பாழடைந்த வீட்டின் கதவு

This entry is part of 35 in the series 20110213_Issue

எஸ்.எம். சுனைத் ஹஸனீஒரு நூற்றாண்டின் ரேகைகள் சிதறலாய்
அக் கதவு முழுவதும் ஆக்கிரமித்துக் கிடந்தன
சில மூலை நுண் பகுதிகளெல்லாம் பிரகாசமாயும்
நேர் மட்டப் பகுதிகள் கருத்தும்
வலுத்த அதன் மையப் பகுதிகள் விரிசலுமாய்
நன்றாயிருந்து கிடந்திருந்தவர்களையும்
நலமற்றுக் கிடப்பிலிடப்பட்டவர்களையும்
அப்படியே அச்சுப் பிசகின்றி ஒப்பித்துக் கிடந்தது அக்கதவு
மெல்லிய மணர் மணங்கள் அதன் மையப் பகுதியிலிருந்தும்
காட்ட மாமிச வாசனைக் கவுச்சை அதன் நாற் சதுரங்களிலிருந்தும்
மெதுவாய் பரவி தரையெங்கும் ஒழுகிக் கிடந்தன.
அற வழியாய் தன்னுட் புகுந்தவர்களையும்
புற வழியாய் வெளியேறிக் கடந்தவர்களையும்
சிந்தையிலிருத்தி இன்றளவும் சில முகங்களை
தேடிக் கொண்டிருக்கின்றன அவைகள்.
பல ராஜாங்களைக் கடந்த ஊர்க் காவியங்கள்
நன்றாயிழுத்து உள்வாங்கப்பட்ட மனித வரலாறுகள்
எல்லாம் தின்று செறித்து ஓர் ஒதுக்குப்புறமாய்
நாதியற்றுக் கிடந்தது அக்கதவு
இல்லத்தின் மூலையோரப் பெருசுகளாய்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

Series Navigation