போதை நிறைந்ததொரு பின்னிரவில்..

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

கோகுலன்



நண்பர்கள்கூடி மதுவுடனே
நட்பாய் களித்ததோர் இரவினிலே
விடியல் நெருங்கும் வேளையிலே
நான் மாத்திரம் விழித்திருந்தேன்
அனைவரும் அசந்து உறங்கியபின்
நிலவினில் இரவினை ரசித்திருந்தேன்
அத்தனிமை சூழ்ந்த வேளைதனில்
அன்பாயழைத்தது குரலொன்று
நண்பா என்றெனை அழைத்திடவே
சுற்றிப்பார்த்தேன் அறைமுழுதும்
ஆடைவிலகிய உடல்களுடன்
அவனவன் ஒவ்வொரு மூலையிலே
அனைவரும் மயங்கிகிடக்கையிலே
அழைத்தது யாரென பார்க்கின்றேன்
இரவும் நிலவும் விழித்திருக்க
என் தனிமைதவிர யாருமில்லை
மீண்டும் கேட்ட குரல்வைத்து
வந்ததிசையில் துழாவுகையில்
மேசைத்தட்டில் நான்கண்டேன்
மீனினெலும்புக் கூடொன்று
தலையும்முள்ளும் தான்விடுத்து
மற்றனைத்தும் நண்பர் உண்டிருக்க
சிதைந்தகண்ணால் எனைநோக்கி
நட்பாய் என்னுடன் பேசிற்று
ஆச்சர்யமெனக்கு தாளவில்லை
பேசுவதெங்ஙனம் என்றேன் நான்
எப்பொழுதும் தான் பேசுவதாயும்
நானே கேட்டதில்லை யென்றதது

இவ்விடம்வந்த கதைகேட்க
ஏரியில்நீந்தி களித்ததையும்
எண்ணெயில்மூழ்கி துடித்ததையும்
கண்கள் கலங்க புலம்பிற்று
இயற்கைமேல் மனிதனாதிக்கமும்
எல்லாம் தனக்கே எனுங்குணமும்
பகுத்தறிவின் கூறுகளாவென தன்
ஐயத்தையென்னிடம் கேட்டிற்று
ஆட்டின், கோழியின் மேல்காட்டும்
காருண்யமேனும் தம்மினத்தில்
காட்டாததற்கு காரணமேனும்
அறியுமா என்றெனை வினவியது
பதிலில்லாமல் நான் விழித்திருக்க
காலையின் காகமும் கரைந்திடவே
அடுத்தமுறையில் சொல்வாயென்று
புன்னகையுடன் உயிர் துறந்திற்று
இரவில் மீனுடன் கதைத்த கதை
காலையில் இவனிடம் நான்சொல்ல
என்னைப்பார்த்து ஏளனமாய்
‘இன்னுமா இறங்கல’ என்கின்றான்.

>hr>
gokulankannan@gmail.com

Series Navigation

கோகுலன்

கோகுலன்