அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சுரங்ககங்களில் மீதேன் (methane) வாயு தீப்பிடித்து, அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாவது என்பது, மிகச் சாதாரணமாக நடந்து வந்த நிகழ்ச்சி. வெளிச்சத்திற்காகத் தீ விளக்குகளைப் பயன்படுத்தியதாலேயே இவ்விபத்துக்கள் சுரங்கங்களில் நடந்து வந்தன; இவ்விபத்துக்களால் பல சுரங்கத் தொழிலாளர்கள் உயிரழக்கவும் நேர்ந்தது. 1815ஆம் ஆண்டு சர் ஹம்ப்ரி டேவி பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்த பின்னர் மேற் கூறிய விபத்துக்கள் பெருமளவுக்குக் குறைந்து விட்டன என்பது மிகப் பெரிய உண்மை.

இங்கிலாந்தின் மிகச் சிறந்த வேதியியல் நிபுணர்களுள் ஒருவராக விளங்கிய டேவி பாதுகாப்பு விளக்கை வடிவமைப்பதற்கு இரு காரணங்களை அடிப்படையானவையாகக் கருதினார். ஒன்று, விளக்கு எரியத் தேவையான உயிர்வளி (oxygen) அதாவது ஆக்சிஜன் அடுத்து விளக்குச் சுடரின் வெப்பப் பரவல். உயிர் வளி விளக்குச் சுடர் எரிவதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது; ஆனால் சுடரிலிருந்து வெளியாகும் வெப்பம் அதனைச் சுற்றியுள்ள தீப்பிடிக்கக்கூடிய வாயுக்களை உடனடியாக எரியூட்டச் செய்து விடும். இதனாலேயே தீ விபத்துக்கள் உண்டாயின. எனவே தமது நுண்ணறிவைப் பயன்படுத்திய டேவி, எண்ணெய் விளக்கின் தீச்சுடரைச் சுற்றி மெல்லிய கம்பி வலையால் தடுப்புச் சுவர் ஒன்றை உருவாக்கினார். இதன் விளைவாக சுடர் எரியத் தேவையான காற்று இடரேதுமின்றிக் கிடைத்தது; அதே வேளையில் சுடரிலிருந்து வரும் வெப்பம் வெளியிலுள்ள வாயுக்களை அடைவதற்குள் வீரியம் குறைந்து, சிதறிப் போயின; இதனால் வெளியேயுள்ள வாயுக்கள் எரிவது தவிர்க்கப்பட்டது. வலைச் சுவரால் விளக்குச் சுடரின் ஒளி சற்று மங்கியிருப்பினும், தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் பார்ப்பதற்குப் போதுமானதாயிருந்தது. தற்போது மின் விளக்குகள் சுரங்கத்தினுள் ஒளி வழங்கப் பயன்படுத்தப்பட்டாலும், டேவி கண்டுபிடித்த பாதுகாப்பு விளக்குகள் முழுமையாக அற்றுப்போய்விடவில்லை. சுரங்கத்தினுள் இருக்கக்கூடிய அபாயமான வாயுக்களைக் கண்டறிவதற்கு இப்பாதுகாப்பு விளக்குகள் இப்போதும் பயன்பட்டு வருகின்றன.

டேவியின் கண்டுபிடிப்புகளுள் பாதுகாப்பு விளக்கு முக்கியமானதெனினும், அவரது அறிவியல் பணி அத்துடன் முடிந்துவிடவில்லை. சிரிப்பு வாயு (laughing gas) எனப்படும் நைட்ரஸ் ஆக்சைடின் (nitrous oxide) மயக்க விளைவைப் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாயு ஓரளவுக்கு ஆபத்தானதெனினும், டேவி அதில் துணிந்து ஈடுபட்டார். இவ்வாயுவை உற்பத்தி செய்து ஓர் அரை நிமிட நேரம் தாமே அதனை முகர்ந்தார்; இதன் விளைவாக நினைவிழந்து மயக்க நிலை உண்டாயிற்று. மேலும் இவ்வாயுவை முகர்ந்தபோது சிரிப்பு உணர்ச்சி ஏற்பட்டது; அது ஓர் இனிய மகிழ்ச்சியான அனுபவமாகவும் விளங்கியது; இதனாலேயே இந்த வாயுக்கு சிரிப்பு வாயு எனப் பெயர் சூட்டப்பட்டது.

சிரிப்பு வாயுவை முகர்வதனால் உண்டான மகிழ்ச்சி அனுபவம் வெளியுலகெங்கும் பரவியது. ஒரு பெண்மணி அவ்வனுபவத்தைப் பெற விரும்பி நைட்ரஸ் ஆக்சைடை முகர்ந்தாள். விவரிக்க முடியாத மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த அப்பெண் வீட்டை விட்டு வெளியே வந்து துள்ளிக் குதித்தாள், தாவினாள், ஓடினாள். என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் நடந்து கொண்டாள். தெருவில் சென்றோர் அப்பெண்ணை மீட்டு வந்து வீட்டில் விட்டுச் சென்றனர்.

இவ்வாயுவைக் கண்டுபிடித்த டேவியின் புகழ் லண்டன் மாநகரிலும் பரவியது. இக்கண்டுபிடிப்பைப் பாராட்டிய ராயல் நிறுவனம் 1800ஆம் ஆண்டு அவரைச் சொற்பொழிவாற்ற அழைத்தது. சிரிப்பு வாயு பற்றியும், அதன் பண்பு நலன்கள் பற்றியும் கேட்டார்ப் பிணிக்கும் தகையதோர் விளக்கவுரை வழங்கினார் டேவி. பார்வையாளர்களில் சிலர் அவ்வாயுவை முகர்ந்து நரம்புகள் புடைக்க மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

சமூக விழாக்களிலும், பொழுது போக்கு நிகழ்ச்சிகளிலும் சிரிப்பு வாயு பெரும் பங்கு வகித்தது. அடங்காப்பிடாரி மனைவிமார்களை கட்டுப்படுத்தவும் இவ்வாயு பயன்பட்டதாம்! சமூக நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினர் ஒருவர் இவ்வாயுவை முகர்ந்த பின் மயக்கத்தினால் கீழே விழுந்து காயம் அடைந்தார். வியப்பு என்னவெனில், காயம் பட்ட அவருக்கு வலி ஏதும் தோன்றவில்லை. இந்நிகழ்ச்சியைக் கண்ட ஹெளரஸ் வால்ஸ் என்ற பல் மருத்துவர் நோயாளிகளுக்கு பல் பிடுங்க இவ்வாயுவை முகரச் செய்து பின் சிகிச்சையைத் தொடர்ந்தார். இதை அறிந்த பிற பல் மருத்துவர்களும் பல் நோயாளிகளுக்கு வலியின்றி பல் பிடுங்க நைட்ரஸ் ஆக்சைடைப் பயன்படுத்தினர். மற்ற அறுவை சிகிச்சை மருத்துவர்களும் நோயாளிகளுக்கு மயக்க உணர்வை ஏற்படுத்த இம்முறையைக் கையாண்டனர். இன்றும் நோயாளிகளுக்கு மயக்க உணர்வை உண்டாக்குவதில் இவ்வாயு பெரும் பங்கு வகிக்கிறது.

லண்டன் ராயல் நிறுவனம் டேவியின் கண்டுபிடிப்பைப் போற்றிப் பாராட்டி, மதித்தது. மேலும் தோல் பதனிடல், வேதியியல், வோல்டா மின்கலம் ஆகியவை தொடர்பான அவரது சொற்பொழிவுகள் அறிஞர் உலகைப் பெரிதும் கவர்ந்தன. வேதியியல் கூட்டுப் பொருள்களை (chemical compounds) மின்னாற் பகுப்பு (electrolysis) முறையில் எவ்வாறு பிரிப்பது என்று டேவி விளக்கினார். 1807இல் சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றை இம்முறையில் பிரித்துக் காட்டினார். போரக்ஸ் (borax) ஐப் பொட்டாசியத்துடன் வெப்பப் படுத்தி போரானை (boran) வெளிக் கொணர்ந்தார். குளோரின் ஒரு தனிமம் (element) என்பதையும், அதன் வெளுக்கும் தன்மையையும் நிரூபித்தார்.

1813இல் ஃபாரடே என்னும் அறிவியல் அறிஞர் டேவியின் உதவியாளராகச் சேர்ந்தார். இருவரும் அறிவியல் ஆய்வுக்காக ஐரோப்பியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். அயோடின் பற்றி ஆய்வு செய்தனர். வைரம் என்பது ஒரு கரிமப் படிவம் என்று நிரூபித்தனர். ஃபாரடேயின் துணையுடன் ‘வேதியியல் தத்துவத் தனிமங்கள் (Elements of Chemical Philosophy) ‘ என்ற தலைப்பில் டேவி ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். மேலும் உப்பு நீரில் செம்பு துருப் பிடிப்பதைப் பற்றியும், எரிமலைச் செயல் பாடுகள் பற்றியும் பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டார்.

டேவிக்கு அவரது வாழ்நாளில் பல பரிசுகளும், பாராட்டுகளும் வந்து குவிந்தன. அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல் 1820இல் லண்டன் ராயல் கழகத்தின் தலைவராக நியமிக்கப் பெற்றார். 1778ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 17ஆம் நாள் பிறந்த சர் ஹம்ப்ரி டேவி 1829 மே 29இல் மறைந்தார்.

டாக்டர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan

பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD

Email: ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர