காலம் கடந்த காதல் கவிதைகள்

This entry is part of 47 in the series 20040624_Issue

ஐீவன்


1.

எப்போதாகிலும்
உன் நினைவுகளில்
வந்து போகலாம்
நான்

எப்பவுமே
என்னோடு இருக்கிறாய்
நேசத்துக்குரியவளாக
நீ

கிழித்து
கூறுபோட்டு போனது
நீ சொன்னதான
வார்த்தை
உன்னோடு தொலைந்து
போயிற்று
உனக்கும் எனக்குமெயான
என் காதல்

உன்னை நேசிப்பதாக
சொன்ன
அந்த
ஒத்தை வார்த்தையோடு
தொலைந்து
போனவனாகிறேன்
நான்

நாற்பதை
தொட்டுவிட்டது வயசு
இன்னமும்
நிற்கிறது
செல் பட்ட
அந்த
பூ நாறும் மரம்

2.

எதிர்பாராத
சந்திப்புகளாக
வந்து போகின்றனர்
மனிதர்

நான்
அன்னிய தேசமொன்றின்
அகதியானேன்

யுத்தத்தால்
தொலைந்தே போனதுவும்
தொலைவதுமான
இந்த இருபது வருடங்களில்
எதிர்பாராமல்
எத்தனையோ நிகழ்கிறது

முன் வீட்டு
அழகான
உன் பள்ளித்தோழி
என் பக்கத்து
மாடிக்காரியானதுவும்

உன் அயல்
ஒழுங்கை என் நண்பன்
தென் துருவ
தேசமொன்றிருந்து
தொலை பேசியதும்

பேளின் வந்திறங்க
என் பால்ய பருவத்து
பள்ளித்தோழன்
கை பற்றிப்போனதுவும்

இப்படி எத்தனையோ
எதிர்பாராமல்
நிகழ்கிறது

ஏதாவதொரு நாட்டில்
ஏதாவதொரு தெருவில்
எதிர் பாராமல்
உன்னை
எதேச்சையாகவேனும்
சந்திக்க தவிக்கிறது
மனசு.

3.

இப்பவும் நினைவிலிருக்கிறது
உன் வீட்டு ஐன்னல்
நிறம் மங்கிப்போன
மதில் சுவர்
அதில் உள்ள வட்டம்
தொட்டுவிடும் கோடுகள்
இப்படி எல்லாமே
நினைவிலிருக்கிறது

சில வேளைகளில்
மட்டுமே தெரிந்து விடும்
உன் முகத்திற்காய்
காத்திருந்த காலங்களில்
என்னோடு கூடவிருந்தன
அவை.

நீயில்லா உன் வீட்டு
வாசல் வந்தேன்
யுத்தம்
சப்பித்துப்பிய எச்சமாய்
இருந்தது வீடு
நம்பிக்கை தரும்
உன்
விபரமெதுவும்
அதனிடமில்லை

தொட்டு தடவி
விட்டு வர
உன் நினைவுகளுடனே
அதுவும்
கூட வருகிறது

4.

இன்னமும்
இருக்கிறது மாறாத
உன் மீதான
என் காதல்
உனக்கும் என் போலவே
ஆகியிருக்கும்
வயசு
முகமெங்கும்
வளர்கிறது
நரைமுடி

தலை தடவி
கேட்கிறாள்
செல்ல மகள்
இதுவரையில் சொல்லாத
ஒழித்து வைத்த
ஏதும்
உண்டாவென

ஒருநாள் வரும்
உனைச் சொல்வேன!
உன் மீதான
என் காதலைச் சொல்வேன்!!

ஒரு முறையேனும்
கேளாதுன் குரல் பற்றியும்
உனக்கேயான
உன் காதலின்
பார்வை பற்றியும்

ஆணும் பெண்ணும்
சகசமாயில்லா
எம் கால
தேசம் பற்றியும்

இன்னமும் இருக்கும்
உன் மீதான
என் காதலை ச்
சொல்வேன்

(ஓவியமும் கவிதையும்: ஜீவன்)
Geevan
nandakandasamy@hotmail.com

Series Navigation