நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் – ஓர் பார்வை

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

நேச குமார்


சமீபத்தில் நான் தமிழில் படித்த பெரிய புத்தகம் இது (மொத்த பக்கங்கள் 536). இந்தப் புத்தகம் எனக்கு கிடைத்ததின் பின்னணி சுவாரசியமானது.மரத்தடி யாஹூ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களின் போது, நான் நாகூர் ரூமிக்கு சில கேள்விகளை முன்வைக்கவே, இப்புத்தகத்தை பதிப்பித்த கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. சேஷாத்ரி பத்ரி, நாகூர் ரூமி பற்றிய எனது ‘தவறான புரிதல்களை ‘ தெளிவிக்க எனக்கு இப்புத்தகத்தை இலவசமாக அனுப்பிவைத்திருந்தார்.

புத்தகத்தின் பின் அட்டையில், ‘ இஸ்லாத்தின் பெயரால் உலகெங்கும் பயங்கரவாதம் பரவிப் பெருகியிருக்கிற சமயத்தில், அன்பைத்தவிர அம்மதத்தில் வேறெதுவுமில்லை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியிருக்கிறார் ரூமி ‘ என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து, மகிழ்ந்து, ரூமி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தாக்கியிருக்கிறார் என்று நினைத்து படித்துப் பார்த்தால், அதிர்ச்சி தான் மிஞ்சியது. அல் கெய்தா, அல் உம்மா, லஷ்கர்-இ-தொய்பா போன்ற இயக்கங்களின் பிரச்சார புத்தகம் போன்று காட்சியளிக்கிறது இப்புத்தகம்.

ஒப்புக்கு, ஜிஹாத் என்பது இஸ்லாமிய அரசு தொடுப்பது, அதிலும் ‘பெரிய ஜிஹாத்’ ஆன உள்நோக்கிய போராடுதல்தான் மேலானது என்று ஒரே ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டுவிட்டு, புத்தகம் முழுவதும் மென்மையான ஜிஹாத்தை அறிவுபூர்வமாக நடத்தியிருக்கிறார் ரூமி. பல அடிப்படைவாத இஸ்லாமோ பாஸிஸ்ட் கருத்துக்கள்( Islamofascist) புத்தகம் முழுவதும் மூடிமறைத்து வெளிப்படுத்தப் பட்டுள்ளன. முஸ்லீம்களுக்காக மட்டும் இந்தப் புத்தகம் எழுதப்படவில்லை, அனைவரையுமே மனதில் கொண்டு எழுதப்பட்டதே இந்தப் புத்தகம் என்று ரூமியே ஒப்புக்கொள்வதால் [பக்கம் 48], வேண்டுமென்றே இப்புத்தகத்தில் இம்முறையை கையாண்டிருக்கிறார் ரூமி என்று தோன்றுகிறது. புத்தகம் முழுவதும் மெல்லிய முறையில், பூடகமாக மற்ற மதங்களை தாக்கியிருக்கிறார் ரூமி.

துவக்கத்திலேயே, தமிழ் சினிமா உலகம், முஸ்லீம்களை அபத்தமாக காட்டுகிறது என்றும் அதற்கு முஸ்லீம்கள் மேல் அவர்கள் கொண்டிருக்கும் ‘காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பொறாமை, பொறுப்பின்மை, அறியாமை ‘ ஆகியவை காரணம் என்று குற்றம் சாட்டுகிறார் ரூமி [பக்கம் 12]. இத்தகைய தவறான சித்தரிப்பிற்காக அவர் கூறும் காரணம் இதுதான், பள்ளி வாசலில், பாங்கு சொல்லி முடித்தவுடன் ‘இகாமத் ‘ சொல்லியபின் தான் தொழுகை துவங்குவதாகக் காட்ட வேண்டுமாம். ஆனால் அல்லாஹூ அக்பர் என்ற சப்தம் கேட்டவுடனே ஒரு ‘ விஜயகாந்தோ, ஜெய்சங்கரோ தொழுது கொண்டிருப்பதாக ‘ காட்டுகிறார்களாம். இது இஸ்லாம் பற்றிய மற்றவர்களின் பொறுப்பின்மையையும், வெறுப்பையும் காட்டுகிறதாம்.

தமிழ் சினிமாக்காரர்களின் இந்தத் தவறை ‘அபத்தம் ‘ என்பதா அல்லது அதைக்கண்டு , குமுறி, தமிழ் சினிமா உலகம் இஸ்லாமியர்களின் மேல் காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும், பொறாமையும் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டும் ரூமியின் செயல் அபத்தமாக இருக்கிறதா என்று புரியவில்லை.

புத்தகம் முழுவதும் இப்படிப்பட்ட கற்பனாவாத பாதிக்கப் பட்ட மனநிலை தெரிகிறது (imaginary persecuted mentality). சல்மான் ருஷ்டியைச் சாத்தான் என்று வெறுப்பை உமிழும் ரூமி, ‘அவனுடைய உள்நோக்கம் வெளிச்சமான போது, அவன் தலைக்கு ஆபத்து வந்தது ‘ என்று சல்மான் ருஷ்டி மீது இடப்பட்ட பத்வாவை நியாயப் படுத்துகிறார் [பக்கம் 371]. இதற்கு அவர் சொல்லும் காரணம், சல்மான் ருஷ்டி, ‘இஸ்லாமிய உலகத்தின் அன்னையரை’ அதாவது நபிகளாரின் மனைவிகளின் பெயரை தனது நாவலில் விபச்சாரிகளுக்கு வைத்தாராம். ஆனால் இதே ரூமி, இன்னொரு இடத்தில் ,இந்துக்கள் மதிக்கும் கடவுள்களை அவமதித்த கூட்டத்தாரை அன்பு கொண்டு பாராட்டுகிறார். ‘வணக்கத்திற்குரிய இறைவன் வேறு எவருமில்லை, அல்லாஹ்வைத் தவிர ‘ என்ற முஸ்லீம்களின் நம்பிக்கையில் முதல் பாதி வரை அவர்கள் வந்துவிட்டார்கள், இரண்டாம் பாதியும் சீக்கிரமே வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று ஒரு முஸ்லீம் அரசியல்வாதியின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார். [பக்கம் 157]. இந்து மதத்தைத் தாக்குபவர்களை இப்படி அரவணைக்கும் வேளையில், மைலாஞ்சி என்ற கவிதைத் தொகுப்பை எழுதிய ஹெச்.ஜி.ரசூல் என்ற முஸ்லீமை, ‘தலையில் வைத்துக் கூத்தாடிய போலில் பெண்ணியச் சிந்தனையாளர்கள் முகத்தில் கரிபூசப்பட்டது வேறு விஷயம்’ என்று மற்றொரு இடத்தில்[பக்கம் 321] வெறுப்பை உமிழ்கிறார்.

மேலும் புத்தகத்தில், ஷாபானு வழக்கு விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது என்பது இஸ்லாமிய சட்டத்திலேயே இல்லை, ஆதலால் அது மிகப் பெரிய தவறு என்று வாதிடுகிறார் ரூமி. அதுமட்டுமல்லாது, இது நாளடைவில் பொது சிவில் சட்டத்திற்கு இந்திய முஸ்லீம் சமுதாயத்தை உடன்பட வைத்து, அவர்களை ‘அல்லாஹ்வின் சட்டமான’ ஷரியத்தை பின்பற்ற முடியாமல் செய்துவிடக்கூடும் என்ற இஸ்லாமிய ‘அறிஞர்களின்’ கருத்தையெல்லாம் மேற்கோள் காட்டியிருக்கிறார்.[பக்கம் 428]

இவ்விடத்தில் பேராசிரியர் ரூமியிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றுகிறது, முஸ்லீம் பெண்களுக்கு ஷரியத் படி தான் நீதி வழங்கவேண்டும் என்கிறீர்களே, ராஜத்துரோகத்துக்கு ஷரியத் சட்டம் சொல்லும் தண்டனையை முஸ்லீம்களுக்கு வழங்க ஏன் நீங்கள் கோரவில்லை ? மாறாக உங்களைப் போன்ற ‘மார்க்க அறிஞர்கள்’ எல்லோரும், பொடா சட்டம் கடுமையாக இருக்கிறது, அது முஸ்லீம்களை மட்டுமே குறிவைத்து ஏவப்படுகிறது என்றெல்லாம் கூக்குரலிடுகிறீர்களே, இது இரட்டை வேடம் அல்லவா ?. ஆனால் , ரூமியின் சிந்தனைகளை பார்க்கும் போது, இத்தகு கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்று தெரியவில்லை. பொது சிவில் சட்டம் ‘கடவுளின் சட்டத்துக்கு’ எதிரானது என்று சொல்லும் ரூமி, ‘பராமரிப்புத்தொகை(ஜீவனாம்சம்) முஸ்லீம்கள்மீது திணிக்கப் பட்ட ஹிந்து-கிறிஸ்துவ கலாசாரம் என்று [பக்கம் 432] ஆவேசப்படுபவர்களோடு சேர்ந்து உணர்ச்சிமயமாக வாதிடும் ரூமி, அதே ஹிந்து-கிறிஸ்துவ கலாசாரத்தின் பிரதிபலிப்பான, இஸ்லாமிய கிரிமினல் சட்டங்கள் போலில்லாது, மென்மையாக உள்ள, பொது கிரிமினல் சட்டத்தை முஸ்லீம் சமுதாயம் ஏற்றுக்கொண்டிருப்பதைப் பற்றி ஏன் வாய் மூடி மெளனமாயிருக்கிறார் என்ற கேள்விகளுக்கெல்லாம் இப்புத்தகத்தில் விடையில்லை.

திருக்குரானில் பெண்கள் சம்பந்தமாக காணப்படும் அனைத்துக் கருத்துக்களையும் கண்மூடித் தனமாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், அதெல்லாம் உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சரியானவையே என்று புத்தகம் முழுவதும் வாதிடுகிறார். இதற்கு அவர்காட்டும் மேற்கோள்கள் இவை:

‘ ஒரு கல்யாணமான ஆணின் சந்தோஷம், அவன் திருமணம் செய்து கொள்ளாத பெண்களைச் சார்ந்துள்ளது ‘ [பக்கம் 416]

‘ ஒரு பெண்ணிடம் மட்டும் திருப்தி கொண்டதாகக் கூறும் எந்தவொரு ஆணும், ஒன்று பொய் சொல்கிறான் அல்லது அவன் ஆண் மகனே அல்ல ‘ [ பாலகுமாரனின் பேட்டி- பக்கம் 332].

‘ ஆயிஷா, ஹப்ஸா இவர்களை மணந்து கொண்டதன் மூலமாக, உறவைப் பலப்படுத்தும் பொருட்டு, நண்பர்களின் மகளை மணந்து கொள்ளலாம் என்றும், தன்னை விட வயதில் மிகவும் குறைந்தவர்களையும் மணந்து கொள்ளலாம் என்றும் தெரிகிறது ‘[பக்கம் 386].

‘ ஒரு பெண்ணை மட்டுமே ஒருவன் திருமணம் செய்திருந்தாலும், அவனது மனம் என்பது ஒருத்தியோடு மட்டும் தாம்பத்தியம் கொள்கிறதா என்பது, ஒவ்வொருவரும் தம் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி ‘ [பக்கம் 336]

‘ இந்த மாதிரியான சூழ்நிலையில் உறவை விரும்பும் ஒரு கணவன் என்ன செய்வது ? அதுவும் மாதாமாதம் இந்தப் பிரச்சினை தொடரும் எனும்போது ? இது மட்டுமன்று, மாதவிடாய்க் காலம் மட்டுமன்றி, கர்ப்ப காலம், பிரசவ காலம், பாலூட்டும் காலம் ஆகியவற்றிலும் இந்த உறவை நாடாத பெண்கள் உள்ளனர். இப்படிப் பல மாதங்கள் ‘காய’ வேண்டிய கணவன் என்ன செய்வான் ? ‘

‘ (பெண்களை) அடிக்கலாம் என்று திருமறை சொல்வதைப் பார்த்து யாரும் அதிர்ச்சியடைய வேண்டியதில்லை, இது நமக்கு மிகவும் பழகியதுதான் ‘ [பக்கம் 401]

இம்மாதிரியெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியாக அதற்கு முத்தாய்ப்பு வைப்பது போன்று சொல்கிறார் ரூமி, ‘ ஆணும் பெண்ணும் மட்டுமல்ல, ஆணும் ஆணுமே சமமில்லை ‘. இப்படியெல்லாம் வாசகங்கள் காணப்படுகின்ற இந்த இஸ்லாமிய புத்தகத்தை எழுதுவதில் ரூமியின் மனைவி நஸீஹா மற்றும் மகள் பஜிலா யாஸ்மின் ஆகிய இரு பெண்கள் அவருக்கு துணை புரிந்திருக்கிறார்கள் என்றறியும் போது[பக்கம் 54], இஸ்லாமிய பெண்களின் மனப்பாங்கு குறித்து மெலிதான அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. எனக்கு மேலும் அதிர்ச்சியளித்த விஷயம் இஸ்லாமியப் பெண்களைப் பற்றி குறிப்பிடும்போது, இந்தியாவில் ரத்தக்களரியை உண்டாக்கி, இந்துக்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்று தனிநாடு பிரித்து, அதில் காலம் காலமாக வாழ்ந்த இந்துக்களை விரட்டியடித்த முஹம்மதலி ஜின்னாவை ‘ஒரு நாட்டையே உருவாக்கிய அண்ணல் காயிதே ஆலம் ‘ என்ற புகழாரம் மேற்கோள் என்ற பெயரில் காணப்படுவதுதான். இப்படிப்பட்ட மதவாத கருத்துக்களை வெளிப்படுத்தும் போது, அவற்றை மேற்கோளாகக் காட்டி புத்திசாலித்தனமாக தப்பித்துக் கொள்கிறார் ரூமி.

இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை, இல்லை என்று புத்தகம் முழுவதும் கூறிக்கொண்டே, பெண்கள் தங்கள் முகங்களையும் முன்கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளவேண்டும் என்ற இறைக் ‘கட்டளை’ பற்றி விரிவாக எழுதுகிறார். ‘ மார்பைக் காட்டியபடியே பேசும் ஒரு பெண்ணின்மீது உங்களுக்கு மரியாதை வருமா, உடலை மூடிக்கொண்டு பேசும் ஒரு பெண்ணின் மீது உங்களுக்கு மரியாதை வருமா ? மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள் ‘ என்கிறார். மேலும் பர்தா அணிவதன் மூலம் ஒரு பெண்ணுக்கு கண்ணியமும் பாதுகாப்பும் கிடைக்கிறது என்கிறார் [பக்கம் 439].

இப்படிப்பட்ட வாதங்கள் மூலம், என்ன கூறவருகிறார் ரூமி என்று புரியவில்லை, பர்தா அணியாத பெண்களெல்லாம் மார்பை காட்டுகிறார்கள் என்று கூறுகிறாரா ? அல்லது இந்த இருவித வகைப் பெண்களை மட்டும் தான் பார்த்திருக்கிறாரா ?. பர்தா அணியாத, முஸ்லீம் அல்லாத பெண்கள் மீதெல்லாம் ஒரு முஸ்லீம் மரியாதை காட்டக் கூடாதா ? கண்ணியம் காட்டக் கூடாதா ? பாதுகாப்பு அளிக்கக் கூடாதா ? இதுதான் ரூமி காட்டும் இஸ்லாம் நெறியா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. தூய இஸ்லாத்தை பின்பற்றும் இன்றைய சவுதி அரேபியாவில் எல்லாப் பெண்களும் (முஸ்லீம் அல்லாதவர்கள் உட்பட) கட்டாயமாக பர்தா அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு இங்கே நினைவுக்கு வருகிறது. இஸ்லாத்தில் கட்டுப்பாடு இல்லை என்று சொல்லும் ரூமி, பெயருக்குக் கூட இத்தகைய இஸ்லாமிய செயல்பாடுகளை புத்தகத்தில் எங்குமே கண்டிக்கவில்லை. மாறாக, அமெரிக்கா மீதும் கிறிஸ்துவர்கள் மீதும், ஷாபானு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் மீதும் தனது கண்டனத்தை மீண்டும் மீண்டும் புத்தகமெங்கும் வெளிப்படுத்துகிறார்.

இப்படிப்பட்ட கருத்துக்கள் தான் என்றில்லை, ரூமி தனது எழுத்தாற்றலால் புத்தகம் முழுவதிலும் இஸ்லாமிய பாஸிஸத்தை நியாயப் படுத்துகிறார். உதாரணத்திற்கு, முஸ்லீம்கள் அல்லாதவர்கள் மீது விதிக்கப் பட்ட ஜிஸ்யா வரி பற்றிய அவரது கருத்துக்கள். இதற்காகவே தனியொரு பகுதியை ஒதுக்கி, அதில் முன்னுக்குப் பின் முரணான வாதங்களை வைத்து, இந்த மதரீதியான பாகுபடுத்துதலையும், அடக்குமுறையையும், அது ‘அற்பமான வரி’ என்று கூறி நியாயப்படுத்துகிறார்[பக்கம் 519]. இவ்வரியை நீக்கிய அக்பரை தாக்கியும், இவ்வரியை மீண்டும் இந்துக்கள் மீது திணித்த அவுரங்சீப்பை புகழ்ந்தும்[பக்.149,140,141,142,143] பக்கம் பக்கமாக எழுதுகிறார். முஸ்லீம்கள் என்ற காரணத்தினால், தாங்கள் மேற்கு நாடுகளில் ரேசியல் ப்ரொபைலிங் செய்யப்படுகிறோம் என்று கூக்குரலிடும் இதே இஸ்லாமிய ‘அறிஞர்கள்’ மற்ற மதத்தினர் விஷயத்தில், எந்தவித அடக்குமுறையையும் எப்படியெல்லாம் நியாயப் படுத்ததுகிறார்கள் என்பதற்கு இந்த வாதங்களே சாட்சி.

முஸ்லீம்களும் ‘ஜகாத்’ என்ற வரி செலுத்தினார்கள் என்று கூறுகிற ருமி, அதைப் போன்ற பலமடங்கு வரியாக ஜிஸ்யா முஸ்லீம்கள் அல்லாதவர்கள் மீது திணிக்கப்பட்டதை வசதியாக மறந்து விடுகிறார். உதாரணமாக, நபிகளாரின் காலத்திலேயே யூதர்கள் மீது அய்ம்பது சதவிகித விளைபொருட்களின் மீதான வரி விதிக்கப்பட்டதையும் , அதே சமயத்தில் ஜகாத்தின் படி வெறும் பத்து சதவிகிதம் தான் விளைபொருட்களிலிருந்து ஒரு முஸ்லீம் தர்வேண்டும் என்பதையும், திருக்குரானே முஸ்லீம் அல்லாதவர்களை இழ்ிவு படுத்தத்தான் இவ்வரி என்ற்ியம்புவதையும் ‘மறந்து விட்டார்’.

புத்தகம் முழுவதும் நிறைய கருத்துப் பிழைகளும் இருக்கின்றன. அரை குறையாக திருக்குரானிலிருந்து மேற்கோள் காட்டுவது, முன்னுக்குப் பின் முரணான வாதங்கள், முஸ்லீம்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ‘நியாயங்கள்’ போன்றவைதான் இப்புத்தகத்தில் பெரும்பாலும் உள்ளன. சில இடங்களில் திருக்குரானின் வசனங்களையே மாற்றிச் சொல்கிறார். உதாரணத்திற்கு, முஹம்மது நபியவர்கள் தாம், இந்த உலகைத் திருத்து பண்படுத்த வந்த கடைசி தூதர் என்று ரூமி புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். ஆனால், இந்த வாசகம் திருக்குரானில் எந்தவொரு இடத்திலும் இடம் பெறவில்லை என்பதை வசதியாக மறைத்துவிடுகிறார். கலிமா பற்றி கூறும்போது கூட முதலில் அதன் உண்மையான அர்த்தமான ‘ வணக்கத்திற்குரியவன் இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறில்லை; முஹம்மது அவன் தூதர் ‘ என்ற அர்த்தத்தை கூறிவிட்டு [பக்கம் 31] அடுத்த பக்கத்திலேயே, உடனடியாக இந்த ‘ முஹம்மது அவன் தூதர் ‘ என்பதை ‘முஹம்மது அவனது இறுதித் தூதர் ‘ என்று கலிமா பறைசாற்றுகிறது என்று திரித்து விடுகிறார்.

இதுபோன்று புத்தகத்தில் பல இடங்களில் மாற்றி, மாற்றி இடத்திற்குத் தகுந்தார் போல் எழுதுகிறார். மற்ற மதங்கள் கடவுள் ஒருவர்தான் என்று வெளிப்படையாக சொல்லவில்லை என்று குற்றம் சாட்டிவிட்டு [பக்கம் 31], அவன் ஒருவனே என்று அதர்வ வேதம் குறிப்பிடுவதையும் [பக்கம் 501], பழைய ஏற்பாடு கூறுவதையும் [பக்கம் 502] , உபநிஷத்துகள், கீதை போன்றவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டுகிறார். இன்னொரு இடத்தில், எல்லா மதங்களிலுமே இறைவன் ஒருவன் தான் என்னும் கருத்து நிலவியிருந்தாலும் , அது சிந்தனையின் உச்சகட்டமாகத் தான் இருந்துள்ளது என்றும், பரவலான பாமர நம்பிக்கையானது, ஏக இறைவன் என்றில்லாமல் ஏகப்பட்ட இறைவன் என்பதாகத்தான் உள்ளது என்று குற்றம் சாட்டுகிறார்.

ரூமியிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், முஸ்லீம்கள் மட்டும் இதில் எந்தவிதத்தில் விதிவிலக்கு ? அராஜக அப்சல் கானை அவர்கள் கும்பிடவில்லையா ? பெரிய எஜமான், சின்ன எஜமான் என்று சிலரது சமாதிகளை வழிபடவில்லையா ? . ரூமியே ஒரிடத்தில், ஆசைகளுக்கு அடிமையாவது பல தெய்வ வணக்கம் என்று அப்துல் காதிர் ஜிலானி (ரலி) குறிப்பிடுகிறார் என்று கூறுகிறார் [பக்கம் 31] . அப்படியென்றால் , ஹேரம் வைத்திருக்கும் அரபிக்கள் பெரும்பாலோர் பல தெய்வ வணக்கத்தைத் தானே பின்பற்றுகிறார்கள் ? எப்படி இஸ்லாம் மட்டும் ‘வித்தியாசமான , உயர்ந்த ‘ மதமென்று ரூமி திரும்பத் திரும்ப கூறுகிறார் என்பது புரியவில்லை. இஸ்லாமிஸ்ட்டுகளின் இந்த உத்தி எங்கு நோக்கினும் தெரிகிறது. முஸ்லீம்கள் தவறு செய்தால், அது திருக்குரானில் இல்லை, ஹதீதுகளில் இல்லை என்று வாதிடும் ரூமி, ராஜஸ்தானில் ரூப் கன்வர் எரிக்கப்பட்டது[பக் 401], காஸ் வெடித்துச் சாகும் இந்துப் பெண்கள், ‘மேற்கின் தெருக்களிலெல்லாம் திரியும் விபச்சாரிகள்’ [பக் 369] ஆகியோர் விஷயத்தில் மட்டும் இந்த நியாயத்தை ஏன் பார்க்க மறுக்கிறார் ?

மனிதர்கள் அனைவரும் சமம் என்று இஸ்லாம் போதித்ததாக ரூமி கூறுகிறார் [பக்கம் 43]. மனிதர்களை அடிமைகளாக வைத்துக்கொள்வதை இஸ்லாம் ஏற்றுக்கொள்வதை ரூமியே இன்னொரு இடத்தில் ஒப்புக்கொள்கிறார் ( அலீயும் அடிமையும் – பக்கம் 71]. எஜமானனிடமிருந்து தப்பித்து ஓடும் அடிமையின் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்ற இஸ்லாமிய கருத்தைப் பற்றி சிறிதும் கூறாமல், கிறிஸ்துவ உலகத்தின் நிறவெறி, அடிமைகளை வைத்திருந்தது என்று விலாவாரியாக எழுதுகிறார். இஸ்லாம் அடிமைகளை வைத்திருப்பதை அனுமதிக்கின்றது, திருக்குரானிலும், ஹதீதுகளிலும் இதுசம்பந்தமான சட்டங்கள் இருக்கின்றன. மனிதரை மனிதர் அடிமைப்படுத்துவதை ஒப்புக்கொள்ளும் ஒரு மதம் எப்படி சமத்துவத்தை போதிப்பதாகக் கூறமுடியும் ? சூடானில் இஸ்லாமிய மத அடிப்படைவாத அரசு இன்றளவிற்கும் ஒரு லட்சம் பேரை அடிமைகளாக பிடித்து வைத்திருப்பதாக வந்த செய்திகள் நினைவுக்கு வருகின்றன. இஸ்லாமும் அடிமைத்தளையும் என்றொரு தனி அத்தியாயமே எழுதி, 1425 வருடங்களுக்கு முன்பு எந்த அளவிற்கு கருணையுடன் நபிகளார் நடந்துகொண்டார் என்று எழுதும் போது, 1425 வருடங்களுக்குப் பின்னரும் அந்த உரிமைகள் மட்டுமே வழங்கப் படவேண்டும் ஏனெனில் திருக்குரான் எல்லாக் காலகட்டங்களுக்கும், எல்லா நாடுகளுக்குமான கட்டளை என்ற இஸ்லாமோ பாஸிசக்கருத்தின் அடிப்படைக்கு இந்த வாதம் முரண்பாடானது என்பதை கவனிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

அடிமைகள் விஷயத்தில் மட்டும் தான் என்றில்லை. அரேபியாவில் வாழ்ந்த ஆதிவாசிகளைப் பற்றியும், அவர்கள் நயவஞ்சகர்கள், குரானை அவர்கள் அறியக்கூடாது என்றெல்லாம் அல்லாஹ்வே கூறுகிறார் [திருக்குரான் வசனம் 9:97]. மற்றொரு இடத்தில், திருக்குரான் யூதர்களை பன்றிக்கள் என்று அழைக்கிறது [ திருக்குரான் வசனம் 5:60] வேறொரு மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக கடவுளே ஒரு மனிதக் கூட்டத்தாரை பன்றிகள் என்று அழைப்பதாகக் கூறும் மதம் எப்படி சமத்துவத்தைப் போதிக்கிறது என்று ரூமி கூறுகிறார் என்று புரியவில்லை. அல்லது, இதெல்லாம் ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட சிலர் விஷயமாக வெளிப்பட்ட வாசகங்கள் என்றால், பின் எப்படி புத்தகத்தில் திரும்பத் திரும்ப, திருக்குரானும் , நபிகளாரின் வாழ்க்கை முறையும் எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருத்தமானவை என்று வாதிடுகிறார் என்பதும் புரியவில்லை.

புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து, முடிவு வரை திரும்பத் திரும்ப மற்ற மதங்களோடு இஸ்லாத்தை ஒப்பிட்டு, அம்மதங்கள் எல்லாம் எப்படித் தவறாக இருக்கின்றன என்று ரூமி குறிப்பிடுகிறார். அதற்கு அம்மதங்களைச் சார்ந்தவர்களின் வாசகங்களிலிருந்து மேற்கோள் காட்டுகின்றார். கிறிஸ்துவர் ஒருவர் நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தபோது கிறிஸ்துவர்கள், ‘ குருமார்கள் சொல்வதைப் பின்பற்றுவதால் ‘ அவர்களை வணங்குபவர்களாகிறார்கள் என்று சொல்வதை குறிப்பிடுகிறார். இதைப்படிக்கும் போது, நமக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகிறது, அப்படியானால் முல்லாக்களும், மெளல்விக்களும், ‘மார்க்க அறிஞர்களும் ‘ சொல்வதையெல்லாம் கேட்டு நடக்கும் முஸ்லீம்களும் இத்தகைய இஸ்லாமிய குருமார்களை வணங்குகிறார்களா ? அவர்கள் இறைவனை வணங்கவில்லையா ? அப்படியானால் ஏன் ரூமியே பல இடங்களில் ‘மார்க்க அறிஞர்கள் ‘ அதற்கு இப்படிச் சொல்கிறார்கள், அப்படிச் சொல்கிறார்கள் என்று கூறுகிறார். இதுபோன்ற விடைதெரியாத பல கேள்விகள் இப்புத்தகத்தை படிக்கும் போது ஏற்படுகிறது.

பிரபஞ்சம் முழுவதுமே இஸ்லாத்தில் இருக்கிறது என்றும் அனைத்தும் முஸ்லீமாக இருக்கிறது என்றும் [பக்கம் 22], பிறக்கின்ற போது – தூய்மையான நிலையில் அனைவரும் முஸ்லீமாக இருக்கிறார்கள் என்றும், பெற்றோர்கள் தான் அதை யூதனாகவோ, கிறிஸ்துவனாகவோ மாற்றி (அசுத்தப் படுத்தி) விடுகிறார்கள் [பக்கம் 23] என்றும் கூறுகிற ரூமி, இஸ்லாத்தின் வட்டத்துக்குள் எழுப்பப் படும் எந்தப் பிரச்சினைக்கும் திருக்குரான், மற்றும் ஹதீதுகள் கொண்டுதான் தீர்வு காணப்பட வேண்டும் என்று அழுத்திச் சொல்கிறார் [பக்கம் 25]. அதாவது, உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் , கிறிஸ்துவர்களோ, இந்துக்களோ, புத்தமதத்தினரோ, அனிமிஸ்ட்டுகளோ, அனைவரும் திருக்குரான் சொல்கிறபடியும், ஹதீதுகளின் படியும் தான் வாழவேண்டுமாம். இதுதான் இஸ்லாம் சொல்கிறது என்றால்… மனித குலத்தின் நிலைபற்றி நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

புத்தகத்தை படித்து முடித்தபின் ரூமி போன்ற படித்த முஸ்லீம்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது. எமது சமுதாயத்தின் ஜனநாயக மரபுகளின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு, இங்கு மனித உரிமைகள் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு, பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவையும், மதவெறி பிடித்த மெளலானா மெளதூதியையும், தீவிர வகாபிக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு வாய்ப்புக் கிடைத்தால் இதே ஜனநாயகத்தையும், மதச் சார்பற்ற சமுதாயத்தையும் அல்லாஹ்வின் பெயரால் சீர்குலைக்க முயலுபவர்கள் இவர்களோ என்ற ஐயம் எழுகின்றது. ரூமி போன்று படித்தவர்களே இப்படியெல்லாம் மதவாதக் கருத்துக்களை தம்முள்ளத்திலே கொண்டு, அதுதான் சரியான இஸ்லாம் என்று பரப்புவதை கவனிக்கும் போது, சாதாரண முஸ்லீம்களின் கருத்து என்னவாக இருக்கும் என்று நினைத்தால் அச்சமாக உள்ளது.

இவர்கள் வழிபடும் அல்லாஹ், எல்லோர்க்குமான கடவுள் என்றால், அக்கடவுள் தான் இவர்களை திருத்தி, சமுதாய நல்லிணக்கத்துக்கு வழிசெய்ய வேண்டும். இன்ஷா அல்லாஹ்!

-நேச குமார்-

—-

nesa_kumar2003@yahoo.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்

நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue


செய்தி

நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்ற நூலின் வெளியீட்டு விழா ஆம்பூர் மஹ்ஹருல் உலூம் கல்லூரி என்.என்.ஜக்கரியா அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் டி. நிசார் அஹ்மது விழாவுக்கு தலைமை தாங்கினார். ஜனாப் ஆஸிப் நுஃமான் திருமறையின் வசனங்களை ஓதி விழாவைத் துவக்கினார்.

தொழிலதிபரும், ஆம்பூர் முஸ்லிம் கல்விச் சங்கத்தின் பொதுச்செயலாளரும், SSC க்ரூப் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனருமாகிய அல்ஹாஜ் ஜனாப் என்.எம்.சயீத் சாஹிப் நூலை வெளியிட, கல்லூரியின் தாளாளர் ஜனாப் எம்.எம்.கலீமுல்லாஹ் சாஹிப் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதிகளை ஆம்பூர் நகர மன்ற துணைத்தலைவர் ஜனாப் அஷ்ரப் அலியும், ஆர்.வி.ஜுவல்லர்ஸ் அதிபர் ஜி.வெங்கடேஷும் பெற்றுக்கொண்டனர்.

கவிஞர் இராம பிரபு வரவேற்புரை நிகழ்த்தினார். நூலை அறிமுகப்படுத்தி எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் பேசினார். நூலைப் பற்றி கவிஞர் நாகூர் இஜட்.ஜஃபருல்லாஹ் சிறப்புரை ஆற்றினார். நூலை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக திரு ஆர்.பார்த்தசாரதியும் திரு முத்துராமனும் வந்திருந்தனர்.

நாகூர் ரூமி ஏற்புரை வழங்கினார். பேராசிரியர் எஃப்.எம்.பஷீர் நன்றி கூறினார். ஜெ.வெங்கடேஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தினமணி, மாலைமுரசு பத்திரிகை நிருபர்கள் வந்திருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நகரின் முக்கிய புள்ளிகள் விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்தனர்.

—-

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு