ஓவியம்

This entry is part of 72 in the series 20040415_Issue

ருத்ரா.


(epsi_van@hotmail.com)

ஒரு கோடு.

அதன் தலையில் இன்னொரு கோடு.

நீண்ட கூட்டல் குறி.

செங்குத்தாய்

நிமிர்ந்து விறைத்து..

கோட்டை

ஒட்டிக்கோண்டு

இரு வட்டக்கோளங்கள்.

அப்புறம்

அதைச்சுற்றி

குறுக்கும் நெடுக்குமாய்

சின்ன வட்டங்கள்

பெரிய வட்டங்கள்.

மறைவாய் புதைந்தும்

புதையாமலும்

தாந்திரீகமாய்

ஒரு முக்கோணம்

மொத்தத்தில்

ஒரு சிலந்திப்பூச்சி

புருசு மயிர்கள்

வழியாய்

இரத்தச்சிவப்பிலும்

வெறிபிடித்து

அப்பிய

மஞ்சள் குங்கும பச்சை நீல

குழம்பிலும்

மலங்கழித்திருந்தது.

புடைத்தும்

குழிந்தும்

முப்பரிமாண முயக்கம்

அந்த

படுதாவில்

படுத்துக்கிடந்தது.

முதுகுத்தண்டு நியூரான்களில்

முலைப்பால்

குடித்துகிடந்த

டி.என்.ஏக்களும்

ஆர்.என்.ஏக்களும்

நம் சதையை

பிசைந்து பிசைந்து

நம் உயிரின் ஆசையை

அல்லது

நம் ஆசைகளின் உயிரை

அங்கே

பிதுங்கி வழியச்செய்தது.

தலைப்பு

‘உயிர்த்தெழுதல் ‘

….

….

எல்லோரும் கைதட்டி ரசித்தார்கள்.

ஏலம் துவங்கியது.

‘ஆயிரம் டாலர் ‘

யாரோ துவக்கினார்கள்.

தேவகுமாரனின் மார்பில்

முதல் ஆணி

இறங்கியது.

====ருத்ரா.

6th march 2004

Series Navigation