கரும்பும் கசந்த கதை

This entry is part of 47 in the series 20040304_Issue

செங்காளி


யானைகட்டிப் போரடித்த அந்தநாள் மறைந்துபோய்
பானையில் சோறின்றி பரிதவிக்கும் மக்களெல்லாம்
கரும்புத்தோட் டம்பற்றி கண்கலங்கி சொல்லிவிடும்
கரும்பும் கசக்குமெனும் கதையைத்தான் கேட்பீரே!

கரும்பு பயிரிடுவோர், கவனமாய்த் தோட்டத்தில்
அரும்பாடு பட்டு அயராது உழைத்திடுவோர்,
ஆலைகளை நடத்திடுவோர், அவைகளிலே வேலைசெய்வோர்,
ஆளுகின்ற அரசாங்கம் கியோரின் கதையிதுவே.

விளைந்திட்ட பயிரைத்தான் வெட்டிவரவா என்றுகேட்டால்
ஆலையை நடத்திடுவோர் அடுத்தமாதம் வரச்சொல்வார்
வெட்டாமல் விட்டதினால் வளர்ந்த பயிரங்கே
தட்டாக மாறித்தான் தரமிழந்து போகவைப்பார்.

தக்கபடி வெட்டியே தரமாகக் கொடுத்திடினும்
அக்கணமே நசுக்கி யதன்சாற்றைப் பிழியாமல்
தணியார் ஆலையிலே தாழ்த்திடுவார் காலந்தானே
மணிக்கணக்கில் நாட்கணக்கில் மறுத்திடுவார் கசக்கிடவே.

கொண்டுவந்த கரும்புக்குக் கொடுத்திடுவீர் விலையென்றால்
ஆண்டு முடியும்வரை அலைக்கழிப்பார் இழுத்தடிப்பார்
கொடுக்கும் பணத்தையும் குறைத்திடுவார், இதையெல்லாம்
தடுத்திடுவார் யாருமில்லை தண்டனையும் அளிப்பதில்லை.

கூட்டுறவு ஆலைகளில் குறைபாடு மிகுந்திடவே
பூட்டிவிட்டு அவைகளைத்தான் புழுதியண்டச் செய்திடுவார்
லைகளைநம் பியிருந்த அத்தனைத் தொழிலாளரும்
வேலையின்று கூலியின்று வேதனையால் வாடவைப்பார்.

சாராயக் கடைகளையே சந்து பொந்தெல்லாம்
தாராளமாய்த் திறந்திருக்கும் தமிழ்நாட்டு அரசாங்கம்
மூடியிருக்கும் ஆலைகளை முயன்று திறக்கவில்லை
வாடியிருக்கும் தொழிலாளர் வாழ்விலும் மாற்றமில்லை.

கரும்புக்கு இட்டவரியைக் கவனமாய்க் கட்டிடுவீர்
திரும்பக் கொடுத்திடுவோம் தவறாமல் ‘உதவி’யாக
என்றுசொன்ன அரசாங்கம் எதுவும் கொடுக்கவில்லை
இன்றளவும் வரியை எள்ளளவும் குறைக்கவில்லை.

வெளிநாட்டுச் சர்க்கரையை வெகுவாக வரவிட்டு
உள்நாட்டுச் சர்க்கரையின் உற்பத்தியை மடக்கிவிட
சர்க்கரைத் தொழில்தானே சகதியில் வீழ்ந்துவிட
அக்கறை கொள்ளவில்லை அரசாங்கம் இதைப்பற்றி.

ஆலைகளைத் திறக்கவில்லை, இறக்குமதி நிற்கவில்லை,
விலையும் மாறவில்லை, வரியும் குறையவில்லை,
வேறுதொழிலும் தெரியவில்லை, வாழ்க்கையிலும் மகிழ்ச்சியில்லை
கரும்பும் கசக்குமென்ற கதையும் பொய்யில்லை!
—-
natesasabapathy@yahoo.com

Series Navigation