தேவதைக்குஞ்சே…

This entry is part of 54 in the series 20090915_Issue

கவிஞர் மா.சித்திவினாயகம்


தேவதைக்குஞ்சே…..
மூக்கும் முழியுமாய்
தமிழ்மொழி பேசும்
அழகுச் சிட்டே !!!

இன்னமும்…
நீ ஏன்
இங்கு வந்து
பிறந்து தொலைத்தாய்…

கன்னங்குழி விழ
தத்தி நடந்து மழலை பேசிடும்- உன்னைச்
சிதறடிக்கப்போகிறது
இந்த மண் !!!

உன் பஞ்சு மேனியைப்
பாளும் குண்டு தின்று தீர்க்கவும்…
செல் துண்டு உந்தன் தலையினைப் பிளக்கவும்…
வல்லுறவில் நீ வதைபட்டுப் போகவும்…
விதி உனக்காய் விதிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றிற்கும், தப்பி நீ உயிரோடிருந்தால்
எஜமான்களின் எடுபிடியாகவும்,
மனித வெடிகுண்டுப் பொட்டலமாகவும்
மாறப்போகிறது உன் மழலை உடல்.

எப்படியோ உனக்கு ஒரு
கொடூரம் இந்த மண்ணில்
எழுதப்பட்டிருகிறது .

எல்லோரையும் போலவே
வீரிட்டழுதபடி விழுந்த – உனக்குத்
தமிழ் என்று பெயரிட்டுத்
தரணி அழித்த பரிசு இதென்று
சந்தோசப்படு !

காடு தீப்பற்றி எரிகையில்
கேட்பாரற்றுக் கருகிப் போகிற – சிறு
புல்லாய் இருக்கிற பிஞ்சுக் குருத்தே!!
இந்த மண்ணில்
இன்னும்
ஏன் வந்து பிறந்து
தொலைத்தாய்???

துராகமெது,சத்தியமெது
என்று சுயம் தேட முற்பட்டுச் செத்த
உன் முன்னோர்கள் போலவே
இறப்பதற்கு முன்னாடியுள்ள
கடைசி நிமிடங்களில்
எதுவும் புரியாமலே
உன்
எஞ்சியுள்ள இரத்தத்தையும் -இப்
பூமிக்கிறைத்து விட்டுப் போ.

அறிவையும்,தன்னம்பிக்கையையும் -உன்
மண்டையிலிருந்து பிடுங்கிவிட்டு அதை
அடிமை எனும் மண்போட்டு
நிரப்பி விடத்துடிகிறது
அதிகாரம்.

இனி
உன் தலையிலும் கொம்பு முளைக்க
வேண்டுமென நினைப்பது வீண் !!!

மயிர் நீத்தால் உயிர்வாழாதாம் கவரிமான்.
உனக்கு மயிர் மட்டுமா போயிற்று???

உனக்குள்ளிருக்கும்
சத்தியத்தின் குரலைக்கேட்பவன் – எவனும்
இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லைத்தாயே !

இன்னமும்
உனக்கென உன்முன் கிடக்கிற
உன்னதங்கள் எது?

சுடலையில் நடக்கவும்,
சுடு மண்ணுள் படுக்கவும்,
குருதியில் குளிக்கவும்,
பட்டினிகிடந்து பயந்து
தவிப்பதற்கும் மட்டுமே
உன்பிஞ்சு உடல் படைக்கப்பட்டதெனில் -நீ
இருந்தென்ன?? செத்தென்ன??

சாவைவிடவும் பிழைத்தலே மேலெனில்
சாவைவிடவும் மோசமான பிழைத்தலை
உனக்கென்று எழுதிவைத்தது எது ?????

உனக்கெதிரான – எல்லா
அனியாயங்களிலும்,
ரகசியங்களிலும் – உன்
விடுதலையும், வாழ்வும்
புதைந்திருப்பதாக
இப்போதும் சொல்லும்
அயோக்கியர் முகத்தில்
உன்னிடம் இன்னும்
எஞ்சிக்கிடக்கிற உமிழ்நீரைக்
காறி உமிழ்ந்துவிட்டு கண்மூடிப் போ !!

Series Navigation