புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து – 8

This entry is part of 35 in the series 20060922_Issue

புதுவை ஞானம்


PRISM AND SPECTRUM
_
நான் அதிகம் படித்தவன் அல்லன்.அரை வேக்காட்டு அறிவு ஜீவியும் அல்லன். நிறைய பேர்களோடு பிறந்ததாலோ என்னவோ எனக்குப் பலர் மீது அன்பும் பாசமும் உண்டு. “ அருளெனும் அன்பீன் குழவி பொருளெனும் செல்வச் செவிலியால் உண்டு “ என்றபடிக்கு ஓரளவு வசதியாக இருந்தவரை நான் ஒரு மார்க்சிஸ்ட் ஆக இயல்பாக இருக்க முடிந்தது. தந்தை பெரியார் சொன்னது போல அளவு கடந்த மனிதாபிமானத்தின் காரணமாக எனது சக்திக்கும் புத்திக்கும் மீறிய பணிகளில் ஈடுபட்டேன்.வசதி குறைந்த போது அற்ற குளத்து அறு நீர்ப் பறவை போல தொளோடு தோள் நின்ற தோழர்கள் தாகம் தீர்துக்கொள்ள தடாகம் தேடிப் பறந்து விட்டனர். ஆன போதிலும், அந்த தனிமையும் வறுமையும் ‘ பசித்திரு – தனித்திரு – விழித்திரு’
என்ற , ‘ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி வீடுதோரிறந்தும் பசியறாதயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்த வடலூர் வள்ளல் காட்டிய வழியில் நடக்க வைத்தது.

துயரம் என்பது என்ன ?

துயர்க் காரணி என்பது என்ன ?

துயர நிவாரணி என்பது என்ன?

எனும் கேள்விகள் தொடர்ந்தன.நமக்குத் தெரிந்த வரை கெளதம புத்தருக்கும் முன்னும் பின்னுமாக பல புத்தர்களும் சித்தர்களும் இக்கேள்விகளுக்கு விடை தேடினார்கள் ஆளுக்கொரு விதமாய் வழி காட்டினார்கள். அதிலொரு வழி காரல் மார்க்ஸ் காட்டியது.

மார்க்ஸ் மூட்டிய அந்தக் கனல் , அவ்வப்போது உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வடிவில் மக்களின் தன்னெழுச்சியான இயக்கங்களையும், திரட்டப்பட்ட மக்கள் எழுச்சிகளையும் வழிகாட்டி வெற்றிகள் ஈட்டியது. வெற்றிக்கனிகள் எட்டியது யாருக்கு ? சரிசமமாகப் பங்கீடு செய்யப்பட்டதா ? மனித உரிமைகளும் தாபங்களும் மதிக்கப் பட்டனவா ?. அத்தகையதொரு சூழலில் தான் Personal sorrows என்ற பதப்பிரயோகத்தை ஜே.கே (ஜெயகாந்தன் அல்ல , ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி) கையாண்டதைக் கவனித்தேன். அட! தனிப்பட்ட ஒரு மனிதனின் துயரம் மொத்த மானிடத் துயரத்திலிருந்து மாறுபட்டதா என்ன ? ஆம் படைப்புகளும், பார்க்க நேரிட்ட திரைப்படங்களும் சுட்டிக்காட்டின.பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதன் மூலமோ, ஒரே மாதிரியான ஊதிய விகிதங்களை பெற்றுத் தருவதன் மூலமோ தனிப்பட்ட துயரங்களைக் களைந்து விட முடியாது. மனிதனுக்கு மனிதன் ஆறுதலாக இருக்க முடியுமே தவிர தனிப்பட்ட துயரங்களை மனித சக்தியால் மாற்றி விட முடியாது.

மனிதத் தேவைகள் பல படி நிலைகளில் வெளிப்படுகின்றன. Instinct Level, Emotional Level, Intelllectual Level,Psysic Level உணர்ச்சி – உணர்வு – அறிவு – ஆன்மா என Phyical, Mental, Vital, psychic என உடல் ரீதியான,அறிவு ரீதியான, உயிர் ரீதியான, ஆன்ம ரீதியான தேவைகள் அவற்றின் வெளிப்பாடுகள்,செயற்பாடுகள், செயற்படவும் வெளிப்படுத்தவுமான சுதந்திரம் இப்படி ஒரு கலாச்சாரம் சார்ந்த கேள்வியாய்ப் பரிணமிக்கிறது. அவரவர் வளர்ச்சி நிலைக்கேற்ப இத்தேவைகளின் முன்னுரிமை (priority) அமைந்து ஒன்றுக்கொன்று ஒப்புமை உடைய பல திறப்பட்ட கருத்துக்கள் இயக்கத்தின் சுழற்சி வேகத்தில் தனித்தனி நிறமிழந்து வெண்மையாகின்றன.( SPECTRUM 2, P.1518 UNIVERSAL DELUXE DICTIONARY) நான் மதித்துப் போற்றிய அமரர் தோழர் ஸரோஜ் சவுத்ரி தான் பேசுகையில் “A TRADE UNION IS THE COLLECTIVE MANIFESTAION OF INDIVIDUAL DESIRES.” என மிக அற்புதமாக விளக்குவார்.

இத்தகையதோர் நிறமாலையை (SPECTRUM) முப்பட்டை ஆடி(PRISM) கொண்டு நிறம் பிரித்து ஆய்வு செய்யும் நிறப்பிரிகையிடம் அவர்தம் “முப்பட்டை” என்னவென்று நான் கேட்டதில்லை. யாராவது கேட்டார்களா ? என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் கேட்டேன் “நீங்கள் கையாளும் மொழிநடை பாமர மக்களைச் சென்றடையுமா ? ஆங்கில அறிவு பெற்றவர்கள் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும் என்றால் ஆங்கிலத்திலேயே எழுதலாமே ? எதற்காகச் சிரமப்பட்டு மொழி பெயர்த்து வெளியிடுகிறீர்கள் ?
என்பது தான் அந்தக் கேள்வி.. இந்தக் கேள்வியைக் கேட்டு ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன.சொந்தச் சோகம் என்னைக் குடிகாரனாக்கியது. குடிக்கிற பழக்கம் படிக்கிற பழக்கத்தை துரத்தி விட்டது, ஒண்ட வந்தபிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாய்!

துயர்க் காரணி என்பது (ME_NOT ME )எனது – எனதற்றது என்ற கருவில்தான் உதிக்கிறது என்றனர் J.K. யைப் பின்பற்றும் பிரஞ்சு மார்க்சிஸ்டுகளான ANDRE BRETON மற்றும் LEONARD SAINEVILLE ஆகியோர் தமது KRISHNAMURTI AND MARX என்ற நூலில். நம்மூர் மார்க்சிஸ்டுகளும்இதனை ஒப்புக்கொள்வார்கள்.புரட்சி ஒன்றுதான் இந்நிலையை மாற்ற முடியும் என்று ஜேகேயும் மார்க்சும் சொல்கிறார்கள்.எனவே உடனடிப் புரட்சி தேவை என்ற அளவில் ஒத்துப் போய் ஒரு நூலினை எழுதி உள்ளனர்.

அந்த நூல் என் பார்வைக்கு வந்த வேளை, நானோ “ இன்று வருமோ நாளைக்கே வருமோ மற்றென்று வருமோ என் கோவே துன்று மல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்! ” எனவும் “அவனன்றி ஓரணுவும் அசையாது” “சும்மாயிரு சொல்லற மனமே” எனவும் வெளிக்குள் வெளி கடந்து கொண்டிருந்தேன்.Paul Brunton ஆக்கிரமித்தார்.OSHO கலக்கினார்.J.K கவர்ந்தார். நீட்சேவின் ஜரதுருஷ்ட்டிரா காதோடு கிகிசுத்தார். ‘ மலையிலிருந்து இறங்கி மக்களைச் சந்திக்க வேண்டும்’ போல தோன்றிய போது ……….

கலாச்சாரம் பற்றிய, தேசிய இனம் பற்றிய தொன்மங்கள் பற்றிய பல கேள்விகள் முட்டி மோதின. மனம் திறந்து விவாதிக்கவும் மக்களச் சந்திக்கவும் மேடையேதும் இல்லை. இருக்கிற மேடைகளுக்கு வாடகை செலுத்த (LEVI)
பணமும் இல்லை. இருந்த சில நண்பர்களோடு தொலைபேசியில் விவாத்தித்தில் ஓய்வூதியத்தில் பாதிக்குமேல் தொலைபேசிக் கட்டணம் செலுத்தக் கடன் பட்டாகிவிட்டது. இந்த நிலையில் பழம் பெரும் தோழரான அ.மார்க்ஸ்
ஒரு கட்டுரை கேட்கிறார்.(இது நடந்தது கி.பி. இரண்டாயிரம்). எல்லாமே வயித்துக்குத்தாண்டா என தோழர்கள் போன பின் யாருடன் பேச, யாருக்கு எழுத என்னத்தை எழுத ?

ME _ NOT ME என்ற ‘தானை’ (தான் – நான்), தானென்ற அகங்காரத்தை அழித்து விட முடியுமா?

“தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு
ஊணும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்து பின்
நானும் அழிந்தமை நானறியேனே ! ”

என திருமூலர் பாடிய நிலையில் நான் ! ‘ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசுக்காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே’ என என் மாஜித் தோழர்கள் !

“அரசன் எங்கே ஆண்டியும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
சேவை செய்யும் தியாகி சிருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லாரும் ஒன்றாய் இங்கே கூடுவதாலே – நம்
வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே !”

என்று சாவில் தான் சமத்துவம் ஏற்படுமா ? ஆ எழவே ! அப்போது கூட தனித்தனி சுடு காடு – தனித்தனி சுடுகாட்டுப் பாதை ! இந்த இழி நிலை மாறவே மாறாதா ? மாறும் – மாற வேண்டும் !

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர்தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றேன் உமையே! ”

எனப் பாடிய வள்ளலார் :

“கடை விரித்தோம் கொள்வாரில்லை கட்டிவிட்டோம்” என வருந்தி விடை பெற்ற வள்ளலார்
மாவட்டத்தில் :

“இது நல்ல தருணம் —
மதித்த சமய மத வழக்கெல்லாம் மாய்ந்தது
வருணாசிரம மெனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாச்சாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவுமற்றப் புலையும் அழிந்தது”

என்று முழங்கிய அவர்தம் வாக்கைக் காப்பாற்ற மார்க்சீயர்கள் முன் கை எடுக்க வேண்டாமா ?

நான் இத்தகு பெருமை வாய்ந்த வள்ளலார் மாவட்டட்தின் குறிஞ்சிப்பாடி, ச.கு.வேலயுதனார் உயர் நிலைப் பள்ளியில் பழைய நான்காம் பாரம் – ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருக்கும் போது மதிப்பிற்குரிய அறிவியல் ஆசிரியர் முருகேசனார், நிறப்பிரிகை பற்றி பாடம் நடத்துகையில் , வானவில்லின் ஏழு நிறங்களும் தனித்தனியாகத் தீட்டப்பட்ட வட்ட வடிவமானதும் ஒரு இராட்டினத்தில் பொருத்தப் பட்டதுமான அட்டையை அதிவேகமாக சுழற்றிக் காட்டினார். எல்லா வர்ணமும் (வருணமும்) அழிந்து அல்ல இரண்டறக் கலந்து வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஏழு திரை நீக்கி அருட்பெரும் சோதி தரிசனம் கிட்டியதைப் போல வெண்மை ஒளி வீசியது. அப்போது எனக்கு வயது 14, இப்போது (அதாவது கி.பி.இரண்டாயிரத்தில்) 54.

நிறப்பிரிகை எனும் கார்டிசியன் பகுப்பு முறை மாறி நிறமாலையாக (SPECTRUM INSTEAD OF PRISM ) ஆக வேண்டுமானால் இடதுசாரி இயக்கம் தனது மந்த கதியை விடுத்து விரந்து சுழன்று செயல் பட்டால் அமைதி வரும் சாதி மோதலில் சிக்கித் தவிக்கும் வள்ளலார் மாவட்டத்துக்கு.

வள்ளலார் மாவட்டத்தில் பலருக்கும் வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தன- இருக்கின்றன -எதிர்காலத்திலும் இருக்கும். இது எல்லா மாவட்டம், மாநிலம்,நாடுகள் அனைத்துக்கும் பொதுவான நிலை. ஆனால் ‘இருத்தல்’ என்பதே ‘பத்திரமாகவும் அமைதியாகவும் வாழுதல்’ என்பதே ,இன்றைக்கிருப்பது போல் பொத்தாம் பொதுவில் ஒரு கேள்விக் குறி ஆனதில்லையே ! There were problems in life ofcourse, but it had never been a life and death problem. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை இருத்தலின் பேரில் தான் தீர்க்க
முடியுமே ஒழிய, இருத்தலையே பிரச்சனை ஆக்கலாமா ?

பிச்சைக்காரன் பாவம் ! ஒரு வீட்டில் மீந்த பழைய சோறு ,மற்றொரு வீட்டில் கூழ்,பிறிதொரு வீட்டில் ஊசிப்போன இட்டிலி எல்லாவற்றையும் தின்று வாந்தி எடுப்பான். சகிக்கவே சகிக்காது ! புதுவை ஞானத்தின் எழுத்தும் அப்படித்தான். சகிக்காது. மன்னித்து விடுங்கள் !

(இந்தக் கட்டுரை வள்ளலார் மாவட்டம் சாதிக் கலவரத்தில் சிக்கித் தவித்த ஜுன் – ஜுலை 2000 -த்தில் எழுதப்பட்டது. ஆனால் யாருக்கும் அனுப்பப்படவில்லை )

புதுவை ஞானம்.
9/10/06 7:15:36 AM

Series Navigation