நெடுநாட்கள் கழித்து திண்ணைக்கு எழுதிய கவிதைகள்

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

கோகுல கண்ணன்



கடலின் ரகசியங்கள்

—————————

கடல் தன் பிரும்மாண்டமான வாசலில்

திரையிட்டு திரைவிலக்கி விளையாடுகிறது .

வானத்துடன் பொருத்திவிட

கணக்கற்ற கொக்கிகளால்

கடலை அள்ளியெடுக்கப் பார்க்கும்

காற்று.

கனவின் ஆன்மா பொக்கிஷமாய் புதைந்திருக்கும்

உள்ளறை செல்லும் வழிகள்

ரகசியமானவை நுட்பமானவை

பெருங்கப்பலோ சிறுதோணியோ

அதில் நுழைந்துவிடமுடியாது

அதன் வரைபடங்கள்

மீன்களின் முதுகுகளில் மிதக்கின்றன

அவற்றை நீங்கள் வலையால்

அள்ளிவிட முடியாது

சுழலும் வரிகளில் சங்கேதக்குறிகள் பொறித்து

கரைக்கு அனுப்புகிறது கடல்

துண்டு சிப்பிகளில்

ஒரு முடிவற்றப் பொழுதில்

அவற்றை இணைத்துப்படித்தால்

அறிந்து கொள்ளக்கூடும்

கடலின் ரகசியங்களை.


குரல்

*********

அந்தக்குரலை என்ன செய்வது

என்று தெரியவில்லை.

உடம்புத்தோலாய் கூட வருகிறது

மெளனத்தின் கூடாரத்தில் ஓதுங்கினேன்

தீராத ரீங்காரம் தோற்கவில்லை

நதியின் ஆழத்தில் அமிழ்ந்துப் பார்த்தேன்

மீன்களின் உரசலில் எதிரொலிக்கிறது

மேகங்களுக்கு இடையில் மிதந்த போதும்

இடியின் துடிப்பாய் சீறுகிறது

முலைகளுக்கிடையில் தலை சரித்து

யோனிக்குள் டங்கி கிடந்தேன்

உன் மூச்சுக்காற்றில் மீண்டெழுகிறது

ஆலயத்தின் கருவறையில் ஒடுங்கினேன்

துடிக்கும் சுடரின் நடுக்கத்தில்

விசும்புகிறது

மண்ணில் தலையை புதைத்து நின்றேன்

தலைகீழாய்.

பூமியின் முனகலில் விடாது கேட்கிறது

அலறின என் குரலில்

அது இழைந்துப் போன பயங்கரம் மட்டும்

தீராது எப்போதும்.

*********************


ஊளை

——–

என் தோலை பிரித்து காற்றின் மேல் படரவிட்டேன்

இரத்தத்தின் வெப்பத்தை உள்ளங்கையில் ஏந்தி

குளிர்ந்த மண்ணில் குழியிட்டேன்

குறியை பிடுங்கி மலைமுடுக்கிலிருந்து பள்ளத்தாக்கின் ஆழங்களில்

வீசிவிட்டேன்

எலும்புகளை ஒவ்வொன்றாய் தரையில் நகரும் ரயில்போல் சேர்த்துவைத்தேன்

கபாலத்தை நதியில் ஆழ்த்தி மீன்களுக்கு அனுப்பினேன்

இரவோரம் திடுக்கிட்டு நடுங்கின நாயின் ஊளை

விழுங்கிக் கொண்டது மீதமிருந்ததை.


பிணங்களின் நகரம்

****************

இந்த நகரம் பிணங்களுக்கானதாய்

மாறிக் கொண்டே வருகிறது

கல்லறைகளுக்குள்

தடங்கலற்று புரளும் மண்

சோர்வுடன் முனகுகிறது

குழிகள் பறித்து

களைத்து விழுபவனை

கல்லறை வாயில் வரிசை இறுதிக்கு

உந்தித் தள்ளுகிறது பிணங்களின் கூட்டம்

பிணங்களுடன் பிணங்கள் மோதும் வன்முறை

தாள முடியவில்லை

சுடுகாடுகளின் வாயில்கள்

சாம்பலின் உயரத்தால்

மூடப்பட்டிருக்கின்றன

நாற்றம் பெருகும் நகரத்தில்

நுரையீரல்களின் பதற்ற விம்மல்கள்

பிணங்களின் அமானுஷ்யக் கூச்சலில்

ஒடுங்கி கரைகின்றன

கரைமணலில் பிணமிழுத்து

அலை வரையும் கோடுகள்

தீராது அச்சுறுத்துகின்றன

நீலமிட்டப் பிஞ்சுஉதட்டுக் கவ்வலில்

முலைகள் பெருக்கும் குருதியுடன்

சேர்கிறது கடல் போல் கண்ணீர்

உயிருள்ள விரைத்தக் குறிகள்

சில்லிட்ட யோனிகளில்

சிக்கி நசுங்குகின்றன

இந்நகரத்தின்

எண்ணற்ற பாதைகள்

எண்ணற்ற பிணங்களால்

அடைந்திருக்கின்றன

வழி மறிக்கும் பிணங்களை

கடந்து வெளியேறும்

வழியேதும் தெரியவில்லை


பரிச்சயம்

***********

போக்கு

வரத்தின்

எல்லா ஒழுங்கும் குழம்பிய

சாலை சந்திப்பில்

பார்த்துக் கொண்டோம்

பழகின முகம்

என்பது மட்டுமே

நினைவில்…

தயக்கத்துடன் இருவரும்

குசலம் விசாரித்துகொண்டோம்

குழப்பத்துடன் பொதுவாய் சந்தோஷங்களைபகிர்ந்துகொண்டோம்

கவனத்துடன் பெயர்குறிப்பிடாது நின்றோம்

சங்கடம் மீறி பரிச்சயம் தந்த சந்தோஷத்துடன்

விடைபெறக் கைகுலுக்குகையில்

நினைவிற்கு

வந்தது கடந்த காலத்து ஜென்ம விரோதி

என்று

மெளனமாய்

காலத்தின் கைகளில்

எங்களை ஒப்படைத்து விட்டு

எதிரெதில் திசையில்

விலகினோம்


மெளனப் பொய்கை ( Grand Canyon)

******************************

இத்தனை அகண்ட பள்ளத்தை

இதுவரை பார்த்ததில்லை

இவ்வளவு அருகில் அதன் விளிம்பில்

அக்காட்சியை எப்படி அணுகுவது

சட்டென மூச்சை

உள்ளிழுத்து நிறுத்துவதைத் தவிர

காற்றுச் சிறகுகள் விடாது படபடக்க

அகாலத்தின் புன்னகையாய் நெளிகிறது

காலராடோ நதி அடியில்.

பள்ளச்சரிவு பக்கங்கள்

பார்வையை வழுக்கி விட

கை பிடிமானத்தை தேடுகிறது

ஒரே விதமாய் ஒலிக்கும் இசையோடு

இடையற்று பெய்யும் மழையாய்

பள்ளத்தாக்கில் வீழ்கிறது

காலம் சேமிக்கும் மெளனம்

அறியாத கணத்தில்

இன்னொரு தோலாய்

ஒட்டிக் கொள்கிறது

ஓயாத வாய்கள் ஓய்கின்றன

அவரவருக்கான அளவை

மெளனப் பொய்கையிலிருந்து

அள்ளிக்கொண்டு.

Series Navigation

கோகுல கண்ணன்.

கோகுல கண்ணன்.