விமரிசன விபரீதங்கள்

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


தேர்வு எழுதும் சில மாணாக்கர்கள் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளிக்கொண்டிருப்பார்கள். 200 வார்த்தைகளில் விடை எழுது என்றால் 600 வார்த்தைகள் எழுதுவார்கள், பொருத்தமானதோ இல்லையோ பக்கங்களை நிரப்பிக்கொண்டிருப்பார்கள்.கேட்டால் மதிப்பெண் பெறுவது எத்தனைப்பக்கங்கள் எழுதுகிறோமோ அதைப் பொருத்து, விடைத்தாள் திருத்துபவர் படிக்கிறாரோ இல்லையோ பக்கங்களை கணக்கில் கொண்டு மதிப்பெண் தருவார் என்பார்கள்.மூன்று (அ) இரண்டரை மணி நேரத்தில் முடிந்த அளவு எழுதிவிட வேண்டும்,அதுதான் அவர்களது கண்ணோட்டம். அவர்கள் வெற்றி பெறுகிறார்களா இல்லையா என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

ஜெயமோகன் எழுதும் கட்டுரைகள், குறிப்பாக இலக்கிய விமர்சனக் கட்டுரைகளைப் படிக்கும் போது எனக்கு அத்தகைய மாணக்கர்கள்தான் நினைவிற்கு வருகிறார்கள். மர்ம நாவல்களை வர்ணிக்க வரிக்கு வரி விறுவிறுப்பு என்பார்கள் ஜெயமோகன் கட்டுரைகளைப் பற்றி சொல்லும் போது அதனை சற்றே மாற்றி சொல்லவேண்டுமென நினைக்கிறேன்.அது என்ன என்பதை இந்தக்கட்டுரைப் படித்தபின் உங்களுக்கு தெரியும்.

‘.இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள் ‘

http://www.thinnai.com/ar0724035.html என்ற கட்டுரையை முன்வைத்தே இக்கட்டுரை எழுதப்படுகிறது.தேவைப்படும் போது அவரது பிற கட்டுரைகளிலிருந்தும் மேற்கோள் கொடுத்துள்ளேன்.

ஜாதி என்பதற்கு பதிலாக இனக்குழு என்பதை பயன்படுத்த முன்வைக்கும் காரணங்கள் பொருத்தமானவை அல்ல.இனக்குழு என்பதற்கும் ஜாதி என்பதற்கும் வேறுபாடுகள்,ஒத்த அம்சங்கள் என்ன என்பதினை அவர் தெரிவிக்கவில்லை.பொதுவாக இனக்குழு என்பதை ETHNIC GROUP என்றும் அர்த்தம் கொள்ள முடியும். தமிழில் இனம் என்பது RACE என்பதற்கு இணையான பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாம் ஜாதியையும், இனத்தையும் ஒன்றாகக் காண்பதில்லை.தமிழினத்தில் பல ஜாதிகள்,மதங்கள் இருக்கும் போது நாம் தமிழர்களை ஒரே ஜாதி என்று கருதுவதில்லை,ஒரே இனம் என்றே கொள்கிறோம்.ஆங்கிலத்திலும் ETHNIC,RACE என்பவை ஜாதி என்பதைக் குறிக்க பயன்படுத்தப்படுவதில்லை.மேலும் வழக்கில் இனக்குழு என்பது எத்தகைய பொருளில் பயன்படுத்த்ப்படுகிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.அவ்வாறிருக்கையில் இனக்குழு என்ற சொல்லை பொருத்தமற்றவகையில் பயன்படுத்தி ஏன் குழப்பமுண்டாக்க வேண்டும்.கி.ரா தன் படைப்புகளில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருந்த/இருக்கிற மக்களைப் பற்றி,அவர்கள் வாழ்க்கையைப் பற்றி,அந்த பகுதியைப் பற்றி எழுதுகிறார் .அவரது எழுத்துக்கள் வட்டார இலக்க்கியம் என்று அறியப்படுவது பொருத்தமானது.மேலும் அவர் தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளிலுமுள்ள தெலுங்கு நாயக்கர்கள் பற்றியா எழுதுகிறார்,எழுதினார்.கரிசல் என்பது மண்/நிலம் சார்ந்ததுதான். அவர் சித்தரிக்கும் இயற்கை கூட ஒரு குறிப்பிட்ட பகுதியின் இயற்கைதான். எந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறோம் அது எத்தகைய பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை யோசிக்காமல் இனக்குழு,இனக்குழு அடையாளம் என்ற பொருத்தமற்ற சொற்களை முன்வைப்பது வெட்டி வேலை..தேவையானால் பிரேமும், ஜயமோகனும் தங்களுக்கென்று மட்டும் ஒரு தனி மொழியில் எழுதிக்கொள்ளட்டும், அதை அவர்களே படித்துக் கொள்ளட்டும்.

ஜெயமோகன் எழுதுகிறார்

‘ஆனால் நம் சூழலில் முதலிடம் பெறுவது இனக்குழு அம்சமே. ஏனெனில் நாம் பிறந்து விழுவது அதில்தான். நமது மனம் அதிலிருந்தே உருவாகி வருகிறது. நாம் கல்வி மூலம் வாசிப்பு மூலம் அரசியல்பிரக்ஞை மூலம் அதிலிருந்து எவ்வளவுதான் விலகி வந்தாலும் நம் ஆழ்மனம் அதிலிருந்தே உருவாகியுள்ளது . இலக்கியப்படைப்பை பொறுத்தவரை ஒருவனின் பிரக்ஞைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, அது ஆழ்மனம் மொழியை சந்திக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட கலை. ‘

இதில் ஆழ்மனம் என்றால் என்ன என்பதினை அவர் விளக்குவாரா ? அது நனவிலியா இல்லை வேறா ? ஆழ்மனம் மொழியை சந்திப்பது என்றால் என்ன ?. ஆழ்மனம் நனவிலி என்று அவர் கருதினால் அதை தெளிவாக குறிப்பிடட்டும்.வாசிப்பதும், எழுதுவதும் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட செயல்களா ? இல்லை பிரக்ஞை ஒரு பொருட்டே இல்லை என்பதால் ஒருவர் இலக்கியம் என்று வந்து விட்டாலே பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட நிலைக்குக் சென்றுவிடுகிறாரா ? இல்லை அப்படி சென்றபின் தான் இலக்கியம் படைப்பதும், படிப்பதும் சாத்தியமாகிறதா ?. இலக்கியம் படைப்பது ஒரு கலையா ?. இலக்கியம் படைப்பது ஒரு கலை என்றால் அதில் பிரக்ஞைக்கு பங்கே இல்லையா ? இது பிற கலைகளுக்கும் பொருந்துமா ?. இது போல் பல கேள்விகள் எழுகின்றன.

மார்க்சிய அழகியலிலும் மேற்கட்டுமானம்,கலையின் தனித்துவம் குறித்து தமிழில் பெரிய விவாதமே நடந்துள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மார்கசியர்கள் நிராகரித்த சூத்திரங்களை அவர் முன்வைக்கிறார். தி.க.சி மட்டும் ஏன் குறிப்பிடப்படுகிறார். கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை இவைப் பற்றி எழுதியதை ஜெயமோகன் படித்த்தில்லையா இல்லலை அவற்றை முன்வைத்தால் தன் வாதம் காலியாகிவிடும் என்ற பயமா ? இவை தமிழில் மட்டும் விவாதிக்கப்படவில்லை. மார்சிய விமர்சனம் குறித்த ஆங்கில் நூல்களும் இவை குறித்துப் பேசுகின்றவவே. மலையாளத்தில் இவைப்பற்றி விவாதமே எழவில்லையா ?

‘இப்படி கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலுடன் முரண்படும் அம்சம் இனக்குழுத்தன்மையே என சொல்லவேண்டியதில்லை.

மார்க்ஸியம் மனிதவரலாறு கண்ட மாபெரும் குறுக்கல்வாதம், மகத்தான குறுக்கல்வாதமும் கூட ! மனிதனின் கலாச்சாரத்தை அவனது உள்ளுணர்வுகளின் ஒட்டுமொத்தமாக, அவனது மனதை அதன் ஒரு துளியாகப் பார்க்கும் பார்வையையே இலக்கிய அழகியல் முன்வைக்கிறது. மார்க்ஸிய அழகியல் என்பது இவ்விரு நோக்குகளுக்கும் இடையேயான முரணியக்கம் அல்லது சமரசத்தின் விளைவு. ‘

மார்க்சிய அழகியல் இலக்கியம் பற்றி மட்டுமே பேசுவதில்லை, அழகியல் என்பது இலக்கிய அழகியல் மட்டும்ல்ல. அப்படி இருக்கும் போது மார்க்சிய அழகியலை ‘மார்க்ஸிய அழகியல் என்பது இவ்விரு நோக்குகளுக்கும் இடையேயான முரணியக்கம் அல்லது சமரசத்தின் விளைவு. ‘ என்பதாகவா கருதமுடியும் ?.ஒரு வாததிற்காக இலக்கிய அழகியல் ‘ மனிதனின் கலாச்சாரத்தை அவனது உள்ளுணர்வுகளின் ஒட்டுமொத்தமாக, அவனது மனதை அதன் ஒரு துளியாகப் பார்க்கும் பார்வையையே இலக்கிய அழகியல் முன்வைக்கிறது. ‘ என்பதாக ஏற்றுக்கொண்டால் கூட ஜயமோகன் எழுதியுள்ளது அபத்தம்..இனக்குழு அழகியலுக்கும்,இலக்கிய அழகியலுக்கும் உள்ள உறவு எத்தகையது.கட்டுரையில் இது பற்றி விரிவாக ஜயமோகன் எழுதிய்ருக்கவேண்டும்.

‘தன் கதைகள் முழுக்க கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலை ‘கரிசல்படுத்த ‘ முயன்றார்.

இப்படி கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலுடன் முரண்படும் அம்சம் இனக்குழுத்தன்மையே என சொல்லவேண்டியதில்லை ‘

‘கரிசல்ப்டுத்த ‘ என்பது இனக்குழு சார்ந்த ஒன்றா ? மார்க்சிய அழகியலை ஒருவர் ‘கரிசல்படுத்த ‘ முயன்றார் என்றால் என்ன பொருள்.கரிசல்படுத்தல் என்றால் என்ன ? இனக்குழு இனக்குழு என்றே முழங்கியவர் கரிசலைக் குறிப்பிடுவதேன்.(இதற்கு முன் கட்டுரையில் கரிசல் எத்தனை முறை குறிப்பிடப்பட்டுள்ளது, இனக்குழு எத்தனை முறை குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும்.கரிசல் என்பது கவனமாக தவிர்க்கப்பட்டது என்று கருதமுடியும்.இனக்குழு/நாட்டார் போன்றவை முக்கியத்துவம் தரப்பட்டு கரிசல் என்ற அடையாளம் பின்னுக்கு தள்ளப்படுகிறது.) இல்லை இனக்குழு என்பதின் பொருத்தமற்றதை உணர்ந்து கொண்ட கணத்தில் எழுதப்பட்ட வாக்கியமா அது.ஒருவேளை பிரக்ஞைக்கும் ஆழ்மனத்திற்கும் இடையே ஏற்பட்ட முரண் இப்படி வெளிப்படுகிறதா ?

‘எழுத்தாளன் ஒலிப்பது அவன் வாழ்ந்த சமூகத்தின் ,காலகட்டத்தின் குரலையே. அக்குரலைத்தான் தன்குரலாக வாசகன் அடையாளம் கண்டுகொள்கிறான்.

ஒன்று சமகால வாழ்க்கையின் பொதுவான கூறுகள் .இரு தனிமனிதர்களாக எழுத்தாளனும் வாசகனும் அடைவது வேறுவேறு அனுபவங்களையே எனினும் அனுபவங்களின் புறச்சூழல் ஒன்றே என சொல்லலாம். ஆனால் இது படைப்பின் மேலோட்டமான தளமே. ஆழமான தளம் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் பொதுவான ஆழ்மனத்தளம். ஆழ்மனம் படிமங்களால் ஆனது. படிமங்கள் மரபிலிருந்து உருவானவை. மரபு நுண்ணலகுகளில் இனக்குழுத்தன்மை கொண்டது.ஆகவே ஒரு படைப்பாளில் ஆழ்ந்து தன்னுள்ளே செல்லும்போது முதலில் கண்டைடைவது அவனது இனக்குழு அடையாளத்தைத்தான் , அல்லது அதன் மூலம் உருவான ஆழ்மனப்படிமங்களை. அடுத்த கட்டத்தில்தான் அவன் மானுடகுலம் முழுக்க தழுவியுள்ள பொது ஆழ்மனதின் தளங்களை அடைய முடியும் [இச்சொற்களை உருவகங்களாகவே இங்கு பயன்படுத்துகிறேன். பொதுவாக உளவியல், தத்துவம் , வரலாறு போன்ற மாற்று துறைக் கலைச்சொற்கள் இலக்கியத்தில் கலைச்சொற்களாகும்போது இலக்கியம் சார்ந்த ஒரு மாறுதலுக்கு உள்ளாகின்றன. அவற்றின் கச்சிதமான வரையறை இல்லாமலாகி ஒரு அகவயத்தன்மை உருவாகிறது.அவை உருவகங்களாக மாறுகின்றன] ‘

பொதுவான ஆழ்மனம் என்பது எப்படி உருவாகிறது.அது கூட்டு நினைவிலியா. அப்படியெனில் ஆழ்மனமும் நினைவிலியும் ஒன்றா ?.இது போல் கேள்விகள் உள்ளன.அதையெல்லாம் நான் விவரித்தால் அதுவே தனிக்கட்டுரையாகிவிடும்.இலக்கியத்தில் உளவியல் கருத்துக்கள் பயன்படுத்த்ப்படுவதுண்டு, அதே போல் இலக்கிய விமர்சனத்திலும், ஆனால் அவை குறிப்பிட்ட அர்த்தங்களில்தான் பயன்படுத்தப்படுகின்றன.நனவிலி என்பதற்கு நானாக ஒரு அர்த்தம் தரமுடியாது. பொதுவான புரிதல் என ஒன்று உள்ளது.அகராதிகள் பொதுவானவை.தனி இலக்கிய அகராதி மூலம்தான் அவரது எழுத்துக்களை புரிந்து கொள்ளமுடியும் எனில் அவர் ஒரு அகராதி எழுதி வெளியிடலாம்.ஆனால் கட்டுரைக்கு கட்டுரை தனி அகராதி போடமுடியுமா என்பது எனக்குத் தெரியாது.

இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் சிலர் நான் சில பெயர்களை/கோட்பாடுகளை/கருத்துக்களைப் பற்றி ஏன் ஏதும் எழுதவில்லை என்று கேட்கக்கூடும்.அவற்றை நான் எழுப்பினால் கட்டுரையின் நீளம் அதிகமாகிவிடும்.நனவிலி,மொழி என்றால் உடனே விவாதம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை நான் அறிவேன். அது போல் ஒரு இடதுசாரி அழகியல்/இலக்கிய விமர்சகரின் கருத்துக்களும் பேசப்பட வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் நானாக இவற்றைப் பற்றி எதற்கு எழுத வேண்டும்.தான் முன்வைக்கும் கருத்துக்களுக்கு எவை தொடர்புடையவை என்பதை ஜெயமோகன்தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் கட்டுரையின் ஒரு சில அம்சங்களைம் மட்டுமே நான் இங்கு எடுத்துக்கொண்டுள்ளேன்.பிறவற்றையும் பற்றி எழுதினால் எழுதிக்கொண்டேடே போகலாம், அனுமார் வால் போல் நீளும் கட்டுரை.

‘காலாவதியாகாது இருப்பது எந்த அம்சம் ? வாசகன், விமரிசகன் தன் சொந்த அனுபவத்தையொட்டி சொல்லும் தீவிரமான வரிகள்தான் ‘இலக்கியம் வளர்வதில்லை, அதன் பாடுபொருளே மாறிக் கொண்டிருக்கிறது ‘ [எலியட்] போன்றவரிகள். இவை புறவயமான் ஆய்வின் விளைவுகளல்ல. ஒரு அவதானிப்பின் தருணங்கள் மொழியை சந்தித்ததன் விளைவுகள் மட்டுமே. மிக அகவயமான வரிகள் இவை. அறிவியல்/ ஆய்வு உண்மைகள் அல்ல. இன்னொரு உதாரணம் ‘மொழி என்பது இயற்கையின் அகவய வடிவம் ‘ [எமர்சன்]

இந்த வரிகளை நமது ஆழம் ஒன்று உடனே அடையாளம் காண்கிறது. நிரூபணம் தேவையில்லாமலே ஏற்கிறது. ‘இலக்கியம் வெளிப்படுத்தும் உண்மை நிரூபணம் தேவையற்ற ஒன்று ‘ [எமர்சன்] இவ்வளவுதான் சாத்தியம். ஆய்வுகள் அனைத்துமே உடனே காலாவதியாகி விடுகின்றன. சி.ஜி. யுங்கின் ஆழ்படிம விமரிசனம், ஃபிராய்டிய உளப்பகுபு எல்லாமே பின்னகர்ந்துவிட்டன.

ஆகவே கோட்பாடுகளே இல்லாமல் படைப்பின் முன் நிற்பதும் வாசிப்பதும் அடைந்ததை பகிர்வதும் மட்டுமே சிறந்த வழிமுறை. ஆய்வுகள் முக்கியமே. அவை படைப்பைப்பற்றிய சில விரிவாக்க வாசிப்புக்கு உதவி செய்கின்றன. பல்லிவால் பற்றிய சரித்திரத்தகவல் இன்றி அக்கவிதையை படிக்கமுடியாதா ? ஒருவேளை மேலும் சிறப்பாக படிக்கமுடியும்! ‘ http://www.geotamil.com/pathivukal/debateonjeyamokanarticle.html

இதுவும் அவர் எழுதியதுதான். கோட்பாடுகள் தேவை.அவற்றை தேவைகேற்றபடி, கோட்பாடுகளின் பொருத்தப்பாடுகளை அறிந்து பயன்படுத்த வேண்டும். காலுக்கு ஏற்ற செருப்பைத் தேடவேண்டும், செருப்பிற்கேற்றபபடி காலை வெட்டக்கூடாது.இலக்கிய விமர்சனம் என்பது கோட்பாடு எனும் PROCURSTEAN BED ல் படைப்பை ‘பதம் பார்ப்பதல்ல ‘.(1) ராஜநாராயணன் படைப்புகளை ஜெயமோகனின் இக்கட்டுரை இன்றி மேலும் சிறப்பாக படிக்கமுடியும்.இனக்குழு,நனவிலி,பொதுஆழ்மனம் போன்றவை இன்றி கி.ரா வின் எழுத்துக்களை ரசிக்க முடியும்,நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். ஜெயமோகனின் இக்கட்டுரை விமர்சனம் என்பது புரிதலுக்கு எந்த அளவு இடையூறாக இருக்கமுடியும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். அதற்காக விமர்சனம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. நாம் மோசமான உதாரணங்களை வைத்துக் கொண்டு முடிவு செய்யக்கூடாது.

‘சி.ஜி. யுங்கின் ஆழ்படிம விமரிசனம், ஃபிராய்டிய உளப்பகுபு எல்லாமே பின்னகர்ந்துவிட்டன. ‘- அப்படியானால்அவற்றின் மையக்கருத்துகள் மட்டும் எக்காலத்திற்கும்,எல்லாப் படைப்புகளுக்கும் பொருந்துமா ?. கோட்பாடுகள்,கருத்துகள் தேவையே இல்லை எனில் எதற்கு இனக்குழு,மார்க்சிய அழகியல்,ஆழ்மனம்,நினைவிலி, பொது ஆழ்மனம் போன்றவை அவருக்குத் தேவைப்படுகின்றன. ‘ கோட்பாடுகளே இல்லாமல் படைப்பின் முன் நிற்பதும் வாசிப்பதும் அடைந்ததை பகிர்வதும் மட்டுமே சிறந்த வழிமுறை ‘ என்றால் அவர் அதைப் ஏன் பின்பற்றவில்லை.இனியாவது பின்பற்றுவாரா ?.

யுங்கின் கருத்துகள் பயன்படும், ஆனால் எல்லா படைப்புகளிலும் நாம் அதை பயன்படுத்த முடியாது..ஒரே படைப்பினை வாசிக்க ஒன்றுக்குமேற்பட்ட கோட்பாடுகள் உதவலாம். இது தவிர இலக்கிய விமர்சனத்தில் பல புதிய கோட்பாடுகள் முனவைக்கப்பட்டபடியுள்ளன.பெண்ணிய இலக்கிய கோட்பாடு,reader-response theory போன்றவை இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விமர்சகர் அனத்துக் கோட்பாடுகளையும் முழுமையாகக் கற்றிருக்க வேண்டும், அனைத்துக் கருத்துக்களையும் தெரிந்து கொண்டுதான் எழுத வேண்டும் என்பதல்ல என் கருத்து மாறாக முன்வைப்பவற்றை தெளிவாக, அவற்றின் அடிப்படைகளையாவது புரிந்து கொண்டு எழுத வேண்டும். உதாரணமாக் மார்க்சிய அழகியல் குறித்து எழுதினால் அதில் உள்ள பல்வகைப்போக்குகளை சுட்டிக்காட்டாமல ஒற்றைப் பரிமாணத்தினை மட்டும் முனவைக்ககூடாது குறிப்பிட்ட கோட்பாடுகளின் பொருத்தம், பொருத்தமின்மை குறித்து விவாதிப்பதற்கு பதிலாக கோட்பாடுகளே தேவையில்லை என்று ஒருவர் வாதிட்டால அவர் எழுதும் கட்டுரைகளில் கோட்பாடுகள்/கருத்துக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெறும் வாசகனாக, தன்னுடைய வாசிப்பின் அடிப்படையில் மட்டும், தன் ரசனை சார்ந்து மட்டும் எழுத வேண்டும்.ஆனால் ஜெயமோகன் அப்படி இந்தக் கட்டுரையை எழுதவில்லை. அதே சமயம் இது கோட்பாடுகளை நன்கு அறிந்த ஒரு விமர்சகர் எழுதிய கட்டுரையாகவும் இல்லை.இப்படி இரண்டிற்குமிடையே ஒன்றாக தெளிவற்றபடி உள்ளது. ஒரு பொருத்தமற்ற கருத்தை முன்வைத்தால் அக்கட்டுரையில் அதற்குத் தக்கபடி பலவற்றை விளக்கவேண்டி வரும். ஆனால் அவ்விளக்கங்களுக்காக மேலும் சில கருத்துக்களை தெளிவாக முன்வைக்காத போது பெரும் குழப்பமே எஞ்சும். இவற்றை மறைக்க ஏதோ பெரிய கோட்பாடுகளை/கருத்துக்களை சொல்வதாக எதைஎதையோ எழுதினால்,நீளம் அதிகரிக்கிறது, குழப்பமும் தான்.

‘இலக்கிய ஆக்கத்துக்கு முற்போக்கு அல்லது மனிதாபிமானம் அல்லது ஒழுக்கம் அல்லது அழகு கூட ஒரு நிபந்தனையாக ஆகமுடியாது. படைப்பு என்பது இலக்கியவாதியின் ஆழ்மனம் . ஆகவே அது அச்சமூகத்தின் பொதுஆழ்மனமும் கூட. தீவிரமான இலக்கியப்படைப்பாளி இக்கூச்சல்களை முற்றிலும் உதாசீனம் செய்து தன் அந்தரங்கத்தை மொழியால் அளப்பதில் மட்டுமே குறியாக இருப்பான்.

எந்த எழுத்தாளனும் ‘தன் குரலை ‘ மட்டும் ஒலிப்பதில்லை. அப்படி ஒலித்தால் அதற்கு மதிப்பும் இல்லை. எழுத்தாளன் ஒலிப்பது அவன் வாழ்ந்த சமூகத்தின் ,காலகட்டத்தின் குரலையே. அக்குரலைத்தான் தன்குரலாக வாசகன் அடையாளம் கண்டுகொள்கிறான்.

எந்த இடத்தில் ஓர் எழுத்தாளனும் அவனது வாசகனும் ஒருவர்போல ஆகும்படி ஒருவரையொருவர் கண்டடைகிறார்கள் ? இரு தளங்களில்

. ஒன்று சமகால வாழ்க்கையின் பொதுவான கூறுகள் .இரு தனிமனிதர்களாக எழுத்தாளனும் வாசகனும் அடைவது வேறுவேறு அனுபவங்களையே எனினும் அனுபவங்களின் புறச்சூழல் ஒன்றே என சொல்லலாம். ஆனால் இது படைப்பின் மேலோட்டமான தளமே. ஆழமான தளம் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் பொதுவான ஆழ்மனத்தளம். ஆழ்மனம் படிமங்களால் ஆனது. படிமங்கள் மரபிலிருந்து உருவானவை. மரபு நுண்ணலகுகளில் இனக்குழுத்தன்மை கொண்டது.ஆகவே ஒரு படைப்பாளில் ஆழ்ந்து தன்னுள்ளே செல்லும்போது முதலில் கண்டைடைவது அவனது இனக்குழு அடையாளத்தைத்தான் , அல்லது அதன் மூலம் உருவான ஆழ்மனப்படிமங்களை. அடுத்த கட்டத்தில்தான் அவன் மானுடகுலம் முழுக்க தழுவியுள்ள பொது ஆழ்மனதின் தளங்களை அடைய முடியும் ‘

ஜெயமோகன் மகாஸ்வேதா தேவியின் எழுத்துக்களைப் பற்றி என்ன கருதுகிறார். ஜி.நாகராஜன் எழுத்துக்களை புரிந்து கொள்ள இனக்குழு அழகியல் கண்ணோட்டம் உதவுமா. எழுத்தாளன்-வாசகனின் புறச்சூழல் எப்படி ஒன்றாக இருக்கமுடியும். தலித் படைப்பாளி எதிர் கொள்ளும் புறச்சூழலும், அவர் படைப்பை வேறோரு கண்டத்தில், ஐரோப்பாவில்,கனடாவில் வாசிக்கும் வாசகனின் புறச்சூழலும் ஒன்றா ?. இல்லை காப்காவின் சூழலும், அதை இன்று வாசிக்கும் ஒரு வாசகனின் சூழலும் ஒன்றா ?.எழுத்தாளன் என்ன காலக்கண்ணாடியா ?.எழுத்தாளன் காலகட்டத்தின் குரல் என்பதை ஒரு வாததிற்காக ஒப்புக்கொண்டாலும், சமூகத்தில் ஒரு குரல் மட்டுமா உள்ளது.பல குரல்களை பதிவு செய்வதா (அ) தனக்கு உவப்பான ஒரு குரலைப் ஒலிப்பதா ?. ஒரு காலகட்டத்தின் குரலை மட்டும் ஒலித்தால் அப்படைப்பு பிற காலகட்டங்களில் பொருளற்றதா ? இல்லை வெறும் வரலாற்று ஆவணமா ?. எழுத்தாளன் காலத்தின் குரலையும் மீறி தன் குரலை, தன் தனித்துவக் குரலை முன்வைக்கமுடியாதா ?.க்ி.ரா வின் எழுத்துக்கள் குறித்த கட்டுரையில் ஜெயமோகன் எழுத்தாளன்/படைப்பாளி குறித்து பல கருத்துக்களை முனவைத்துள்ளார். அவை சுஜாதாவிற்கு பொருந்துமா ? எந்த அளவிற்கு. இங்கு அவர் முன்வைத்துள்ள பொதுவான கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த கேள்வியை எழுப்புகிறேன்.

படைப்பும்,இலக்கியவாதியின் ஆழ்மனமும்,சமூகத்தின் பொதுஆழ்மனமும் ஒன்றா ?. இதை எப்படி கண்டடைவது.ஒரே காலகட்டத்தில் எழுதப்படும் படைப்புகளில் உள்ள மாறுபட்ட கண்ணோட்டங்கள் இப்பொதுஆழ்மனத்தின் பன்முகங்களா ?.அப்படியாயின் அவை எவ்வாறு உருவாகின்றன.

‘எழுத்தாளன் ஒலிப்பது அவன் வாழ்ந்த சமூகத்தின் ,காலகட்டத்தின் குரலையே. அக்குரலைத்தான் தன்குரலாக வாசகன் அடையாளம் கண்டுகொள்கிறான். ‘

அப்படியானால் எத்தனை எழுத்தாளர்களின் குரலை தன் குரலாக வாசகனால் கண்டுகொள்கிறான்.வாசகன் வெறும் நுகர்வோனா ? இல்லை பிரதியைவாசிப்பதன் மூலம் ஆசிரியன் எதிர்பார்த்தேயிராத அர்த்தங்களை/வாசிப்புகளை சாத்தியப்படுத்துபவனா ?. ஒரு கட்டுரைக்குள் எத்தனை ‘பிரகடனங்கள் ‘, ஆனால் ஒன்று கூட ஆய்விற்குட்ப்டுத்தினால் தேறுவதில்லை. இந்தக் கட்டுரையை அவர் எழுதியுள்ள இன்னொரு/பிற கட்டுரை(க)ளுடன் ஒப்பிட்டால் படிப்பவர்களுத்தான் தலைசுற்றும். இதே போன்ற ஒரு குழப்பததை இயற்கை வர்ணனை குறித்து அவர் எழுதியுள்ளதிலும் காணலாம்.

‘இயற்கையின் பிரம்மாண்டம் ஒரு படைப்பாளியிடம் உண்மையான எதிர்வினையை எழுப்பியிருக்கிறதென்றால் அது கண்டிப்பாக கட்டுப்பாடற்ற தன்மையைத்தான் கொண்டிருக்கும். ப.சிங்காரத்தின் மொழி உளறல்போல மாறுவதைக் காணலாம். காரணம் தன் சுயத்தை நிராகரித்தே ஒரு மனம் இயற்கையில் ஈடுபட முடியும்.

ஆனால் இயற்கையை சொல்லும்போது மட்டும் அவர் செவ்வியல்தன்மைக்குள்ள் சென்றுவிடுகிறார். ஏனெனில் இயற்கையை விலகி நின்று பார்த்து வியப்பது நாட்டார் மரபின் இயல்பல்ல. இயற்கை தன்னிச்சையான ஓர் இடத்தை மட்டிலுமே நாட்டார் மரபில் பெறமுடிகிறது. ‘

அவர் மேற்கோள் காட்டும் எமர்சனின் கருத்தை, ‘மொழி என்பது இயற்கையின் அகவய வடிவம் ‘ உங்கள் கவனத்திற்குத் தருகிறேன்.

இந்தக் கட்டுரையில் அவர் எழுதுகிறார்

‘கி.ராஜநாராயணன் துவங்குவது அவரது இனக்குழு அடையாள்த்தில் இருந்தே. தெலுங்கு நாயக்கர்களின் சமூக, வரலாற்று, அன்றாட வாழ்க்கைப் பின்புலம் அவரது ஆக்கங்களில் தீவிரமாக வெளிப்படுகிறது. அவரது கதைக்கருக்கள் பல அச்சமூகத்தின் தொன்மங்களில் இருந்து உருவானவை. ஆனால் தன் நாற்பதுவயதுக்குமேல் மார்க்ஸிய அரசியலில் ஆர்வம் கொண்டபிறகுதான் எழுத ஆரம்பித்தார் என்ற செய்தி நம் முன் உள்ளது. அதாவது அதுவரை இனக்குழு மனநிலை அவரில் நேரியக்கமாகவே இருந்தது . மார்க்ஸிய அரசியல் கருத்துக்களும் சமூக ஆய்வுக் கோட்பாடுகளுமே எதிரியக்கமாக அமைந்தன. இவை இரண்டும் உருவாக்கும் முரணியக்கமே அவரது இலக்கியம். அவரது முதல்கதையான ‘ மாயமான் ‘ இவ்விரு இழைகளும் கலந்து உருவானது . அதன் தலைப்பையே நாம் ஒரு குறியீட்டு ஆய்வுக்காக பயன்படுத்தலாம். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் முதலாளித்துவ அமைப்பு குறித்தும் அதன் இலட்சியவாதங்கள் குறித்தும் உருவாகி வந்த ஆழமான அவநம்பிக்கையை இக்கதை சொல்கிறது. ‘சோஷலிச ‘ அரசாங்கம் அளிக்கும் உதவிகள் நடைமுறையில் மோசடிகளாக ஆவதைப்பற்றிய கதை இது. அதற்கு அவரது ‘வைணவ ‘ கரிசல் மண்ணில் வேரூன்றிய ராமாயணத்திலிருந்து படிமத்தை எடுத்துக் கொள்கிறார்.

தன் கதைகள் முழுக்க கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலை ‘கரிசல்படுத்த ‘ முயன்றார் ‘

கீழேயுள்ளதும் அவர் திண்ணையில் சில வாரங்களுக்கு முன் எழுதியது (http://www.thinnai.com/pl0703034.html)

‘நவீனத்துவ காலகட்டத்திற்குள் நாட்டார் அழகியலின் நேரடியான வெளிப்பாடாக அமைந்த ஆக்கங்கள் அவர் உருவாக்கியவை. ஆனாலும் அவர் கதைகளில் நவீனத்துவப் பண்புகூறுகள் வலுவாகவே உள்ளன. நாட்டாரியல் கூறுகள் அவற்றில் இயல்பாக இடம்பெறுகின்றனவே ஒழிய வளர்த்தெடுக்கப்படவில்லை. கி ராஜநாராயணன் கதைகளில் எங்குமே நாட்டார் மரபு சார்ந்த படிமங்கள் சமகால நவீன வாழ்க்கையை விளக்கவும் விமரிசிக்கவும் பயன்படும் விதமாக மலர்ச்சி கொள்ளவில்லை என்பதை இங்கே சுட்டிக் காட்டவேண்டும். கி ராஜநாராயணனின் பார்வை சமகால முற்போக்கு அழகியலையே பெரிதும் சார்ந்துள்ளது. ‘

இந்த இரண்டு கட்டுரைகளையும் கவனமாகப் படிப்பவர்கள் இவற்றில்,இவற்றிக்கிடையே உள்ள உள்முரண்களை,தர்க்கரீதியான குழப்பங்களை அடையாளம் காணமுடியும்.நாட்டார் அழகியலுக்கும்,இனக் குழு அழகியலுக்கும் வேறுபாடுகள் உண்டா ?. ஒரே கட்டுரையில் நாட்டார்,இனக்குழு ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படும் போது அவை ஒத்த பொருளில் பயன்படுத்தப்படுவதாக கொள்ளலாமா ?.ஜெயமோகன் கட்டுரையில் பா.செயப்பிரகாசம் (சூர்யதீபன்) பற்றி ஏதும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லையே.அவரது எழுத்துக்கள் (உ-ம் கதைகள்,தெக்கத்தி ஆத்மாக்கள்) பற்றி ஜெயமோகன் கருத்தென்ன ?

இந்த கட்டுரையில் அவர் வாசகராக எழுதியுள்ளவை அவரது ரசனையைக் காட்டுகின்றன.அவைதான் இந்தக் கட்டுரையை படிக்கவைக்கின்றன.விமர்சகராக எழுதியுள்ளவை கட்டுரையின் நீளத்தினை அதிகரிக்கவே உதவுகின்றன, கட்டுரையின் பலவீனமான பகுதிகள் அவைதான். வாசக அனுபவத்தினையே பிரதானமாகக் காணும் ஜெயமோகன் அந்த அடிப்படையிலேயே எழுதுவதுதான் மிகவும் பொருத்தமாக இருக்குமோ என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்லவேண்டும்.இன்று கோட்பாடுகளை,கருத்துக்களை முன்வைத்தால் சான்றுகளை முன்வைப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.அடிக்குறிப்புகளுக்கும், கட்டுரை/நூற் பட்டியற்களும் வாசகர்களுக்கு புதிதல்லவே ?. ஆனால் அவர் இவ்விஷயத்தில் குழப்புகிறார்.தான் முன்வைக்கும் கருத்துக்கள் எந்த கோட்பாட்டின் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன என்பதை அவர் தெளிவாக்குவதில்லை.உதாரணமாக் நனவிலி என்பதை பிராய்டிய உளவியலின் அடிப்ப்டையில் கட்டுரையில் குறிப்பிடுகிறாரா என்பது குறித்து கட்டுரையில் ஏதுமில்லை.இல்லை நனவிலின் எனபது இந்தப் பொருளில்தான் கட்டுரையில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அவர் குறிப்பிடுவதில்லை.

கோபல்ல கிராமத்து ‘பெரிசு,ளச்ீக்ிக்ம்ிம்ீ ‘ போல் நாமும் சொல்லலாம் விமர்சகர் குழப்புகிறாரா, விமர்சனம் என்ற பெயரில் பிலிம் காட்டுகிறாரா,வார்த்தைகளை வைத்துக் கொண்டு பம்மாத்து பண்ணுகிறரா,சம்பந்தசம்பந்தமின்றி எதைஎதையோ எழுதி ஒரு மாயையை உருவாக்க முயல்கிறாரா ஆம் என்றால் ஆளைவிடு சாமி என்று ஓடி விடலாம்,இல்லை என்றால் வாங்க, டா குடிக்கலாமா என்று உரையாடலைத் துவக்கலாம்.

(1) procrustean bed : a scheme or pattern into which someone or something is arbitrarily forced [ Prokroustes Procrustes, in Greek mythology forces travelers to fit into his bed either by stretching their bodies or by cutting off their legs and procrustean is derived from that ]

***

ravisrinivas@rediffmail.com

Series Navigation