வேர்கள்

This entry is part of 72 in the series 20040415_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)


(தெள்ளூதமிழ்க்குதவு சீலன் எனத்தொடங்கும் காவடிச்சிந்து)
மூச்சடக்கி முக்குளிக்கும் கூட்டம் – மூழ்கி
முத்தெடுக்கும் பெரும்பணியே தேட்டம்- தேடிச்
சேர்த்ததெல்லாம் வேறிடத்தில்
தேடியவர் ஓரிடத்தில்
இருப்பார்–சுகம்
துறப்பார்

கண்குளிரும் பூவழகு ஈர்க்கும்– மொட்டு
கண்விழிக்க வேர்களுக்கு வேர்க்கும்-கெட்டி
மண்ணிருக்கும் மலையிருக்கும்
மனமிருக்கும் வலிமையான
இரும்பாய்–செல்லும்
நரம்பாய்

பூப்பூத்துக் காயாகிக் கனியும்–வேர்கள்
பூமிக்குள் நீரெடுத்து நனையும்–மண்ணில்
கோப்பாகத் தாவரங்கள்
தோப்பாகிக் கண்குளிரப்
பாடும்-வேர்கள்
தேடும்

காற்றுவந்து கைகுலுக்கும் கிளையை–கொஞ்சிக்
காதலிக்கும் கிளிப்பச்சை இலையை–நெஞ்சில்
போற்றுதற்கும் சூட்டுதற்கும்
புகழ்மாலை தொடுப்பார்
பூவை-வேர்கள்
தேவை

பொதுநலமே உயர்நோக்கம் ஆச்சு–கிட்டும்
பொழுதெல்லாம் நற்பணியே மூச்சு–கெட்ட
சூதகற்றி சுனைதேடி
நீரெடுத்து வேர்கள்
வழங்கும்–பயிர்
குலுங்கும்

அரும்புவரும் இதழ்விரியும் மணக்கும்–வாழ்வும்
அங்ஙனமே புகழெய்திக் கனக்கும்—நாமும்
விரும்புகிற உயர்வாழ்வு
விளைந்திடவே விழைவார்
யாரே ?-பெற்றோர்
வேரே

இருக்கும் இடந்தனையே மறைத்து–என்றும்
இருளில் இருந்துவிட நினைத்து–மூலம்
இருக்கும் இடம்தேடி
இடர்கள் எதிர்கொள்ளும்
ஞானி-வேர்கள்
தேனீ

***
ilango@stamford.com.sg

Series Navigation