து இயக்கங்கள்தாம்.அருணாச்சல பிரதேச வனவாசி தர்மங்களின் பாதுகாப்பிற்கான இயக்கம் த்யோனிபோலோ. இவ்வியக்கத்தை சார்ந்த பமாங்க்ததோ கூறுகிறார், ‘சூரியனையும் சந்திரனையும் வழிபடுபவர்கள் உலகில் எஞ்சி இல்லவே இல்லை என எங்களிடம் கூறி மிஷினரிகள் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இத்தனை ஹிந்துக்களையும் பார்த்த பின் நாங்கள் அறிவோம், நாங்கள் தனியாக இல்லை, இப்பெரும் குடும்பத்தின் ஓரங்கம் நாங்கள் ‘ உலகம் முழுவதுமாக மண்சார்ந்த தெய்வப்பன்மை பேணலுக்கும் ஹிந்துத்வத்திற்குமான உறவும், பன்மை அழித்தலுக்கும் சூழல் சீரழிவிற்குமான உறவும் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றது. 1999 இல் அகமதாபாத்தில் நடைபெற்ற தர்ம சன்சாத்திற்கு உலக பாகன் அமைப்பினர் அனுப்பிய செய்தியில் இதனை பின்வருமாறு வெளிப்படுத்தினர்,

‘பல்லாயிரம் வருடங்களாக பல்வேறு ஆதிக்க சக்திகளுக்கு எதிராக வேத அக்னியின் ஒளியை காப்பாற்றி வரும் ஹிந்து சமயத்தினருக்கு எங்கள் வணக்கத்தை தெரிவிக்கிறோம்… அமெரிக்க ஆதிவாசிகள், ஆப்ரிக்க மண்சார்ந்த தர்மங்கள், மற்றும் இதர ‘பாகன் ‘ சமயத்தினர் இன்று பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே தம் தர்மங்களை தாம் தான் சரி என கருதும் மிஷினரி மதங்களுக்கு நடுவே புனருத்தாரணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருவதையும் ஹிந்து சமயத் தலைவர்களின் கவனத்திற்கு கொணர விரும்புகிறோம்..பொதுவான தோற்றம் அல்லது பொதுவான ஜீவதுடிப்புகளால் இணைந்த பழம் சமயங்கள் சனாதன தர்மத்துடன் , அதன் சமஸ்கிருத மற்றும் வனவாசி வெளிப்பாடுகளில், பல அம்சங்களை பொதுவாக கொண்டுள்ளன. எனவே நாம் இணைந்து செயல்படுவதை எதிர்பார்க்கிறோம் ‘

இறையியல் பன்மை பேணுதலுக்கும் சுற்றுப்புற சூழல் பேணுதலுக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் என சிலர் வினவலாம். இறையியல் பன்மையை அழிக்கத்துடிக்கும் ஆக்ரமிப்பு மனோபாவமே சூழல் சீர் கேட்டிற்கும் வழி வகுக்கிறது. அனைத்து மானுடமும் உயர்ந்த ஆன்மிக அறிதலை தன் சுய சூழலிலேயே அடைய முடியும் என்பதை உணர்ந்து கொள்வது பன்மை பேணுதலின் மிக முக்கிய அடிப்படையாகும். நம் கிராம பொருளாதார அமைப்புகளை தேக்க நிலை உடையவை என மார்க்ஸ் கூறியதற்கும், நம் கலாச்சாரத்தை மார்க்ஸ் மனிதனை காட்டுமிராண்டியாக்குவது என கூறியதற்கும் ஒரு தொடர்பு சங்கிலி உள்ளது. அவ்வாறே இன்று வடகிழக்கில் வனவாசி சமுதாயங்கள் ஒன்றை ஒன்று வேற்று இனங்களாக அறிதலுக்கும் அங்கே திருச்சபைகளின் மதமாற்ற உக்திகளுக்கும் தொடர்பு உள்ளது. எனவேதான் மகாத்மா காந்தி வகுப்பு ஒற்றுமைக்காகமிகப்பெரிய தியாகங்களை பெரும்பான்மை சமுதாயத்தினர் செய்ய தயாராக இருக்க வேண்டும் என கூறிய அதே நேரத்தில், எக்காரணம் கொண்டும் ஆக்ரமிப்பு அந்நிய சித்தாந்தங்களின் பன்மை அழிப்பு இயக்கங்கள் – மதமாற்றங்கள் உட்பட – முழுமையாக பாரதத்தில் தடைபடுத்தப்பட வேண்டும் என கூறினார்.

மகாத்மாவின் சுதேசி பார்வையில் இறையியல் பன்மை:

பாரதத்தின் வனவாசி பண்பாட்டு பன்மையினை சமுதாய முன்னேற்றத்திற்கு விலையாக கேட்காத ஒரு சுயராஜ்ஜியத்தை கண்ட தீர்க்க தரிசி மகாத்மா காந்தி. அவரது சுயராஜ்யம் வேத மதிப்பீடுகளிலிருந்து உருவாக்கப்பட்டது என்பது இதற்கு காரணமாக இருக்கலாம். இதுவே சுதேசியின் உயிர் துடிப்பும் கூட. மகாத்மா கூறுகிறார்,

‘ஹிந்து தர்மம் பேணலின் தர்மம். எனவே அதனூடே ஓடும் சுதேசி உயிர்துடிப்பின் காரணமாக அது ஓர் பெரும் ஆற்றலாகவும் விளங்குகிறது. அதுவே மிகவும் சமயப்பொறுமையும் மதமாற்றமற்றதுமான சமயமுமாகும். அது என்றைக்கும் விரிவடையும் தன்மை கொண்டதாக விளங்குகிறது….அதன் சுதேசி உயிர்த்துடிப்பின் காரணமாக ஒரு ஹிந்து தன் சமயத்தை மாற்ற மறுக்கிறான். ஏனெனில் அதுதான் சிறந்தது என்பதல்ல. மாறாக அதனை அவன் சீரமைக்கலாம் முடியும் என்பதே காரணமாகும்.. ‘

உலகச் சந்தையா உலக குடும்பமா ?:

இன்று பாரத பன்மை பல தளங்களில் ஆக்ரமிப்பு சக்திகளின் தாக்குதல்களை சந்தித்தவாறு உள்ளது. இந்நிலையில் அனைத்து தளங்களிலும் நம் பன்மை வளத்தை நாம் காப்பாற்ற முழுமையான விழிப்புணர்வு அவசியம். இங்கிலாந்தின் புகழ் பெற்ற ‘த ஈகாலஜிஸ்ட் ‘ பத்திரிகையின் ஆசிரியர், ஐடன் ரான்கின் கூறுகிறார், ‘ தாராள முதலாளித்துவத்திலும் சரி, அரசு சோஷலிசத்திலும் சரி உயிரியல் பன்மைக்கோ அல்லது பண்பாட்டு பன்மைக்கோ சிறிதும் மதிப்பில்லை. அறிவுசார்ந்த மரபுகள் மோசமாக சித்தரிக்கப்படுகின்றன. சுதேச கைவினைஞர்கள் சீரழிக்கப்படுகின்றனர். சுதேச சுற்றுப்புற சூழல் அழிக்கப்படுகிறது. சுதேச பொருளாதாரங்கள் சீர் குலைகின்றன. இவையெல்லாம் ‘சமசீராக்கல் ‘ மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றின் பெயரில் நடத்தப்படுகின்றன. இந்த சுலப தீர்வுகளை வழங்கும் சித்தாந்தஙகள் வர்த்தக வீணடிப்பையும், அதிகார வர்க்கத்தின் அதிகாரப்பற்றையும் அடிப்படையாக கொண்டவை. எனினும் இவற்றின் வேர்களில் மிஷினரி துடிப்பினை காணலாம். இவ்வியக்க வேர்களில் கிறிஸ்துவ மரபுகளிலிருந்து பெறப்பட்ட எதிர்மறை மதிப்பீடான சித்தாந்த நிச்சயத்துவமே இயங்குவதை காணலாம். இதற்கு மாறாக ஹிந்து தர்மம் உண்மையான பிரபஞ்சம் தழுவும் போக்கினை அளிக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே ஹிந்து தர்ம சாதனை.ஹிந்து தர்மத்தில் தனிமனிதன் இறையினுடன் எவ்விதத்திலும் அவனுக்கே உரிய மார்க்கத்தில் உறவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். சத்தியம் ஒன்றே அதனை பலரும் பவவிதமாக அடையலாம்.ஹிந்து பொருளாதாரமும் ஒரு வட்டாரத்தின் தனித்தன்மைகளை அதன் தனித்தேவைகளுடன் இணைத்து உருவான ஒன்று. இந்த தத்துவமே இன்று பசுமை இயக்கங்களாலும் இன்றைய தேவையென உணரப்படுகிறது….ஹிந்து தர்மத்தில் வேர் கொண்ட மகாத்மா காந்தியின் சுதேசியம், நேருவிய சோஷலிசத்தின் தோல்விக்கும், கொக்கோ-கோலா முதலாளித்துவத்தின் ஆக்ரமிப்புக்கும் மாற்றானதோர் மானுடத்துவ மாற்றினை வழங்குகிறது. ஆழ் சூழலியலின் புதிய ஞானத்திற்கும் நவீன அறிவியலின் தரிசனங்களுக்குமான ஆன்மிக அடித்தளத்தை ஹிந்து தர்மம் வழங்குகிறது. ‘ சிந்தனையாளரும் விவேகானந்த கேந்திர தலைவருமான திரு. பி.பரமேஸ்வரன்ஜி அவர்கள் மிக எளிமையாக இதனை குறிப்பிடுவார், ‘உலகச்சந்தையா அல்லது வசுதைவக குடும்பகமா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி. ‘

ஆனால் வட்டார தனித்தன்மையினையும் தேவைகளையும் அறியவும் அதற்கேற்ப வளங்குன்றா வளர்ச்சி காணவும் தகுந்த தொழில்நுட்பம் தேவை. பாரம்பரிய அறிவு சார்ந்த குவிதன்மையற்ற தொழில்நுட்பம், அத்தொழில்நுட்பம் பரவ தேவையான சமுதாய அமைப்புகள், தனிமனிதனின் லாப நோக்கு பொது நலம் ஆகியவற்றிடையே உள்ள சமநிலைப்புள்ளியை கண்டடையும் ஓர் அமைப்பு ஆகியவை இன்றி உலகச்சந்தையின் இன்றைய வளரும் நாடுகளுக்கு எதிரான நிலையை மாற்றி பன்மை பேணும் ஒரு வசுதைவக குடும்பம் காணுதல் என்பது இயலாது.

infidel_hindu@rediffmail.com

Series Navigation