அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைக் கட்ட ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928]

மனிதக் கரங்கள் மூளைக்கு முந்திச் செய்த அவசரத் தவறை அறிந்த வுடனே விரைவாய்த் திருத்தச் செல்கையில் மீண்டும் ஒரு தவறைப் புரிகின்றன ! பிறகு இரண்டு தவறுகள் நான்கு பழுதுகளை உண்டாக்கும் ! அப்படியே தவறுச் சங்கிலித் தொடரியக்கம் விரிந்து கண்ணிமைப் பொழுதில், மீள முடியாத ஒரு கோர விபத்து கண்முன்னே அரங்கேறுகிறது !

கட்டுரையாளர்

முன்னுரை: 1979 ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலில் நேர்ந்த திரிமைல் தீவு (TMI-2) அணுமின் நிலைய விபத்து, உலகில் வாணிப அணுமின் சக்தி வளர்ச்சியின் வரலாற்றையே முற்றிலும் மாற்றி விட்டது! இந்தியாவில் 1983 ஆண்டு நிகழ்ந்த போபால் விஷ வாயு விபத்தையும், TMI-2 அணு உலை விபத்தையும் ஒப்பிட்டால், அபாய வேளையில் பணி செய்த இயக்குநர் கையாட்சிப் பண்பாட்டில் பல ஒற்றுமைகள் காணப் படுகின்றன! அவ்விரண்டு நுணுக்கக் கூடங்களை உருவாக்கிய உரிமை நிறுவகங்கள் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு [UCC] & ஜெனரல் பப்ளிக் யுடிலிடாஸ் [GPU]! அதே சமயம் டெல்லிக் கருகே நரோரா அணுமின் நிலையத்தில் 1993 ஆண்டு நேர்ந்த வெடிப் போடு ஒப்பிட்டால், பாரத இயக்குநர்கள் அணு உலையைக் கண்காணித்து, வெப்பத் தணிப்பு நீரிழப்பு நிகழாது, எரிக்கோல்கள் சூடாகாமல் காப்பாற்றியது, பாராட்டத் தக்க ஓர் தீரச் செயலாகும்!

1959 ஆண்டுக்குப் பிறகு இருபது வருடங்களாக இயங்கிக் கொண்டிருந்த முதல் பிறப்பு பழைய அணுமின் உலைகள் [First Generation Power Reactors] அனைத்தின் தலை விதிகளை TMI-2 மாற்றி விட்டது! 1979 ஆண்டுக்குப் பிறகு இருபது ஆண்டுகளில் உருவாகப் போன இரண்டாம் பிறப்பு [Second Generation Power Reactors] அணுமின் உலைகளின் டிசைன், பாதுகாப்பு, இயக்க நெறிகள்,

பராமரிப்பு, இயக்குநர் தேர்ந்தெடுப்பு, பயிற்சி, தேர்ச்சி முறைகள், அபாய காலப் பயிற்சிகள், அபாய எதிர்பார்ப்பு உளவுகள், அபாய நேரத் தொடர்புகள் அனைத்தும் பல கோணங்களில் ஆராயப் பட்டு முற்றிலும் மாற்றப் பட்டன!

செர்நோபிள் அணு உலை வெடிப்பைப் போன்று, திரி மைல் தீவு பேரழிவைப் பென்ஸில்வேனியா ஹாரிஸ்பர்கில் உண்டாக்க வில்லை! அணு உலையும், அதைச் சுற்றி யுள்ள சாதனங்களும் வெடித்துத் தகர்க்கப் பட்டது போல், திரிமைல் தீவில் நிகழ வில்லை! சுமார் 1700 டன் மிதவாக்கிக் கரித்திரள் கட்டிகள் [Moderator Graphite Blocks] எரிந்து கதிரியக்கத் துணுக்குகள் சூழ்மண்டலத்தில் தூவப் பட்டது போல் அமெரிக் காவின் பென்ஸில் வேனியாவில் நேர வில்லை! செர்நோபிள் விபத்துத்தின் போது சில தினங்களில் பலியானவர்கள்: வெடிப்பில் இயக்குநர் இருவர், பெருங் கதிரடியில் தீயணைப்புப் படையினர் 29 பேர் மற்றும் கதிர்வீச்சுக் காய்ச்சலில் 13 பேர்; ஆக மொத்தம் உயிரிழந்தவர் 44 மாந்தர்!

ஆனால் திரி மைல் தீவு விபத்தில் யாரும் மரணம் அடைய வில்லை! எவரும் பேரளவுக் கதிரடி பட்டுத் துன்புற வில்லை! செர்நோபிள் விபத்தில் கதிர் வீச்சாலும், கதிரியக்கத் தீண்டலாலும், மானிடருக்கு நீண்ட கால இன்னல்கள் விளைந்தன! இன்னும் 50 ஆண்டுகளுக்கு புற்று நோய் மரண அதிகரிப்பு உண்டாகும் என்று கதிரியல் விஞ்ஞானி களால் யூகிக்கப் படுகிறது! ஆனால் திரி மைல் தீவு விபத்தில், கதிர்வீச்சால் அவ்விதம் நீண்ட கால விளைவுகள் எதுவும் நிகழ வில்லை! ஆனால் அமெரிக்காவில் அடுத்துக் கட்டப் போகும் புதிய அணுமின் நிலையங்கள் நிறுத்த மாயின. கட்டப் பட்டுவரும் அணுமின் உலைகளும், இயங்கி வரும் அணுமின் உலைகளும் மென்மேலும் ஆராயப் பட்டுப் பேரளவில் மேம்படுத்தப் பட்டன !

திரி மைல் தீவு விபத்துக்கும் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகள் விபத்துக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள்

திரிமைல் தீவு அணுமின் உலை விபத்து 1979 இல் யந்திரத் தவறோடு மனிதத் தவறால் தூண்டப் பட்டு வெப்பத் தணிப்பு நீரிழப்பால் (Loss of Coolant Accident -LOCA) பேரளவு எரிக்கோல்கள் அணு உலையில் முறிந்து, உருகிப் போயின. அதனால் வெளிப்பட்ட கதிரியக்கத் துணுக்குகள், திரவக் கழிவுகள் எவையும் வெளியேறாமல் அணு உலைக் காங்கிரீட் கோட்டைக்குள் தங்கின ! ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் 9.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தாலும், 30 அடி உயரத்தில் தாக்கிய சுனாமியாலும் விபத்து தூண்டப்பட்டு எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரிழப்பால் ஓரளவு முறிந்தோ அல்லது உருகியோ சிதைந்து போயின.

ஆனால் தொடர்ந்து சிறிதளவு & பேரளவுக் கதிரியக்கம் மாறி மாறி, நீர் வழியாகவும், வாயு வழியாகவும் அணுமின் உலைகளை விட்டு விட்டு வெளியேறியது. திரிமைல் தீவில் விபத்து ஓர் அணுமின் உலையில் மட்டும் நேர்ந்தது. புகுஷிமாவில் நான்கு அணுமின் உலைகளில் விபத்துக்கள் நேர்ந்தன. பதினாறு நாட்கள் (மார்ச் 26, 2011) ஆயினும் இன்னும் சில அணுமின் உலைகளில் தொடர்ந்து ஜப்பான் இயக்குநரால் வெப்பத் தணிப்பு நீர் எரிக்கோல்களுக்குச் செலுத்த முடியவில்லை.

ஓர் அணுமின் உலையில் இணைக்கப் பட்ட நீர்த் தடாகத்தில் சேமிப்பான எரிக் கோல்கள் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் கீழாகிச் சூடேறத் துவங்கின. நீர்க் கவசமின்றி தடாகத்தில் கதிரியக்கம் மிகையானது. செலுத்தப்பட்ட கதிர்வீச்சுத் தணிப்பு நீர் தங்கும் வளையம் நிரம்பி தரையில் சேரத் தொடங்கியது. அந்த நீர் பணியாளர் காலணிகளில் புகுந்து பீட்டா கதிர்வீச்சால் கால் எரிப்புண்கள் (Beta Ray Burns) உண்டாயின. வெப்பத் தணிப்பு நீரிழப்பால் முறிந்த / உருகிய எரிக்கோல்கள் புகுஷிமாவில் திரிமைல் தீவைப் போல் சுமார் நான்கு மடங்கு எண்ணிக்கை ! புகுஷிமா அணுமின் உலைகளின் சீர்கேட்டையும், கதிரியக்கப் பேரிடரையும் அனுதினம் தொலைக் காட்சியில் கண்டவர் இன்னும் கவனித்து வேதனை அடைந்து வருபவர் உலகில் பல பில்லியன் மாந்தர். செர்நோபிள் பேரிடர் நிலை இலக்கம் 7 என்றும், திரிமைல் தீவு விபத்து நிலை இலக்கம் 5 என்றும் புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துக்கள் நிலை இலக்கம் 6 என்றும் IAEA ஆல் எடை போடப் படுகின்றன.

அமெரிக்க அணுமின் உலைத் திட்டங்களை நிறுத்திய விபத்து !

TMI-2 அணு உலையில் எதிர்பாராமல் துவங்கியது சிறிய நிகழ்ச்சி யாயினும், பிறகு அது அசுர வடிவெடுத்து அணு உலை எரிக்கோல்களுக்குப் பெருமளவில், வெப்பத் தணிப்பு நீரை இழக்கச் செய்து விட்டது! பிரதம வெப்பத் தணிப்பு நீரிழப்பு [LOCA, Loss of Coolant Accident] அணு உலைக்குப் பேரழிவு விளைவிப்பதைத் தடுக்கப் பலவித அபாயத் துணை ஏற்பாடுகள் சுயமாக இயங்கக் காத்துக் கொண்டிருக்கின்றன! அவ்விதம் தவிர்ப்பு முறைகள் TMI-2 இல் இருந்தாலும், அறிவற்ற இயக்குநரின் கையாட்சியால் பேரளவுச் சேதம் அணு உலையில் உண்டானது! அவரது மூடத்தனத்தால் இரண்டு மணி நேரத்திற்குள் நான்கு வித அபாய விபத்துகள் கட்டுப் படுத்த முடியாமல் பூத உருவில் விரிந்தன!

1. எரிக்கோல்களின் உஷ்ணம் 2800 டிகிரி C ஏறி, 50 டன் [50%] யுரேனியம் ஆக்ஸைடு கோல்கள் உலைக் கலனில் உருகிக் கட்டிகளாய்ச் சேர்ந்தன!

2. வீரிய கதிரியக்க முள்ள, யுரேனியப் பிளவுக் கழிவுகள் சேர்ந்த 600,000 காலன் வெப்பத் தணிப்பு நீர், அணு உலையிலிருந்து கசிந்து வெளியேறி, கோட்டைத் தளத்தில் தடாகமாய்ப் பெருகியது!

3. அணு உலையில் 2800 டிகிரி C உஷ்ண நீராவி அருகில் உள்ள ஸிர்கோனிய [Zirconium] உலோகத்துடன் இணைந்து பேரளவு ஹைடிரஜன் வாயு முகிலாகி, மூர்க்கமுடன் ஆக்ஸிஜனுடன் பிணைந்து பெரு வெடிப்பை [Hydrogen Explosion] உண்டாக்கப் பயமுறுத்தியது! செர்நோபிள் அணுமின் உலையில் எழுந்த இரண்டாவது வெடிப்பு இவ்விதம்தான் ஏற்பட்டது!

4. உருகித் திரண்ட யுரேனியக் கட்டிகள் அணு உலை நீரில் ‘விரைவுப் பூரண வெடிப்பைத் ‘ [Prompt Criticality Explosion] தூண்டி விடுமோ என்ற பேரச்சத்தை வேறு உண்டாக்கியது!

நல்ல வேளையாக கடைசி இரண்டு கோர நிகழ்ச்சிகளும் நேரவில்லை!

1983 இல் உலகெங்கும் இயங்கி வந்த அணு உலைகளின் எண்ணிக்கை 284! உலகில் அப்போது கட்டப் பட்டு உருவாகி வந்தவை 192! அதே சமயத்தில் அமெரிக்காவில் மட்டும் ஓடிக் கொண்டிருந்தவை 79! நிறுவன நிலையில் வளர்ந்து கொண்டு வந்தவை 55! TMI-2 விபத்துக்குப் பிறகு உலகில் ஓடிக் கொண்டிருந்த அணுமின் உலைகளும், கட்டப்படும் அணுமின் உலைகளும் தீர்க்கமாய் ஆய்வு செய்யப் பட்டு மேபடுத்தப் பட்டன! அமெரிக்காவில் அணுமின் உலைகளின் மீது நம்பிக்கை குன்றி கட்டப்படும் 55 அணு உலைகளில் 30 நிலையங்கள் முழுவதும் கட்டப் படாமலே பாதியில் நின்று போயின! காரணம் NRC [Nuclear Regulatory Commission] எதிர்கால அணுமின் உலைகளுக்குக் கடும் நிபந்தனைகளிட்டுப் பாதுகாப்பு நெறிகளையும், முறைகளையும் மிகையாக்கியதால், கட்டுமான நிதித் தொகை மிக மிக ஏறிவிட்டது!

திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் என்ன நிகழ்ந்தது ?

1979 மார்ச் 28 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அமெரிக்காவின் மாபெரும் அணுமின் நிலைய விபத்து, இரட்டை உலைகளில் ஒன்றான யூனிட்-2 நிலையத்தில்தான் நேர்ந்தது! TMI-2 [Three Mile Island Unit-2] அணுமின் நிலையம் நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களுக்கு அண்டையில் உள்ள பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் [Middletown near Harrisburg on the Susquehanna River] அமைந்துள்ளது. 1978 டிசம்பர் முதல் வாணிப ரீதியாக இயங்கி வரும் TMI-2 அணுமின் உலை விபத்தன்று 97% [870 Mwe] மின்னாற்றலில் ஓடிக் கொண்டிருந்தது.

பராமரிப்புக்குப் பிறகு எதிர்பாராத விதமாக மூடப்பட்ட ஒரு வால்வால் [Valve] நீராவி ஜனனிகளுக்குத் தொடர்ந்து நிரப்பும் தூய நீர் தடைபட்டது! அதன்பின் பிரதம நிரப்பு நீர்ப் பம்பும் [Main Feedwater Pump], ஓடிக் கொண்டிருந்த பிரதம டர்பைனும் [Main Turbine] நிறுத்தம் அடைந்து, 870 MWe மின்னாற்றல் இழப்பானது! உடனே அபாய நிரப்புப் பம்ப் தானாக இயங்க ஆரம்பித்தாலும், நீராவி ஜனனிகளுக்கு நீரனுப்ப முடியாது போயிற்று!

ஏனென்றால் கடந்த வாரத்தில் மூடப் பட்ட சில வால்வுகள், சோதனை முடித்ததற்குப் பிறகு திறக்கப் படாமல் கிடந்தன! ஆட்சி அறை அரங்கில் [Control Roon Panels] காணப்படும் மூடிய அந்த வால்வுகளின் மினி விளக்கு, அருகில் தொங்கும் பராமரிப்பு எச்சரிக்கை அட்டை எதுவும், இயக்குநர் கண்களுக்குத் தெரியாமல் போனது, ஓர் விந்தை நிகழ்ச்சி!

அணு உலையில் தொடர்ந்து உண்டாகும் 2700 MWt வெப்பசக்தி [870 MWe] ஜனனிகளில் நீர் இருந்தால்தான் நீராவி யாக்கப்பட்டு டர்பைனை ஓட்டுகிறது. அவ்வழியில் அணு உலைக்கு நீராவி ஜனனிகளே பிரதம ‘வெப்ப விழுங்கிகள் ‘ [Steam Generators are the Main Heat Sinks for the Reactor]! வெப்ப விழுங்கிகள் நீரற்று முடமானதால், அணு உலையின் வெப்பமும், தணிப்புநீர் அழுத்தமும் அளவு மீறி, அணு உலைத் தானாக நிறுத்த மானது! நீர் அழுத்தம் ஏறியதும் தானாய் இயங்கும் தணிவு வால்வு [Power Operated Relief Valve (PORV)] ஒன்று திறந்து அணு உலைப் பிரமத வெப்பத் தணிப்பு நீரை [Primary Coolant] வெளி யேற்றியது! திறந்த PORV அழுத்தம் குன்றியதும் மூடாமல் துரதிஷ்ட வசமாகச் சிக்கிக் கொண்டதால், நீர் வற்றிப் போய்க் கனலான எரிக்கோல்கள் நீர் மட்டம் குன்றி வரட்சியில் உஷ்ணம் ஏறி எரியத் தொடங்க ஆரம்பித்தன! அதாவது வெப்ப எரிக்கோல்கள் ‘தணிப்பு நீர் இழப்பு விபத்தில் ‘ [Loss of Coolant Accident (LOCA)] மாட்டிக் கொண்டது!

வெப்ப எரிக்கோல்கள் தணிப்பு நீர் இழப்பு விபத்தில் உருகின!

PORV இல் ஒழுகும் கதிர்வீச்சு நீர் சேமிப்புத் தகழி [Contaminated Water Storage Tank] நிரம்பியதும் அதனுடைய காப்புத் தகடு [Rupture Disc] உடைந்து, தீவிரமான கதிரியக்க திரவம் கோட்டைத் தளத்தில் கொட்ட ஆரம்பித்தது! வெப்பத் தணிப்பு நீரழுத்தம் குன்றியதும், சுயமாகவே அபாய எருக்கருத் தணிப்பு நீர் ஏற்பாடு [Emergency Core Cooling System] துவங்கியது! அணு உலையின் மீது பட்ட நீர் உடனே ஆவியான போது, அழுத்தக் கலனில் [Pressurizer] நீர் நிரம்பிப் பொங்குவதாக எண்ணித் தப்பாகப் புரிந்து கொண்ட ஆட்சி அறை இயக்குநர், அபாயப் பணிப் பம்பை மூடத்தனமாக நிறுத்தினர்! அத்துடன் நில்லாது, மேலும் தணிப்பு நீரை நீக்க சில வால்வுகளைச் சிந்திக்காமல் திறந்து விட்டார்கள்! அவசரத்திலும், அச்சத்திலும் செய்யும் பல அபாயத் தடுப்பு வேலைகள் அனைத்தும் அடுத்தடுத்த தவறுகளாகி அணு உலையின் கனலான எரிகோல்கள் நீரற்று உஷ்ணத்தில் உருகி உலைக் கலனின் அடியில் ஓடித் தங்கின!

நீராவி ஜனனிகளின் மூடிய அபாயப் பணி நீரனுப்பி வால்வுகளைக் கண்டு இறுதியில் திறந்து, ஜனனிகளுக்கு நீரைத் திறந்து விட்டார்கள்! ஆனால் திறந்து மூடாமல் சிக்கிக் கொண்ட PORV நீரை வீணாகக் வெளியேற்றுவதை இயக்குநர் இன்னும் கண்டு கொள்ள வில்லை!

அணு உலையில் தங்கிய நீர் ஆவியாகி, அதன் உஷ்ணம் மிகையாகி, உலையின் உலோகத்துடன் பிணந்து ஏராளமான ஹைடிரஜன் வாயுக் குமிழ் [Hydrogen Gas Bubble] உண்டாகி வெடித்து விடப் பயமுறுத்தியது! செர்நோபிள் அணு உலையில் நிகழ்ந்த இரண்டாவது பயங்கர வெடிப்பு, ஹைடிரஜன் வாயுக்குமிழ் மூர்க்கமாக ஆக்ஸிஜனுடன் இணைந்ததால் ஏற்பட்டதே!

தீவிரமாய்க் கதிர்வீசும் கழிவுகளைத் தாங்கிய நீர் தொடர்ந்து கொட்டிக், கோட்டை அரணின் தளத்தில் நிரம்பத் துவங்கியது! விபத்து நிகழ்ந்து 2 மணி 18 நிமிடங்கள் கழித்து PORV திறந்து தணிப்பு நீரை வெளியாக்குவது தெரிய வந்து அது மூடப் பட்டது! உடனே தணிப்பு பம்புகளை இயக்க ஆரம்பித்து, எரிகோல்களின் கனல் வெப்பம் தணிக்க நீரனுப்பி, அணு உலை நிரப்பப் பட்டு அணு உலை கட்டு படுத்தப் பட்டது! ஆனால் அதற்குள் பல எரிக்கோல்கள் உருகி விபத்தின் மீளா விளைவுகள் ஏற்பட்டு விட்டன!

வெப்பத் தணிப்பு நீரிழப்பால் அணு உலைக்கு நேர்ந்த சிதைவுகள்

PORV திறந்து 600,000 காலன் வெப்பத் தணிப்பு நீரைக் கோட்டை அரணில் கொட்டி வெளியாக்கியது! TMI-2 அணு உலையில் 37,170 தனி யுரேனியம் டையாக்ஸைடு எரிக்கோல்கள் கொண்ட 177 கட்டுகள் [177×210 =37170] நீரில் மூழ்கும்படி முதலில் நுழைக்கப் பட்டிருந்தன. எரிக்கோல்களின் மேற்புறம் நீரில் மூழ்காமல், 315 டிகிரி C உஷ்ணத்தில் இயங்கியவை, தணிப்பு நீர் குன்றி உஷ்ணம் 2800 டிகிரிக்கும் மேல் ஏறியதால், 50 டன் [50%] எரிக் கோல்கள் எரிந்துருகிச் சிதைவடைந்தன! அணு உலையில் எரிக் கோல்கள் மேற்புறம் பிளந்து, தீவிரக் கதிரியக்க துணுக்குகளைக் [Cesium134, Cesium135, Strontium90] கக்கியதால், அவற்றைச் சுமந்து கொண்டு வெளியேறிய தணிப்பு நீர் பெரிய தடாகம் போல், கோட்டைத் தளத்தில் சேர்ந்தது! 100 டன் மொத்த எரிக்கோல்களில் 16-20 டன் அணு உலையில் காணப் படவில்லை! அப்பகுதி தணிப்பு நீரில் கசிந்து கோட்டைத் தளத்தில் கிடந்தது! மேலும் 50 டன் உட்கருச் சாதனங்களும் சிதைந்து, ஆக மொத்தம் 150 டன் கதிர்வீச்சுக் குப்பைகள் உலைக்குள் சேர்ந்து விட்டன!

தீவிரக் கதிர்வீச்சுள்ள நீரை இரசாயன, மற்றும் யந்திர வடிகட்டு வழிகளில் சுத்திகரித்துப் பல டன் அணுப்பிளவுத் துணுக்குகளைக் கவசக் கலன்களில் பாதுகாப்பாகச் சேமிப்பது ஓர் இமாலயச் சாதனை! அதை விட 150 டன் கதிரியக்கக் குப்பைகளைக் கவசம் அணிந்து, அணு உலையிலிருந்து சிறுகச் சிறுக அறுத்தெடுத்து கவசக் கலன்களில் மூடி, வாகனங்களில் அனுப்பிப் புதைப்பது, அதைவிடப் பெரிய சாதனை!

அணு உலையின் 20-30 அடி ஆழத்தில் மண்டியான நீரில், 150 டன் கதிரியக்கக் குப்பைகளை, பதினெட்டு அங்குள விட்டமுள்ள துளை வழியாக உறிஞ்சி எடுக்கப் பலவித சுய இயக்கத் தூரக் கருவிகள் பயன்படுத்தப் பட்டன! 1000 பவுண்டுக்கும் மேலான யுரேனியக் கழிவுகள் வெப்பத் தணிப்பு பைப்புகள், பம்புகள், மற்ற சாதனங்களிலும் நீரோடத்தால் பரவி விட்டன!

யுரேனியம் உருகித் திரண்டு பலவித வடிவங்களில் நீருக்குள் அணு உலையின் அடித்தளத்தில் சேர்ந்து, ‘விரைவுப் பூரண வெடிப்பு ‘ [Prompt Criticality Explosion] நேர்ந்து விடுமோ என்ற பேரச்சம் உண்டானதால், மித மிஞ்சிய நியூட்ரான் விழுங்கியான ‘போரான் திரவத்தை ‘ [Boron Liquid 5000 parts per million] அணு உலைக்குள் செலுத்தினார்கள்!

TMI-2 அணு உலைத் திருத்தத்தில் பணிநபர் பட்டக் கதிரடிகள்

(1 Sv = 100 Rem) (1 mSv = 0.1 Rem)

கதிர்வீச்சு அளவுகள் அணு உலையின் உள்ளே பல தளங்களில், பல திசைகளில் உளவு செய்து குறிக்கப் பட்டன. பணியாளிகள் வேலை செய்யும் அணு உலையின் மேற்தளத்தில் கவச மற்ற அளவுகள்: 40-600 Rem/hr. அணு உலையின் மூடியின் உள்ளே 700-800 Rem/hr. ஈயத்தால் ஆன கவசம் அணிந்து வேலை புரிவதால் பணியாளருக்குப் படும் கதிரடி மிக மிகக் குன்றிய அளவிலே [50-250 milliRem/hr] இருக்கும்!

TMI-2 அணு உலைச் சுத்திகரிப்புக்குக் கதிரடி மதிப்பீடு சுமார் 8000 man-Rem. கதிரடி வரையறை உலைப் பணியாளிக்கும் (0.5 Rem/yr, Max 5 Rem/yr), வெளிப் பணியாளிக்கும் (0.2 Rem/yr) [Administrative Control 0.5 Rem/yr (Max 5 Rem/yr) for Radiation Worker & 0.2 Rem/yr for Non- Radiation Worker] என்று அழுத்தமாகக் கட்டுப் படுத்தப் பட்டன. அம்முறையில் உதாரணமாக உலைப் பணியாளிகள் 500 பேர் என்றும், வெளிப் பணியாளிகள் 3000 நபர் என்றும் வைத்துக் கொண்டால் ஓராண்டில் 500×0.5 +3000×0.2 =850 man-Rem. அந்த வீதத்தில் வேலை முடியக் குறைந்தது 9.5 ஆண்டுகள் [8000/850] ஆகும்!

கோட்டை அரண் தளங்களில் கதிர்வீச்சு 35 R/hr! அரணின் அடித்தளத்தில் மட்டும் கதிர்வீச்சு 1000 R/hr! 1986-1988 ஆண்டுகளில் பணியாளிகளின் கதிரடி 900-1000 man-Rem! 1989 இல் அணு உலைப் பணியில் பங்கு கொண்டவர்கள் சுமார் 500 நபர்கள். அவர்களின் அவ்வாண்டுக் கதிரடி மட்டும் 615 man-Rem! TMI-2 அணு உலைச் சுத்திகரிப் புக்கு இறுதியில் மதிப்பீடுக்கும் [8000 man-Rem] குறைவாகவே செலவானது: 6000 man-Rem!

கோட்டை அரணுள் அடைபட்ட கதிரியக்க நோபிள் வாயுக்களை [Noble Gases] வெளியே அனுப்பும் போது, வரையறைக் குட்பட்டு 1% அளவே அனுமதி பெற்று புகைபோக்கி வழியாகச் சென்றது! மிஞ்சியவை சிறிது சிறிதாக வடிகட்டப் பட்டுக் கோட்டையி லிருந்து 1% அளவை மீறாமல் வெளியாக்கப் பட்டது!

கதிரியக்க விளைவுகளால் பொது நபருக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

விபத்து நேர்ந்து இரண்டு நாட்களில் NRC [Nuclear Regulatory Commission] TMI-2 அணு உலைக்கு 5 மைல் வட்டாரத்தில் வாழும் கர்ப்பவதிகளையும், சிசுக்களையும் வீடுகளை விட்டு வேறு இடங்களுக்குப் புகும்படி, பென்ஸில்வேனியா ஆளுநர் [Governor] மூல மாக ஆணை பிறப்பித்தது! ஐந்து மைல் சுற்றளவில் குடியிருந்த 60% நபர்கள், 15 மைல் வட்டாரத்தில் வாழ்ந்த 39% மக்கள் ஆணைக்குக் கீழ்படிந்து வெளியேறினர்! பிறகு அபாய வேளை கடந்ததும் ஏப்ரல் 2 ஆம் தேதி அனைவரும் தம் வீடுகளுக்கு மீள அழைக்கப் பட்டனர்! 1999 மார்ச்சில் வெளியான TMI-2 ‘இருபது ஆண்டு கடப்பு நிகழ்ச்சி ‘ [Twentieth Anniversary] அறிக்கையில் ஜாக் ராஸோ கூறியது:

1. கோட்டை அரணிலிருந்து வெளிவந்த கதிர்வீச்சு வாயுக்கள், திரவத்தின் கசிவால் பொது நபருக்கு விளையும் மிகுதியான அபாய எதிர்பார்ப்புகள் [Extra Health Risks] மிகக் குறைந்த அளவே!

2. TMI-2 அருகில் 50 மைல் வட்டாரத்தில் வாழும் மாந்தருக்கு அவரது வாழ்நாளில் எதிர்பார்க்கப்படும், மதிப்பீடு செய்யப் பட்ட மிகுதிப் புற்று நோய் மரணம் [Extra Terminal Cancer] ஒன்று! மற்றும் வேறு மரண நோய்கள், மரண மற்ற நோய்கள் இரண்டு!

1996 இல் பென்ஸில்வேனியா அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் [US District Court of Pennsylvania] நீதிபதி ஸில்வியா ராம்போ [Sylvia Rambo] TMI-2 விபத்தால் சமர்ப்பிக்கப் பட்ட 2100 உடல்நலக் கேடு வழக்குகளை மெய்யில்லை என்று நிராகரித்துத் தள்ளினார்!

30 ஆண்டுகளுக்குப் பிறகு TMI-2 அணு உலையின் தற்போதைய நிலை!

1986 ஜூலை முதல் ரயில், மோட்டார் வாகனங்களில் கதிர்வீச்சுக் குப்பைக் கலன்களின் பயணங்கள் தொடங்கின! 1990 ஜனவரி மாதம் TMI-2 அணு உலையில் உருகி கடும் உலோகப் பாறையாய்ப் போன யுரேனியப் பிளவுக் கட்டிகள் யாவும் நீக்கப் பட்டன! ஆயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் கொண்ட பிளவுக் கழிவுகள் கவசக் கலன்களில் ஏற்றப் பட்டு அமெரிக்க எரிசக்தித் துறையகத்தின் இதாஹோ தேசீயப் பொறியியல் ஆய்வுக் கூடத்திற்குச் [U.S. Dept of Energy, Idhaho National Engineering Laboratory] சோதிக்கவும், அதன் பின் புதைக்கவும் அனுப்பப் பட்டன! பென்ஸில் வேனியாவிலிருந்து பத்து மாநிலங்களைத் தாண்டி இதாஹோ இடுகாடுப் புதை பூமியில் கலன்களை இறக்கி விட்டு, ஒரு முறை மீள 90,000 டாலர் [1989 நாணய மதிப்பீடு] செலவானது!

கதிர்த்தளக் கட்டுப்பாட்டு மேல் நிர்வாகி, டேல் மெர்ச்சென்ட் [Dale Merchant,Radiological Control Field Operations] கூறியது: ‘TMI-2 அணு உலையின் பத்தாண்டு பராமரிப்பு முடிந்ததாகப் பெருமை அடைகிறேன்! இதுவரைத் தொழிற் துறையில் யாரும் மேற்கொள்ளாத ஒரு மாபெரும் சாதனை இது! தூரத்தில் தானாய்ச் செய்யும் ‘சுயப்பணி யந்திரங்கள், தொலை இயக்குக் கருவிகள், பேரறுவை, உறிஞ்சல் பொறி நுணுக் கங்கள், [Robotics, Remote Toolings, Cutting-Edge & Vacuum Technology, Handling Hot Radioactive Particles] யாவும் புதியதாய் வடிக்கப் பட்டுப் பயன்படுத்தப் பட்டன!

1990-1993 ஆண்டுகளில் மிஞ்சிய அற்பப் பணிகள் யாவும் தீர்க்கப்பட்டு, முடிவாகச் சுத்தம் செய்யப்பட்டு, 1993 டிசம்பரில் TMI-2 அணு உலை நிரந்தரக் கண்காணிப்பு நிலையில் [Monitored Storage Condition] ஓய்வெடுத்தது! அதன் இரட்டைப் பிறவியான TMI-1 முற்றிலும் செம்மைப் படுத்தப்பட்டு 1989 ஆண்டு முதல் 100% ஆற்றலில் [900 MWe] சிறப்பாக இயங்கி வருகிறது!

திரி மைல் தீவு அணு உலையைச் சுத்தம் செய்ய நிதிச் செலவு

1979 TMI-2 அணுமின் உலை விபத்து நிகழும் போது, அமெரிக்க அதிபதியாக இருந்தவர், அணுவியல் துறையில் வல்லமை பெற்ற எஞ்சினியரான, ஜிம்மி கார்டர் [Jimmi Carter]! விபத்து நேர்ந்த சில தினங்களில் கார்டர் நேராகச் சென்று TMI-2 விளைவுகளைக் கண்டறிந்தார்! அணுமின் உலைகளின் மீதுள்ள பொதுநபர் மதிப்பை மேற்படுத்த அமெரிக்க அரசு திரி மைல் தீவின் கோர விளைவுகளுக்குப் பொறுப்பேற்று, விபத்தின் காரணத்தை ஆய்ந்து, நிலையத்தைச் சுத்தம் செய்யும் இமாலயப் பணியையும் மேற்கொண்டது! அமெரிக்க அணுமின் உலைகளைக் கண்காணிக்கும் ‘அணுக்கருக் கட்டுப்பாடு பேரவை ‘ [Nuclear Regulatory Commission] அனைத்து பராமரிப்புப் பணிகளையும் ஆணை யிட்டு மேற்பார்வை செய்தது! TMI-2 அணுமின் நிலைய உரிமையாளி G.P.U. [General Public Utilities Corp. Parsipanny, N.J.].

900 MWe ஆற்றல் கொண்ட TMI-2 அணு உலை இயக்குநர் மூடத்தனத்தால் விபத்தில் சிக்கிச் சிதந்த பிறகு, பத்தாண்டுகளுக்கு மேல் நிறுத்தம் ஆகி பராமரிப்பில் கால தாமதமானதால், பல பில்லியன் டாலர் பணம் விரையமானது! 1987 ஆண்டு மதிப்பீடு நிதியில் வெளியே வாங்க வேண்டிய ஆற்றலுக்கு மேற்கொள்ளும் பணத்தின் ஏற்ற இறக்கத்துக்குத் தக்கவாறு [Replacement Cost of Power], நாளொன்றுக்கு $500,000 -$1000,000 டாலர் முடங்கிய நிலையத்தின் நஷ்டச் செலவுத் தொகையாகும்!

TMI-2 அணு உலைச் சுத்திகரிப்புச் செலவு ஒரு பில்லியன் டாலர் என்று [1983 நாணய மதிப்பு] மதிப்பீடு செய்யப் பட்டது! 1979-1983 நான்கு ஆண்டுகளில் மட்டும் 60 மில்லியன் டாலர் செலவாகி விட்டது! GPU உரிமையாளிக்கு இன்ஸூரன்ஸ் கம்பேனி அளித்த தொகை 300 மில்லியன் டாலர்! அமெரிக்காவின் தொழிற் துறை நிறுவகங்கள் 100 மில்லியன் டாலர் அளிக்க முன்வந்தன! மற்றும் அமெரிக்க மின்னாற்றல் உற்பத்தி நிறுவகங்கள் [Power Utilities] 64.6 மில்லியன் டாலர் உதவி செய்ய உறுதி கூறின! அமெரிக்க அரசு [Dept of Energy] 159 மில்லியன் டாலர் அளித்தது! ஜப்பான் மின்னாற்றல் கூட்டகம் [Japan Federation of Electric Power] தனது 22 எஞ்சினியர்களைப் பங்கு கெள்ள அனுப்பி, 18 மில்லியன் டாலர் நிதி அளித்து அணு உலைச் சுத்திகரிப்பில் துணை புரிய முன்வந்தது!

இறுதியில் TMI-2 சுத்திகரிப்புக்கு மெய்யாகச் செலவான தொகை 973 மில்லியன் டாலர் [March 1999 Report]!

விபத்தில் முறையாக இயங்கிப் பாதுகாத்த சாதனங்கள்

TMI-2 விபத்து மூலம் அமெரிக்காவின் அழுத்த அணுமின் உலை [PWR, Pressurized Water Reactor] டிசைன் ஆக்கநெறி வெற்றியை ஒரு வகையில் நிரூபித்துக் காட்டியது!

1. அபாய விளைகளால் சேர்ந்த 600,000 கதிர்வீச்சுத் திரவத்தையும், யுரேனியக் கழிவுகளையும், கதிரியக்க வாயுக்களையும் 3 அடித் தடிப்புக் கோட்டை அரண் [Containment] உள்ளடக்கி, பொது நபர்களைத் தாக்காதவாறு காப்பாற்றி யுள்ளது!

2. கதிரியக்கம் பொங்கும் சிதைந்து போன 50 டன் உருகிய யுரேனியம், 50 டன் உருகாத யுரேனியம், தகர்ந்து போன 50 டன் உலைச் சாதனங்களை 2800 டிகிரி C உஷ்ணத்தில், 2175 psi அழுத்தத்தில் [15 MPa] தாங்கிக் கொண்டு, ஒருவிதப் பிளவோ, கீரலோ இல்லாமல் அணு உலைக்கலன் [Reactor Vessel] கட்டுப் படுத்தியது, சிறப்பான டிசைனைக் காட்டுகிறது!

3. மில்லியன் கியூரிக் கணக்கில் கதிரியக்கத் திரவம் கோட்டைக்குள் சேர்ந்தாலும், மிகக் குன்றிய அளவே [Radioactive Emission] அரணை விட்டு வெளியேறியது!

4. அணு உலைக் கலனில் எங்கெல்லாம் நீர் [Core Cooling] இருந்ததோ, அங்கெல்லாம் எரிக்கோல்கள் [50 டன் (50%)] சேதமடைய வில்லை!

5. எதிர்பார்த்த அளவுக்கு அணுப்பிளவுத் துணுக்குகளால் [Fission Product Behaviour] இன்னலோ அல்லது இடைஞ்சலோ பணியாளிகளுக்கு ஏற்பட வில்லை!

TMI-2 விபத்தில் அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடங்கள்

TMI-2 அணுமின் உலை விபத்திற்கு மூல காரணமான இயக்குநர்கள் யாவரும் வேலையிலிருந்து வெளியே தள்ளப் பட்டனர்! ஆனால் யந்திரத் தவறுகளும், சாதனப் பழுதுகளும், இயக்கப் பராமரிப்புச் சீர்கேடு களும் பின்னக் கொண்டு, பில்லியன் டாலர் விபத்து நேர்ந்த போது, ஒருதிசைக் கண்ணோட்டத்தில் அவர்களை மட்டும் தண்டித்தது நியாயம் அற்ற கொடுஞ் செயல்! அணு உலை டிசைநர், கட்டுநர், இயக்குநர், பயிற்சி அளிப்போர் ஆகிய அனைவரும் குற்றக் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரணைக் குள்ளாகித் தண்டிக்கப் பட்டிருக்க வேண்டும்!

பணி புரிந்த இயக்குநர்களுக்கு, அணு உலை இயக்க நுணுக்கங்களில் போதிய பயிற்சிகள் அளிக்காதது GPU உரிமையாளி செய்த முதற் தவறு! மிகவும் சிக்கலான அணு உலை இயக்க ஏற்பாடுகளில் முரண்பாடுகள் நிகழ்ந்து அபாயம் விளையப் போகும் வேளைகளில், இயக்குநர் விரைவாகச் சிந்தித்துச் செயல்படாதது, அணுக்கரு விஞ்ஞானம், பொறியியல், வெப்ப யியக்கவியல் [Nuclear Physics, Nuclear Engineering & Thermodynamics] ஆகியவற்றில் படிப்பில்லாமல் போனதையும், மின்சார நிலையத்தில் போதிய பயிற்சிகள் [Power Station Operation Training] யில்லாமல் இயக்குநர் ஆனதையும் காட்டுகிறது!

1979 இல் அமெரிக்கா TMI-2 அணுமின் உலை விபத்திற்கும், இந்தியாவில் போபால் நகரில் 1983 இல் நேர்ந்த விஷ வாயு விபத்துக்கும் பல ஒற்றுமைகள் காணப் படுகின்றன! இரண்டும் அமெரிக்க உரிமையாளிகளால் நிர்வாகம் செய்யப் பட்டன! இரண்டு விபத்துகளும் தூண்டப் பட்டு பேரழிவும், பெருஞ் செலவும் ஏற்பட மூல காரணமானவர் போதிய படிப்பற்ற, பயிற்சியற்ற, சிந்தனை குன்றிய இயக்குநர்களே! அவ்வாறு தரமற்ற இயக்குநர்களை நுணுக்கமான பணிகளைச் செய்ய அனுமதித்த நிர்வாகிகளே முதற் குற்றவாளிகளாக கருதப் பட்டு ஏனோ விசாரிக்கப் படவில்லை!

அணுமின் நிலைய ஆக்க நெறிகளில் நான்கு துறைகளில் செய்முறைகள் முற்றிலும் திருத்த மாகி NRC தனது புதிய Nureg-0737 அறிக்கையை 1980 அக்டோபரில் வெளியிட்டது!

1. அணு உலை இயக்கப் பாதுகாப்பு [Reactor Operational Safety]

2. அணு உலைத் தள அமைப்பு & அணு உலை டிசைன் [Reactor Siting & Design]

3. பிரதம வெப்பத் தணிப்பு நீரிழப்பு, நீராவி ஜனனி நிரப்பு நீரிழப்பு ஆகிய அபாயங்களைக் கட்டுப்படுத்தல் [Handling Loss of Primary Coolant & Loss of Secondary Coolant (Feedwater) Accidents]

4. அபாய நிகழ்ச்சிகளை எதிர்கொள்ள தயாரிப்பு முறைகள், கதிர்வீச்சுத் தாக்குதல் களைக் கட்டுப்படுத்தல் [Emergency Preparedness & Radiation Effects], அபாய காலத்தில் பொதுநபர் பின்பற்றும் பாதுகாப்புப் பயிற்சிகள்.

அமெரிக்காவின் எதிர்கால அணுமின் உலைகளின் நிலை

TMI-2 விபத்துக்குப் பிறகு NRC எதிர்கால அணுமின் திட்டங்களுக்குக் கடும் விதிகளையும், பெரும் தேவைகளையும், நெடும் உளவு முறைகளையும் புகுத்தி முன்னறிவித்துப் பல புதிய லைஸென்ஸ் நெறி முறைகளை வகுத்தது! அவற்றில் நீடித்த இயக்குநர் பயிற்சிகள், உயர்தரத் தேர்ச்சி முறைகள் அழுத்தமாகக் கூறப் பட்டுள்ளன! அடுத்து புதிய நிலையங்கள் உருவாகும் முன்பே அவற்றின் ‘போலி அணுமின் உலை ஆட்சி அரங்குகள்’ [Reactor Simulator Panels] அமைப்பாகி, நிலைய இயக்குநருக்கு அணுமின் உலையின் அபாய வேளைப் பயிற்சிகள் அனைத்தும் முன்பாகவே கற்பிக்கப்பட்டு இயக்குநர் சோதிக்கப் பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது!

அமெரிக்காவில் இப்போது 104 அணுமின் உலைகள் இயங்கிக் கொண்டு 97,400 MWe [20%] மின்னாற்றலைப் பாதுகாப்பாகப் பரிமாறி வருகின்றன! 1979 ஆண்டில் நேர்ந்த TMI-2 விபத்திற்குப் பிறகு மூடப்பட்ட நிலையங்கள் பல புத்துயிர் பெறப் போகின்றன! அடுத்து பழையதாய்ப் போய் மூடப்பட்ட நிலையங்கள் பல புதுப்பிக்கப் படப் போகின்றன! அணுமின் சக்திக்கு அமெரிக்காவில் மீண்டும் பச்சைக் கொடி காட்டப் பட்டுள்ளது ஓர் நல்ல திருப்பமே ஆயினும், இப்போது ஜப்பானிய புகுஷிமா விபத்து (மார்ச் 11, 2011) அணுமின் உலைகளின் தலை விதியை நேர் மாறாக முற்றிலும் மாற்றி விடலாம். கடற்கரை ஓரங்களில் நிறுவப் பட்டு இயங்கி வரும் அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப் பட்டு மீண்டும் சீராக்கப் படலாம். காரணம் பல மாநிலங்களில் இப்போது அடிக்கடி இருளாட்சியும் [Blackouts (Complete Shutdown)], பழுப்பாட்சியும் [Brownouts (Partial Shutdown)] இடையிடையே உண்டாகி மின்சக்தியின் தேவையும், தொடர்ந்த சேவையும் உலகில் மிகையாகி வருகிறது!

++++++++++++++++++++++++

Timeline Date Event (Three Mile Island Unit -1 & Unit -2)

1968–1970 Construction

April 1974 Reactor-1 online

Feb 1978 Reactor-2 online

March 1979 TMI-2 accident occurred. Containment coolant and unknown amounts of radioactive contamination released into environment.

April 1979 Containment steam vented to the atmosphere in order to stabilize the core.

July 1980 Approximately 1591 TBq (43,000 curies) of krypton were vented from the reactor building.

July 1980 The first manned entry into the reactor building took place.

Nov. 1980 An Advisory Panel for the Decontamination of TMI-2, composed of citizens, scientists, and State and local officials, held its first meeting in Harrisburg, PA.

July 1984 The reactor vessel head (top) was removed.

Oct. 1985 Defueling began.

July 1986 The off-site shipment of reactor core debris began.

Aug. 1988 GPU submitted a request for a proposal to amend the TMI-2 license to a “possession-only” license and to allow the facility to enter long-term monitoring storage.

Jan. 1990 Defueling was completed.

July 1990 GPU submitted its funding plan for placing $229 million in escrow for radiological decommissioning of the plant.

Jan. 1991 The evaporation of accident-generated water began.

April 1991 NRC published a notice of opportunity for a hearing on GPU’s request for a license amendment.

Feb. 1992 NRC issued a safety evaluation report and granted the license amendment.

Aug. 1993 The processing of accident-generated water was completed involving 2.23 million gallons.

Sept. 1993 NRC issued a possession-only license.

Sept. 1993 The Advisory Panel for Decontamination of TMI-2 held its last meeting.

Dec. 1993 Post-Defueling Monitoring Storage began.

Oct. 2009 TMI-1 license extended from April 2014 until 2034.

++++++++++++++++

தகவல்:

1. What Happened at Harrisburg ? And Can it happen here ? By David Post [1979]

2. The Spectrum, Institute of Electrical & Electronics Engineers Inc, Nuclear Power in the wake of Three Mile Island Accident in 1979. [April 1984]

3. Nuclear Power, A Rational Approach By Robert Deutsch [1987]

4. TMI Decontamination Activities, Nine Years Later By: Gordon Tomb, GPU Nuclear Power Corporation [Sep 1988]

5. Nuclear News Magazine – TMI Reactor Materials Behaviour & Plant Recovery, TMI Topical Meeting [Jan 1989]

6. Nuclear Regulatory Commission (NRC) Report – Backgrounder on the Three Mile Island Accident (August 11, 1989)

7. The Journal of the National Academy for Nuclear Training, Twenty Years Later in TMI [Jan-Apr 1999]

8. Three Mile Island, A 20th Anniversary Remembrance By: Jack Raso M.S., R.D. [March 1999]

9. Staffs Report to The Presidents Commission on the Accident at Three Mile Island [Sep 2002]

10. Backgrounder on the Three Mile Island Accident (US NRC Report) (August 2009)

11. http://en.wikipedia.org/wiki/Nuclear_meltdown (Nuclear Meltdown) (March 26, 2011)

11. http://en.wikipedia.org/wiki/Three_Mile_Island_accident (March 25, 2011)

**************************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) April 2, 2011
http://www.jayabarathan.wordpress.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

முன்னுரை: 1979 ஆண்டு அமெரிக்காவில் முதன் முதல் நிகழ்ந்த TMI-2 அணுமின் நிலைய விபத்து, உலகில் வாணிப அணுமின் சக்தியின் வரலாற்றையே முற்றிலும் மாற்றி விட்டது! இந்தியாவில் 1983 ஆண்டு நிகழ்ந்த போபால் விஷ வாயு விபத்தையும், TMI-2 விபத்தையும் ஒப்பிட்டால், அபாய வேளையில் பணி செய்த இயக்குநர் கையாட்சிப் பண்பாட்டில் பல ஒற்றுமைகள் காணப் படுகின்றன! அவ்விரண்டு நுணுக்கக் கூடங்களை உருவாக்கிய உரிமை நிறுவகங்கள் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு [UCC] & ஜெனரல் பப்ளிக் யுடிலிடாஸ் [GPU]! அதே சமயம் டெல்லிக் கருகே நரோரா அணுமின் நிலையத்தில் 1993 ஆண்டு நேர்ந்த வெடிப்போடு ஒப்பிட்டால், பாரத இயக்குநர்கள் அணு உலையைக் கண்காணித்து, வெப்பத் தணிப்பு நீரிழப்பு நிகழாது, எரிக்கோல்கள் சூடாகாமல் காப்பாற்றியது, பாராட்டத் தக்க ஓர் தீரச் செயலாகும்!

1959 ஆண்டுக்குப் பிறகு இருபது வருடங்களாக இயங்கிக் கொண்டிருந்த முதல் பிறப்பு பழைய அணுமின் உலைகள் [First Generation Power Reactors] அனைத்தின் தலை விதிகளை TMI-2 மாற்றி விட்டது! 1979 ஆண்டுக்குப் பிறகு இருபது ஆண்டுகளில் உருவாகப் போன இரண்டாம் பிறப்பு [Second Generation Power Reactors] அணுமின் உலைகளின் டிசைன், பாதுகாப்பு, இயக்க நெறிகள், பராமரிப்பு, இயக்குநர் தேர்ந்தெடுப்பு, பயிற்சி, தேர்ச்சி முறைகள், அபாய காலப் பயிற்சிகள், அபாய எதிர்பார்ப்பு உளவுகள், அபாய நேரத் தொடர்புகள் அனைத்தும் பல கோணங்களில் ஆராயப் பட்டு முற்றிலும் மாற்றப் பட்டன!

செர்நோபிள் அணு உலை வெடிப்பைப் போன்று, TMI-2 பேரழிவைப் பென்ஸில்வேனியா ஹாரிஸ்பர்கில் உண்டாக்க வில்லை! அணு உலையும், அதைச் சுற்றி யுள்ள சாதனங்களும் வெடித்துத் தகர்க்கப் பட்டது போல், திரிமைல் தீவில் நிகழ வில்லை! சுமார் 1700 டன் மிதவாக்கிக் கரித்திரள் கட்டிகள் [Moderator Graphite Blocks] எரிந்து கதிரியக்கத் துணுக்குகள் சூழ்மண்டலத்தில் தூவப் பட்டது போல் பென்ஸில்வேனியாவில் நேர வில்லை! செர்நோபிள் விபத்துத்தின் போது சில தினங்களில் பலியானவர்கள்: வெடிப்பில் இயக்குநர் இருவர், பெருங் கதிரடியில் தீயணைப்புப் படையினர் 29 பேர் மற்றும் கதிர்வீச்சுக் காய்ச்சலில் 13 பேர்; ஆக மொத்தம் உயிரிழந்தவர் 44 மாந்தர்!

ஆனால் திரி மைல் தீவு விபத்தில் யாரும் மரணம் அடைய வில்லை! எவரும் பேரளவுக் கதிரடி பட்டுத் துன்புற வில்லை! செர்நோபிள் விபத்தில் கதிர்வீச்சாலும், கதிரியக்கத் தீண்டலாலும், மானிடருக்கு நீண்ட கால இன்னல்கள் விளைந்தன! இன்னும் 50 ஆண்டுகளுக்கு புற்று நோய் மரண அதிகரிப்பு உண்டாகும் என்று கதிரியல் விஞ்ஞானிகளால் யூகிக்கப் படுகிறது! ஆனால் திரி மைல் தீவு விபத்தில், கதிர்வீச்சால் அவ்விதம் நீண்ட கால விளைவுகள் எதுவும் நிகழ வில்லை! பிறகு மெய்யாக பென்ஸில்வேனியாவில் என்னதான் நடந்தது ?

அமெரிக்க அணுமின் உலைத் திட்டங்களை நிறுத்திய விபத்து!

TMI-2 அணு உலையில் எதிர்பாராமல் துவங்கியது சிறிய நிகழ்ச்சி யாயினும், பிறகு அது அசுர வடிவெடுத்து அணு உலை எரிக்கோல்களுக்குப் பெருமளவில், வெப்பத் தணிப்பு நீரை இழக்கச் செய்து விட்டது! பிரதம வெப்பத் தணிப்பு நீரிழப்பு [LOCA, Loss of Coolant Accident] அணு உலைக்குப் பேரழிவு விளைவிப்பதைத் தடுக்கப் பலவித அபாயத் துணை ஏற்பாடுகள் சுயமாக இயங்கக் காத்துக் கொண்டிருக்கின்றன! அவ்விதம் தவிர்ப்பு முறைகள் TMI-2 இல் இருந்தாலும், அறிவற்ற இயக்குநரின் கையாட்சியால் பேரளவுச் சேதம் அணு உலையில் உண்டானது! அவரது மூடத்தனத்தால் இரண்டு மணி நேரத்திற்குள் நான்கு வித அபாய விபத்துகள் கட்டுப் படுத்த முடியாமல் பூத உருவில் விரிந்தன!

1. எரிக்கோல்களின் உஷ்ணம் 2800 டிகிரி C ஏறி, 50 டன் [50%] யுரேனியம் ஆக்ஸைடு கோல்கள் உலைக் கலனில் உருகிக் கட்டிகளாய்ச் சேர்ந்தன!

2. வீரிய கதிரியக்க முள்ள, யுரேனியப் பிளவுக் கழிவுகள் சேர்ந்த 600,000 காலன் வெப்பத் தணிப்பு நீர், அணு உலையிலிருந்து கசிந்து வெளியேறி, கோட்டைத் தளத்தில் தடாகமாய்ப் பெருகியது!

3. அணு உலையில் 2800 டிகிரி C உஷ்ண நீராவி அருகில் உள்ள ஸிர்கோனிய [Zirconium] உலோகத்துடன் இணைந்து பேரளவு ஹைடிரஜன் வாயு முகிலாகி, மூர்க்கமுடன் ஆக்ஸிஜனுடன் பிணைந்து பெரு வெடிப்பை [Hydrogen Explosion] உண்டாக்கப் பயமுறுத்தியது! செர்நோபிள் அணுமின் உலையில் எழுந்த இரண்டாவது வெடிப்பு இவ்விதம்தான் ஏற்பட்டது!

4. உருகித் திரண்ட யுரேனியக் கட்டிகள் அணு உலை நீரில் ‘விரைவுப் பூரண வெடிப்பைத் ‘ [Prompt Criticality Explosion] தூண்டி விடுமோ என்ற பேரச்சத்தை வேறு உண்டாக்கியது!

நல்ல வேளையாக கடைசி இரண்டு கோர நிகழ்ச்சிகளும் நேரவில்லை!

1983 இல் உலகெங்கும் இயங்கி வந்த அணு உலைகளின் எண்ணிக்கை 284! உலகில் அப்போது கட்டப் பட்டு உருவாகி வந்தவை 192! அதே சமயத்தில் அமெரிக்காவில் மட்டும் ஓடிக் கொண்டிருந்தவை 79! நிறுவன நிலையில் வளர்ந்து கொண்டு வந்தவை 55! TMI-2 விபத்துக்குப் பிறகு உலகில் ஓடிக் கொண்டிருந்த அணுமின் உலைகளும், கட்டப்படும் அணுமின் உலைகளும் தீர்க்கமாய் ஆய்வு செய்யப் பட்டு மேபடுத்தப் பட்டன! அமெரிக்காவில் அணுமின் உலைகளின் மீது நம்பிக்கை குன்றி கட்டப்படும் 55 அணு உலைகளில் 30 நிலையங்கள் முழுவதும் கட்டப் படாமலே பாதியில் நின்று போயின! காரணம் NRC [Nuclear Regulatory Commission] எதிர்கால அணுமின் உலைகளுக்குக் கடும் நிபந்தனைகளிட்டுப் பாதுகாப்பு நெறிகளையும், முறைகளையும் மிகையாக்கியதால், கட்டுமான நிதித் தொகை மிக மிக ஏறிவிட்டது!

திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் என்ன நிகழ்ந்தது ?

1979 மார்ச் 28 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அமெரிக்காவின் மாபெரும் அணுமின் நிலைய விபத்து, இரட்டை உலைகளில் ஒன்றான யூனிட்-2 நிலையத்தில்தான் நேர்ந்தது! TMI-2 [Three Mile Island Unit-2] அணுமின் நிலையம் நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களுக்கு அண்டையில் உள்ள பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் [Middletown near Harrisburg on the Susquehanna River] அமைந்துள்ளது. 1978 டிசம்பர் முதல் வாணிப ரீதியாக இயங்கி வரும் TMI-2 அணுமின் உலை விபத்தன்று 97% [870 Mwe] மின்னாற்றலில் ஓடிக் கொண்டிருந்தது.

President Jimmy Carter Visit

பராமரிப்புக்குப் பிறகு எதிர்பாராத விதமாக மூடப்பட்ட ஒரு வால்வால் [Valve] நீராவி ஜனனிகளுக்குத் தொடர்ந்து நிரப்பும் தூய நீர் தடைபட்டது! அதன்பின் பிரதம நிரப்பு நீர்ப் பம்பும் [Main Feedwater Pump], ஓடிக் கொண்டிருந்த பிரதம டர்பைனும் [Main Turbine] நிறுத்தம் அடைந்து, 870 MWe மின்னாற்றல் இழப்பானது! உடனே அபாய நிரப்புப் பம்ப் தானாக இயங்க ஆரம்பித்தாலும், நீராவி ஜனனிகளுக்கு நீரனுப்ப முடியாது போயிற்று! ஏனென்றால் கடந்த வாரத்தில் மூடப் பட்ட சில வால்வுகள், சோதனை முடித்ததற்குப் பிறகு திறக்கப் படாமல் கிடந்தன! ஆட்சி அறை அரங்கில் [Control Roon Panels] காணப்படும் மூடிய அந்த வால்வுகளின் மினி விளக்கு, அருகில் தொங்கும் பராமரிப்பு எச்சரிக்கை அட்டை எதுவும், இயக்குநர் கண்களுக்குத் தெரியாமல் போனது, ஓர் விந்தை நிகழ்ச்சி!

அணு உலையில் தொடர்ந்து உண்டாகும் 2700 MWt வெப்பசக்தி [870 MWe] ஜனனிகளில் நீர் இருந்தால்தான் நீராவி யாக்கப்பட்டு டர்பைனை ஓட்டுகிறது. அவ்வழியில் அணு உலைக்கு நீராவி ஜனனிகளே பிரதம ‘வெப்ப விழுங்கிகள் ‘ [Steam Generators are the Main Heat Sinks for the Reactor]! வெப்ப விழுங்கிகள் நீரற்று முடமானதால், அணு உலையின் வெப்பமும், தணிப்புநீர் அழுத்தமும் அளவு மீறி, அணு உலைத் தானாக நிறுத்த மானது! நீர் அழுத்தம் ஏறியதும் தானாய் இயங்கும் தணிவு வால்வு [Power Operated Relief Valve (PORV)] ஒன்று திறந்து அணு உலைப் பிரமத வெப்பத் தணிப்பு நீரை [Primary Coolant] வெளியேற்றியது! திறந்த PORV அழுத்தம் குன்றியதும் மூடாமல் துரதிஷ்ட வசமாகச் சிக்கிக் கொண்டதால், நீர் வற்றிப் போய்க் கனலான எரிக்கோல்கள் நீர் மட்டம் குன்றி வரட்சியில் உஷ்ணம் ஏறி எரியத் தொடங்க ஆரம்பித்தன! அதாவது வெப்ப எரிக்கோல்கள் ‘தணிப்பு நீர் இழப்பு விபத்தில் ‘ [Loss of Coolant Accident (LOCA)] மாட்டிக் கொண்டது!

வெப்ப எரிக்கோல்கள் தணிப்பு நீர் இழப்பு விபத்தில் உருகின!

PORV இல் ஒழுகும் கதிர்வீச்சு நீர் சேமிப்புத் தகழி [Contaminated Water Storage Tank] நிரம்பியதும் அதனுடைய காப்புத் தகடு [Rupture Disc] உடைந்து, தீவிரமான கதிரியக்க திரவம் கோட்டைத் தளத்தில் கொட்ட ஆரம்பித்தது! வெப்பத் தணிப்பு நீரழுத்தம் குன்றியதும், சுயமாகவே அபாய எருக்கருத் தணிப்பு நீர் ஏற்பாடு [Emergency Core Cooling System] துவங்கியது! அணு உலையின் மீது பட்ட நீர் உடனே ஆவியான போது, அழுத்தக் கலனில் [Pressurizer] நீர் நிரம்பிப் பொங்குவதாக எண்ணித் தப்பாகப் புரிந்து கொண்ட ஆட்சி அறை இயக்குநர், அபாயப் பணிப் பம்பை மூடத்தனமாக நிறுத்தினர்! அத்துடன் நில்லாது, மேலும் தணிப்பு நீரை நீக்க சில வால்வுகளைச் சிந்திக்காமல் திறந்து விட்டார்கள்! அவசரத்திலும், அச்சத்திலும் செய்யும் பல அபாயத் தடுப்பு வேலைகள் அனைத்தும் அடுத்தடுத்த தவறுகளாகி அணு உலையின் கனலான எரிகோல்கள் நீரற்று உஷ்ணத்தில் உருகி உலைக் கலனின் அடியில் ஓடித் தங்கின!

நீராவி ஜனனிகளின் மூடிய அபாயப் பணி நீரனுப்பி வால்வுகளைக் கண்டு இறுதியில் திறந்து, ஜனனிகளுக்கு நீரைத் திறந்து விட்டார்கள்! ஆனால் திறந்து மூடாமல் சிக்கிக் கொண்ட PORV நீரை வீணாகக் வெளியேற்றுவதை இயக்குநர் இன்னும் கண்டு கொள்ளவில்லை! அணு உலையில் தங்கிய நீர் ஆவியாகி, அதன் உஷ்ணம் மிகையாகி, உலையின் உலோகத்துடன் பிணந்து ஏராளமான ஹைடிரஜன் வாயுக்குமிழ் [Hydrogen Gas Bubble] உண்டாகி வெடித்து விடப் பயமுறுத்தியது! செர்நோபிள் அணு உலையில் நிகழ்ந்த இரண்டாவது பயங்கர வெடிப்பு, ஹைடிரஜன் வாயுக்குமிழ் மூர்க்கமாக ஆக்ஸிஜனுடன் இணைந்ததால் ஏற்பட்டதே!

தீவிரமாய்க் கதிர்வீசும் கழிவுகளைத் தாங்கிய நீர் தொடர்ந்து கொட்டிக், கோட்டை அரணின் தளத்தில் நிரம்பத் துவங்கியது! விபத்து நிகழ்ந்து 2 மணி 18 நிமிடங்கள் கழித்து PORV திறந்து தணிப்பு நீரை வெளியாக்குவது தெரிய வந்து அது மூடப்பட்டது! உடனே தணிப்பு பம்புகளை இயக்க ஆரம்பித்து, எரிகோல்களின் கனல் வெப்பம் தணிக்க நீரனுப்பி, அணு உலை நிரப்பப் பட்டு அணு உலை கட்டு படுத்தப் பட்டது! ஆனால் அதற்குள் பல எரிக்கோல்கள் உருகி விபத்தின் மீளா விளைவுகள் ஏற்பட்டு விட்டன!

வெப்பத் தணிப்பு நீரிழப்பால் அணு உலைக்கு நேர்ந்த சிதைவுகள்

PORV திறந்து 600,000 காலன் வெப்பத் தணிப்பு நீரைக் கோட்டை அரணில் கொட்டி வெளியாக்கியது! TMI-2 அணு உலையில் 37,170 தனி யுரேனியம் டையாக்ஸைடு எரிக்கோல்கள் கொண்ட 177 கட்டுகள் [177×210 =37170] நீரில் மூழ்கும்படி முதலில் நுழைக்கப் பட்டிருந்தன. எரிக்கோல்களின் மேற்புறம் நீரில் மூழ்காமல், 315 டிகிரி C உஷ்ணத்தில் இயங்கியவை, தணிப்பு நீர் குன்றி உஷ்ணம் 2800 டிகிரிக்கும் மேல் ஏறியதால், 50 டன் [50%] எரிக்கோல்கள் எரிந்துருகிச் சிதைவடைந்தன! அணு உலையில் எரிக்கோல்கள் மேற்புறம் பிளந்து, தீவிரக் கதிரியக்க துணுக்குகளைக் [Cesium134, Cesium135, Strontium90] கக்கியதால், அவற்றைச் சுமந்து கொண்டு வெளியேறிய தணிப்பு நீர் பெரிய தடாகம் போல், கோட்டைத் தளத்தில் சேர்ந்தது! 100 டன் மொத்த எரிக்கோல்களில் 16-20 டன் அணு உலையில் காணப் படவில்லை! அப்பகுதி தணிப்பு நீரில் கசிந்து கோட்டைத் தளத்தில் கிடந்தது! மேலும் 50 டன் உட்கருச் சாதனங்களும் சிதைந்து, ஆக மொத்தம் 150 டன் கதிர்வீச்சுக் குப்பைகள் உலைக்குள் சேர்ந்து விட்டன!

தீவிரக் கதிர்வீச்சுள்ள நீரை இரசாயன, மற்றும் யந்திர வடிகட்டு வழிகளில் சுத்திகரித்துப் பல டன் அணுப்பிளவுத் துணுக்குகளைக் கவசக் கலன்களில் பாதுகாப்பாகச் சேமிப்பது ஓர் இமாலயச் சாதனை! அதை விட 150 டன் கதிரியக்கக் குப்பைகளைக் கவசம் அணிந்து, அணு உலையிலிருந்து சிறுகச் சிறுக அறுத்தெடுத்து கவசக் கலன்களில் மூடி, வாகனங்களில் அனுப்பிப் புதைப்பது, அதைவிடப் பெரிய சாதனை!

அணு உலையின் 20-30 அடி ஆழத்தில் மண்டியான நீரில், 150 டன் கதிரியக்கக் குப்பைகளை, பதினெட்டு அங்குள விட்டமுள்ள துளை வழியாக உறிஞ்சி எடுக்கப் பலவித சுய இயக்கத் தூரக் கருவிகள் பயன்படுத்தப் பட்டன! 1000 பவுண்டுக்கும் மேலான யுரேனியக் கழிவுகள் வெப்பத் தணிப்பு பைப்புகள், பம்புகள், மற்ற சாதனங்களிலும் நீரோடத்தால் பரவி விட்டன!

யுரேனியம் உருகித் திரண்டு பலவித வடிவங்களில் நீருக்குள் அணு உலையின் அடித்தளத்தில் சேர்ந்து, ‘விரைவுப் பூரண வெடிப்பு ‘ [Prompt Criticality Explosion] நேர்ந்து விடுமோ என்ற பேரச்சம் உண்டானதால், மித மிஞ்சிய நியூட்ரான் விழுங்கியான ‘போரான் திரவத்தை ‘ [Boron Liquid 5000 parts per million] அணு உலைக்குள் செலுத்தினார்கள்!

TMI-2 அணு உலைத் திருத்தத்தில் பணிநபர் பட்டக் கதிரடிகள்

கதிர்வீச்சு அளவுகள் அணு உலையின் உள்ளே பல தளங்களில், பல திசைகளில் உளவு செய்து குறிக்கப் பட்டன. பணியாளிகள் வேலை செய்யும் அணு உலையின் மேற்தளத்தில் கவச மற்ற அளவுகள்: 40-600 Rem/hr. அணு உலையின் மூடியின் உள்ளே 700-800 Rem/hr. ஈயத்தால் ஆன கவசம் அணிந்து வேலை புரிவதால் பணியாளருக்குப் படும் கதிரடி மிக மிகக் குன்றிய அளவிலே [50-250 milliRem/hr] இருக்கும்!

TMI-2 அணு உலைச் சுத்திகரிப்புக்குக் கதிரடி மதிப்பீடு சுமார் 8000 man-Rem. கதிரடி வரையறை உலைப் பணியாளிக்கும் (0.5 Rem/yr, Max 5 Rem/yr), வெளிப் பணியாளிக்கும் (0.2 Rem/yr) [Administrative Control 0.5 Rem/yr (Max 5 Rem/yr) for Radiation Worker & 0.2 Rem/yr for Non-Radiation Worker] என்று அழுத்தமாகக் கட்டுப் படுத்தப் பட்டன. அம்முறையில் உதாரணமாக உலைப் பணியாளிகள் 500 பேர் என்றும், வெளிப் பணியாளிகள் 3000 நபர் என்றும் வைத்துக் கொண்டால் ஓராண்டில் 500×0.5 +3000×0.2 =850 man-Rem. அந்த வீதத்தில் வேலை முடியக் குறைந்தது 9.5 ஆண்டுகள் [8000/850] ஆகும்!

கோட்டை அரண் தளங்களில் கதிர்வீச்சு 35 R/hr! அரணின் அடித்தளத்தில் மட்டும் கதிர்வீச்சு 1000 R/hr! 1986-1988 ஆண்டுகளில் பணியாளிகளின் கதிரடி 900-1000 man-Rem! 1989 இல் அணு உலைப் பணியில் பங்கு கொண்டவர்கள் சுமார் 500 நபர்கள். அவர்களின் அவ்வாண்டுக் கதிரடி மட்டும் 615 man-Rem! TMI-2 அணு உலைச் சுத்திகரிப்புக்கு இறுதியில் மதிப்பீடுக்கும் [8000 man-Rem] குறைவாகவே செலவானது: 6000 man-Rem!

கோட்டை அரணுள் அடைபட்ட கதிரியக்க நோபிள் வாயுக்களை [Noble Gases] வெளியே அனுப்பும் போது, வரையறைக் குட்பட்டு 1% அளவே அனுமதி பெற்று புகைபோக்கி வழியாகச் சென்றது! மிஞ்சியவை சிறிது சிறிதாக வடிகட்டப் பட்டுக் கோட்டையிலிருந்து 1% அளவை மீறாமல் வெளியாக்கப் பட்டது!

கதிரியக்க விளைவுகளால் பொது நபருக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

விபத்து நேர்ந்து இரண்டு நாட்களில் NRC [Nuclear Regulatory Commission] TMI-2 அணு உலைக்கு 5 மைல் வட்டாரத்தில் வாழும் கர்ப்பவதிகளையும், சிசுக்களையும் வீடுகளை விட்டு வேறு இடங்களுக்குப் புகும்படி, பென்ஸில்வேனியா ஆளுநர் [Governor] மூலமாக ஆணை பிறப்பித்தது! ஐந்து மைல் சுற்றளவில் குடியிருந்த 60% நபர்கள், 15 மைல் வட்டாரத்தில் வாழ்ந்த 39% மக்கள் ஆணைக்குக் கீழ்படிந்து வெளியேறினர்! பிறகு அபாய வேளை கடந்ததும் ஏப்ரல் 2 ஆம் தேதி அனைவரும் தம் வீடுகளுக்கு மீள அழைக்கப் பட்டனர்! 1999 மார்ச்சில் வெளியான TMI-2 ‘இருபது ஆண்டு கடப்பு நிகழ்ச்சி ‘ [Twentieth Anniversary] அறிக்கையில் ஜாக் ராஸோ கூறியது:

1. கோட்டை அரணிலிருந்து வெளிவந்த கதிர்வீச்சு வாயுக்கள், திரவத்தின் கசிவால் பொது நபருக்கு விளையும் மிகுதியான அபாய எதிர்பார்ப்புகள் [Extra Health Risks] மிகக் குறைந்த அளவே!

2. TMI-2 அருகில் 50 மைல் வட்டாரத்தில் வாழும் மாந்தருக்கு அவரது வாழ்நாளில் எதிர்பார்க்கப்படும், மதிப்பீடு செய்யப் பட்ட மிகுதிப் புற்று நோய் மரணம் [Extra Terminal Cancer] ஒன்று! மற்றும் வேறு மரண நோய்கள், மரண மற்ற நோய்கள் இரண்டு!

Radioactive Debris Transportation

1996 இல் பென்ஸில்வேனியா அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் [US District Court of Pennsylvania] நீதிபதி ஸில்வியா ராம்போ [Sylvia Rambo] TMI-2 விபத்தால் சமர்ப்பிக்கப் பட்ட 2100 உடல்நலக் கேடு வழக்குகளை மெய்யில்லை என்று நிராகரித்துத் தள்ளினார்!

20 ஆண்டுகளுக்குப் பிறகு TMI-2 அணு உலையின் தற்போதைய நிலை!

1986 ஜூலை முதல் ரயில், மோட்டார் வாகனங்களில் கதிர்வீச்சுக் குப்பைக் கலன்களின் பயணங்கள் தொடங்கின! 1990 ஜனவரி மாதம் TMI-2 அணு உலையில் உருகி கடும் உலோகப் பாறையாய்ப் போன யுரேனியப் பிளவுக் கட்டிகள் யாவும் நீக்கப் பட்டன! ஆயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் கொண்ட பிளவுக் கழிவுகள் கவசக் கலன்களில் ஏற்றப் பட்டு அமெரிக்க எரிசக்தித் துறையகத்தின் இதாஹோ தேசீயப் பொறியியல் ஆய்வுக் கூடத்திற்குச் [U.S. Dept of Energy, Idhaho National Engineering Laboratory] சோதிக்கவும், அதன் பின் புதைக்கவும் அனுப்பப் பட்டன! பென்ஸில்வேனியாவிலிருந்து பத்து மாநிலங்களைத் தாண்டி இதாஹோ இடுகாடுப் புதை பூமியில் கலன்களை இறக்கி விட்டு, ஒரு முறை மீள 90,000 டாலர் [1989 நாணய மதிப்பீடு] செலவானது!

கதிர்த்தளக் கட்டுப்பாட்டு மேல் நிர்வாகி, டேல் மெர்ச்சென்ட் [Dale Merchant,Radiological Control Field Operations] கூறியது: ‘TMI-2 அணு உலையின் பத்தாண்டு பராமரிப்பு முடிந்ததாகப் பெருமை அடைகிறேன்! இதுவரைத் தொழிற் துறையில் யாரும் மேற்கொள்ளாத ஒரு மாபெரும் சாதனை இது! தூரத்தில் தானாய்ச் செய்யும் ‘சுயப்பணி யந்திரங்கள், தொலை இயக்குக் கருவிகள், பேரறுவை, உறிஞ்சல் பொறி நுணுக்கங்கள், [Robotics, Remote Toolings, Cutting-Edge & Vacuum Technology, Handling Hot Radioactive Particles] யாவும் புதியதாய் வடிக்கப் பட்டுப் பயன்படுத்தப் பட்டன!

1990-1993 ஆண்டுகளில் மிஞ்சிய அற்பப் பணிகள் யாவும் தீர்க்கப்பட்டு, முடிவாகச் சுத்தம் செய்யப்பட்டு, 1993 டிசம்பரில் TMI-2 அணு உலை நிரந்தரக் கண்காணிப்பு நிலையில் [Monitored Storage Condition] ஓய்வெடுத்தது! அதன் இரட்டைப் பிறவியான TMI-1 முற்றிலும் செம்மைப் படுத்தப்பட்டு 1989 ஆண்டு முதல் 100% ஆற்றலில் [900 MWe] சிறப்பாக இயங்கி வருகிறது!

திரி மைல் தீவு அணு உலையைச் சுத்தம் செய்ய நிதிச் செலவு

1979 TMI-2 அணுமின் உலை விபத்து நிகழும் போது, அமெரிக்க அதிபதியாக இருந்தவர், அணுவியல் துறையில் வல்லமை பெற்ற எஞ்சினியரான, ஜிம்மி கார்டர் [Jimmi Carter]! விபத்து நேர்ந்த சில தினங்களில் கார்டர் நேராகச் சென்று TMI-2 விளைவுகளைக் கண்டறிந்தார்! அணுமின் உலைகளின் மீதுள்ள பொதுநபர் மதிப்பை மேற்படுத்த அமெரிக்க அரசு திரி மைல் தீவின் கோர விளைவுகளுக்குப் பொறுப்பேற்று, விபத்தின் காரணத்தை ஆய்ந்து, நிலையத்தைச் சுத்தம் செய்யும் இமாலயப் பணியையும் மேற்கொண்டது! அமெரிக்க அணுமின் உலைகளைக் கண்காணிக்கும் ‘அணுக்கருக் கட்டுப்பாடு பேரவை ‘ [Nuclear Regulatory Commission] அனைத்து பராமரிப்புப் பணிகளையும் ஆணை யிட்டு மேற்பார்வை செய்தது! TMI-2 அணுமின் நிலைய உரிமையாளி G.P.U. [General Public Utilities Corp. Parsipanny, N.J.].

900 MWe ஆற்றல் கொண்ட TMI-2 அணு உலை இயக்குநர் மூடத்தனத்தால் விபத்தில் சிக்கிச் சிதந்த பிறகு, பத்தாண்டுகளுக்கு மேல் நிறுத்தம் ஆகி பராமரிப்பில் கால தாமதமானதால், பல பில்லியன் டாலர் பணம் விரையமானது! 1987 ஆண்டு மதிப்பீடு நிதியில் வெளியே வாங்க வேண்டிய ஆற்றலுக்கு மேற்கொள்ளும் பணத்தின் ஏற்ற இறக்கத்துக்குத் தக்கவாறு [Replacement Cost of Power], நாளொன்றுக்கு $500,000 -$1000,000 டாலர் முடங்கிய நிலையத்தின் நஷ்டச் செலவுத் தொகையாகும்!

TMI-2 அணு உலைச் சுத்திகரிப்புச் செலவு ஒரு பில்லியன் டாலர் என்று [1983 நாணய மதிப்பு] மதிப்பீடு செய்யப் பட்டது! 1979-1983 நான்கு ஆண்டுகளில் மட்டும் 60 மில்லியன் டாலர் செலவாகி விட்டது! GPU உரிமையாளிக்கு இன்ஸூரன்ஸ் கம்பேனி அளித்த தொகை 300 மில்லியன் டாலர்! அமெரிக்காவின் தொழிற் துறை நிறுவகங்கள் 100 மில்லியன் டாலர் அளிக்க முன்வந்தன! மற்றும் அமெரிக்க மின்னாற்றல் உற்பத்தி நிறுவகங்கள் [Power Utilities] 64.6 மில்லியன் டாலர் உதவி செய்ய உறுதி கூறின! அமெரிக்க அரசு [Dept of Energy] 159 மில்லியன் டாலர் அளித்தது! ஜப்பான் மின்னாற்றல் கூட்டகம் [Japan Federation of Electric Power] தனது 22 எஞ்சினியர்களைப் பங்கு கெள்ள அனுப்பி, 18 மில்லியன் டாலர் நிதி அளித்து அணு உலைச் சுத்திகரிப்பில் துணை புரிய முன்வந்தது!

இறுதியில் TMI-2 சுத்திகரிப்புக்கு மெய்யாகச் செலவான தொகை 973 மில்லியன் டாலர் [March 1999 Report]!

விபத்தில் முறையாக இயங்கிப் பாதுகாத்த சாதனங்கள்

TMI-2 விபத்து மூலம் அமெரிக்காவின் அழுத்த அணுமின் உலை [PWR, Pressurized Water Reactor] டிசைன் ஆக்கநெறி வெற்றியை ஒரு வகையில் நிரூபித்துக் காட்டியது!

1. அபாய விளைகளால் சேர்ந்த 600,000 கதிர்வீச்சுத் திரவத்தையும், யுரேனியக் கழிவுகளையும், கதிரியக்க வாயுக்களையும் 3 அடித் தடிப்புக் கோட்டை அரண் [Containment] உள்ளடக்கி, பொது நபர்களைத் தாக்காதவாறு காப்பாற்றி யுள்ளது!

2. கதிரியக்கம் பொங்கும் சிதைந்து போன 50 டன் உருகிய யுரேனியம், 50 டன் உருகாத யுரேனியம், தகர்ந்து போன 50 டன் உலைச் சாதனங்களை 2800 டிகிரி C உஷ்ணத்தில், 2175 psi அழுத்தத்தில் [15 MPa] தாங்கிக் கொண்டு, ஒருவிதப் பிளவோ, கீரலோ இல்லாமல் அணு உலைக்கலன் [Reactor Vessel] கட்டுப் படுத்தியது, சிறப்பான டிசைனைக் காட்டுகிறது!

3. மில்லியன் கியூரிக் கணக்கில் கதிரியக்கத் திரவம் கோட்டைக்குள் சேர்ந்தாலும், மிகக் குன்றிய அளவே [Radioactive Emission] அரணை விட்டு வெளியேறியது!

4. அணு உலைக் கலனில் எங்கெல்லாம் நீர் [Core Cooling] இருந்ததோ, அங்கெல்லாம் எரிக்கோல்கள் [50 டன் (50%)] சேதமடைய வில்லை!

5. எதிர்பார்த்த அளவுக்கு அணுப்பிளவுத் துணுக்குகளால் [Fission Product Behaviour] இன்னலோ அல்லது இடைஞ்சலோ பணியாளிகளுக்கு ஏற்பட வில்லை!

TMI-2 விபத்தில் அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடங்கள்

TMI-2 அணுமின் உலை விபத்திற்கு மூல காரணமான இயக்குநர்கள் யாவரும் வேலையிலிருந்து வெளியே தள்ளப் பட்டனர்! ஆனால் யந்திரத் தவறுகளும், சாதனப் பழுதுகளும், இயக்கப் பராமரிப்புச் சீர்கேடு களும் பின்னக் கொண்டு, பில்லியன் டாலர் விபத்து நேர்ந்த போது, ஒருதிசைக் கண்ணோட்டத்தில் அவர்களை மட்டும் தண்டித்தது நியாயம் அற்ற கொடுஞ் செயல்! அணு உலை டிசைநர், கட்டுநர், இயக்குநர், பயிற்சி அளிப்போர் ஆகிய அனைவரும் குற்றக் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரணைக் குள்ளாகித் தண்டிக்கப் பட்டிருக்க வேண்டும்!

பணி புரிந்த இயக்குநர்களுக்கு, அணு உலை இயக்க நுணுக்கங்களில் போதிய பயிற்சிகள் அளிக்காதது GPU உரிமையாளி செய்த முதற் தவறு! மிகவும் சிக்கலான அணு உலை இயக்க ஏற்பாடுகளில் முரண்பாடுகள் நிகழ்ந்து அபாயம் விளையப் போகும் வேளைகளில், இயக்குநர் விரைவாகச் சிந்தித்துச் செயல்படாதது, அணுக்கரு விஞ்ஞானம், பொறியியல், வெப்ப யியக்கவியல் [Nuclear Physics, Nuclear Engineering & Thermodynamics] ஆகியவற்றில் படிப்பில்லாமல் போனதையும், மின்சார நிலையத்தில் போதிய பயிற்சிகள் [Power Station Operation Training] யில்லாமல் இயக்குநர் ஆனதையும் காட்டுகிறது!

1979 இல் அமெரிக்கா TMI-2 அணுமின் உலை விபத்திற்கும், இந்தியாவில் போபால் நகரில் 1983 இல் நேர்ந்த விஷ வாயு விபத்துக்கும் பல ஒற்றுமைகள் காணப் படுகின்றன! இரண்டும் அமெரிக்க உரிமையாளிகளால் நிர்வாகம் செய்யப் பட்டன! இரண்டு விபத்துகளும் தூண்டப் பட்டு பேரழிவும், பெருஞ் செலவும் ஏற்பட மூல காரணமானவர் போதிய படிப்பற்ற, பயிற்சியற்ற, சிந்தனை குன்றிய இயக்குநர்களே! அவ்வாறு தரமற்ற இயக்குநர்களை நுணுக்கமான பணிகளைச் செய்ய அனுமதித்த நிர்வாகிகளே முதற் குற்றவாளிகளாக கருதப் பட்டு ஏனோ விசாரிக்கப் படவில்லை!

அணுமின் நிலைய ஆக்க நெறிகளில் நான்கு துறைகளில் செய்முறைகள் முற்றிலும் திருத்த மாகி NRC தனது புதிய Nureg-0737 அறிக்கையை 1980 அக்டோபரில் வெளியிட்டது!

1. அணு உலை இயக்கப் பாதுகாப்பு [Reactor Operational Safety]

2. அணு உலைத் தள அமைப்பு & அணு உலை டிசைன் [Reactor Siting & Design]

3. பிரதம வெப்பத் தணிப்பு நீரிழப்பு, நீராவி ஜனனி நிரப்பு நீரிழப்பு ஆகிய அபாயங்களைக் கட்டுப்படுத்தல் [Handling Loss of Primary Coolant & Loss of Secondary Coolant (Feedwater) Accidents]

4. அபாய நிகழ்ச்சிகளை எதிர்கொள்ள தயாரிப்பு முறைகள், கதிர்வீச்சுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தல் [Emergency Preparedness & Radiation Effects], அபாய காலத்தில் பொதுநபர் பின்பற்றும் பாதுகாப்புப் பயிற்சிகள்.

அமெரிக்காவின் எதிர்கால அணுமின் உலைகளின் நிலை

TMI-2 விபத்துக்குப் பிறகு NRC எதிர்கால அணுமின் திட்டங்களுக்குக் கடும் விதிகளையும், நெடும் தேவைகளையும் முன்னறிவித்துப் பல புதிய லைஸென்ஸ் நெறி முறைகளை வகுத்தது! அவற்றில் நீண்ட இயக்குநர் பயிற்சிகள், உயர்தரத் தேர்ச்சி முறைகள் அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளன! அடுத்து புதிய நிலையங்கள் உருவாகும் முன்பே அவற்றின் ‘போலி அணு உலை ஆட்சி அரங்குகள் ‘ [Reactor Simulator Panels] அமைப்பாகி, நிலையத்தின் அபாய வேளைப் பயிற்சிகள் அனைத்தும் முன்பாகவே கற்பிக்கப் பட்டு இயக்குநர் சோதிக்கப் பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது!

அமெரிக்காவில் இப்போது 104 அணுமின் உலைகள் இயங்கிக் கொண்டு 97,400 MWe [20%] மின்னாற்றலைப் பாதுகாப்பாகப் பரிமாறி வருகின்றன! 1979 ஆண்டில் நேர்ந்த TMI-2 விபத்திற்குப் பிறகு மூடப்பட்ட நிலையங்கள் பல இப்போது புத்துயிர் பெறப் போகின்றன! அடுத்து பழையதாய்ப் போய் மூடப்பட்ட நிலையங்கள் பல தற்போது புதுப்பிக்கப்படப் போகின்றன! அணுமின் சக்திக்கு மீண்டும் பச்சைக் கொடி காட்டப் பட்டுள்ளது ஓர் நல்ல திருப்பமே! காரணம் பல மாநிலங்களில் இப்போது அடிக்கடி இருளாட்சியும் [Blackouts (Complete Shutdown)], பழுப்பாட்சியும் [Brownouts (Partial Shutdown)] இடையிடையே உண்டாகி மின்சக்தியின் தேவை மிகையாகி வருகிறது!

தகவல்கள்:

1. The Journal of the National Academy for Nuclear Training, Twenty Years Later in TMI [Jan-Apr 1999]

2. Three Mile Island, A 20th Anniversary Remembrance By: Jack Raso M.S., R.D. [March 1999]

3. Nuclear Power, A Rational Approach By Robert Deutsch [1987]

4. The Spectrum, Institute of Electrical & Electronics Engineers Inc [April 1984]

5. Staffs Report to The Presidents Commission on the Accident at Three Mile Island [Sep 2002]

6. TMI Decontamination Activities, Nine Years Later By: Gordon Tomb, GPU Nuclear Power Corporation [Sep 1988]

7. TMI Reactor Materials Behaviour & Plant Recovery, TMI Topical Meeting [Jan 1989]

8. What Happened at Harrisburg ? And Can it happen here ? By David Post [1979]

**************************

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா