எதிர்காலம்

This entry is part of 48 in the series 20101227_Issue

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ


நீங்கள் அறிந்திருப்பதைப் போன்றே
நானும் அதை நன்கறிந்திருக்கிறேன்.
நாளை ஒருவன் வரக்கூடுமென்றும்
இரவும் பகலுமற்ற இடை வெளியொன்றில்
இணக்கங்களும் பிணக்கங்களுமற்ற மையச் சாத்தியக் கூறுகளில்
முற்றுமாய் கசடுகளற்ற சில பந்த பிணைப்புகளை
உங்களுள் ஏற்படுத்திக் கொள்ளக்கூடுமென்றும்
யாரோ ஒருவனுக்காய் வெளி மாயைகளை
உள் வாங்கிக் கொண்டிருப்பீர்கள்!
சலனமற்றுக் கரையும் இரவு தீபங்களாய்
மெல்ல உங்களது சுகங்களை இழந்து கொண்டே
இன்னுமின்னும் உங்களது பிரயாசைகளுக்கு எண்ணெய் வார்ப்பீர்கள்,
தோள் பற்றும் தோழனென்றோ,
உங்கள் இடை அடுத்த அருகாமையில் உள்ளவர்களாகவோ,
நரம்புகளில் வாசமிடும் அதி அத்தியாவசப்பட்ட ஒன்றாகவோ
உங்கள் உருவகங்களை இன்னும் மேம்படுத்துவீர்கள்,
அதன் எண்ணவோட்டங்களில் உங்களை இழந்த படியோ
நீண்டு விரிந்த அதன் நிழல்களில் ஆசுவாசம் கொண்ட படியோ
மெல்ல அதன் நினைவுகள் பிடித்தேறி
பழுத்த அதன் பழம் பற்றியெடுத்து ருசி காண நேர்கையில்
கனவு களைந்து தலை குப்புறக் கவிழக் கூடும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

Series Navigation