ஸ்தல புராணம்

This entry is part of 41 in the series 20030904_Issue

வானவன்


காயத்தோடு வந்த நாரதரைப் பார்த்து கண்ணீரோடு கேட்கிறார் விஷ்ணு..
………………………

*

நாரதரே,
விண்முட்டும் பண்தொட்டு
நின்றீரே !
இன்றென்ன புண்பட்டு
வந்திருக்கிறீர் ?

இடித்து விட்டார்கள் பிரபோ,
இடித்து விட்டார்கள்.

தெருவினிலே
இரவினிலே
திருடர் பயம்,
சீரணி அரங்கத்தில் ஓய்வெடுத்தேன்
இரவோடு இரவாக
இடித்து விட்டார்கள்.

மக்கள் பாவம்,
பகலில் தூங்கிவிட்டு
இரவில்
வாசல் படிகளில்
அகல்விளக்கோடு விழித்திருக்கும்
ஆந்தைகள் ஆகிறார்கள்.

அசுரர்களோடு போராட
இப்போது
அவதார புருஷர்களுக்கே
அனுமதியில்லையாம்.

வடக்கில்
கட்டத் துடிக்கிறார்கள்,
தெற்கில்
இடிக்கத் துடிக்கிறார்கள்.

வடக்கில் பசுக்களைப் பற்றிய
பரபரப்பு,
சென்னையிலோ
காதுக்குள்
கொசுக்களின் குறுகுறுப்பு.

பாவம் மக்கள்
போராடிப் பெற்ற
சுதந்திர நாட்டில்,
போராடச் சுதந்திரம் இல்லை.

இடித்துக் காட்டுவோரை
முடித்துக் காட்டுவதில்
தான்
அரசுக்கு இருக்கிறது அக்கறை.

இரவில் மட்டுமே இங்கே
அடிக்கடி
அவசரத் திட்டங்கள்
நிறைவேற்றப் படுகின்றன.

நீதி மன்றங்கள்
பகலில் வாய்தாவும்,
இரவில்
தீர்ப்பும் வழங்குமோ ?

தலையைச் சொறிந்து
கொண்டே
விஷ்ணு வினவினார்.

ஏனிந்த ராத்திரி ராஜ்யம்
என்று
கேட்டிருக்கலாமே ?

கேட்டேன் பிரபோ,
மந்திரி ஒருவரிடம் கேட்டேன்.

அதற்கு
கைலாயத்தில் இப்போது
காலையா மாலையா ?
அமெரிக்காவில்
இப்போது
பகல்தானே என்கிறார் !

அட !
இது தானா உலகமயமாதல் ?

0

வானவன்

tamil400@yahoo.com

Series Navigation