சினிசங்கம் – தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழா

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

லண்டன் அக்டோபர் 2001


உலகில் தமிழர் வாழும் அனைத்து இடங்களிலிருந்தும் தமிழர் தம் பன்முக அனுபவங்கள் குறித்து தமிழ் மொழியிலும் பிறமொழியிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களின் விழா

இன்றைய உலகில் குறும்படங்களும் விவரணப் படங்களும் முக்கியமான திரைப்படக் கலை வெளிப்பாட்டு வகையினங்களாக அங்கீகரிக்கப்பட்டு, எங்கெங்கிலும் குறும் படங்களிற்கென்றும் விவரணப் படங்களுக்கென்றும் சர்வதேசத் திரைப்பட விழாக்கள் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. .

குறும்படங்கள் குறைந்த மனித சக்தி வேண்டுவதாகவும் குறைந்த பொருளாதார வளம் வேண்டுவதாகவும் வளர்ச்சி நோக்கிய சினிமா இயக்குனர்களுக்குச் சோதனை முயற்சிகளின் பயிலுமிடங்களாகவும் கலைஞனின் தரிசனத்தையும் சமூகப் பொறுப்பையும் இணைக்கும் ஊடகமாகவும் இருக்கிறன. தொழில்நுட்பம் அதி வளர்ச்சியுற்றிருக்கும் இன்றைய உலகச் சூழலில் ஒரு கையடக்கமான காமெராவைக் கொண்டே எடிட்டிங் உள்பட்ட வேலைகளைக் காமெராவிலேயே மேற்கொண்டு ஒருவர் தனக்கான உடனடிப் படத்தை உருவாக்கி விட முடியும்..

தொலைக்காட்சி பிரதான செய்தி ஊடகமாகவும் கலை ஊடகமாகவும் நமது முன்னறைக்கும், நேரடியாக நமது படுக்கை அறைகளுக்குள்ளும் புகுந்துவிட்ட இன்றைய சூழலில்- குறும்படங்களையும் விவரணப் படங்களையும் தொழில் ரீதியாகத் திரையிடவும் விநியோகப்பதற்குமான சூழல் நிலவும் இந்தத் தருணத்தில், இந்த ஊடகங்களின் முழுச் சாத்தியங்களைப் பயன்படுத்துவதும் அதனை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்வதுமான நோக்கம் கருதியும் சினிசங்கம் இந்தப் படவிழாவை நடத்த நோக்கம் கொண்டது.

தமிழகத்திலும் இலங்கையிலும் ஐரோப்பாவிலும் கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் குறும்படங்கள் தமிழ் மொழியிற் தயாரிக்கப்படும் இன்றைய சூழலில், தமிழ்க்குறும்படங்கள் மற்றும் விவரணப்படங்கள் தொடர்பான ஒரு பகிர்தலுக்கான அவசியத்தையும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பரஸ்பர ஒத்துழைப்பின் தேவையையும் நாங்கள் மனங்கொண்டோம்.

இதனது நோக்கங்கள் மூன்று அடிப்படைத் தன்மைகளைக் கொண்டதாக அமைகின்றன. உலகெங்கும் பல்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களது பன்முக அனுபவங்களை, படங்களைத் திரையிடுவதன் மூலம் பகிர்ந்து கொள்வது முதலாவது நோக்கம். ஒரு கலை ஊடகமாகவும் சமூக ஊடகமாகவும் தமிழ்க்குறும்படங்கள் மற்றும் விவரணப் படங்கள் எதிர் கொள்ளும் தொழில்நுட்பப்பிரச்சினைகளையும் தயாரிப்பு, விநியோகம், திரையிடல், தணிக்கைமுறை போன்ற தொழில்முறைப் பிரச்சினைகளையும் கருத்தரங்கில் விவாதிப்பதின் வழி புரிந்து கொள்வது இரண்டாவது நோக்கம். இத்தகைய அனுபவங்களிலிருந்து கூட்டாகச் செயல்படுவதற்கான சாத்தியமான எதிர்காலத் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு வழி கோலுவது மூன்றாவது நோக்கம்.

நோக்கத்தைச் செயல்படுத்துவதின் முதற்கட்டமாக சினிசங்கம் நடத்தும் இந்தப் படவிழாவில் திரையிடப்படும் விவரணப் படங்களிலிருந்தும் குறும்படங்களிலிலிருந்தும் இரண்டு பிரிவுகளிலும் நடுவர் குழுவினாற் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படங்களுக்கு, ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு போன்ற திரைப்படத் தொழில்நுட்பத்தின் பிரதான பிரிவுகளில் விருதுகளும் பரிசளிப்பும் வழங்கப்படுகிறன.

அக்டோபரில் லண்டனில் நடைபெற இருக்கும் இப்பட விழாவில் பங்கு கொள்ள தமிழ் வாழ்விலும் தமிழ் மக்களது கலாச்சார மேம்பாட்டிலும் அக்கறை கொண்டோரையும் சினிமா சாதனத்தின் அற்புதங்களை நேசிக்கிற பார்வையாளர்கள் என அனைவரையும் லண்டன் சினிசங்கம் மனங்கனிந்த அன்புடன் அழைக்கிறது.

சினிசங்கம்

தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழா

லண்டன்

2001

அக்டோபர் 25 முதல் நவம்பர் 1

திரையரங்கு நேரம் மற்றும் விவரங்களுக்கு

தொலைபேசி

00 44 20 8507 9710

தொலை நகல்

00 44 20 8507 9750

மின்னஞ்சல்

yamunarn@hotmail.com

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்