பயணி கவனிக்கிறாள்.

This entry is part of 39 in the series 20110123_Issue

சபீர்இசைத்
துளி யொன்று
டிங் டாங் கென
விழுந் துடைய
எங்கள் கவனத்திற்கு
விமான தாமதத்தை
அறிவித்தப்
பெண்குரல் –
மற்றுமொரு
டிங் டாங் அடைப்புக்குள்
மெளனிக்க…

காஃபிக் கோப்பையினடியில்
கரையா திருந்த
சர்க்கரைப் படிகம்
கடைசி உறிஞ்சலில்
கூர்மையாக இனித்து
காசு கொடுத்து வாங்கிய
கசப்பை
களைத்துப் போட்டது!

இன்னபிற விமானங்கள்
வருவதும் போவதும்
அறிவிக்கப்ப்பட்டுக்கொண்டேயிருக்க
பிஸ்கோத்தும்
தண்ணீர் போத்தலும்
தவிர
தயிர்சாதம்கூட
பிரித்துண்டனர்
எம்
சக பயணிகள்.

முன் தினம் வாங்கி
வாசிக்காமல் வைத்திருந்த
பத்திரிக்கையை
பிரிக்கும் கணங்களில்
என்மேல்
தங்கிநின்ற பார்வையொன்று தட்டுப்பட…
தாமதம்
சுவாரஸ்யப்பட்டுப்போனது.

அத்தனை குருக்கீடுகளிலும்
வெட்டுப்படாமல்
பராமரித்தவளின்
பார்வையை
கவிதைகளாய்
மொழிபெயர்த்து
பின்
குறியீடுகள் கொண்டு
அழகு படுத்துவதற்குள்
மூன்று மணி நேர
தாமதத்திற்கு வருந்தி
புறப்படச்சொல்லி
மெளனமானாள் அறிவிப்பாளினி.

இம்முறைக்கான
இசைத் துளி
விழுந்து உடையாமல்
மிதந்துகொண்டே இருந்தது!

Series Navigation