தீயே உன்னை வழிபடுகிறேன்…!!!

This entry is part of 61 in the series 20040805_Issue

கோச்சா (எ) கோவிந்த்


—-

ஒரு புள்ளி போல் தான் நீ…
ஆனால் உன்னை
தீபமாய்
தீப்பந்தமாய்
தீக் காடாய்
பிறர் மாற்ற முடியும்.

கும்பகோணமும் அப்படித்தான்,

நீ அரிசி குழைந்து
அங்கு பயிலும் குழந்தைகளுக்கு
அமுதமாக
உன் வேலையை செவனே என்று
பார்த்துக் கொண்டிருந்தாய்…

கவனிப்பற்று போனதாலோ
இல்லை
நாச வேலையோ-
நீ கூரைக்கும் படர்ந்தாய்….

சப்தமின்றி கழுத்தறுக்கும்
மானிடர் போலின்றி
நீ
உன் தீண்டுதல் முன்
வெப்பத்தை
எச்சரிக்கையாய்த் தருபவன்.
– அன்றும் தந்தாய்..!!!

அது கண்டு விழித்துக் கொண்ட
குழந்தைகள்
பிழைத்துக் கொள்ள
வழி தேடி
படிக்கு ஓட
பூட்டிய கதவுகள் கண்டு
கத்தின கதறின…!!!

கதறிய மழலைகள் கண்டு-
வாத்திமாரோ வழிப்போக்கர்களோ
அவர் கருகும் வரை ஏன்
அங்கு வரவில்லை… ?

படிக்கும் குழந்தைகளின்
மாடிப்படி அறைக்கு
தாழ்ப்பாள் போட்டது
தீயின் கரங்களா… ?

அலறிய குழந்தைகளின் கூக்குரல் கேட்டு
ஊரைக் கூட்டாமல்
மெளனம் சாதித்தது
தீயின் நாக்குகளா… ?

சுட்டரிக்கும் முன்
வெப்பத்தால் முன்னெச்சரிக்கை தந்த
தீயை-
கதறிய குரல்கள் கேட்டு
குழந்தைகளைக்
காப்பாற்றாமல்-
தீயை
பழிப்பது
ஏன் மானிடரே…!!!

பதமாய் உணவு சமைக்க
இளஞ்சூட்டில் நீவிர் குளிக்க
இத வெப்பத்தில் நீவிர் உறங்க
தேவன் சந்நிதியில் தீபமாக
திக்கெட்டும் காட்ட வெளிச்சமாக
– என எப்போதும் உபயோகமாக
இருக்கும் தீயை…

நம் மனித சமுதாய அலட்சியத்தாலும்
அக்கறையின்மையினாலும்
அழிந்து போன
குழந்தைகளின் மரணத்திற்கு
தார்மீக பொறுப்பேற்காமல்
தீயின் மேல் பழிபோடுவது
தீக்கு நாம் காட்டும் நன்றியா… ?

எப்படியோ
நீங்கள் பழித்த போதும்
மயானத்தில்
தீயாக
இரங்கல் கூட்டத்தில்
தீபமாக
தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும்

தீயே உன்னை வழிபடுகிறேன்….!!!
—-
gocha2004@yahoo.com

Series Navigation