மெழுகுவர்த்தி

This entry is part of 39 in the series 20080306_Issue

அப்துல் கையூம்தியாகத்தின் சின்னமாய் சித்தரிக்கப்படுவதுதான் மெழுகுவர்த்தி. நிலவுக்கு அடுத்தபடியாக கவிஞனுக்கு உகந்த பாடுபொருள் இதுதான் என்றால் மிகையாகாது. மெழுகுவர்த்தியை படிமங்களாக்கி பாடாத கவிஞனே உலகில் இல்லை என்று சத்தியம் செய்து கூற முடியும். மெழுகுவர்த்தியின் தலையில் மனிதனே கொள்ளிவைத்துவிட்டு “ஆஹா! தியாகத்தின் சுடரே நீதான்” என மெழுகுவர்த்தியை போற்றிப் புகழ்வது என்ன நியாயம்?

பிறருக்காக உருகுவதிலோ, கருணை காட்டுவதிலோ தப்பில்லை. பிறருக்காக உருகுவது மட்டுமே வாழ்க்கை என்றானால் அவன் தனக்குத்தானே வாழ்க்கை அமைத்துக் கொள்வது எப்போது? ஒருவன் தன்னை வருத்திக்கொண்டுதான் பிறருக்கு உதவவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. தனக்கு மிஞ்சித்தானே தான தர்மம்?

‘தன்னலம் மிக்கவன்’ ‘சுயநலவாதி’ என்ற பதம் இங்கு பொருந்தாது. ஒருவன், தான் திடாகாத்திரமாக இருந்தால்தான் பிறருக்கு உதவ இயலும். விமானம் பறக்கையில் கோளாறு நேருகையில் பிராணவாயு சுவாசக் குழாயை முதலில் நாம் பொருத்திக் கொள்ள வேண்டும். பிறகுதான் நம் குழந்தைகளுக்கு பொருத்த வேண்டும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?

உயிர்த் தியாகம் சரியென்று வாதாடினால் உடன்கட்டையும், நரபலியும், தற்கொலையும் முறையானதுதான் என்று ஆகிவிடும்.

இறைவன் கொடுத்த உயிரை மனிதன் பறித்துக் கொள்வதற்கு இறைவனும் அனுமதி வழங்கவில்லை. அதற்கு நம் நடைமுறை சட்டமும் அனுமதிக்கவில்லை.

வெடிமருந்தை ஏந்திக்கொண்டு தன்னைத்தானே உயிர்போக்கிக் கொள்பவனுக்கு நாம் வைத்திருக்கும் பெயர் “மனித வெடிகுண்டு”. தப்பித் தவறி அவன் அதிலிருந்து பிழைத்துக் கொண்டால் சட்டம் தற்கொலை முயற்சி அல்லது கொலை முயற்சி என்று அவனை ‘உள்ளே’ தள்ளி விடும்.

உயிரினங்களுக்கு பொருந்தும் இந்த விதியை ஜடங்களுக்கும் பொருத்திப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் எனக்குள்ளே எழுந்தது. தியாகத்தின் உருவமாய் பாடப்படும் மெழுகுவர்த்தி தனது புலம்பலை பாடினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவான கவிதை இது.
மெழுகுவர்த்தி

நரகத்து வேதனைக்கு
நானென்ன ஒத்திகையோ?
உருகுகின்ற மாதிரிக்கு
உரைகல்லாய் போனேனோ?

அமிலக் குளியலாய்
அனல் பறக்கும் தேகம்
குமைகின்ற வெப்பத்தில்
குறையும் உடற்பாகம்

புரையோடிய ரணங்களாய்
பொரிந்து போகும் மேனி
பொறிபறக்கும் ஜ்வாலைக்கு
இரையாகும் தீனி

சாலையில் பெருக்கெடுக்கும்
சாக்கடை நீராய்
மூளை இளகி கசிந்தோடும்
முனகலுக்கேது நேரம்?

வடுக்களின் கொடூர வார்ப்பு
வழிந்தோடும் சீழின் கோர்ப்பு
சுடும் தீக்காயத் தொடை
சுருங்கித் தேயும் தேகவிடை

அழுகும் ஆனைக்கால் நோயோ?
பழுத்த காய்ச்சிய தீயின் சூடோ?
விழுப்புண் பட்டாலும் உவந்திருப்பேனோ?
முழிபிதுங்கும் வதை எனக்கு தேவைதானோ?

தலைச்சுமை என்றாலும் தாங்கிக் கொள்வேனே
தகதகக்க சிரமுருக தகனமாகிப் போனேனே
சிலையாக்கி தீயிடுதல் முறையோ? இது தகுமோ?
சிதைமூட்ட நானென்ன உயிர்பிரிந்த உடலோ?

உடன்கட்டை ஏற்றத்தில் உடன்பா டில்லை
உயிர்மாய்க்க நானொன்றும் கோழையுமில்லை
கடன்பட்டார் நெஞ்சம்போல் பதைக்குது என்னுள்ளே
கனலாகி கரைகின்றேன் பனிபோல மெல்ல

பண்பாடிய பாரதியின் அக்னிக்குஞ்சோ நான்?
பத்தினியாம் கண்ணகியின் கடுஞ்சாபச் சுடரோ?
வெண்குட்டத் துயர்நீக்க வருவாரோ தெரஸா?
விடியும்வரை ஒளிதந்தேன் அதற்கிந்த பரிசா?

தியாகச் சுடரென்ற உவமைகள் போதும்
தீக்காயம் உமக்கென்றால் உண்மைகள் புரியும்
கவிநடைக்கு உவமைகளாய் ஆக்கியது போதும்
கனலோடு உறவாடி நான் கண்டது சேதம்.


vapuchi@hotmail.com

Series Navigation